TNPSC Thervupettagam

ஒருபுறம் வெள்ளம் மறுபுறம் வறட்சி: தத்தளிக்கும் பிஹார்!

October 1 , 2019 1928 days 896 0
  • வெள்ளமும் வறட்சியும் சேர்ந்து வாட்டும் நிலைமை ஒன்றும் பிஹாருக்குப் புதிதல்ல. ஆனால், இயற்கைப் பேரிடருக்காக 2015-16-ல் ரூ.85 கோடி செலவிட்ட மாநில அரசு, 2016-17-ல் ரூ.1,569 கோடி செலவிட நேர்ந்தது.
  • இப்போது வெள்ளத்தால் 130 பேருக்கும் மேல் பலியாகிவிட்டனர். 24 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது.
  • 13 மாவட்டங்களில் பெருவெள்ளமும், 24 மாவட்டங்களில் வறட்சியும், 4 மாவட்டங்களில் வெள்ளமும் வறட்சியும் நிலவுவதால் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் இரண்டையும் ஒருங்கே மேற்கொள்ள வேண்டிய நிலை பிஹார் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பிஹாரில்....
  • நவாடா மாவட்டத்தில் கடுமையான வறட்சி. அதேவேளையில், நவாடா மாவட்டத்துக்கு 225 கிமீ தொலைவில் உள்ள தர்பாங்கா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்களில் இடுப்பளவுக்கு நீர் புகுந்துவிட்டது.
  • இந்த நீர் வடிய ஒரு மாதத்துக்கும் மேல் ஆகும். அதுவரை இதனால் நேரும் இடர்பாடுகளை மக்கள் தாங்கியாக வேண்டும்.
  • கடந்த ஆண்டு வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தர்பாங்கா, இப்போது வெள்ளம் பாதித்த மாவட்டமாகிவிட்டது.
  • ஏற்கெனவே பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாநிலத்தில் இப்படி மாறி மாறி இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் மேலும் பின்னுக்கிழுக்கிறது.
  • பிஹார் மாநிலத்தை கங்கை நதி நடுவாகப் பிளந்துசெல்கிறது. இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளோ நேபாளத்திலிருந்து பிஹாரின் வடமாவட்டங்கள் வழியாகப் பாய்கின்றன.
  • மத்திய இந்தியாவில் உற்பத்தியாகும் நதிகள் பிஹாரின் தெற்கு வழியாகப் பாய்கின்றன.
அணைகள்
  • காக்ரா, கண்டக், பாக்மதி, கோசி, கமலா, மகாநந்தா ஆகிய ஆறுகள் நேபாளத்திலிருந்து பாயும்போது தங்களுடைய நீர்ப்பாதையை அடிக்கடி மாற்றிக்கொள்கின்றன.
  • இந்தப் பகுதியில் காடுகளை அழித்து விளைநிலங்களாக்குவதாலும் வீடுகளைக் கட்டுவதாலும் வெள்ளம் வரும்போது தடம் மாறுவதுடன் ஏராளமான அளவில் மண் அரிப்பையும் ஏற்படுத்துகிறது. இதைத் தீர்க்க அணைகள் கட்டச் சொல்லி நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
  • ஆனால், இதற்காகப் பணம் செலவழிக்கும் நிலையில் நேபாளம் இல்லை. எனவே, பிஹார் இந்த ஆறுகளின் வடிநிலமாகவும் பாயும் களமாகவும் மாறிவிட்டது.
  • பிஹாரின் தெற்குச் சமவெளிப் பகுதியில் சிற்றாறுகள் ஓடியும் அதனால் அதிகப் பயன்பாடு கிடையாது. இப்பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 1,102 மிமீ மழைதான் பெய்கிறது.
  • பாசனக் கட்டுமானங்களும் குறைவு. இந்தப் பிரதேசம் முழுக்க மானாவாரிச் சாகுபடிதான். தென்மேற்குப் பருவமழை காலத்தில்தான் சாகுபடி. எனவே, மாநிலத்தில் சாகுபடிக்குத் தகுதியான நிலங்களில் 57% மட்டுமே பயிர் விளைச்சலைக் காண்கிறது.
காரணங்கள்
  • நிலையற்ற மழைப் பொழிவு, அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு, வறட்சி இவை காரணமாக பிஹாரில் பயிர்ச் சாகுபடிச் சுழற்சியும் கடுமையாகப் பாதிப்படைந்துவிடுகிறது. கங்கை, கோசி, கண்டக் நதிகளில் வண்டல்களை அகற்றினால்தான் பிஹார் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியும்.
  • கோசி-மேச்சி ஆறுகளை இணைக்க ரூ.4,900 கோடி செலவு பிடிக்கும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் தந்துவிட்டது.
  • இத்திட்டம் மட்டும் நிறைவேறினால், பிஹாரின் வெள்ள-வறட்சி துயரங்களைப் பெருமளவு குறைத்துவிடலாம்.
  • பிஹாரின் வடக்குப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் அதேசமயத்தில் அராரியா, பூர்ணியா, கிஷன்கஞ்ச், கடிஹார் மாவட்டங்களில் 2,14,000 ஹெக்டேர் நிலங்களுக்கு இது நிரந்தரப் பாசன வசதியை ஏற்படுத்தும்.
  • ஆக, நதிநீர் இணைப்புத் திட்டங்களில் மத்திய-மாநில அரசு முனைப்புக் காட்டுவது மிகவும் அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (01-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்