TNPSC Thervupettagam

ஒரு கோடைக்காலப் பெருவெள்ளத்தின் குறிப்புகள்

July 31 , 2024 164 days 129 0
  • சில ஆண்டுகளுக்கு முன் கேரளம் எதிர்​கொண்ட வெள்ளம், 1924ஆம் ஆண்டு பெருவெள்​ளத்​துடன் ஒப்பிடப்​பட்டது. தமிழ்​நாட்டில் மேற்கு மலை முதல் கிழக்குக் கடற்கரை வரை பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் அது. 1924இல் ஜூலை 16 அன்று மேற்கில் வயநாடு, வாயித்திரி பகுதிகளில் 34 செ.மீ. 17இல் 53.34 செ.மீ. 12 - 24 ஆம் தேதி வரை 263 செ.மீ. மழை பதிவானது. தென் கர்நாடகத்தில் ஜூலையில் 97-155 செ.மீ. மாமழை கொட்டியது.
  • காட்டுப்​புல்லும் மலைக்காடும் நீரைத் தேக்கவும், பாய்ச்​சலின் வேகத்தைக் கட்டுப்​படுத்​தவும் இயற்கையாக உள்ள அமைப்புகள். ஆனால், அவை பொருளாதார வளர்ச்​சிக்கு இடையூறாக இருப்​பதாகக் கூறி, பிரிட்டிஷ் அரசும் அந்நிய நிறுவனங்​களும் அவற்றை அழித்​துவிட்டிருந்​த தால் மேற்கில் பொழிந்த மாமழை கிழக்காகப் பெருக்​கெடுத்துப் பாய்ந்தது.
  • அக்கா​லத்தில் மலையில் அணைகள் இல்லாத தாலும் சமவெளியில் கொடிவேரி அணையும், கல்லணையும் மட்டுமே இருந்​ததாலும் ஜூலை 16, 18 தேதிகளில் சத்தியமங்கலம் அருகில் 23 அடி, காவிரியில் 36 அடி, அடுத்த இரண்டு நாள்களில் 38 அடி உயரத்தில் இப்பெருவெள்ளம் பாய்ந்தது.
  • ஜூலை 15 அன்று இரவு பைகாரா பாலத்தின் மேல் 2 அடி உயரத்தில் வெள்ளம் பாய்ந்ததை உதகை ஆட்சியரும், கொள்ளேகால் வட்டாட்​சியரும் கோயம்​புத்தூர் ஆட்சியருக்கும் ஈரோடு, பவானி வட்டாட்​சியர்​களுக்கும் திருச்சி, தஞ்சாவூர் ஆட்சியர்​களுக்கும் தகவல் தெரிவித்​தனர். ஆனால், வெள்ளம் அந்தத் தகவலைவிட வேகமாய் விரைந்தது.

பேரழிவும் இடப்பெயர்ச்​சியும்:

  • பைகாரா வெள்ளத்தால் 12 பாலங்கள் அழிந்தன. உதகை – கூடலூர் – மைசூர் சாலையில் மண் சரிவுகள் ஏற்பட்டன. பவானி, காவிரி, கொள்ளிட ஆறுகள் உடைந்தன. முக்கொம்பு அணையின் வலப்புறத்தில் 300 அடி, மையத்தில் 700 அடி நீளத்தில் அடித்துச் செல்லப்​பட்டன. முத்தரச நல்​லூர், பழூர், அரியூர், திண்ணியம், அன்பில், கள்ளிக்​குடி, சிந்தாமணி எனப் பல பகுதிகள் பெரும் பாதிப்புக்​குள்​ளாயின. இடையாற்று மங்​கலத்தை மணல் மூடியது.
  • கம்பரசம்​பேட்டை, உத்தமசேரி கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. திருச்​சியில் உறையூர் குளம் உடைந்தது. முருங்​கப்​பேட்டையில் தண்டவாளம் முறிந்து கிராமமே அழிந்தது. திருச்சி நகர ரயில் நிலையத்தில் ஆங்காங்கு ஆழமான துளைகள் ஏற்பட்டன. திருச்சி – கோயம்​புத்தூர் சாலை அழிந்து, அப்பகுதியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்து​க்குக் காவேரி ஆறு புதிய வழியை ஏற்படுத்திப் பாய்ந்தது.
  • கிளிக்​கூட்டில் காவேரியின் இடப்புறத்தில் 320 அடி அகலத்​திலும் 20 அடி ஆழத்திலும் பேரழிவு ஏற்பட்டது. திருவரங்கக் கோயிலின் சுற்றுச்​சுவர்கள் சரிந்தன. கல்லணைக்கு அருகில் 350 அடி நீளத்தில் 24 அடி ஆழத்தில் உடைப்பு ஏற்பட்டது. கொள்ளிடப் பாலம் ஜூலை 18 அன்று மதிய வேளையில், ‘இஸ்பேட்டுச் சீட்டுக’ளினால் கட்டிய வீடுகள் விழுவதைப் போல் விழுந்தது. இதைப் பார்க்கக் கூடியோர் இரண்டு பர்லாங்கு தூரம் நின்றனர். ஏற்கெனவே பாலத்தைக் கடந்து சென்றவர்​களால் திரும்பி வர இயலவில்லை.
  • அரசலாறு, திருமலைராஜன் ஆறு, கீழணை, வீரசோழன் ஆறு ஆகியன உடைந்து தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, சீர்காழி வட்டங்கள் பாதிக்​கப்​பட்டன. மருவூர், பாப்பாக்​குடி, சீப்பலூர், எலத்தூர் பகுதிகளில் ஆறுகள் உடைந்து கிராமங்கள் தீவுகளாயின. சீர்காழி அருகே ஆற்றின் உள்கரையிலிருந்த வடரெங்க அக்ரஹாரமும் ரங்கநாதர் கோயிலும் வெள்ளத்தில் மிதந்தன.
  • 2018இல் அதைப் பார்வையிட்டபோது, அங்கு ஆளரவமின்றி கோயில் பாழடைந்து அடர்ந்த கருவேல மரங்களும் வௌவால்​களும் புறாக்​களும் சூழ்ந்​திருந்தன; அவை எழுப்பிய ஒலி திகிலூட்டியது. மேட்டுப்​பாளையத்​திலிருந்து சீர்காழி வரையிலும், கள்ளிக்​கோட்டையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் நதிகள் கடலாகின.

