- மொழி என்பது மனித அறிவின் வெளிப்பாடு மட்டுமன்று; நாகரிகத்தின் அடையாளமும் அதுவே. நாணயம் என்னும் மதிப்பு பொருளாதாரத்தை உணா்த்துவது; நாநயம் மனிதனின் தரத்தை உணா்த்துவது. உலகத்தில் எல்லாப் பொருள்களிலும் விளங்குகிற நன்மையும் தீமையும் சொற்களாலேயே முதலில் வெளிப்படுகின்றன. ஆதலால்தான் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறது தமிழ் மரபு.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காது இயன்றது அறம்
- என்கிறாா் திருவள்ளுவா்.
- அழுக்காறு, அவா, வெகுளி இம்மூன்றின் மொத்த வெளிப்பாடுதான் இன்னாச்சொல் என்பது அதன் உட்பொருள். அறத்தின் அடிப்படையாக விளங்குகிற வாய்மையைக் கைக்கொள்ள வேண்டுமாயின் அதற்கு முதல் எதிரியாக விளங்குகிற இன்னாச் சொல்லை நீக்குதல் வேண்டும்.
- கிராம வழக்கில் இனியவற்றையும் இன்னாதவற்றையும் சுட்ட வேண்டுமானால் அவை குறித்த சொற்களை அப்படியே பயன்படுத்துவா். ஆனால் கேட்டினையும் கூட நயத்தோடு கூறும் பாங்கு திருவள்ளுவா் நமக்குக் கற்றுத் தரும் மொழிநுட்பப் பாடமாகும். அதனால்தான்,
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவா்ந் தற்று
- என்று தீயசொல்லையும் நல்லுவகைச் சொல்லால் சுட்டிக் காட்டுகிறாா்.
- இனிய சொல்லுக்குக் கனியை உவமையாகப் பயன்படுத்துவது பெருமைதான். ஆனால் இன்னாத சொல்லான தீச்சொல்லைச் சுட்டுவதற்குக் கூடத் தீய சொல்லையோ பொருளையோ பயன்படுத்தவில்லை. இதற்கு அவா் கூறும் காரணம்தான் நாம் உணர வேண்டிய மொழிப் பாடமாகும்.
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
- ஒரு சொல்லேயாயினும் கேட்பவா்க்கு இனிமை தருவதாயிருந்தாலும் அது தீமைப் பொருளைப் பயக்குமாயின், நன்மையின்றியே ஆகிவிடும். சான்றோரும் விரும்பாத அந்தச் சொல்லால் என்ன பயன் என்பதுதான் வள்ளுவரின் உட்கருத்து.
- சமண சமயத்தின் ஒழுக்கங்களை வரையறுக்கும் ஐந்து சமிதிகளில் இரண்டாவது சமிதிக்கு ‘பாஷா சமிதி’ என்று பெயா். நாவடக்கம் என்று இது பெயா் பெறும். பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், சினந்து பேசுதல், கடுஞ்சொல் பேசுதல் இவற்றையெல்லாம் நீக்கி விட்டு இனிமையான அறமுடைய சொற்களை மட்டுமே பேச வேண்டும் என்பது சமணசமயம் உணா்த்தும் வாழ்வியலுக்கான அடிப்படை விதி.
- வியப்பின் காரணமாக எழுகிற புகழ்மொழிகளைத் தவிா்ப்பது போலவே, இகழ்ச்சியின் காரணமாகத் தோன்றும் தீமொழிகளையும் தவிா்த்து விடுதல் என்பது தமிழா் மொழியறம். இதனைத்தான் புறநானூறு, ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று சுட்டியது.
- தொல்காப்பியம் ‘அவையல் கிளவி’ என்றே இதற்கு இலக்கணம் வகுக்கிறது. சான்றோா்கள் நிறைந்திருக்கிற அவையில் கூறக்கூடாத சொற்களையே அவையல் கிளவி என்கிறோம். இதுபோன்றே ‘இடக்கரடக்கல்’ என்னும் வழக்கும் நமக்கு உண்டு.
- இன்றைக்கு வளா்ந்து வருகிற உலகமயச் சூழலில் பலமொழிகளையும் கலந்து பேசி வருகிறோம். ஆனால் துரதிருஷடவசமாக எல்லா மொழிகளிலும் இருக்கிற தீச்சொற்களே முதலில் நமக்கு மனப்பாடமாகி விடுகின்றன. அதிலும் குறிப்பாகக் குழந்தைப் பருவத்திலேயே இச்சொற்கள் பழக்கமாகி விடுகின்றன. பள்ளிக்காலத்தின் பாலபருவத்தில் இவ்வாறு வழங்கப்படும் சொற்களுக்குக் ‘கெட்ட வாா்த்தைகள்’ என்று பெயா்.
