- ஆக்கபூர்வமான முன்னெடுப்பு ஒன்றுக்காக இந்த வாரம் சென்னை மேயர் பிரியாவின் பெயர் பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக, முதுமையிலும் கண்ணியம் கற்காத ஓர் அரசியலரால் உருவான தேவையற்ற சர்ச்சையில், பிரியாவின் பெயர் அடிபட்டது துரதிருஷ்டம்.
- சென்னை மேயர் பதவியில் பிரியா அமர்ந்த பிறகான இந்த இரண்டாண்டுகளில் அவரிடம் கவனம் ஈர்க்கும் ஒரு விஷயம், மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி விஷயத்தில் அவர் வெளிப்படுத்தும் அக்கறை. மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மருத்துவக் கல்லூரியும் பொறியியல் கல்லூரியும் தொடங்கப்படும் என்று சென்ற ஆண்டு அறிவித்தார் பிரியா. இந்த வாரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில், மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கான மாதிரிப் பள்ளியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
- தமிழகக் கல்வித் துறை சமீபத்திய ஆண்டுகளில் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கும் நல்ல முயற்சி, ‘மாதிரிப் பள்ளிகள் திட்டம்’. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், படிப்பில் சிறப்பாகச் செயல்படுவோரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டம் இது.
- இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவம், பொறியியல், சட்டம் என்று ஒவ்வொரு துறையின் படிப்பிலும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளைப் புகுத்தி வரும் காலம் இது. அரசியல் தளத்தில் நுழைவுத் தேர்வுகளை எதிர்த்து முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு பயணம். அப்படி ஒரு நிலையை அடைவதற்கு இடையிலான காலகட்டத்தில், இதனால் நம்முடைய மாநிலம் பாதிக்கப்படாத வகையில், கல்வித் தளத்தில் நம்முடைய மாணவர்களை இத்தகு தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது இன்னொரு பயணம்.
- மருத்துவக் கல்விக்கான எய்ம்ஸ், தொழில்நுட்பக் கல்விக்கான ஐஐடி, மேலாண்மைக் கல்விக்கான ஐஐஎம், சட்டக் கல்விக்கான தேசிய சட்டப் பல்கலைக்கழகம்… இப்படி அந்தந்தத் துறைகளுக்காக பிரத்யேகமான கல்வி நிறுவனங்கள் மட்டும் இன்றி, நாடு முழுவதும் 56 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இந்திய அரசின் ஆளுகைக்குக் கீழ் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை இந்திய அரசு செலவிடுகிறது. தரமான கல்விக்கும், ஆராய்ச்சி வாய்ப்புகளுக்கும் வழி ஏற்படுத்தித் தரும் இந்த நிறுவனங்களில் கல்விச் சூழல் செம்மையாகவும், படிப்பதற்கான கட்டணம் குறைவாகவும் இருக்கும்.
- இந்த நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களில் பொதுவாகவே தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவு. அதிலும் அரசுப் பள்ளி மாணவர்களுடைய பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவு. இதற்கான காரணம் மிக எளிமையானது. இந்த நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கான முன்தயாரிப்பு வாய்ப்போ, போட்டியிடும் சூழலோ நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இல்லை.
- நம்முடைய சமூகச் சூழலில், அனைவருக்கும் கல்வி வாய்ப்பை வழங்குவதையே அரசுப் பள்ளிகள் பிரதானமான செயல்பாடாகக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கல்வியில் மின்னும் சில மாணவர்களை மேலும் முன்னகர்த்த நேரத்தைச் செலவிடுவதைவிடவும், கல்வியில் பின்தங்கிய பல மாணவர்களைக் கொஞ்சமேனும் மேலே ஏற்றிவிடுவதற்காக நேரத்தைச் செலவிடுவதே ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் முன்னுள்ள முதன்மைக் கடமையாக அமைந்திருக்கிறது.
- இதுதான் ஆசிரியர்களுக்கான முறையான முன்னுரிமை அணுகுமுறை என்றாலும், இந்த இடத்தில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். தேசிய அளவில் போட்டியிடும் திறன்கள் இருந்தும் முறையான பயிற்சியும் ஊக்கமும் கிடைக்காததால் அவர்களுக்கு வாய்ப்புக் களம் சுருங்கிவிடுகிறது.
