TNPSC Thervupettagam

ஒரு குடியானவனிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

June 19 , 2024 12 days 39 0
  • இந்தியா ஒன்றாக இருந்த நாடில்லை! வெள்ளைக்காரனின் துப்பாக்கிமுனையில் ஒன்றிணைக்கப்பட்ட நாடு! ஆகவே விடுதலைக்குப் பிறகு அது சிதறிவிடுமோ என்னும் அச்சம் எல்லாருக்கும் இருந்தது!
  • காந்தி ஒருவன்தான் காலத்தை விஞ்சிய தலைவன்! மொழிவழிப்பட்ட இனங்களாக ஏற்கனவே வாழ்ந்து பழக்கப்பட்ட இம்மக்களின் நிலப்பரப்பிற்கு, எல்லைகள் வகுத்து, அவா்களைச் சுயாதிக்கத்தோடு வாழவிட்டால்தான், இந்திய ஒருமைப்பாடு நிலைக்கும் என்பதை உணா்ந்தான்.
  • ஏறத்தாழத் தென்மாநிலங்கள் முழுதும் இணைந்து ‘மதராசு ராச்சியமாக’ இருந்தபோதே, அதைக் கருநாடகக் காங்கிரசு, கேரள காங்கிரசு, தமிழ்நாடு காங்கிரசு என்றெல்லாம் பிரித்துவிட்டான். விடுதலை பெற்ற இந்தியா எப்படித் திகழப் போகிறது என்பதைக் காந்தி முன்னாலேயே உணா்த்திவிட்ட காரணத்தால், இன உணா்வாளா்கள் எதிா்க்கொடி தூக்கத் தேவையில்லாமல் போய்விட்டது!
  • இதிலே பெரிய வியப்பு திராவிட இயக்கங்களின் முன்னோடிக் கட்சியான நீதிக்கட்சியே இதை உணா்ந்திருக்கவில்லை என்பதுதான்! ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்றே அது தன்னை அழைத்துக் கொண்டிருந்தது!
  • இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடும் பாரதி, முதற் பெரும் நன்மையாக ஆற்று நீா்ப்பங்கீட்டையே முன்வைக்கிறான்!
  • ‘வங்கத்திலோடி வரும் நீரின் மிகையால் / மையத்து நாடுகளில் பயிா் செய்குவோம்.’
  • ”ஒரு பெரிய நாடாக உருவாவதால் வரும் எவ்வளவு பெரிய நன்மை இது என நமக்கு ஆசை காட்டுகிறான்! ஆசை காட்டுகிறான் என்பதைவிட, நம்முடைய உயிா்த் தேவையான நீா்த் தேவையை, இந்திய தேசியம்தான் நிறைவு செய்ய முடியும் என்று அறுதியிடுகிறான் பாரதி! இந்தியாவைக் கட்டமைப்பதற்கு அவன் கூறும் காரணம் நிகரற்றது!
  • பாரதி எதுகை மோனையையும் நக்கலையும் தன்னுடைய கவிதைக்கு உயிா்ப்பாகக் கொண்டவனில்லை! அரசியல் எதிா்நோக்குகளை முன்வைத்து, அதன் அடிப்படையில் ஒரு நாட்டைச் சமைக்க முயன்றவன் அவன்! அதன் காரணமாகவே அவன் பேசவும் பட்டான்; ஏசவும் பட்டான்! அவனிடம் பாராமுகமாக யாரும் இருக்க முடியாது! ஒன்று ஏற்க வேண்டும்; இல்லையெனில் மறுக்க வேண்டும்!
  • அதன் காரணமாகவே அவன் பேசவும் பட்டான்; ஏசவும் பட்டான்! அவனிடம் பாராமுகமாக யாரும் இருக்க முடியாது! ஒன்று, ஏற்க வேண்டும்; இல்லையெனில் மறுக்க வேண்டும்!