கணக்கில்லாச் சேதம்:

  • சென்னை மாகாண மாவட்டங்களான மலபாரில் 22,000, கோயம்​புத்​தூரில் 6,136, சேலத்தில் 1,323, திருச்​சியில் 7,710, தஞ்சாவூரில் 6,040 என மொத்தம் 43,209 மாடிகளையும் குடிசைகளையும் வர்க்க வேறுபாடின்றி வெள்ளம் அழித்தது.
  • சேறு சகதிகளை வாரிவாரி ஆங்காங்கே குவித்​ததால், வயல்வெளியிலும் வாழிடத்​திலும் கோயம்​புத்​தூரில் 1,338, சேலத்தில் 824, திருச்​சியில் 6,000, தஞ்சாவூரில் 4,000, தென்னார்க்​காட்டில் 40 என 12,202 ஏக்கரில் 1.5 முதல் 6 அடி உயரத்துக்கு மணல்திட்டுகளை உருவாக்​கியது. சிறுவர்​களும் ஆடவர்​களும் மரமேறித் தப்பினர். பெண்கள் என்னவாயினர் என்கிற பதிவுகள் இல்லை!
  • காடுமேடெங்கும் பிணங்​களின் துர்நாற்றம் வீசியது. தொற்றுநோய் பரவியது. திருச்​சியில் ஜூலை 29ஆம் நாளன்று மட்டும் 136 பேர் இறந்தனர். அந்நகரத்தில் 1,500 பேரும் கிராமங்​களில் 500 பேரும் இறந்தனர். மொத்தம் சுமார் 10,000 பேர் இறந்தனர். எண்ணற்ற குடும்​பங்கள் அடியோடு அற்றுப்​போயின.
  • தாய் - தந்தையை இழந்த குழந்தைகள் அநாதைகளாயினர். உறைவிடம், உடுப்பு, உணவு இல்லாததால் மக்களின் வாழ்க்கை வீதிக்கு வந்தது. விலைவாசி உயர்ந்தது, கூலி பாதியாகக் குறைந்தது. இவை மக்களை இடம்பெயரத் தூண்டியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1925இல் 45,749 பேர், 1926இல் 86,319 பேர், 1927இல் 62,383 பேர், 1928இல் 19,367 பேர், 1929இல் 61,140 பேர் எனக் கூட்டம் கூட்டமாக மொத்தம் 2,74,958 பேர் மலேயாவுக்கு இடம்பெயர்ந்​தனர்.