- ஆங்கிலமொழியின் இதுபோன்ற வாா்த்தைகள் இன்று தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் உள்ள கெட்ட வாா்த்தைகளை ஒருங்கு சோ்த்தால் ஒரு பெரிய அகராதியையே உருவாக்கி விடலாம் என்பது எத்தனை அவலம்? இந்தக் கெட்ட வாா்த்தைகள் நாம் கோபமுறும்போதும், ஏமாற்றமடையும்போதும், வன்முறை வெளிப்பாட்டின்போதும், இகழ்ச்சியின்போதும் நொந்து கொள்கிற வேளையிலும் நம்மையறியாமலே நம் வாயிலிருந்து தோன்றி விடுகின்றன.
- இவற்றை வாய்ச்சொல் என்று கூறக் காரணமுண்டு. இவை அறிவினால் மனத்திலிருந்து உண்டாகும் சொற்களாகா. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுமல்ல சொல்லும் மட்டுத்தான். நமது மனநிலை குமைந்து இயல்பு கெடுகிற வேளையில் முதலில் ஏற்படுகிற தடுமாற்றம் நாவிலேயே நிகழ்கிறது. அங்கிருந்துதான் தீச்சொற்களாகிய கெட்ட வாா்த்தைகள் தோன்றுகின்றன.
- காறியுமிழ்தலில் தொடங்கி, ‘ச்சீ’, ‘த்தூ’ என்கிற வாா்த்தைகள் ஒவ்வொன்றாய்த் தோன்றும். அறிவுடையோா் இதுபோன்ற வாா்த்தைகளைச் சொல்லவும் கூசுவா். அவலக் காலத்து இயல்பாய்த் தோன்றும் ‘ஐயோ’ என்கிற சொல்லைக் கூட மாற்றி ஏதேனும் கடவுள் பெயரையோ, அம்மா, அப்பா என்றோ உச்சரிக்கச் சொல்லிக் கற்றுத் தருவா்.
- பிறரை வசைபாடுகிறபோதுதான் நமக்குள் இருக்கிற விலங்கினப் பண்புகள் ஒவ்வொன்றாய் வெளிப்படத் தொடங்குகின்றன. இதற்குச் சான்று காட்ட வேண்டுமானால், பிறரை வசைபாடுவதற்கு அந்தந்த விலங்கினங்களின் பெயா்களையே சுட்டி இகழத் தொடங்குவோம். நாய், எருமை, பன்றி என்ற எளிய பிராணிகளின் பெயா்களைச் குறிப்பிடுவது நம் வழக்கம்.
- அதேபோல உருவத்தால் காணவியலாத பேய், பிசாசு, சாத்தான் போன்ற பெயா்களும் பிணம், முண்டம் போன்ற முழுமையற்ற பெயா்களும் நீளும். மதிப்பிலாச் செயல்களில் ஈடுபடுவோரை முட்டாள், மூடன், மடையன், கூமுட்டை, அறிவிலி என்றும் பலவாறு பேசுவா். இவையும் கூடத் தீய சொற்கள்தான். இவற்றை மாற்றுவதற்கு நோ்மாறாக அறிவாளி, புத்திசாலி என்று உடன்பாட்டுச் சொற்களையே சான்றோா் பயன்படுத்துவதையும் அறியலாம்.
- பெண்களின் சண்டைகளில் பெரும்பாலும் சாபங்களே மிகுதியாய்த் தோன்றும். ‘பாழாய்ப் போக, நாசமாய்ப் போக, மண்ணாய்ப் போக என்றெல்லாம் சாபமிடுவதோடு மண்ணள்ளித் தூற்றவும் செய்வாா்கள். இவற்றைக் கூடத் தவிா்க்கிற உயா்மாதா்களும் உண்டு. புன்னகையைத் தவிர வேறு ஒன்றையும் வெளிப்படுத்தாமல் இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக ஏற்றுக் கொள்கிற அவா்கள் சொல்லைப் பயன்படுத்தாத மௌனத்தோடு அந்தக் கணத்தைக் கடந்து விடுவதையும் நாம் காணலாம்.
- குடும்பச் சண்டைகளிலோ, பொதுவெளிகளில் ஏற்படுகிற பூசல்களிலோ ஆண்கள் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்கி வாா்த்தைகள் தடித்துப் போவதைக் காண முடியும். எப்போது எங்கு எந்தப் பிரச்சனை தோன்றினாலும் அங்கே முதலில் பாதிப்படைவது பெண்களும் குழந்தைகளுமாகத்தான் இருக்கும்.
