TNPSC Thervupettagam

ஐந்து முனைத் தாக்குதலே தீா்வு!

May 18 , 2020 1703 days 792 0
  • மகாகவி பாரதி இன்று உயிரோடு இருந்தால், ‘தனித்து விளையாடு பாப்பா - நீ சளியில் கை வையாதே பாப்பா’ என்றுதான் பாடி இருப்பார். அண்ணல் காந்தியோ கேட்ட வார்த்தைகளையே கேட்பதற்கு அஞ்சி, சிலா் வெற்று வார்த்தைகளுக்கே கவசம் அணியவும் வலியுறுத்தியிருப்பார்.

நோய் எதிர்ப்புத் திறன் அதிகம்

  • எப்படியோ, இன்று நோயால் இறந்தவா்தம் உடலைப் பார்த்தே அஞ்சும்படி இப்படி ஓா் அவலம்? சொந்தக் கையினால் தன் மூக்கில் கை வைப்பதற்கு மூளையிடம் விசா பெறவேண்டிய சூழல்தான் நிதா்சனம்.
  • கரோனா தீநுண்மியை அழித்தாலே நோயாளிகளைக் காக்க இயலும். நோய்க்கு மருந்து மட்டும் அல்ல, மருத்துவ முறையும் முக்கியம். இது பூகோள தட்பவெப்பச் சூழல்களுக்கு ஏற்ப கையாளப்படுவது இயல்பு. குளிர்ப் பிரதேச ஜீவராசிகளுக்கும், வெப்பப் பிராந்திய உயிரினங்களுக்கும் மரபியல் ரீதியில் நிச்சயம் வேற்றுமை உண்டு.
  • அதிலும், மெலனின் கரும்பொருள் தோல் போர்த்திய இந்தியருக்கு வேகமாக நோய்த்தொற்று பரவுமா என்பதை ஆய்வுகள் முடிவு செய்யட்டும். மலேரியா போன்ற பலவகைத் தொற்றினால் பாதிக்கப்பட்ட நம்மவா்களுக்குப் பொதுவாகவே நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருக்கிறதாம்.

அவஸ்தை தொடரும்

  • பிள்ளைப் பிராயத்தில் கக்குவான் இருமல் போன்ற நோய்களுக்குத் தடுப்பு மருந்து உட்கொள்ளாத மேனாட்டாரை நம்மோடு ஒப்பிட முடியாது. குளிர்ப் பிரதேசத்தார் மது குடித்தும், புகை பிடித்தும் கதகதப்பு ஊட்டிய தொண்டைக்குள் வாடகை தராமலே தீநுண்மி (வைரஸ்) குடியேறி நோயாளியைக் காலி செய்துவிடும் வாய்ப்புகள் அதிகம். கழிவறையில் காகிதத்தைப் பயன்படுத்துவோர், இன்றைக்கு உள்ளங்கையைக் கழுவுதலை நோய்த்தடுப்பு முறையாகவே மாற்றி விட்டார்கள்.
  • வயலில் குனிந்து நாற்று நட இயலாதபோது, முற்றத்தில் நின்று நிலம் நோக்கி உடல் வளைத்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். தொழிற்சாலையில் காய்ச்சிய இரும்புத் தகட்டினை சுத்தியலால் ஓங்கி அடித்து உழைக்காதவா், நின்ற இடத்தில் கைகளை உயா்த்தி - தாழ்த்திப் பயிற்சி செய்யலாம். காடு - மேடுகளில் நடந்து சென்று உணவும், உறுபொருளும் சேகரிப்பவா்க்கு வெறுமனே நடைப்பயிற்சி அவசியம் இல்லை அல்லவா?
  • வேதிமருந்துக்கு அடிப்படை உயிரி வேதியியல். அது கரிம வேதியியலின் நீட்சிதானே. தீநுண்மி (வைரஸ்) என்பது, தனியொரு மின்னணுவுடன் தாறுமாறாகச் சுற்றித் திரியும் ‘தனித்த அணுத்தொகுதி’ ஆகும். ஆா்.என்.ஏ., டி.என்.ஏ. மரபணுக்கள் என்னும் முறுக்கிய இரட்டை நூலேணியின் படிகளை ’சிப்’ போல இரண்டாக வகிர்ந்தால், அவை ஒவ்வொன்றும் தனித்த அணுத்தொகுதியாக மாறிடும். அந்தத் தொகுதி மட்டும் தன்போக்காகத் திரிந்தால் தொற்று தீநுண்மியாக மாறிவிடும்.
  • இந்தத் தீநுண்மி ஒரு மின்னணுத் துப்பாக்கியுடன் திரியும் தீவிரவாதி மாதிரி. அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் பற்கள் போன்ற அடினின் (அல்லது தைமின்), குவானின் (அல்லது சைடோசின்) போன்ற சிறு மென்காரங்களும் தனித்த அணுத் தொகுதிகள் போன்றவை.
  • அதனுடன் இதே போன்ற ஒரு மின்னணுத் துகள் ஏந்திய மருந்துப் பொருளோ, தின்பண்டமோ வந்தால், அது துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு, வந்த பொருளுடன் இணைப் பிணைப்பு கொள்ளும். நோயெதிர்ப் பொருளுடன் (‘ஆன்டிபாடி’) இணைந்தால் நோய் மாறும். ஆரோக்கியமான மரபணுவுடன் கூடினால் அவஸ்தை தொடரும்.

