TNPSC Thervupettagam

ஒட்டகத்தின் மீதொரு குழந்தை

November 5 , 2023 433 days 244 0
  • அரபு நாடுகளில் செல்வச் செழிப்பும் செருக்கும் மிகுந்த அரேபிய ஷேக்குகள் என்று சொல்லப்படும் செல்வந்தர்களின் பொழுதுபோக்குகள் சில மனிதத்தன்மைக்கே சவால் விடுப்பவை. இத்தகைய ஈவிரக்கமற்ற பொழுதுபோக்கு ஒன்றினைப் பற்றிய காணொளிப் பதிவினை அண்மையில் காண நேர்ந்தது.
  • கண்ணுக்கெட்டிய தூரம் பரந்துகிடக்கும் பாலை வனம். அதன் ஓரமாக நிழல்தரும் பார்வையாளர் அரங்கு. அரங்கு அரேபிய ஷேக்குகளால் நிறைந்திருக்கிறது. அவர்கள் வேடிக்கை பார்க்க ஒரு பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒட்டகப் பந்தயம்

  • வரிசையாய் நிற்கும் ஒட்டகங்கள்! ஒட்டக ஓட்டிகள் யார் தெரியுமா? ஐந்து அல்லது ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்!
  • அரபுச் சமூகத்தில் புறக்கணிப்புக்கு ஆளான ஒரு பிரிவினரின் குழந்தைகள் என்பதைப் பார்த்தாலே தெரிகிறது. பசி, பட்டினியில் அடிபட்ட குழந்தைகள். உண்மையில் அவை ஒட்டகத்தின் மீது உட்கார்ந்த நிலையில் கட்டிவைக்கப்பட்டுள்ளன.
  • ஏற்கெனவே வீறிட்டு அழத்தொடங்கிவிட்ட அவற்றின் பயம்கலந்த ஓலமே, ஒட்டகத்தை விரட்டப் போதுமானதாக இருக்கிறது. ஒட்டகங்கள் ஓடத் தொடங்கிவிட்டன. குழந்தைகளின் அழுகையும் கத்தலும் சொல்லி மாளாது. பார்வையாளர் அரங்கிலிருந்து ஒட்டகங்களை விரட்ட ஷேக்குகள் பலமாகக் கூச்சலிடுகிறார்கள்.
  • ஐயோ! அந்தக் குழந்தைகள்! அவற்றின் மரண ஓலம்! அதைக் கண்டு ரசிக்கும் ஷேக்குகள்! பாய்ந்து செல்லும் ஒட்டகங்களில் குற்றுயிரும் குலைஉயிருமாகக் குழந்தைகள். வெற்றிக் கம்பத்தை தாண்டிச் செல்லும் முதல் ஒட்டகத்தின் முதுகில் குழந்தையின் சடலம்!

