TNPSC Thervupettagam

ஒரு மகளின் நினைவலைகள்

August 7 , 2024 113 days 132 0
  • நான் சிறுமியாக இருந்தபோது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஏ.ஆர்.ஐ) மாணவர்​களால் எங்கள் வீடு நிரம்​பி​யிருந்தது, என்னுடைய பசுமையான நினைவுகளாக நிலைத்​து​விட்டது. என்னுடைய தந்தை அதிகாலை​யிலேயே தனது மிதிவண்டியில் கிளம்பிவிடுவார்.
  • மரபியல் துறையில் தன்னுடைய காலை வகுப்​புக்​காகச் செல்லும் வழியில் பரிசோதனைக் களங்களுக்குச் சென்று பார்வை​யிடு​வார். மாலையில் அவர் வீடு திரும்​பு​கையில் பெரும்​பாலும் அங்கு சில மாணவர்​களேனும் தம்முடைய முனைவர் பட்டத்துக்கான ஆய்வுப் பணி குறித்து அவருடன் கலந்தாலோ​சிப்​ப​தற்​காகக் காத்திருப்​பார்கள்.
  • ஐ.ஏ.ஆர்​.ஐ-இல் பல வெளிநாட்டு மாணவர்​களும் இருந்​தனர். அவர்கள் எப்போது வேண்டு​மானாலும் எங்கள் வீட்டுக்கு வரலாம். இதனால்தான் ஐ.ஏ.ஆர்.ஐ. நிறுவனத்தை எங்களது விரிவுபடுத்​தப்பட்ட குடும்​பமாகவே கருதுகிறோம்.
  • எனது தந்தை பஞ்சாபிலும் ஹரியாணாவிலும் இருந்த விவசா​யிகள் அறிவிய​லா​ளர்​களுடன் பசுமைப் புரட்​சிக்கு வித்திட்ட தொழில்​நுட்​பங்​களைப் பரிசோதித்துக்​கொண்டும், அவற்றில் மாற்றங்​களைச் செய்து​ கொண்டும், செயல்படுத்​திக்​கொண்டும் இருந்த​போது, எனது அன்னை குழந்தை​களின் கல்வி - பராமரிப்​புக்கான புதுமையான, செலவு குறைவான வழிமுறைகளைப் பரிசோதித்துக்​கொண்டிருந்​தார்.
  • அவர் ஐ.ஏ.ஆர்​.ஐ-இல் நேரு பரிசோதனை மையத்தை (Nehru Experimental Centre) உருவாக்​கினார். அது ஐ.ஏ.ஆர்.ஐ. ஊழியர்​களின் குழந்தை​களுக்கான பராமரிப்பு இல்லமாகவும் முன்பள்​ளியாகவும் செயல்​பட்டது.

உணவும் ஊட்டச்​சத்தும்:

  • எனது தந்தை வேளாண்​மைக்கும் அதைவிட முக்கியமாக விவசா​யிகள் நலனுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்​கொண்டிருந்​தார். சிறு-குறு விவசா​யிகள், சிறு மீனவர்கள், பழங்குடிகள் ஆகியோரின் நலனிலும் அவர் அக்கறை​கொண்டிருந்​தார். மனித நல்வாழ்வு குறித்து அவருக்கு முழுமையான பார்வை இருந்தது. அது உணவு, ஊட்டச்​சத்துப் பாதுகாப்பின் வெவ்வேறு கூறுகளில் கவனம் செலுத்​துவதாக இருந்தது.
  • உணவும் ஊட்டச்​சத்தும் போதுமான அளவு இருப்பது மட்டும் அல்ல. அது அனைவருக்கும் சாத்தி​ய​மாகக்​கூடிய விலையில் கிடைப்​பதும் முக்கியம் என்று அவர் நினைத்​தார். அதோடு, ஊட்டச்​சத்து உட்கொள்​ளப்​படு​வதிலும் கவனம் செலுத்​தினார் (இதற்குக் குடல் ஆரோக்​கியமாக இருப்பது முக்கிய​மானது. சுத்தமான குடிநீர், பாதுகாப்பான துப்புரவு வசதிகள் கிடைப்பது குடல் ஆரோக்​கியத்துக்கு அவசியம்).
  • நமக்காக உணவு உற்பத்தி செய்வோர் ஆரோக்​கியமான வளம்மிக்க வாழ்க்கையை வாழ முடிவதில்லை என்கிற கவலை அவருக்கு எப்போதும் இருந்​து​வந்தது. மறை பசி (hidden hunger) குறித்து முதலில் பேசிய​வர்​களில் அவரும் ஒருவர். அதாவது, பேரூட்​டச்​சத்துக் குறைபாட்டைப் போலவே (macronutrient deficiency) நுண் ஊட்டச்​சத்துக் குறைபாடும் (micronutrient deficiency) முக்கியமான பிரச்சினை என்றபோதி​லும், பின்னது போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பதைச் சுட்டிக்​காட்​டினார்.
  • இந்தியா​வில், குறிப்​பாகப் பெண்கள், பதின்​பருவப் பெண்களிடையே ஊட்டச்​சத்துக் குறைபாடு அதிகமாகக் காணப்​படு​கிறது. மக்களில் பலர் போதுமான நுண் ஊட்டச்​சத்துக் கூறுகளைத் தரக்கூடிய சமநிலையான ஊட்டச்​சத்​து​மிக்க உணவைப் பெறுவதில்லை என்பதையே இது உணர்த்து​கிறது. மண் வளம் சரிவதும் (இது பயிர்​களின் ஊட்டச்​சத்து உள்ளடக்​கத்தைப் பாதிக்கிறது) பிற சுற்றுச்​சூழல் காரணிகளும் இதில் முக்கியப் பங்கு​வகிக்​கின்றன. இது நாம் தீர்க்க வேண்டிய பிரச்​சினையாக இன்றும் நீடிக்​கிறது.

முழுமை வாய்ந்த தீர்வுகள்:

  • ஒரு பிரச்​சினையைச் சரியாக உள்வாங்கி அதன் வெவ்வேறு கூறுகளை​யும், தீர்மானிக்கும் அம்சங்​களை​யும், அவை ஒன்றோடொன்று வினைபுரியும் விதங்​களையும் ஆய்வுசெய்து, பிரச்​சினைகளுக்கான முழுமைவாய்ந்த தீர்வுகளை வடிவமைக்கும் ஆற்றல் என் தந்தைக்கு இருந்தது. ஒரு துறையைத் தேர்ந்​தெடுத்து அதில் நிபுணத்​துவம் பெறும் பெரும்​பாலான அறிவிய​லா​ளர்​களைப் போல் அல்லாமல் என் தந்தையால் அரசியல், சமூக, சுற்றுச்​சூழல் அம்சங்களை உள்ளடக்கிய நுண்ணிய, விரிவான தளங்களில் இயங்க முடிந்தது.
  • இந்தச் சிறப்புக் குணாம்​சத்தின் பயனாக, நம் நாடு தன்னிறைவு அடைவதற்கு எத்தகைய கொள்கைகளும் சட்டங்​களும் தேவை என்பதையும் அவற்றைச் செயல்​படுத்​து​வதற்கான வழிகளையும் யோசித்துப் பரிந்​துரைக்க அவரால் முடிந்தது. விவசா​யிகளுக்கு நவீன, நீடித்​திருக்கும் வேளாண் வழிமுறைகளையும் ஆதாரங்​களையும் கொண்டு சேர்க்கச் செயல்​படும் ‘கிருஷி விஞ்ஞான் கேந்திர’ங்​கள்’, இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணிகள் (Indian Agricultural Research Service) ஆகியவற்றின் சிற்பி அவர்.
  • இந்த இரண்டு அமைப்பு​களும் வேளாண் ஆராய்ச்​சிக்கு வலுவூட்​டியதோடு, வேளாண் தொழில்​நுட்​பங்கள் நாடு முழுவதும் உள்ள விவசா​யிகளைச் சென்றடைவதைச் சாத்தி​ய​மாக்கின. சர்வதேச அளவில் உணவு - வேளாண்மை நிறுவனம் (FAO), ஐ.நா. சுற்றுச்​சூழல் திட்டம் (UN Environmental Program) உள்ளிட்ட ஐ.நா. சார்ந்த அமைப்பு​களி​லும், உலக இயற்கை நிதியம் (WWF), பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN), உலக உணவுப் பரிசு அறக்கட்டளை (World Food Prize foundation), பட்டினி ஒழிப்புத் திட்டம் (hunger project), ஃபோர்டு அறக்கட்டளை ஆகிய பிற அமைப்பு​களிலும் அவர் முக்கியப் பங்காற்றி​யுள்​ளார்.
  • உயிர்ப்​பன்மை ஒப்பந்தம், தாவர வகைமை​களைப் பாதுகாப்பது, விவசா​யிகள், கால்நடை வளர்ப்​போரின் உரிமைகள் சார்ந்த உலகளாவிய பேச்சு​வார்த்​தைகளில் அவர் பங்கேற்றுள்​ளார். உணவு அமைப்பு​களில் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளை முன்னுணர்ந்​ததோடு, பல்வேறு நிலைகளில் மரபணு - விதை வங்கிகளை உருவாக்க வேண்டியது குறித்தும் பேசினார்.
  • அவருடைய யோசனைகளும் சிந்தனையும் இன்று நடைமுறையில் இருக்கும் உலகளாவிய வளர்ச்சி வியூகங்கள், ஒப்பந்​தங்கள், இலக்குகளை வடிவமைக்க உதவியுள்ளன. விவசா​யிகள் நலனை உறுதி​செய்​யா​விட்டால் வேளாண்மை செழிக்​காது, உணவு, ஊட்டச்​சத்துப் பாதுகாப்பை அடைய முடியாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்​திவந்​தார்.

மாற்றத்தை ஏற்கும் மனநிலை:

  • அறிவியல் மீதான ஈடுபாட்டின் காரணமாக என் தந்தை எப்போதும் சவால்களை ஏற்றுக்​கொள்ளத் தயாராக இருந்​தார். விவாதம், உரையாடல், புதிய யோசனைகளைத் திறந்த மனதுடன் பரிசீலிப்பது, தெளிவான சான்று கிடைத்​து​விட்டால் முடிவை மாற்றிக்​கொள்ளத் தயாராக இருப்பது ஆகியவையே முன்னேற்​றத்துக்கான வழிகள் என்று அவர் நம்பினார்.
  • ஒரு விவகாரத்தின் அனைத்துப் பக்கங்​களையும் பார்க்க வேண்டும், பிரச்​சினையைக் குறுகிய கண்ணோட்​டத்​துடன் அணுகினால் கொள்கை மாற்றம் அல்லது திட்டரீதியான மாற்றத்தின் சில தாக்கங்களை உணரத் தவறிவிடுவோம் என்பது அவரிட​மிருந்து நான் கற்றுக்​கொண்ட பாடங்​களில் முக்கிய​மானது.
  • சென்னையில் அவர் தொடங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்​டளையில் உரிய விவாதத்துக்குப் பிறகே கொள்கைகளை வகுக்கும் அணுகுமுறையைப் பின்பற்றினார். ஆராய்ச்​சிகளில் பல்வேறு சமூகங்​களைச் சேர்ந்​தவர்​களின் பங்கேற்பை உறுதி​செய்​தார்.
  • நோபல் பரிசு வென்ற சி.வி.ராமனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்​டளையை சென்னையில் அவர் தொடங்​கினார். 1987இல் ‘உலக உணவுப் பரிசு’ உள்பட என் தந்தை வென்ற பல தேசிய, சர்வதேசப் பரிசுகளி​லிருந்தே இதற்கான நிதி கிடைத்தது.

