- ஒட்டகங்களின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவேகமாகக் குறைந்து வருகிறது என்று ‘நேஷனல் ஜியாக்ரபிக்’ அமெரிக்க மாத இதழ் சமீபத்தில் ஒரு சிறப்புக் கட்டுரையைப் பிரசுரித்தது.
- அதன் பிறகே இந்திய ஊடகங்கள் இதைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு இது தொடர்பில் கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றன. உலகில் இந்தியா உள்பட 46 நாடுகளில் ஒட்டகங்கள் இருக்கின்றன.
- ஆனால், இந்தியாவில்தான் ஒட்டக எண்ணிக்கை வெகு வேகமாக சரிந்துவருகிறது; இது ஓர் அழிவுப் பயணம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள்.
- 'பசுப் பாதுகாப்பு'போல, 'ஒட்டகப் பாதுகாப்பு' என்ற பெயரில் எடுக்கப்பட்ட மோசமான நடவடிக்கைகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது. பல செய்திகளை நமக்குச் சுட்டுகிறது இந்த விஷயம். என்ன அவை? பார்ப்போம்!
பாலைவனக் கப்பல்
- இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் லடாக் பள்ளத்தாக்கிலும் ஒட்டகங்கள் அதிகம். 1971-ல் ராஜஸ்தானில் மட்டும் 11 லட்சம் ஒட்டகங்கள் இருந்தன.
- இப்போது சுமார் 2.5 லட்சம் ஒட்டகங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒட்டகங்கள் 'பாலைவனக் கப்பல்கள்' என்று அழைக்கப்படுகின்றன. முன்பு சாலை வசதிகளற்ற ராஜஸ்தான், குஜராத் பாலைவனப் பகுதிகளில் மக்களுடைய பயணத்துக்கும் சரக்குகளைக் கொண்டுசெல்லவும் ஒட்டகங்கள் மட்டுமே பயன்பட்டன.
- 1950-க்குப் பிறகு ராஜஸ்தானில் தார்ச் சாலைகளின் நீளம் மட்டும் ஐம்பது மடங்குக்கு மேல் பெருகிவிட்டது. டிராக்டர்கள், பைக்குகள், வேன்கள், பேருந்துகள் எண்ணிக்கை அதிகரித்ததால் மக்கள் ஒட்டகங்களைப் பயன்படுத்துவது கிட்டத்தட்ட இல்லாமலே போய் விட்டது.
- தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் மாட்டு வண்டிகளின் பயன்பாடு எப்படிக் குறைந்ததோ அதைப்போலவே அங்கு ஒட்டகப் பயன்பாடும் குறைந்துவிட்டது.
ஒட்டகங்களின் தேவை முடிந்துவிட்டதா?
- உடனே ஒட்டகங்களின் தேவை முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். ஒட்டகங்களைப் பால் பெருக்குத் திட்டத்துக்கு, மருந்துத் தயாரிப்புக்கு, சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிப்புக்கு, தோல் தொழிலுக்குப் பயன்படுத்த முடியும்.
- ஒட்டகத்தின் பால் மனிதர்கள் அருந்தக்கூடியது. மிகவும் அடர்த்தியானது. விலை அதிகமுள்ளது. ராஜஸ்தானில் கறக்கப்படும் ஒட்டகப் பாலை ஹைதராபாத், பெங்களூரில் வாங்கக் காத்திருக்கிறார்கள்.
- ஒட்டகம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை பால் கறக்கும். ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை கிடைக்கிறது. குஜராத் மாநிலம் இதில் முன்னோடி. 'அமுல்' நிறுவனமே ஒட்டகப் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தையும் நடத்துகிறது. குஜராத் பால்பண்ணை நிறுவனம் ஒட்டகப் பாலை குளிரூட்டும் நிலையத்தில் பதப்படுத்தி வைக்கிறது.
- இதனால் மூன்று நாள்கள் முதல் 180 நாள்கள் வரையில் பால் கெடாமல் இருக்கிறது. இந்தப் பாலை சாக்லேட், குல்ஃபி, நெய், வெண்ணெய் தயாரிக்கவும் தோலுக்குப் பூசும் கிரீம்கள், சோப்புகள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
- ஒட்டகப் பாலை அதிகம் கொள்முதல் செய்தால், மதிய உணவு திட்டத்தில் சத்துக் குறைவான குழந்தைகள், சிறார்களுக்கும் கொடுக்கலாம்.
- ஒட்டகங்களுக்கு வேறு பயன்பாடுகளும் உண்டு. தைராய்டு, புற்றுநோய், காசநோய் போன்றவற்றுக்கும் பாம்புக்கடிக்கு விஷமுறிவு மருந்து தயாரிக்கவும் ஒட்டகம் பயன்படுகிறது. ஒட்டகங்களின் முடியையும் சணலையும் இணைத்து தயாரிக்கும் நூலிழை, பாலிதீனைவிட வலுவானதாக, தண்ணீர் உள்புக முடியாததாக இருக்கிறது.
