- கி.ரா., “நான் சங்கீதக்காரன் ஆக ஆசைப்பட்டேன். காலம் என்னை எழுத்தாளனாக மாற்றிவிட்டது” என்று அடிக்கடி சொல்வார்.
- இளமைக் காலத்தில் நாகஸ்வர வித்துவான் குருமலை பொன்னுச்சாமி பிள்ளையிடம் நாகஸ்வரம் படித்தவர்தான் நம் கி.ரா. தொடர்ந்து படிக்க முடியாமல்போனதைச் சொல்லி அடிக்கடி வருத்தப்பட்டுக்கொள்வார்.
- நெருக்கடி மிகுந்த சாலையோரத்தில் கவிஞர் தேவதச்சன் கடையருகே நின்றுகொண்டு, விளாத்திகுளம் சாமிகளின் சங்கீத ஞானத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார் கி.ரா.
- அவர் சங்கீதக்காரர் ஆகியிருந்தால், அதிகம் வெளிச்சம் கிடைக்காத விளாத்திகுளம் சாமிகள் பற்றி இசையுலகம் கூடுதலாக அறிந்திருக்கக்கூடும்.
- ஆனால், இலக்கிய வாசகர்களுக்கு திருவேதி நாயக்கர் அறிமுகமாகியிருக்க மாட்டார்.
- பால்யத்தில் ‘பிஞ்சுகள்’ நாவல் வாசித்து முடித்தபோது, நமக்கு இப்படி ஒரு திருவேதி நாயக்கர் வாழ்வில் கிடைக்காமல் போயிட்டாரே என்று வருத்தப்பட்டதுண்டு.
- கி.ரா. சங்கீதக்காரர் ஆகியிருந்தால், கோனேரி செங்கன்னாவையும் நாம் அறிந்திருக்க முடியாது.
- 137 வயதான மங்கத்தாயாரம்மாள் வாயிலாக சென்னாதேவியின் வரலாற்றைச் சொன்ன கி.ரா. தனது 98 ஆவது வயதில் சொல்வது என்ன? ‘அண்டரண்டப் பட்சி’யின் குரலாய்ச் சொல்கிறார்: ‘பறவைகளைப் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள்!’
நன்றி: தி இந்து (16-09-2020)