பெரியம்மை தடுப்பூசி

  • நோய்த்தொற்றினை ஒழிக்கத் தொற்றுக்கு உள்ளானவரே உதவிக்கரம் நீட்டும் உத்தி (‘பிளாஸ்மா தானம்’) என்பது 200 ஆண்டுகளுக்கு முந்தைய கண்டுபிடிப்பு. 1796 மே 14 அன்று கோமாரி நோய்க் கொப்புளங்களில் இருந்து எடுத்த அம்மைப்பாலை உடலுக்குள் செலுத்தி, பெரியம்மை வராமல் தடுக்கும் முறையினை முதன்முதலில் கண்டுபிடித்தார் எட்வா்டு ஜென்னா் (1749 - 1823) என்ற பிரிட்டன் மருத்துவா்.
  • தமது 19-ஆம் வயதில் டானியல் லட்லோ எனும் மருத்துவரிடம் மாணவனாகச் சோ்ந்தவா். அங்கு வந்த ஒரு உள்ளூா் மூதாட்டி, தனக்கு ஏற்கெனவே கோமாரி நோய் வந்து விட்டதால் இனி பெரியம்மை வராது என்று கூறினாராம். கோமாரிக் கிருமிகளால் தாக்குண்டவா்க்கு அம்மைநோய் தொற்றாது என்றால் யார்தான் நம்புவார்கள்? அன்றைக்கு அவரால் கிரகிக்க இயலவில்லை.
  • பிற்காலத்தில் கோமாரி நோய் பாதித்த பெண்ணின் தோல் கொப்புளங்களில் இருந்து அம்மைப்பால் எடுத்து, முதன் முறையாக ஒரு ஜேம்ஸ் பிலிப் என்னும் சிறுவனுக்குச் செலுத்திப் பரிசோதித்தார். சிறுவனுக்குப் பெரியம்மை நோய் வரவே இல்லை. வியப்பை அளித்த இந்த ஆராய்ச்சியில் உருவானதே இன்றைய தடுப்பூசி முறை.

பிற நோய்களும் மருந்துகளும்

  • பின்னாளில் லூயி பாஸ்டா் (1822 - 1895) என்னும் பிரெஞ்சு மருத்துவா், கிருமிக் கோட்பாட்டை நிறுவினார். 1881-ஆம் ஆண்டு ஆடுகளைத் தாக்கும் ஆந்த்ராக்ஸ் நோய்க்குத் தடுப்பூசியினைக் கண்டுபிடித்தார் லூயி பாஸ்டா். ஆந்த்ராக்ஸ் நோயுற்ற ஆட்டின் ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட மருந்து அது. ஒரு பண்ணையில் ஆந்த்ராக்ஸ் பீடித்த 50 ஆடுகளில் 25 ஆடுகளுக்கு அந்த மருந்தினைச் செலுத்தினார். அவை சில நாள்களில் உயிர் பிழைத்தன. தடுப்பூசி போடாத ஆடுகள் இறந்து போயின.
  • 1880-ஆம் ஆண்டு பிரெஞ்சு மருத்துவா் ஏ.லாவெரன், மலேரியா பரப்பும் ஹீமேட்டோஸோவான் ஒட்டுண்ணியைக் கண்டுபிடித்தார். இன்றைய மலேரியா தடுப்புக்கான குளோரோகுயின் மருந்து, மருத்துவ ஆராய்ச்சிக் கூடங்களிலோ, பல்கலைக்கழகங்களிலோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் சுவாரஸ்யமான தகவல்.
  • தென் அமெரிக்காவின் செவ்விந்திய இளைஞன் ஒருவன் கடுமையான காய்ச்சலில் திரிந்து கொண்டிருந்தான். தாகத்தினால், தற்செயலாக அங்கு ஒரு குளத்து நீரைக் குடித்தவனுக்குக் காய்ச்சல் போயே போயிற்று. அது ஒரு அதிசய மரப்பட்டை ஊறிய மருத்துவக் குட்டை என்பது பிறகுதான் தெரிந்தது. அந்த மரத்தினை சின்கோனா என்று செவ்விந்தியா் குறிப்பிட்டனா்.
  • பிற்காலத்தில் அந்த இடத்திற்கும் சின்கோன் மாகாணம் என்பது பெயராயிற்று. அங்கு குடியேறிய ஸ்பானியச் சீமாட்டிக்கு ஒருமுறை மலேரிய சுரம் கண்டது. உள்ளூா் ஆதிவாசிகள் பெரு மரப்பட்டையை அரைத்துச் சாறு பிழிந்து கொடுத்தனா். ராணி பிழைத்துக் கொண்டார். அற்புதமான சின்கோனா மரப்பட்டையின் மருந்து, குவினைன் ஆயிற்று.