- தோல் தொழிலிலும் ஒட்டகத்தைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் வளர்கின்றன. ஒட்டகச் சாணத்திலிருந்து காகிதம் தயாரிக்கின்றனர்.
- செங்கல் தயாரிப்புக்கும் பயன்படுகிறது. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் ஒட்டக வளர்ப்பானது கட்டுப்படியாக இருப்பது முக்கியம். இந்தியா அந்தச் சூழலை இன்று இழந்து வருகிறது.
மேய்ச்சல் நிலம் இல்லை
- ஒட்டகங்களின் எண்ணிக்கைப் பெருமளவு வீழ்ச்சியடைந்ததற்கு முக்கியமான காரணம் ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலம் வெகு வேகமாகக் குறைந்தது.
- ராஜஸ்தானில் இந்திரா காந்தி கால்வாய் திட்டம் மூலம் பார்மர், பிகானேர், சூரு, ஹனுமான் கட், ஜெய்சால்மர், ஜோத்பூர், ஸ்ரீகங்கா நகர் ஆகிய ஏழு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்களாக மாறின.
- பாசன வசதி பெற்று அவை கோதுமை, நவதானியச் சாகுபடியில் சாதனை படைத்தன. நிலங்களை வாங்கியவர்கள் அவற்றுக்கு வேலியிட்டனர்.
- இதனால் ஒட்டகங்களால் தங்களுடைய இயல்புப்படி மேய முடியவில்லை. ஒட்டகங்களை வளர்ப்போருக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
- ஒட்டகங்களை ஆண்டுக்கு எட்டு மாதங்கள் வீட்டில் கட்டவே மாட்டார்கள். அவை கால்போன போக்கில் போய் மேய்ந்துவிட்டு, சரியாக தங்களுடைய வளர்ப்பவர் இருக்கும் இடங்களுக்கு வந்துவிடும்.
- காடுகளிலும் சுரபுன்னைக் காடுகளிலும் இலை, தழைகளை அவை உண்ணும். ஒட்டகங்கள் விரும்பி உண்ணும் கேஜ்ரி (வன்னி) மரங்களுக்குப் பதிலாக வேறு பணப்பயன் தரும் பபூல் (கருவேல) மரங்களை வளர்க்கின்றனர்.
- குஜராத்தின் கட்ச் பகுதி சுரபுன்னைக் காடுகளும் ஒட்டகங்களால் நுழைய முடியாமல் வேலியிடப்பட்டு விட்டன. கைர் என்ற மர இலைகளையும் ஒட்டகங்கள் விரும்பி உண்ணும்.
- வன வளர்ப்புத் திட்ட அதிகாரிகள் என்ன காரணத்தாலோ ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில்கூட ஒட்டகங்கள் விரும்பிச் சாப்பிடும் இலைகளையும் தழைகளையும் தரும் மரங்களுக்குப் பதிலாக வேறு பணப் பயனுள்ள மரங்களைச் சாகுபடிசெய்தனர்.
- இதனால் ஒட்டகங்களுக்குத் தீனி கிடைப்பது குறைந்தது. சந்தையில் கிடைத்த தீனியின் விலை அதிகமானதால் ஒட்டகம் வளர்ப்போருக்குக் கட்டுப்படியாகவில்லை.
- இதனால் ஒட்டகங்களை வாங்கும் எண்ணிக்கையும் பராமரிக்கும் எண்ணிக்கையும் வேகமாகச் சரிந்தது.
எதிர்மறை விளைவைத் தந்த ஒட்டகப் பாதுகாப்பு நடவடிக்கை
- ஒட்டகங்களைக் காப்பதற்காக ராஜஸ்தானில் பாஜக அரசு ஆட்சியிலிருந்தபோது கொண்டுவந்த ‘ராஜஸ்தான் ஒட்டகச் சட்டம் 2015’ இதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்து விட்டதுதான் நகைமுரண். ஒட்டகங்கள் மீதான அரசின் நல்லெண்ணத்தில் பழுது இல்லை.
- அதை மாற்றுக்கட்சியினரிடமோ, சம்பந்தப்பட்டவர்களிடமோ கேட்காமல் ரகசியமாக - விரைவாக செய்துவிட வேண்டும் என்று துடிப்புதான் நோக்கத்தையும் பாழ்படுத்தி அந்தந்தத் துறைகளையும், கடைசியில் மக்களையும் துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது.
- ராஜஸ்தான் சட்டத்தின் நோக்கம் ஒட்டகங்களை இறைச்சிக்காகக் கொல்வதைத் தடுக்கவும், அதற்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கடத்திக்கொண்டு செல்வதையும், ஏற்றுமதிசெய்வதையும் தடுக்கும் நோக்கம் கொண்டது.
