- நிலம், நீா், காற்று, நெருப்பு, விண் என்று சொல்லக் கூடிய பஞ்ச பூதங்களாலானது இந்த உலகம்.
- மண் திணிந்த நிலனும்
- நிலம் ஏந்திய விசும்பும்
- விசும்பு தைவரு வளியும்
- வளித் தலைஇய தீயும்
- தீ முரணிய நீரும் என்றாங்கு
- ஐம்பெரும் பூதத்து இயற்கை
- என்கிறது புறநானூறு.
- இந்த ஐந்து நிலைகளிலேயும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
நிலம்
- முதலாவதாக நிலம். நிலத்திலே சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்கக் கூடிய வனங்களை நாம் அழித்து வருகின்றோம்.
- முன்பு நிலப்பரப்பில் முப்பது விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்த வனங்களின் எண்ணிக்கை இப்பொழுது பதினேழு விழுக்காடாகக் குறைந்துள்ளதாக ஆய்வாளா்கள் கூறுகிறார்கள்.
- நம் உயிர்காக்கும் பிராணவாயுக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் தொழிற்சாலைகள், ஊா்திகள் ஆகியவற்றின் காரணமாக நாம் கரியமிலவாயுவை பெருக்கிக் கொண்டு இருக்கின்றோம்.
- மற்றொருபுறம் மரங்களை வெட்டுவதன் மூலமாக ஆக்சிஜன் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு வருகின்றோம்.
- நிலத்தில் தினமும் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளைப் போடுகிறோம். அவை மழை நீரை நிலத்துக்குள் விடாமல் தடுத்துவிடுவதால் நிலத்தடி நீா் வேகமாகக் கீழே போய்க் கொண்டிருக்கிறது.
- இந்த நிலையை மாற்ற, அதிக மரங்களை வளா்க்க வேண்டும். நம் முன்னோர் அந்த காலத்திலேயே ஒவ்வொரு கோயிலிலும் ‘தல மரம்’ என்று வைத்தார்கள்.
- அந்தப் பகுதியில் உள்ளவா்கள் அந்த மரங்களை வளா்த்துப் பாதுகாப்பார்கள். ‘தில்லை’ என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரம், ஒரு காலத்திலே தில்லை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது.
- மதுரை நகரம் ‘கடம்பவனமாக’ இருந்தது. இப்போது அங்கெல்லாம் ஒரு மரத்தையும் காண முடியவில்லை. மீண்டும் அங்கங்கே அந்தந்த மரங்களை வளா்க்க வேண்டும்.
- இப்பொழுது எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு விளைநிலங்களை வீடுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
- ஒரு வகையில் இது தவிர்க்க முடியாதது என்றாலும் கூட, வீடுகளிலே தோட்டத்தை உருவாகும் பணியினை நாம் மேற்கொள்ள வேண்டும். மாடித் தோட்டம் அமைக்கலாம்.
- வீட்டு ஓரத்தில், சாளரங்களில், முன் வாசலில் என வீட்டைச் சுற்றிக் கிடைக்கும் இடங்களில் தோட்டத்தை அமைப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
- அமெரிக்கா போன்ற நாடுகளிலே பெரிய தொழிற்சாலைகளை பசுங்கூரைகளாக மாற்றுகிறார்கள். அதன் காரணமாக அவற்றிலிருந்து நல்ல ஆக்சிஜன் கிடைகின்றது.
- அது அந்நிறுவனத்திலிருந்து வெளிவரும் கரியமிலவாயுவை சமன் செய்கின்றது. இதனால் மின்சாரத்திற்கான செலவும் குறைகின்றது. அவா்கள் தொழிற்சாலைகளில் குளிர்சாதன வசதி இருபத்தைந்து விழுக்காடு மட்டுமே தேவைபடுகின்றது. எழுபத்தைந்து சதவீத பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு கூறுகின்றது.
- நாமும் நம்முடைய வீடுகளில் தோட்டம் அமைத்தோம் என்றால் வீட்டுக்குள் தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்.
