- நான் சிறுமியாக இருந்தபோது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஏ.ஆர்.ஐ) மாணவர்களால் எங்கள் வீடு நிரம்பியிருந்தது, என்னுடைய பசுமையான நினைவுகளாக நிலைத்துவிட்டது. என்னுடைய தந்தை அதிகாலையிலேயே தனது மிதிவண்டியில் கிளம்பிவிடுவார்.
- மரபியல் துறையில் தன்னுடைய காலை வகுப்புக்காகச் செல்லும் வழியில் பரிசோதனைக் களங்களுக்குச் சென்று பார்வையிடுவார். மாலையில் அவர் வீடு திரும்புகையில் பெரும்பாலும் அங்கு சில மாணவர்களேனும் தம்முடைய முனைவர் பட்டத்துக்கான ஆய்வுப் பணி குறித்து அவருடன் கலந்தாலோசிப்பதற்காகக் காத்திருப்பார்கள்.
- ஐ.ஏ.ஆர்.ஐ-இல் பல வெளிநாட்டு மாணவர்களும் இருந்தனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டுக்கு வரலாம். இதனால்தான் ஐ.ஏ.ஆர்.ஐ. நிறுவனத்தை எங்களது விரிவுபடுத்தப்பட்ட குடும்பமாகவே கருதுகிறோம்.
- எனது தந்தை பஞ்சாபிலும் ஹரியாணாவிலும் இருந்த விவசாயிகள் அறிவியலாளர்களுடன் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட தொழில்நுட்பங்களைப் பரிசோதித்துக்கொண்டும், அவற்றில் மாற்றங்களைச் செய்து கொண்டும், செயல்படுத்திக்கொண்டும் இருந்தபோது, எனது அன்னை குழந்தைகளின் கல்வி - பராமரிப்புக்கான புதுமையான, செலவு குறைவான வழிமுறைகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்.
- அவர் ஐ.ஏ.ஆர்.ஐ-இல் நேரு பரிசோதனை மையத்தை (Nehru Experimental Centre) உருவாக்கினார். அது ஐ.ஏ.ஆர்.ஐ. ஊழியர்களின் குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லமாகவும் முன்பள்ளியாகவும் செயல்பட்டது.
உணவும் ஊட்டச்சத்தும்:
- எனது தந்தை வேளாண்மைக்கும் அதைவிட முக்கியமாக விவசாயிகள் நலனுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டிருந்தார். சிறு-குறு விவசாயிகள், சிறு மீனவர்கள், பழங்குடிகள் ஆகியோரின் நலனிலும் அவர் அக்கறைகொண்டிருந்தார். மனித நல்வாழ்வு குறித்து அவருக்கு முழுமையான பார்வை இருந்தது. அது உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பின் வெவ்வேறு கூறுகளில் கவனம் செலுத்துவதாக இருந்தது.
- உணவும் ஊட்டச்சத்தும் போதுமான அளவு இருப்பது மட்டும் அல்ல. அது அனைவருக்கும் சாத்தியமாகக்கூடிய விலையில் கிடைப்பதும் முக்கியம் என்று அவர் நினைத்தார். அதோடு, ஊட்டச்சத்து உட்கொள்ளப்படுவதிலும் கவனம் செலுத்தினார் (இதற்குக் குடல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியமானது. சுத்தமான குடிநீர், பாதுகாப்பான துப்புரவு வசதிகள் கிடைப்பது குடல் ஆரோக்கியத்துக்கு அவசியம்).
- நமக்காக உணவு உற்பத்தி செய்வோர் ஆரோக்கியமான வளம்மிக்க வாழ்க்கையை வாழ முடிவதில்லை என்கிற கவலை அவருக்கு எப்போதும் இருந்துவந்தது. மறை பசி (hidden hunger) குறித்து முதலில் பேசியவர்களில் அவரும் ஒருவர். அதாவது, பேரூட்டச்சத்துக் குறைபாட்டைப் போலவே (macronutrient deficiency) நுண் ஊட்டச்சத்துக் குறைபாடும் (micronutrient deficiency) முக்கியமான பிரச்சினை என்றபோதிலும், பின்னது போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
- இந்தியாவில், குறிப்பாகப் பெண்கள், பதின்பருவப் பெண்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. மக்களில் பலர் போதுமான நுண் ஊட்டச்சத்துக் கூறுகளைத் தரக்கூடிய சமநிலையான ஊட்டச்சத்துமிக்க உணவைப் பெறுவதில்லை என்பதையே இது உணர்த்துகிறது. மண் வளம் சரிவதும் (இது பயிர்களின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைப் பாதிக்கிறது) பிற சுற்றுச்சூழல் காரணிகளும் இதில் முக்கியப் பங்குவகிக்கின்றன. இது நாம் தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இன்றும் நீடிக்கிறது.
