- செஸ் விளையாட்டில் ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்தை அடைவது என்பது மிக அதிகபட்ச சாதனை ஆகும். அந்தச் சாதனையை சென்னையைச் சேர்ந்த 22 வயதான வைஷாலி ரமேஷ்பாபு அடைந்திருக்கிறார். இவரின் சகோதரர் பிரக்ஞானந்தாவும் கிராண்ட்மாஸ்டர்தான். இதன்மூலம் முதல் முறையாக ஒரே குடும்பத்தில் ‘கிராண்ட்மாஸ்டர்’ என்கிற நிலையை அடைந்தவர்கள் என்கிற சிறப்பை வைஷாலி - பிரக்ஞானந்தா ஆகியோர் படைத்துள்ளனர். செஸ் விளையாட்டு விளையாடுவோருக்கு ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டம் வெல்வது வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால், அந்தப் பட்டத்தை அடைவது அத்தனை எளிதான காரியம் அல்ல. ஏனெனில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வெல்ல வேண்டுமென்றால், ‘கிராண்ட்மாஸ்டர் நார்ம்’ எனப்படும் ரேட்டிங்கை மூன்று முறை பெற வேண்டும். அதாவது, 2500 புள்ளிகளைத் தாண்ட வேண்டும்.
- வைஷாலி அதை 2019இல் முதல் முறையும், 2022இல் இரண்டாம் முறையும் தாண்டி சாதித்தார். அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்ற வைஷாலி, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் 2,500 புள்ளிகளுக்கு மேல் ஈட்டியதால், ‘கிராண்ட்மாஸ்டர்’ படத்தை வென்றார். கிராண்ட்மாஸ்டர் பட்டம் என்பது செஸ்ஸில் மதிப்புமிக்க அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இந்த மதிப்புமிக்க பட்டத்தைப் பெறும் மூன்றாவது இந்தியப் பெண் எனும் பெருமையை வைஷாலி பெற்றிருக்கிறார். அவருக்கு முன்பாக கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி ஆகியோர் இந்தப் படத்தை வென்றிருக்கிறார்கள்.
- இதன்மூலம் இந்தியாவின் 84ஆவது கிராண்ட் மாஸ்டர், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆகியிருக்கிறார் வைஷாலி. அதுமட்டுமல்ல, உலகிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் அக்கா - தம்பி என்கிற சிறப்பையும் பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் பெற்றுள்ளனர். சகோதரர் பிரக்ஞானந்தா போலவே வைஷாலியும் செஸ் விளையாட்டில் பல பட்டங்களை வென்று வெற்றிக்கொடியை உயர பறக்கவிட்டவர்தான். 2012இல் 12 வயதுக்கு உள்பட்ட பெண்கள் உலக இளைஞர்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம், 2015இல் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் பட்டம், 15 வயதில் இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம், 2019இல் ஆசிய இளைஞர்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம், 2021இல் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் தங்கப் பதக்கம், 2021இல் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றதில் பங்களிப்பு என வைஷாலியின் வெற்றிகள் அவருடைய விளையாட்டுத் திறமைக்குச் சான்று.
நன்றி: தி இந்து (15 – 12 – 2023)