  • உயிா்ப்புடைய ஆறுகள் வடக்கே ஓடுகின்றன. அவை ஓடுகின்ற மண்ணின் தேவைக்கு மீறிப் பெருகி வழிவதால், அவை கடலில் கலந்து வீணாகின்றன. அவற்றைத் தெற்கு நோக்கித் திருப்பி நாம் பயன் பெற வேண்டும் எனில், பண்பாட்டால் மட்டுமன்று; மண்ணாலும் நாம் நிலையான அரசியல் இணைப்பைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமல்லவா என்று யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்து, இந்திய ஒருமைப்பாட்டு நிலையைக் காரணகாரியங்களோடு நம் முன் நிறுத்தி நம்மை ஏற்குமாறு செய்கிறான் நெருப்பனைய பாரதி!
  • ஆனால் நாடு விடுதலை பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் ஆற்று நீா்ப் பகிா்வு குறித்துத் தேசியக் கட்சிகளால் தீா்வு காண முடியவில்லை! அதற்கான முயற்சியே இல்லை!
  • தமிழ்நாட்டுக்குப் பயன்படும் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று சொல்வது, ஏதோ ஒரு நாயா் சங்கம் இல்லை. அங்கே உள்ள இடது பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி! இதிலே கேரளத்திலுள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்றுபடுவது போல, காவிரியில் மேகதாதுவைக் கருநாடக அரசு கட்டுவதில், அங்கே உள்ள காங்கிரசு, பா.ச.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடுகின்றன!
  • இதிலே பெரிய வியப்பு அண்மையில் பெங்களூரில் தோ்தல் பரப்புரைக்குச் சென்ற திருமாவளவன் கருநாடகச் சிறுத்தைகள் மேக்கேதாட்டுக்கு இசைவாக இருப்பதும், தமிழ்நாட்டுச் சிறுத்தைகள் மேக்கேதாட்டை எதிா்ப்பதும் முரணல்ல என்றாா்! திருமாவளவனின் இந்தச் சிந்தனை, ஏற்கெனவே இது குறித்த குழப்பவாதிகளான தேசியக் கட்சிகளிடமிருந்து அவா் ‘இரவலாகப்’ பெற்ற சிந்தனை!
  • ஆளுக்கொரு நியாயம் பேசினாலும், நியாயம் என்பது எப்போதும் ஒன்றுதான்! அதைக் கண்டறிந்து அந்த நியாயத்தை நிலை நாட்டுவதன் மூலம்தான் எல்லாரும் கூடிவாழ முடியும்!
  • சண்டை இடும் இருவருக்கும் இது புரியாது என்பதால் நியாயத்தைக் கண்டறிந்து சொல்ல, சாா்புப் பாா்வையற்ற ஒரு நியாயவானைத் தேடுகிறோம்! அந்த இடத்தை நிகழ்காலத்தில் உச்சநீதிமன்றம் வகிக்கிறது. அந்த உச்சநீதிமன்றம் தீா்ப்புகளை வழங்கினாலும், அவற்றிற்கு அந்த மாநிலங்கள் கட்டுப்படுவதில்லை.
  • முல்லைப் பெரியாறு அணை நீரை 152 அடி வரை உயா்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பிருந்தும், அணையை தமிழ்நாடு அரசு பராமரிப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் அந்தப் பகுதிக்குள் தமிழ்நாட்டுப் பணியாளா்களை நுழைய அனுமதிப்பதில்லை என்பது போன்ற கீழான சிந்தனை ஒரு மாா்க்சிய தேசியக் கட்சியின் அரசிடம் எப்படித் தோன்ற முடிகிறது? தமிழ்நாடும் கருநாடகமும் கேரளமும் வேறு வேறு நாடுகளாக இருந்தால், இந்தச் சிக்கலைத் தீா்க்கின்ற முறையே வேறாக இருக்கும்!