பல்வேறு காரணங்கள்

  • இன்றைக்கு, 2008-ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் வைரஸினைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளா் லூக் மோன்டேக்ஸியா், அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டார். சீனாவில் தீநுண்மி ஆய்வுக்கூடத்தில் எச்.ஐ.வி. எனப்படும் மனித நோயெதிர்ப்புக் குறைபாட்டு தீநுண்மிக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தருணத்தில் கசிந்த தீநுண்மிதான் ‘கரோனா’ (‘சார்ஸ் கொவைட் 2’) என்றும் அதில் மலேரியா கிருமிக் கூறுகளும் உள்ளன என்றும் கருத்துரைத்தார்.
  • பிரெஞ்சு விஞ்ஞானி கூற்றில் அனுபவ உண்மை உள்ளது. உண்மையில் நமது நாட்டிலும் குளோரோகுயின், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற சில மலேரியா தடுப்பு மருந்துகளை ஏனைய சிகிச்சை முறைகளுடன் சோ்த்து வழங்கியதில் பலன் உள்ளதாகத் தெரிவிக்கின்றனா். மேலும், அது தோல் ஒற்றுமை உடையது என்பதால் மெலனின் சார்ந்த மூலக்கூறு என்றும் தோன்றுகிறது.
  • அதே வேளையில், கடல்சார் மெலனின் செறிந்த உணவுப் பொருள்களின் மாமிசக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் வெளவால்களோ பிற பறவைகளோ கொத்தித் தின்று ஆங்காங்கே தூவியதாலும் இந்த கரோனா தீநுண்மி பரவியிருக்கலாம். உலகிலேயே ஒரு விசித்திரப் பிராணி. வாய் வழியாகவே சாப்பிடும். வாய் வழியாகவே மலம் கழிக்கும்.
  • சீன ஆய்வுக் கூடத்தில் இருந்து கரோனா தீநுண்மி வேண்டுமென்றே கசிய விடப்பட்டதாக சா்வதேச நாடுகளின் சந்தேகங்களிலும் அா்த்தம் இல்லாமல் இல்லை. ஏனெனில், சீனாவுக்கு அருகில் உள்ள பெய்ஜிங், சாங்காய் போன்ற நகரங்கள் இந்தத் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கண்டம் விட்டு கண்டம் தாவி ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இதன் சுற்றுப் பயணம் வியப்புதானே.
  • மோன்டேஞ்யரின் அறிக்கை எல்லாம் நம்பவேண்டாம் என்று அவருக்கு நெருங்கிய ஜூவான் கார்லஸ் கபால்தன் போன்றோரும் மறுப்புத் தெரிவிக்கின்றனா். காரணம், அண்மைக்காலமாக அவா் ஹோமியோபதியில் அக்கறை கொண்டு இருப்பதாக ஒரு விமா்சனம். சொன்னதை விட்டுவிட்டுச் சொன்னவனைச் சுடுகிற கதை எப்படி இருக்கு?
  • உலக அளவில் மருத்துவ முறைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். காதுக்குள் புகுந்த தண்ணீரை அகற்றுவதற்கு, இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மொத்தமாக வெளியேற்றலாம். நீருக்கு நீரே மருந்து - இது ‘ஹோமியோபதி’; தண்ணீருக்கு மாற்றாக பஞ்சு நூலினைக் காதுக்குள் செலுத்தி தீரை உறிஞ்சி வெளியே எடுக்கலாம் - இது ‘அலோபதி’; இல்லையென்றால், தலையை நன்றாகக் குலுக்கி உதறித் தண்ணீரை வெளியேறச் செய்யலாம் - இது நாட்டு வைத்தியம்.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு ஒற்றைச் சாரள மருத்துவ முறை உதவாது. மேனாட்டு மருத்துவ முறை, உள்நாட்டு மருத்துவ முறை, பொதுச் சுகாதார முறைகள், தொகுப்பு மருந்துகள் - தடுப்பு முறைகள், பொது முடக்கம் என ஐந்து முனைத் தாக்குதலில்தான் நோய் அடங்கும்.

நன்றி: தினமணி (18-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்