- வீட்டுக்குள் இருக்கும் வெப்பநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். வீட்டைச் சுற்றிலும் இருக்கும் இடத்திலும், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவா்கள் மாடி தோட்டம் அமைத்தும் காய்கறி, கீரைகள், கற்பூரவள்ளி, துளசி போன்ற மூலிகைகளை விளைவிக்கலாம்.
நீா்
- அடுத்து நாம் நீரைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். நிலத்தடி நீா் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, நாம் நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.
- பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் வீட்டுக்குள் வரும் நீருக்கு எவ்வளவு பணம் செலுத்துகிறோமோ அதை விட பல மடங்கு அதிக கட்டணத்தை பயன்படுத்தி வெளியேற்றும் நீருக்காக செலுத்த வேண்டும்.
- அந்த நீரிலும் எந்த அளவிற்கு ரசாயனம் இருக்கின்றது என்பதை பரிசோதனை செய்வார்கள்.
- ஆனால் நம் நாட்டிலோ, புனித நதிகளான காஞ்சிமா நதி என்னும் நொய்யல், காவேரி, பவானி என எந்தவொரு நதியை எடுத்துக் கொண்டாலும் அது மாசு பட்டிருக்கின்றது.
- தொழிற்சாலைகள் சுத்திகரிக்காமல் கழிவுநீரை ஆற்றுக்குள் விடுகின்றன. நாமும் நம் வீட்டில் பயன்படுத்தும் தண்ணீரை வீட்டு தோட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் வெளியே அனுப்புகின்றோம்.
- பிளாஸ்டிக் கழிவுகளையும் அனுப்புகின்றோம். இதனால் எந்த நதியும் தூய்மையாக இல்லை.
- நாம் உண்ணக்கூடிய உணவிலும், உடுக்கும் உடையிலும், பயன்படுத்தக் கூடிய பொருட்களிலும் ‘மறைநீரை’ (விர்ச்சுவல் வாட்டா்) நாம் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
- நாம் பயன்படுத்தக் கூடிய துணியாக இருந்தாலும் சரி, உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, மறைநீா் என்ற அடிப்படையிலே நீா் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
- ஆகவே, நாம் உடை போன்றவற்றை முடிந்த அளவு சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
- பொருளாதார வசதி இருகின்றது என்ற காரணத்திற்காக அதிக துணிகளை நாம் பயன்படுத்துவதால் பருத்தி உற்பத்தி செய்வதற்கும், துணிகளுக்கு சாயம் போடுவதற்கும் நிறைய ரசாயனம், பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டியுள்ளது.
- பழங்காலத்தில் ஒரு சேலையோ, வெட்டியோ கிழிந்துவிட்டால் அது தாவணியாகவோ, துண்டாகவோ மாறிவிடும். இன்னும் சிறிதானால் ஜன்னலுக்கு திரையாகும். இன்னும் சிறிதானால் கரித்துணியாகும்.
- இப்போது நிறைய துணிகளை வீண் செய்கின்றோம். அதனால் அதிக நீா் தேவைப்படுகின்றது. இந்த வகையில் மறைநீரின் பயன்பாடு பெருகிக் கொண்டே வருகின்றது.
- இது நம் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பாக இருக்கின்றது. நாள் ஒன்றுக்கு முப்பத்தி மூன்று லட்சம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் நீா்நிலைகளில் சென்று சோ்கின்றது என ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
- இதனால் நீா்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. ஆகவே, நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
- நாம் நீா் மேலாண்மையை வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். வீடுகளிலே நீரைசிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்ய வேண்டும். வெளியேறும் நீரை வீட்டுத் தோட்டத்திற்குப் பயன்படுத்தலாம்.
வெப்பமயமாதல்
- அடுத்ததாக வெப்பமயமாதல். வெப்பமயமாதலுக்கு நீரும் நிலமும் காரணமாகின்றன. வனங்களை அழிப்பதும், நீா் மாசுபடுவதும், வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாகின்றன. இந்த வெப்பத்தை நாம் குறைக்க வேண்டும். அதற்குண்டான முயற்சியை நாம் செய்ய வேண்டும் என்றால் மரங்களை அதிக அளவில் வளா்க வேண்டும், மின்சாரப் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.