முழுமை வாய்ந்த தீர்வுகள்:
- ஒரு பிரச்சினையைச் சரியாக உள்வாங்கி அதன் வெவ்வேறு கூறுகளையும், தீர்மானிக்கும் அம்சங்களையும், அவை ஒன்றோடொன்று வினைபுரியும் விதங்களையும் ஆய்வுசெய்து, பிரச்சினைகளுக்கான முழுமைவாய்ந்த தீர்வுகளை வடிவமைக்கும் ஆற்றல் என் தந்தைக்கு இருந்தது. ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நிபுணத்துவம் பெறும் பெரும்பாலான அறிவியலாளர்களைப் போல் அல்லாமல் என் தந்தையால் அரசியல், சமூக, சுற்றுச்சூழல் அம்சங்களை உள்ளடக்கிய நுண்ணிய, விரிவான தளங்களில் இயங்க முடிந்தது.
- இந்தச் சிறப்புக் குணாம்சத்தின் பயனாக, நம் நாடு தன்னிறைவு அடைவதற்கு எத்தகைய கொள்கைகளும் சட்டங்களும் தேவை என்பதையும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிகளையும் யோசித்துப் பரிந்துரைக்க அவரால் முடிந்தது. விவசாயிகளுக்கு நவீன, நீடித்திருக்கும் வேளாண் வழிமுறைகளையும் ஆதாரங்களையும் கொண்டு சேர்க்கச் செயல்படும் ‘கிருஷி விஞ்ஞான் கேந்திர’ங்கள்’, இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணிகள் (Indian Agricultural Research Service) ஆகியவற்றின் சிற்பி அவர்.
- இந்த இரண்டு அமைப்புகளும் வேளாண் ஆராய்ச்சிக்கு வலுவூட்டியதோடு, வேளாண் தொழில்நுட்பங்கள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடைவதைச் சாத்தியமாக்கின. சர்வதேச அளவில் உணவு - வேளாண்மை நிறுவனம் (FAO), ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UN Environmental Program) உள்ளிட்ட ஐ.நா. சார்ந்த அமைப்புகளிலும், உலக இயற்கை நிதியம் (WWF), பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN), உலக உணவுப் பரிசு அறக்கட்டளை (World Food Prize foundation), பட்டினி ஒழிப்புத் திட்டம் (hunger project), ஃபோர்டு அறக்கட்டளை ஆகிய பிற அமைப்புகளிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
- உயிர்ப்பன்மை ஒப்பந்தம், தாவர வகைமைகளைப் பாதுகாப்பது, விவசாயிகள், கால்நடை வளர்ப்போரின் உரிமைகள் சார்ந்த உலகளாவிய பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்றுள்ளார். உணவு அமைப்புகளில் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளை முன்னுணர்ந்ததோடு, பல்வேறு நிலைகளில் மரபணு - விதை வங்கிகளை உருவாக்க வேண்டியது குறித்தும் பேசினார்.
- அவருடைய யோசனைகளும் சிந்தனையும் இன்று நடைமுறையில் இருக்கும் உலகளாவிய வளர்ச்சி வியூகங்கள், ஒப்பந்தங்கள், இலக்குகளை வடிவமைக்க உதவியுள்ளன. விவசாயிகள் நலனை உறுதிசெய்யாவிட்டால் வேளாண்மை செழிக்காது, உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பை அடைய முடியாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.
மாற்றத்தை ஏற்கும் மனநிலை:
- அறிவியல் மீதான ஈடுபாட்டின் காரணமாக என் தந்தை எப்போதும் சவால்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார். விவாதம், உரையாடல், புதிய யோசனைகளைத் திறந்த மனதுடன் பரிசீலிப்பது, தெளிவான சான்று கிடைத்துவிட்டால் முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பது ஆகியவையே முன்னேற்றத்துக்கான வழிகள் என்று அவர் நம்பினார்.