இளைஞர்கள் மீதான நம்பிக்கை:

  • அவருடைய ‘பசுமைமாறாப் புரட்சி’ (evergreen revolution) என்னும் கருதுகோள் உலகின் முதன்​மையான அறிவிய​லா​ளர்கள், அறிவிஜீவுகள், கொள்கை வகுப்​பாளர்​களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. சுவாமிநாதன் அறக்கட்​டளையைத் தொடங்​கியபோது, அனைத்துத் திட்டங்​களும் ஏழைகள், பெண்கள் ஆகியோ​ருக்கும் இயற்கைக்கும் ஆதரவானதாகவே இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்​திருந்​தார்.
  • 1960, 70களிலேயே காலநிலை மாற்றம் குறித்தும் வேளாண்​மை​யிலும் உணவு அமைப்பு​களிலும் அது விளைவிக்​கக்​கூடிய தாக்கங்கள் குறித்தும் பேசத் தொடங்​கி​யிருந்​தார். தன்னுடைய கடைசி ஆண்டுகளில் இளைய தலைமுறை மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்​தார். இளைஞர்​களைச் சந்திப்​ப​திலும் அவர்களுக்கு வழிகாட்​டு​வதிலும் ஊக்கு​விப்​ப​திலும் மிகுந்த ஆர்வம் செலுத்​தினார்.
  • இளைய தலைமுறை​யின​ரால்தான் நமது பிரச்​சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என அவருக்குத் தெரிந்​திருந்தது. பிறருக்காக நேரம் ஒதுக்​கவும் பிறருடன் தன்னுடைய சிந்தனைகளைப் பகிர்ந்து​கொள்​ளவும் எப்போதும் அவர் தயங்கியதில்லை. தனது நற்பண்​பு​களைப் பிறர் தவறாகப் பயன்படுத்​திக்​கொண்டபோதும், அது அவரைக் கோபப்படுத்தியதில்லை.
  • உலகத்தில் வன்முறையும் எதிர்​மறைச் செய்தி​களும் நிரம்​பி​யிருந்​தா​லும், நன்னம்​பிக்கை கொண்ட​வ​ராகவும் மகிழ்ச்​சியான மனிதராகவும் இறுதிவரை அவர் இருந்​தார். அவருடைய அறிவியல் பணிகள், அவர் கட்டமைத்த நிறுவனங்கள் அனைத்​தையும் தாண்டி, அவர் வாழ்ந்த விதம் நம் அனைவருக்கும் பல பாடங்களை உள்ளடக்​கியது. உலகின் பல்வேறு பகுதி​களி​லிருந்து அவருக்குப் பல விருதுகளும் கெளரவங்​களும் கிடைத்தன.
  • ஆனால், அவருக்குத் தனது களத்தில் பணியாற்று​வதும் அதனால் சிறு-குறு விவசா​யிகள், சிறு மீனவர்கள், பழங்குடிச் சமூகத்​தினரின் வாழ்வில் நேர்மறை மாற்றங்​களைக் காண்பதுமே உந்துசக்​தி​யாகத் திகழ்ந்தன. இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்​கப்​பட்​டபோது, அவர் இருந்​திருந்​தால் அது அவருக்​குப் பெரும் மகிழ்ச்சி அளித்​திருக்​கும். ஆனால், அதற்கு அடுத்த நாள் காலையையே வழக்​கம்​போல், தீர்க்​கப்பட வேண்டிய உல​களாவிய பிரச்​சினைகளைப் பற்றிச் சிந்​தித்துக்​கொண்டுதான் அவர் தொடங்​கி​யிருப்​பார்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்