- தமிழ்நாடு இந்த விஷயத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் ஐந்தில் மூன்று பங்கு மாணவர்கள் அரசுசார் பள்ளிகளில் படிப்பவர்கள் என்றாலும், லட்சக்கணக்கான இந்த மாணவர்களிலிருந்து தேசியக் கல்வி நிறுவனங்களை அடைவோரின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிவிடும் நிலையிலேயே இருந்தது. குறிப்பாக, ஐஐடி போன்ற நிறுவனங்களில் நுழையும் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர்கூட இல்லை என்ற சூழலே இருந்தது.
- சென்னை மாநகரத்தை எடுத்துக்கொண்டால், 279 மாநகராட்சிப் பள்ளிகள் இருக்கின்றன. இங்கு மட்டுமே 1.04 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் வந்து படிக்கும் சென்னை ஐஐடியில் படிப்பதையோ, அதற்கான தேர்வுக்குத் தயாராவதையோ கற்பனை செய்யும் சூழல்கூட சென்னையில் உள்ள இந்த 1.04 லட்சம் மாணவர்களுக்கு இல்லை.
- இந்தச் சிக்கலுக்கு மாதிரிப் பள்ளிகள் ஒரு தீர்வாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஓர் உண்டுவுறைவிடப் பள்ளியை அரசு உருவாக்குகிறது. அந்தப் பிராந்தியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களைப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்ந்தெடுத்து, இந்த உண்டுவுறைவிடப் பள்ளிக்குக் கொண்டுவருகிறார்கள். அங்கேயே அவர்களுக்கு நல்ல உணவு, விடுதி வசதியோடு வழக்கமான பாடங்களைக் கற்பிப்பதோடு, நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியையும் வழங்குகிறார்கள்.
- முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இருவரும் இத்திட்டத்தில் காட்டிய அக்கறையின் விளைவாக தமிழகத்தில் சரசரவென்று 38 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கான செயலமைப்பை உருவாக்குவதில் ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், சுதன் இருவரும் பெரும் உழைப்பைக் கொடுத்தனர். அந்தந்த பிராந்தியத்தில் உள்ள துடிப்பான ஆசிரியர்கள் இந்தப் பள்ளிகளில் அமர்த்தப்பட்டனர்.
- ஆட்சியாளர்கள் – அரசு நிர்வாகம் – ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கூட்டுமுயற்சியின் விளைவாக சென்ற கல்வியாண்டில் இந்தப் பள்ளிகளிலிருந்து அகில இந்திய அளவிலான தேர்வுகளில் பங்கேற்று 75 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களிலும் இடம்பிடித்தனர். இந்தக் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 275 ஆக உயர்ந்தது; முந்தைய ஆண்டில் ஒருவர் மட்டுமே ஐடிடிக்குத் தேர்வான நிலையில், இந்த ஆண்டு 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு என்று ஒரு பாராட்டு விழாவை அரசு நடத்தியதோடு, முதல்வரே அந்நிகழ்வில் பங்கேற்றார்.
- இந்த முன்னகர்வு தந்திருக்கும் தாக்கத்தில்தான் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு என்று பிரத்யேகமான ஒரு மாதிரிப் பள்ளியை மேயர் பிரியா தொடக்கி வைத்திருக்கிறார். சென்னை மாநகராட்சியில் உள்ள 32 மேல்நிலைப் பள்ளிகளிலும் உத்தேசமாகப் பள்ளிக்கு இருவர் அல்லது மூவர் எனும் கணக்கில் 70 பேருக்குப் பயிற்சி அளிப்பதாக இந்தப் பள்ளி அமைக்கப்பட்டிருக்கிறது; மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆசிரியர்கள் இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நல்ல தொடக்கம் இது. கல்விக்கான அதிகாரமும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளை நோக்கி நகரும்போது கல்விச் சூழல் மேலும் ஜனநாயகம் அடைய வழி பிறக்கும். அதேசமயம், செய்ய வேண்டிய காரியங்களும் நிறைய இருக்கின்றன.