ஓர் ஒற்றுமை

  • நமது கல்வி முறைக்கும் இந்த ஒட்டகப் பந்தயத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒட்டகங்களின் இடத்தில் பாடத்திட்டங்கள். அவற்றின் பிடியில் நமது பிள்ளைகள். பார்வை யாளர் அரங்கில் அரசாங்கமும் பெற்றோர்களும்! மதிப்பெண்கள் என்கிற வெற்றிக் கம்பத்தை நோக்கி குழந்தைகளைச் செலுத்தும் ஆரவாரங்கள்!
  • தேர்வு முடிவுகள் என்கிற வெற்றிக் கம்பங்களை எட்டும் முன்னரும், எட்ட முடியாமல் போகும்போதும் ஏன் நடக்கின்றன தற்கொலைகள்? தற்கொலை தீர்வல்ல என்பது பதின்ம வயதை எட்டிவிட்ட பிள்ளைகளுக்கு தெரியாதா என்ன? அவர்கள் எடுக்கும் முடிவு அல்ல அது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்று 'பராசக்தி'யில் வரும் வசனத்தை மாற்றி ‘துரத்துகிறோம்...துரத்துகிறோம்.... வாழ்க்கையின் ஓரத்துக்கே அவர்களைத் துரத்துகிறோம்!’ என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது!
  • கரோனா காலத்தில் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை என்பதும், பாடங்கள் நடத்தி அவர்கள் அதில் தேர்ச்சி பெற்று, அடுத்தடுத்த அறிவுப் படிநிலைக்கு நகரவில்லை என்பதும் அரசாங்கத்துக்குத் தெரியும். இணைய வழி வகுப்புகள் மூலம் கற்றலின் பயன்கள் மாணவர்களை பரவலாகச் சென்றடையவில்லை. அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பும் நம்மிடமில்லை. இப்போது இரண்டாண்டுகள் கழிந்தபின், அறிவுச் சேகரம் இன்றி மாணவர்கள் முன்பாக முதிர்ந்த பாடநூல்கள் வைக்கப்பட்ட போது, அதிர்ந்துபோன மாணவர்களை நான் அறிவேன். கிட்டத்தட்டக் கையறு நிலையில் பாடப்புதத்தகங்களைப் புரட்டிப் புரட்டித் திகைத்துப் போனார்கள் நமது மாணவர்கள். இந்த அம்சத்தைக் கருத்தில் கொள்ளாமல், கட்டாந்தரையில் குழி தோண்டி விதைகளை விதைத்துவிட்டு அறுவடைக்குக் காத்திருந்த ஆசிரியர்கள் கடமை முடிந்தது. அரசின் கடமையும் முடிந்தது. மாணவர்கள் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது.
  • உழுதுபோடாத வயல்களில் விதைகள் எப்படி முளைக்கும்? நாற்றங்கால் இல்லாத வயல்களில் பயிர்கள் எங்கிருந்து வளரும்?

இப்படியா நடத்துவது

  • இது போதாது என்று தங்கள் பிள்ளைகளை முன்னேற்றக் கங்கணம் கட்டிக்கொண்ட பெற்றோர்கள் பாட்டு, நடனம், செஸ், கராத்தே சாகசம், இந்தி மொழி பாண்டித்தியம், விளையாட்டுப் பயிற்சிகள் என்று புற்றீசலாய் முளைத்த மையங்களில் கட்டணம் செலுத்தி பள்ளிவிட்டு வந்ததும் பயிற்சி நிலையங்களுக்கு அனுப்புகின்றனர்.
  • புரியாத பாடங்களைப் படிப்பதா? புதிய கலைகளைக் கற்பதா குழம்பித்தான் போகிறார்கள் குழந்தைகள்.
  • ஒருபுறம் பாடத்திட்டம் என்கிற காராக்கிருகம். மறுபுறம் பெற்றோரின் கனவுச் சிறைகள். நடக்கக் கற்று நாலடி வைக்கும் முன்பே ஓடு! ஓடு! ஓடு! என்கிற கூச்சல்கள்-எங்கே மதிப்பெண்? எங்கே மதிப்பெண் என்று துரத்தும் கேள்விகள்! எங்கு திரும்பினாலும் படி! படி! படி என்கிற கூக்குரல்கள்!
  • எந்தத் திசையில் பயணிப்பது என்கிற நிச்சயமின்றி, ஓடுவது ஒன்றே குறிக்கோளாய்த் துரத்தப்படும் குழந்தைகள் தன்னம்பிக்கையும் கற்றலில் நாட்டமும் இன்றி மனச் சமநிலை குலைந்தவர்களாக மாறிப்போனார்கள்.

தானாக மலர்ந்த மலர்கள்

  • ‘கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை’ என்பார் குமரகுருபரர். சிற்றுயிர்க்கு உற்ற துணையாய் விளங்க வேண்டிய கல்வியே சிற்றுயிர்களை பலிவாங்கும் மாயப் பிசாசு ஆயிற்று! போதைப்பொருள் பயன்பாடும், இளம் பருவத் தீச்செயல்களும் மாணவர்களிடையே-மக்களிடையே அல்ல-அதிகரித்திருப்பதை ஒரு புள்ளி விவரம் சுட்டுகிறது. விரக்தியும் மனச்சுமையும் எடுக்கிற விஸ்வரூபங்கள் இவை.
  • சென்ற தலைமுறைகளின் மாணவப் பருவம் என்பது பூ ஒன்று மலர்வதை ஒத்திருந்தது. அதை மலரவைக்க ஆசிரியர்கள் முயன்றதே இல்லை. அவை தாமாகவே மலர்ந்தன. அப்படி அவர்கள் தாமாகவே மலர்ந்து மணம் வீசுமாறு ஆசிரியர்களும் பெற்றோரும் பார்த்துக்கொண்டனர்.