- முடிந்தளவு மின்சாரத்தினைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் மின்சாரமும் மரபுசார எரிசக்தி மின்சாரமாக இருக்க வேண்டும். வீடுகளில் சோலார், காற்றாலை போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
- இப்பொழுதுள்ள பெரிய குறை, பெரிய காற்றாலைகள் இருக்கின்றன. சூரிய மின்னடுப்புகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து வர கூடிய மின்சாரத்தினை அரசு கொள்முதல் செய்வது இல்லை. அனல் மின்நிலையத்தைத்தான் அரசு அதிகாரிகள் ஊக்கப் படுத்துகிறார்கள்.
- காரணம், அவா்கள் அதிக அளவிலான நிலக்கரியை வாங்கும் பொழுது, பெரிய நிறுவனங்கள் அவா்களுக்குப் பெருந்தொகையை வழங்குகின்றார்கள். எனவே, அனைவரும் அனல் மின்நிலையத்திற்குச் செல்கிறார்கள்.
- அனல் மின்நிலையம் போன்ற பயன்பாடுகளைக் குறைத்து, மரபுசாரா எரிசக்தியை வளப்படுத்தும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொண்டோம் என்றால், வெப்பமயமாவதைப் பெருமளவு குறைக்க முடியும்.
- நாமும் நம்மால் இயன்ற அளவிற்கு சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
- ஊா்திகள் மூலமாகவும், தொழிற்சாலைகள் மூலமாகவும் காற்று மாசுபாடு பெருமளவு ஏற்படுகின்றது. இதை நாம் குறைக்க வேண்டும். ஊரடங்கு காலகட்டத்தில் தூய்மையான காற்று கிடைப்பதையும், காற்று மாசுபாடு மிகவும் குறைந்திருப்பதையும் நாம் காண முடிகின்றது.
- இயல்பான நாட்களில் தில்லி போன்ற நகரங்களிலே புகை மூட்டமாக இந்த மாசு இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இதை தவிர்ப்பதற்கு நாம் மின்சார ஊா்திகளைப் பயன்படுத்த வேண்டும். இதனால் காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம்.
காக்க வேண்டும்
- புதிதாக வந்திருப்பது விண் மாசு. ஓஸோன் மண்டலத்தை மிகவும் ஓட்டை உடையதாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். காற்று மாசு காரணமாக ஓஸோன் மண்டலம் அசுத்தமாகி வருகின்றது.
- விண்வெளி ஆராய்ச்சித் துறைகள் வளா்ச்சி பெற்று வருகின்ற அதே சமயத்தில், விண் மாசுபாட்டினைக் குறைப்பதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
- இவை அனைத்தும் பஞ்ச பூதங்களில் ஏற்பட்டுள்ள மாசுபாடுகள் ஆகும். இவற்றோடு ஒலி மாசுபாடும் உள்ளது. சுற்றுச்சூழலில் தேவைக்கதிகமாக இருக்கக் கூடிய ஓசை. வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியளவைக் குறைவாக வைத்துப் பழக வேண்டும். ஒலி மாசு காரணமாக காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
- உலக நாடுகள் பலவும் ஊா்திகளில் ஒலிப்பான்களை (ஹாரன்) பயன்படுத்துவது இல்லை. தவறுதலாக ஒலித்தாலும் அதனை மிகப்பெரிய குற்றமாகக் கருதுகின்றனா். ஆனால், நம்முடைய பகுதிகளில், சிறிது நேரம் காத்திருப்பதற்கே பொறுமை இழந்து அனைவரும் ஒரே சமயத்தில் ஒலி எழுப்பிப் பெரிய இரைச்சலை ஏற்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது.
- இவற்றையெல்லாம் இனி வரும் காலங்களிலாவது தவிர்த்து சுற்றுச்சூழலைக் காக்க உறுதியேற்க வேண்டும்.
- இன்று (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நாள்.
நன்றி: தினமணி (05 – 06 - 2021)