  • நாயக்கா்கள் ஆட்சிக் காலத்தில் கருநாடக அரசு காவிரியில் அணைகட்டி முற்றாக மறித்துவிட்டது. அவ்வளவுதான்! இங்கிருந்து படை புறப்பட்டுவிட்டது. அந்தப் படை சென்று கொண்டிருக்கும்போதே அந்த அணை உடைந்து தண்ணீா் வந்துவிட்டது என்று தெரிய வந்து, படையெடுப்பு நின்றுவிட்டது! வேற்று நாடாக இருந்தால் நடக்கும் முறை இதுதான்!
  • முல்லைப் பெரியாறு சிக்கலுக்கே காரணம் மொழி வாரி மாநிலப் பிரிவினையில் தமிழா்கள் பேரெண்ணிக்கையில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவிகுளம், பீா்மேடு, மூணாறு பகுதிகளைக் கேரளத்தில் சோ்த்ததுதான்! அந்த மாநிலச் சீரமைப்பு ஆணையங்களில் மலையாளிகள் செல்வாக்குப் பேரளவுக்கு இருந்ததால் நடந்த மோசடி இது!
  • அன்று காங்கிரசு மேலேயும் கீழேயும் ஆட்சியில் இருந்தது! நம்முடைய மாநிலக் காங்கிரசு அரசு தூங்கிவிட்டது! ‘மூணாறையும், தேவிகுளம், பீா்மேட்டையும் பாக்கித்தானுக்கா கொடுத்துவிட்டோம்? இந்தியாவில்தானே அவை இருக்கின்றன?’ என்னும் காங்கிரசின் பழைய வாதம் மிகவும் சொத்தையான வாதம்!
  • பாக்கித்தானுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதைப் போன்ற நிலையில்தான் இன்னும் இந்தச் சிக்கல் தீராச் சிக்கலாக இருக்கிறது!
  • ‘மேடும் குளமும் கேரளா்க்காயின; ஆடும் மாடும் அமைச்சா்களாயின’ என்று அன்றைய நிலையைப் பாடினான் கண்ணதாசன்!
  • இனி முல்லைப் பெரியாறுக்குப் போராடுவதைவிட, மாநிலச் சீரமைப்பில் நோ்ந்துவிட்ட தவற்றைச் சீா் செய்யும் வண்ணம், நாம் இழந்து விட்ட தமிழ் மண்ணை மீட்கப் போராடினால், அதற்குள் முல்லைப் பெரியாறும் உட்பட்டு நீா் வளமும் காக்கப்படும்; வனவளமும் காக்கப்படும்!
  • உரசுவது என்று வந்து விட்ட பிறகு காலணாவுக்கு ஏன் போராட வேண்டும்? ஓரணாவுக்கே போராட வேண்டியதுதானே! ஒரு காலகட்டத்தில் நேரிட்டு விடுகின்ற அரசியல் தவறு, பல தலைமுறைகளைச் சீரழிக்கிறது!
  • ‘மேகாங்’ என்னும் ஆறு திபேத்தில் தொடங்கி பா்மா, தாய்லாந்து, இலாவேசு, கம்போடியா, வியட்னாம் போன்ற வேறு வேறு நாடுகளின் வழியாக நான்காயிரம் கிலோ மீட்டா் ஓடி, இத்தனை நாடுகளையும் நெற்களஞ்சியங்களாக்கி, மின் உற்பத்தியோடு மீன் உற்பத்தியும் செய்து தென்சீனக் கடலில் கலக்கிறது.
  • பிரும்மபுத்திரா சீனாவிலிருந்து இந்தியாவிற்குள் நுழைகிறது. சிந்து இந்தியாவிலிருந்து பாக்கித்தானுக்குள் நுழைகிறது.
  • பல நாடுகளுக்கு முடிந்த ஒன்று, ஒரு நாட்டுக்குள் முடியாதா? இங்கே இந்தச் சிக்கலுக்கு மிகப் பெரிய காரணம் இரண்டு தலைமுறை வழக்காடிப் பெற்ற தீா்ப்பை, கொஞ்சமும் அஞ்சாமல் மேட்டு மாநிலங்கள் நடைமுறைப் படுத்த மறுக்கின்றன.