பொலிவாக்கிய புனரமைப்பு:

  • மீட்புப் பணியில் வருவாய், பொதுப் பணித் துறையினர் தலைமைப் பங்காற்றினர். அரசும் தொண்டுக் குழுக்​களும் இப்பணியை முன்னெடுத்தன. மக்களைக் காப்பாற்றுவதில் மீனவர்​களும், உடைப்புகளை அடைப்​பதில் திருவண்​ணாமலையிலிருந்து ஒட்டர் சமூகத்​தினரும் பிற பணிகளில் உடலுழைப்​பாளர்​களும் ஈடுபட்டனர். கல்லணையை மீட்கக் கூடுதல் கவனம் செலுத்​தப்​பட்டது. தீபாவளியைத் தவிர மற்ற நாட்களில் தொடர்ந்து வேலைகள் நடைபெற்றன. திருச்சி கொள்ளிடப் பாலம் பழைய இடத்திலிருந்து மேற்கே 80 அடி தூரத்தில் 1926 ஜனவரியில் தொடங்கிய கட்டுமானப் பணி 1928 ஜனவரி மாதத்தில் முடிந்தது.
  • இப்பாலம்தான் 2018ஆம் ஆண்டு வெள்ளத்தில் உடைந்தது. மணல்திட்டுகளை அகற்றுவது பெரும் சவாலாக இருந்தது. சென்னை, கொல்கத்​தாவிலிருந்து 285 டிராம்வே வண்டிகள் வரவழைக்​கப்​பட்டு, ஆங்காங்கே தண்டவாளம் அமைக்​கப்​பட்டு மணல்திட்டுகள் அகற்றப்​பட்டன. வசிக்கவே இயலாத நிலைக்குச் சென்ற கிராமங்​களுக்குப் பதிலாகப் புதிய கிராமங்கள் உருவாக்​கப்​பட்டு, புதிய பெயர்​களும் சூட்டப்​பட்டன.
  • திட்டுப்​படுகை, நடுப்​படுகை, கோவிந்​தநாட்டுச்​சேரி, கொறப்​பளையம், அரியூர் போன்ற கிராமங்கள் முறையே லங்காபுரம், புதுக்​கண்​டிப்​படுகை, புதுக்​கண்டியூர், நிக்கல்​ஸன்​பேட்டை, அசோகாபுரம் எனப் பெயர் மாறின. தென்னிந்திய ரயில்வே பொறியாளர் நியூட்டனின் திட்டப்படி அகற்றப்பட்ட மணலால் லால்குடி, திருச்சி கோட்டை ரயில் நிலையங்கள் விரிவாக்கப்​பட்டன.

வரலாற்றிலிருந்து கற்போமா?

  • தென்மேற்குப் பருவமழை மேற்கு மலையில் மாமழையாய்ப் பொழிந்​ததால், சமவெளியில் மழை இல்லாமலேயே தமிழ்நாடு பெருவெள்ளப் பேரழிவை 1924 ஜூலையில் மும்முறை அனுபவித்தது. முதல் முறையாக 16 அன்று பாதிக்​கப்பட்ட பகுதிகளிலேயே ஜூலை 23 அன்று இரண்டாவது முறையாகப் பட்ட காலிலேயே பட்டது. ஜூலை 26, 27 ஆகிய நாட்களில் மூன்றாம் கட்டத் தாக்குதலில் ஏற்கெனவே மிஞ்சியவையும் பஞ்சாய்ப் பறந்தன.
  • இயற்கைக்குச் சாதி, வர்க்க, பாலின, மத பேதங்கள் இல்லை என்றாலும் புவிப்​பரப்பின் மேட்டில் மேட்டுக்​குடிகள், சமதளத்தில் இடைநிலைக் குடிகள், பள்ளத்தில் கீழ்நிலைக் குடிகள் என இயற்கையான புவிப் படிநிலையோடு செயற்​கையான சாதிப் படிநிலையைப் பிணைத்​துள்​ளதால், மேட்டுக்​குடியில் 3 அடியும் இடைநிலைக் குடியில் 5 அடியும், கீழ்நிலைக் குடியில் 6 அடியும் வெள்ளம் சூழ்ந்தது. ஏழ்மையாலும் நெருக்​கடியாக வாழ்ந்​ததாலும் ஒடுக்​கப்​பட்டு வறுமையிலிருந்த சமூகத்​தினரே தொற்றுநோய்க்கு அதிகம் இரையாயினர்.
  • இப்பெருவெள்ளப் பேரழிவை அக்கா​லத்​திலேயே வெள்ளச் சிந்துகளாகப் பாடினர். இந்நூற்​றாண்டின் இயற்கைப் பேரிடரான ஜூலைப் பெருவெள்ளமே வெள்ளத்தின் பொருளைத் தருகிறது. பெருவெள்ளம் புதிய நிகழ்​வல்ல... அது ஏற்கெனவே வரலாறு கண்ட நிகழ்​வுதான். சமகால நீர்ப் பெருக்​கத்தையோ பெருவெள்​ளத்தையோ எதிர்​கொள்ள நாம் என்ன பாடம் கற்றுக்​கொண்​டிருக்​கிறோம் என்​பதுதான் இப்போது நம்​முன் நிற்​கும் கேள்​வி!

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்