- முக்கியமான ஒன்று, ஏற்கெனவே உள்ள பள்ளிகளின் செயல்பாட்டுக்குப் புதிதாக உருவாக்கப்படும் மாதிரிப் பள்ளிகள் எந்த வகையிலும் ஊறு விளைவித்திடாமல், எல்லா வகைகளிலும் அவற்றின் செயல்பாட்டுக்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் கட்டமைப்பைச் சிந்தித்தல். உதாரணமாக, ஏற்கெனவே உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் துடிப்பாகச் செயல்படும் ஆசிரியர்களையே இந்த மாதிரிப் பள்ளிகளுக்குப் பணிக்கு எடுக்கும் போது அங்கு உருவாகும் காலிப் பணியிடங்களில் நல்ல ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இப்போது பல இடங்களிலும் ஒப்பந்தமுறையில், குறைந்த ஊதியத்தில் எடுக்கப்பட்ட ஆசிரியர்களே காலிப் பணியிடங்களில் அமர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது சரியல்ல. சென்னை போன்ற ஒரு மாநகரில் ரூ.18,000 ஊதியத்துக்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது முந்தைய தரத்தையும் குலைக்கும். அதேபோல, மாதிரிப் பள்ளிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் எதிர்காலத்தில் ஏனைய பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முன்மாதிரி ஆசிரியர்களாக அமையலாம். கூடுதல் நேரம், கூடுதல் உழைப்பைத் தரும் அவர்களுக்கு இதற்கேற்ப கூடுதல் ஊதியமும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
- மாதிரிப் பள்ளிக்கு என்று நிரந்தரமான கட்டிடம் இல்லை. சென்னையையே எடுத்துக் கொண்டால், நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் பள்ளி வளாகத்தில் ஒரு தற்காலிகக் கட்டமைப்பை உருவாக்கி அங்கேதான் நடத்துகிறார்கள்; தங்கும் விடுதியாக சூளைமேட்டில் ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். சென்னையில் மாநகராட்சிக்குச் சொந்தமாக ஏராளமான இடங்கள் உள்ளன. இப்போதுள்ள நுங்கம்பாக்கம் ஆண்கள் பள்ளி வளாகத்திலேயேகூட ஒரு பகுதியைப் பிரித்து, புதிய கட்டிடத்தை உருவாக்கலாம்; அந்த வளாகத்திலேயே விடுதியையும் உருவாக்கலாம்.
- சென்னையில் உருவாக்கப்படும் புதிய பள்ளியும், விடுதியும் அவற்றின் செயல்பாடும் தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி நிர்வாகங்களுக்கும் முன்னோடியாக அமையக் கூடும் என்ற எண்ணத்தோடு இந்தப் பள்ளியின் நிர்வாக அமைப்பில் சமூகப் பங்களிப்பைச் சிந்திக்கலாம். மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களோடு வெளியே உள்ள பல துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள் சிறப்பு வகுப்புகளில் தன்னார்வலர்களாகப் பயிற்சி அளிக்க அழைப்பு விடுக்கலாம். அரசு மாதிரிப் பள்ளிகள் நிர்வாகத்தோடு முரண்பட்ட ஒன்றாக மாநகராட்சி மாதிரிப் பள்ளிகள் அமைப்பை உருவாக்கிவிடாமல், ஒன்றோடு ஒன்று நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு இணைந்து செயலாற்றும் வகையில் நிர்வாகக் கட்டமைப்பைச் செதுக்கலாம்.
- சவால்தான்! புதிய பள்ளிக்கு என்று ஒரு சிறப்பான கட்டமைப்பை உருவாக்குவதோடு, ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரியோடு ஒரு சட்டக் கல்லூரியையும் சேர்த்து வரவிருக்கும் ஆண்டுகளில் கொண்டு வந்துவிட்டால், மேயர் பிரியா சென்னை மாநகராட்சி வரலாற்றில் நினைவு கூரப்படும் ஒரு பணியைச் செய்தவராக இருப்பார். தமிழ்நாட்டின் ஏனைய மாநகராட்சிகளுக்கும் அவர் ஒரு முன்னுதாரணராக அமைவார். வாழ்த்துகள்!
நன்றி: அருஞ்சொல் (24 – 08 – 2023)