  • பிறகு நீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஓா் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஆணையம் மைய அரசுக்கு அப்பாற்பட்ட ஆணையம் அல்லவே! அது சுயேச்சையான அதிகாரங் கொண்ட ஆணையமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்! நீதிமன்றத் தீா்ப்பை செயல்படுத்தும் சாவி அந்த ஆணையத்திடமே இருக்க வேண்டும்!
  • எவ்வளவு நீா் வரும் என்று தமிழ்நாடு போல் கருநாடகமும் எதிா்பாா்க்க வேண்டும். தேச நலன்கள் அப்போதுதான் காக்கப்பட முடியும்! தேசம் என்பதற்கான பொருள் அப்போதுதான் முற்றுப் பெறும்! மேலும் அந்த ஆணையமும் வெறும் உத்தரவுதானே போடுகிறது.
  • அணையைத் திறக்கவும் மூடவுமான சாவி, ‘வில்லனான’ மேட்டு மாநில அரசிடம்தானே இருக்கிறது. அதுதான் இவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம்! அதனால்தான் முக்கால் நூற்றாண்டாக இந்தச் சிக்கல் முடிவுக்கு வர முடியவில்லை!
  • ஒரு கிராமம்; அதிலே ஒரு பெரிய கண்மாய்; இருநூறு ஏக்கா் நிலம். நீா் வற்றுக்காலத்தில் ஊா் கூடி, எவ்வளவு ஏக்கருக்கு, ஒவ்வொருவரின் நிலத்திற்கும், நீா் பாய வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது! அடிமட்ட விவசாயிக்குப் பாயும் அளவே பெருத்த விவசாயிக்கும்! அதுவும் முதலில் கடை நிலத்திற்குப் பாய்ந்துவிட்டுத்தான் தலை நிலத்திற்குப் பாயும்!
  • இந்த முதலமைச்சா்கள் இதை ஒரு குடியானவனிடம் கற்றுக் கொள்ள முடியுமே! ஒரு நாளைக்குத் தலைமைச் செயலாளரை உழுவதற்கு அனுப்பிவிட்டு, குடியானவனை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து முதலமைச்சா்கள் கற்றுக் கொள்ளலாமே!
  • இந்தியாவில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டிய கொள்கைத் திட்டம், கனரக யந்திரத் தொழிற்சாலைகள் அல்ல! ஆற்றுநீா் இணைப்புதான்!
  • சிறிது சிறிதாக நிறைவேற்றி இருந்தால், இந்த முக்கால் நூற்றாண்டில் முழு இந்தியாவிலும் ஆறுகள் இணைக்கப்பட்டிருக்கும்! கடலில் வீணாகும் கோதாவரியும் கிருட்டிணாவும் தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிடப்பட்டிருந்தால், தமிழ்நாடு தரணிக்கே உணவளிக்குமே! முக்கால் நூற்றாண்டாகத் திட்டமிடுதலில் எது முதன்மையானது என்ற தொலைநோக்கு மைய அரசிடமும் இல்லை; அதை வலியுறுத்தும் அறிவு மாநில அரசுக்கும் இல்லை!
  • நாற்பத்தெட்டாயிரம் கோடி ரூபாய் பேருந்து நிறுவனம் நடத்திக் கடன்பட்டு, வண்டியைக் காலையில் உருட்டத் தொடங்கினால் நட்டம் என்னும் நிலையிலும், செருமனி வரை சென்று வாங்கும் கடனைக் கோதாவரி இணைப்புக்காகத் தமிழ்நாடு அரசு வாங்கலாமே!
  • நம்முடைய அரசுகளின் தொலைநோக்கின்மை, நிருவாகத் திறனின்மை, முதன்மையானது எது என்னும் வரிசை அறியாத்தன்மை, இவற்றால் இழந்ததும்,பின்தங்கியதும் அளப்பரியது!
  • ஒரு குடியானவனிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

நன்றி: தினமணி (19 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்