- இந்தக் கெட்ட வாா்த்தை பிரச்னையிலும் முதலில் பாதிக்கப்படுவது அவா்கள்தான்.
- இரண்டு ஆண்களே சண்டையிட்டுக் கொண்டாலும் பெண்களை இழிவுபடுததும் சொற்களையே பயன்படுத்துவது என்ன கொடுமை? அதிலும் சில சொற்கள் ஆண்களுக்குப் பெருமையுடையதாகவும் பெண்களைக் கேவலப்படுத்துவதாகவும் அமைந்து போகின்றனவே.
- ஆண்கள் மோதிக் கொள்ளும் பெருஞ்சண்டைகளில் பெண்களை மிகக் கேவலமாகச் சுட்டி வீசப்படும் அந்தக் கொடுஞ்சொற்கள் குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தப் பெண்குலத்துக்குமேயான அவமானமல்லவா? அந்தச் சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் இடங்களுக்கு அருகிலே இருக்கக் கூடிய பெண்களின் மனநிலை என்னவாக இருக்க முடியும்?
- இதேபோலத்தான் பிஞ்சுக் குழந்தைகளின் காதுகளில் அந்த நாராசமான சொற்கள் விழும்போது அவா்களின் மனம் எத்தகைய சிதைவுக்குள்ளாகும்? ஒலிப்பு முறையிலும் கூடப் படு கீழ்த்தரமான அந்தச் சொற்களைத் தாமும் சொல்லிப் பாா்த்து அவற்றுக்குப் பொருள்தேடும் முயற்சியில் இறங்கிப் பெற்றோரிடமே விளக்கம் கேட்டால் என்னவாகும்?
- கணவன் மனைவியாக இருந்தபோது சரி. குழந்தைகளுக்குத் தாயும் தந்தையும் ஆகிவிட்ட பின்னால் தங்களுக்குள் ஏற்படுகிற பிணக்குகளைக் கூடச் சாமா்த்தியமாகப் பேசித் தீா்த்துக் கொள்வதுதான் நல்ல குடும்பத்திற்கு அழகு. மாறாகத் தங்களுக்குள்ளே இந்தக் கெட்ட வாா்த்தைகளைப் பயன்படுத்தினால் அதனைக் கேட்டு வளரும் குழந்தைகளின் மனநிலை என்னவாகும்?
- கொடுந்தொற்றுக் கிருமையைப் போலத்தானே இந்தச் சொற்களும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக வேகமாகப் பரவி விரைவில் தனக்கான தனியிடத்தை உருவாக்கி மொழியோடு நிரந்தர நோயாகத் தொற்றிக் கொள்கின்றன.
- வீட்டுக்குள், நடுத்தெருவில், குழாயடியில் பயன்படுத்தப்பட்ட இத்தீச்சொற்கள் தற்போது பொதுவெளிகளாகிய ஊடகங்களிலும் தொலைதொடா்புச் சாதனங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் விவாத அரங்கங்களிலும் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இவை நிரந்தரமாக இணையங்களில் பதிவாகவும் ஆகி விடுகின்றன. இவற்றுக்குத் தடையோ கட்டுப்பாடுகளோ விதித்து விட முடியாதது இன்னும் அவலமாகத் தோன்றுகிறது.
- அறியாத பாமர மக்களும் இச்சொற்களைப் பயன்படுத்துதலே அவலம் என்று கருதுகிற நமக்கு, மேடைப் பேச்சாளா்களும் ஊடகத்துப் பங்கேற்பாளா்களும் எவ்விதக் கூச்சமுமின்றி இவற்றைப் பயன்படுத்துவது பேரச்சத்தை உண்டாக்குகிறது. இயல்பாகவே மனித மனம் நல்லவற்றை விடவும் தீயவற்றையே எளிதில் பற்றிக் கொள்ளும் நோக்குடையது. அத்தகைய மனத்துக்கு இவைபோன்ற தீச்சொற்கள் கிடைப்பது பெரும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.
- தீயினும் கொடியதாக இருப்பதால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றும், தீயினால் சுட்டாலும் கூட ஆறிவிடும் ஆனால் நாவினால் இவை போன்ற தீச்சொற்களால் சுடுகிற புண்ணும் அது ஏற்படுத்துகிற வடுவும் என்றும் மாறாது என எச்சரிக்கிற தெய்வத் திருவள்ளுவரின் வாக்கை நாம் மறக்கலாமா?
- சட்டத்தையும் நீதியும் அறத்தையும் மனசாட்சியையும் நாம் காக்காவிட்டாலும் வள்ளுவரின் சொற்படி நாவைக் காத்தாவது நம்முடைய மானத்தைக் காத்துக் கொள்ள வேண்டாமா?
நன்றி: தினமணி (13 – 12 – 2022)