விளையாட்டாகக் கற்றல்

  • அப்போதெல்லாம் ஆறுகளுக்குச் சென்று ஆசைதீர நீந்துவோம். நீச்சல் கற்றுத்தர நீச்சல் பயிற்சிக் கட்டண மையங்கள் இல்லை. கபடி விளையாடவும், சிலம்பு சுழற்றவும் நாங்களே நாடிச் சென்று கற்றோம். அவற்றுக்கென்று பயிற்சிக்கூடங்கள் இல்லை. கிட்டிப்புள், பளிங்கு விளையாடுவது இவற்றை எல்லாம் விரும்பிச் சென்று விளையாடினோம். அவற்றுக்கெல்லாம் பயிற்சி நிலையங்கள் இல்லை.
  • சிறாரின் விருப்பமின்றி திணிக்கப்படும் விளையாட்டுகளும், திறமைகளும்கூட அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைதான்.
  • பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோ சனை உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற கருத்து இப்போது முன்வைக்கப்படுகிறது. ஆனால், இத்தகைய மையங்களில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் மாணவர்கள் அல்ல. அவர்தம் பெற்றோரே. வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
  • “புகழுக்கும் பணத்துக்கும் இரவு பகல் பாராமல் ஓடிக்கொண்டிருக்கும் இவர்கள் திருமணமே செய்துகொண்டிருக்க வேண்டாமே!” என்றார் திண்ணை நண்பர் ஒருவர்.
  • “அப்படிச் செய்துகொண்டால் அவர்கள் பிள்ளை பெறாது இருக்கட்டும்! எத்தனை அரிய சமுதாயப்பணி ஆயினும் அது குழந்தை வளர்ப்பைவிடவும் பெரிதல்ல என்ற எளிய உண்மையைக்கூடப் புரிந்து கொள்ளாதவர்கள், தாம் பெற்ற குழந்தைக்கு முன்னோடிகளாக ரோல்மாடலாக இருக்கத் தகுதியில்லாதவர்கள் எதற்கு குழந்தை பெற வேண்டும்? குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பங்களாவும், காரும் இன்னபிற வசதிகளும் கொடுத்தால் மட்டும் போதுமா? பள்ளியிலிருந்து ஓடிவரும் பிள்ளைகளை அள்ளி அணைத்துச் சீராட்ட அம்மா வேண்டாமா? தோழனாய் இருந்து உறவாட அப்பா வேண்டாமா?”
  • “கைபேசிகளிலிருந்தும், ஏனைய பொழுதுபோக்கு கன்னாபின்னா சாதனங்களிலிருந்தும் பெற்றோர்கள் முதலில் விடுபடட்டும். பிறகு தங்கள் பிள்ளைகளை விடுவிக்கட்டும். குழந்தைகளோடு சேர்ந்து அமர்ந்து வாரத்தில் ஒருநாளாவது சாப்பிடட்டும். சுற்றுலாத்தலங்களுக்கு குழந்தைகளோடு செல்லட்டும்! குழந்தைகளோடு உறங்கட்டும்!
  • எங்கள் வீட்டுத் திண்ணையில் ஓங்கி ஒலித்தன குரல்கள். ‘ஒட்டகத்தின் முதுகிலிருந்து குழந்தையை இறக்கி விடட்டும்’ - என்றது இன்னொரு குரல்
  • ஜெயகாந்தனின் பாடலை யாரோ கம்பீரமாகப் பாடினார்கள்.

வாழ்ந்திடச் சொல்லுகிறேன் - நீங்கள்

வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்-இங்கு

வாழ்வும் வாழ்ந்து

வீழவும் உமக்கு

தலை எழுத்தென்றால் அதைத்

தாங்கிட நாதியுண்டோ

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்