- அதனால் ஒட்டகத்துக்கான சந்தை சரிந்ததும் ஒட்டகத்தின் விலை வீழ்ச்சியடைந்ததும்தான் நடந்தது.
- அதன் விளைவுகளால் ஒட்டகங்களின் எண்ணிக்கை மேலும் குறைந்ததாலும், ஒட்டகம் சார்ந்த பொருளாதாரம் மோசமானதாலும் இப்போதைய அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் சேர்த்து அமல்படுத்துகிறது.
- அப்படியும்கூட இந்தச் சட்டம் ஏற்படுத்திய சேதங்களைச் சரி செய்ய முடியவில்லை. ஒட்டகங்களை யாரும் வாங்க விரும்பினால் - கொண்டு செல்ல, இப்போது அனுமதிக்கப் படுகிறது.
களையிழந்த புஷ்கர் சந்தை
- ராஜஸ்தானில் புஷ்கர் என்ற இடத்தில் ஆண்டுதோறும் நடக்கும் ஒட்டகச் சந்தை மிகவும் பிரபலமானது. அரசு அதை மிகப் பெரிய கண்காட்சிபோலவும் கலை விழாபோலவும் நடத்தும்.
- பத்தாண்டுகளுக்கு முன், அங்கே ஓர் ஒட்டகம் 70,000 ரூபாய்க்கும் ஒரு வயதுள்ள குட்டி 15,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.
- இப்போது நிலைமை மோசம். 2017-ல் நடந்த புஷ்கர் ஒட்டக மேளாவுக்கு, பிகானேரில் உள்ள தேசிய ஒட்டக ஆய்வு மையம் வளர்த்த 40 ஒட்டகங்களைக் கொண்டுசென்றபோது, தலா ரூ.30,000 என்று விலை போயின.
- 2018-ல் 50 ஒட்டகங்களைக் கொண்டுசென்றதில் 30 மட்டுமே விற்றன, அதுவும் ரூ.3,500 - ரூ.2,000 என்ற விலைக்கே போயின.
இழக்கும் தனித்துவம்
- ராஜஸ்தானில் பிகோனேரி, ஜெய்சால்மரி, ஜலோரி, மார்வாடி, மேவாடி ரக ஒட்டகங்கள் உள்ளன. மார்வாடி, மேவாடி ரகங்கள் ஹரியாணாவிலும் உள்ளன. குஜராத்தில் கட்சி, கராய் ரகங்கள் உள்ளன.
- மத்திய பிரதேசத்தில் மால்வி ரகங்கள் உள்ளன. இவையெல்லாம் அந்தந்த பிரதேசங்களின் பெயர்களால் ஆனவை.
- இரட்டைத் திமில்கள் கொண்ட ஒட்டகங்கள் லடாக்கின் நூப்ரா பள்ளத்தாக்குப் பகுதியில் காணப்படுபவை. ஒட்டகங்கள் வேகமாக அழிபடும்போது தனித்துவமான இந்த வகைகள் வேகமாக அருகுகின்றன. இதேபோல, ஒட்டக வளர்ப்பில் பேர்போன ஒரு சமூகத்தின் செல்வாக்கும் சரிகிறது.
- ஒட்டகங்களை வளர்ப்பவர்கள் 'ரெய்கா' என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஒட்டகங்களைத் தங்களுடைய குழந்தைகளைப் போலவே காப்பாற்றுவார்கள்.
- ஒட்டகத்துடன் உரையாடுவதற்கு என்றே இவர்கள் பயன்படுத்தும் பாஷை உண்டு. இதற்கு அகால்-டகால் பாஷை என்றே பெயர். அந்த அளவுக்கு இவற்றின் மீது பாசமாக இருக்கும் ரெய்காக்கள் நாடோடிகள்.
- ராஜஸ்தானில் மட்டும் ஒட்டகங்களை நம்பி வாழ்ந்த ரெய்காக்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்கும் மேல். எழுத்தறிவற்ற இவர்கள் இப்போது கூலி வேலைகளுக்குத்தான் போகின்றனர்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
- ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றால் மேய்ச்சல் நிலங்களையும் தீவனங்களையும் உறுதிசெய்ய வேண்டும். ஒட்டகப் பாலை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
- அதிலிருந்து பால் பொருள்களைத் தயாரித்து வருவாயைப் பெருக்க முடியும். மகளிர் சுய உதவிக் குழுக்களை இதில் ஈடுபடுத்தலாம்.
- முக்கியமாக, விலங்குகள் வளர்ப்போர் - அவற்றைப் பயன்படுத்துவோர் அலைவரிசையை மேம்படுத்துவதற்குப் பதிலாக அதில் குறுக்கிடுவதை நிறுத்த வேண்டும்.
நன்றி: அருஞ்சொல் (16 - 12 - 2021)