- ஒரு விவகாரத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்க்க வேண்டும், பிரச்சினையைக் குறுகிய கண்ணோட்டத்துடன் அணுகினால் கொள்கை மாற்றம் அல்லது திட்டரீதியான மாற்றத்தின் சில தாக்கங்களை உணரத் தவறிவிடுவோம் என்பது அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களில் முக்கியமானது.
- சென்னையில் அவர் தொடங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் உரிய விவாதத்துக்குப் பிறகே கொள்கைகளை வகுக்கும் அணுகுமுறையைப் பின்பற்றினார். ஆராய்ச்சிகளில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பங்கேற்பை உறுதிசெய்தார்.
- நோபல் பரிசு வென்ற சி.வி.ராமனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை சென்னையில் அவர் தொடங்கினார். 1987இல் ‘உலக உணவுப் பரிசு’ உள்பட என் தந்தை வென்ற பல தேசிய, சர்வதேசப் பரிசுகளிலிருந்தே இதற்கான நிதி கிடைத்தது.
இளைஞர்கள் மீதான நம்பிக்கை:
- அவருடைய ‘பசுமைமாறாப் புரட்சி’ (evergreen revolution) என்னும் கருதுகோள் உலகின் முதன்மையான அறிவியலாளர்கள், அறிவிஜீவுகள், கொள்கை வகுப்பாளர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. சுவாமிநாதன் அறக்கட்டளையைத் தொடங்கியபோது, அனைத்துத் திட்டங்களும் ஏழைகள், பெண்கள் ஆகியோருக்கும் இயற்கைக்கும் ஆதரவானதாகவே இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்திருந்தார்.
- 1960, 70களிலேயே காலநிலை மாற்றம் குறித்தும் வேளாண்மையிலும் உணவு அமைப்புகளிலும் அது விளைவிக்கக்கூடிய தாக்கங்கள் குறித்தும் பேசத் தொடங்கியிருந்தார். தன்னுடைய கடைசி ஆண்டுகளில் இளைய தலைமுறை மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இளைஞர்களைச் சந்திப்பதிலும் அவர்களுக்கு வழிகாட்டுவதிலும் ஊக்குவிப்பதிலும் மிகுந்த ஆர்வம் செலுத்தினார்.
- இளைய தலைமுறையினரால்தான் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என அவருக்குத் தெரிந்திருந்தது. பிறருக்காக நேரம் ஒதுக்கவும் பிறருடன் தன்னுடைய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் எப்போதும் அவர் தயங்கியதில்லை. தனது நற்பண்புகளைப் பிறர் தவறாகப் பயன்படுத்திக்கொண்டபோதும், அது அவரைக் கோபப்படுத்தியதில்லை.
- உலகத்தில் வன்முறையும் எதிர்மறைச் செய்திகளும் நிரம்பியிருந்தாலும், நன்னம்பிக்கை கொண்டவராகவும் மகிழ்ச்சியான மனிதராகவும் இறுதிவரை அவர் இருந்தார். அவருடைய அறிவியல் பணிகள், அவர் கட்டமைத்த நிறுவனங்கள் அனைத்தையும் தாண்டி, அவர் வாழ்ந்த விதம் நம் அனைவருக்கும் பல பாடங்களை உள்ளடக்கியது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவருக்குப் பல விருதுகளும் கெளரவங்களும் கிடைத்தன.
- ஆனால், அவருக்குத் தனது களத்தில் பணியாற்றுவதும் அதனால் சிறு-குறு விவசாயிகள், சிறு மீனவர்கள், பழங்குடிச் சமூகத்தினரின் வாழ்வில் நேர்மறை மாற்றங்களைக் காண்பதுமே உந்துசக்தியாகத் திகழ்ந்தன. இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டபோது, அவர் இருந்திருந்தால் அது அவருக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்திருக்கும். ஆனால், அதற்கு அடுத்த நாள் காலையையே வழக்கம்போல், தீர்க்கப்பட வேண்டிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டுதான் அவர் தொடங்கியிருப்பார்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 08 – 2024)