TNPSC Thervupettagam

ஒரே நாடு ஒரே சந்தா திட்டம்

December 11 , 2024 17 days 51 0

ஒரே நாடு ஒரே சந்தா திட்டம்

  • ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ (one nation one subscription) என்கிற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் ஆராய்ச்சி இதழ்கள், ஆய்வு வெளியீடுகளை மாணவர்கள் எளிமையாக அணுகும் சூழல் உருவாகியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்களின் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் எனக் கூறப்படுகிறது.
  • 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் அதிக ஆராய்ச்சி இதழ்களை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டம் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுவதை ஊக்கு​விக்கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஏன் இந்தத் திட்டம்?

  • உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்​சிகளுக்காக ஆய்வு இதழ்களைப் பெரிதும் நம்பி​யுள்​ளனர். குறிப்பாக, ஆய்வு​களுக்​காகச் சர்வதேச வெளியீடு​களையே மாணவர்கள் சார்ந்​திருக்கும் நிலை நிலவு​கிறது.
  • தற்போதைய நடைமுறை​யில், மத்தி​ய-​மாநில அமைச்​சகங்​களின் கட்டுப்​பாட்​டின்கீழ் உள்ள வெவ்வேறு நூலகக் கூட்டமைப்புகள் மூலமே உயர் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி இதழ்களைப் பெற்று​வரு​கின்றன. இவ்வாறாக, ஆங்காங்கே தனித்​திருக்கும் ஆய்வு இதழ்களை ஒருங்​கிணைக்கும் தளமாக மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டம் உள்ளது.

ரூ.6,000 கோடி ஒதுக்கீடு:

  • ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்தின் மூலமாக, ஆய்வு இதழ்களைப் படிக்கத் தேசிய அளவில் ஒரே சந்தா முறை அறிமுகப்​படுத்​தப்​படு​கிறது. 2025 ஜனவரி மாதம் முதல் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம் அறிமுகப்​படுத்​தப்​பட்டு, 3 ஆண்டு​களுக்கு (2025, 2026, 2027) நடைமுறைப்​படுத்​தப்​படு​கிறது. இத்திட்​டத்​துக்காக மொத்த​மாகச் சுமார் ரூ.6,000 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்​பட்டுள்ளது.
  • இத்திட்​டத்தின் வலைதளம் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தகவல், நூலக வலைப்​பின்னல் (INFLIBNET) மூலம் நிர்வகிக்​கப்​படு​கிறது. மத்திய அரசின் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்​கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் இத்தளத்தைப் பயன்படுத்​திக்​கொள்​ளலாம். சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஆராய்ச்சி இதழ்களை மாணவர்கள், ஆராய்ச்​சி​யாளர்கள் இலவசமாகப் படிக்​கலாம்.

சர்வதேசப் பத்திரி​கைகள்:

  • ‘ஒரே நாடு ஒரே சந்தா’ தளத்தில், சர்வதேச அளவில் முக்கி​யத்துவம் வாய்ந்த 30 பத்திரிகை வெளியீட்​டாளர்கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். அந்த வகையில், 13,000 மின்னணுப் பத்திரி​கைகளை, 6,300க்கும் மேற்பட்ட அரசு உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் அணுக முடியும். ‘எல்சீவர் சயின்ஸ் டைரக்ட்’ (Elsevier Science Direct), ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’, ‘விலே பிளாக்வெல் பப்ளிஷிங்’, ‘டெய்லர் & பிரான்​சிஸ்’, ‘சேஜ் பப்ளிஷிங்’, ‘ஆக்ஸ்​போர்டு யுனிவர்​சிட்டி பிரஸ்’, ‘கேம்​பிரிட்ஜ் யுனிவர்​சிட்டி பிரஸ்’, ‘பிஎம்ஜே ஜர்னல்ஸ்’ போன்ற சர்வதேச வெளியீட்​டாளர்கள் இத்திட்​டத்தில் இடம்பெற்றுள்​ளனர். ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்தில் அங்கம் வகிக்காத பிற வெளியீட்​டாளர்​களின் கட்டுரைகளைக் கல்வி நிறுவனங்கள் தனியாகச் சந்தா செலுத்திப் படித்​துக்​கொள்​ளலாம்.

யாரெல்லாம் பயனடை​வார்கள்?

  • இந்தத் திட்டம் மூலம் மாணவர்கள், ஆராய்ச்​சி​யாளர்கள் தங்கள் புதிய கண்டு​பிடிப்பு​களுக்​காகச் சமீபத்திய ஆய்வுகள் குறித்த மேம்பட்ட தகவலைப் பெற முடியும். இத்திட்டம் மூலம் 6,300க்கும் மேற்பட்ட நிறுவனங்​களில் உள்ள 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்​சி​யாளர்கள் பயன்பெற இருக்​கிறார்கள். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்​கப்​ப​டாது.

இடைவெளியைக் குறைக்கும்:

  • இந்தியாவின் ஆராய்ச்சிச் சூழல் அமைப்பைச் சமத்துவமாக மாற்றி, கல்வியைப் பெறுவதில் உள்ள இடைவெளி​களைக் குறைப்பதை இந்தத் திட்டம் நோக்க​மாகக் கொண்டுள்ளது; இடைநிலை ஆராய்ச்​சிகளை ஊக்கு​விக்​கிறது. கல்வி வாய்ப்பு​களில் கிராமப்புற - நகர்ப்புற மாணவர்​களிடையே நிலவும் வேறுபாட்டை இந்தத் திட்டம் குறைக்கும் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.
  • இந்திய ஆராய்ச்சித் துறையின் ஆய்வு​களை​யும், புதிய கண்டு​பிடிப்பு​களையும் இத்திட்டம் ஊக்கப்​படுத்தும் என்பதால், கல்வித் துறை செயல்​படும் முறை மாறும் என ஆய்வாளர்கள் கருதுகின்​றனர். இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆராய்ச்​சிக்​காகச் செலவிடும் தொகை 18 சதவீதம் குறையும்; இதன் மூலம் இந்தியாவில் ஆராய்ச்சி மாணவர்​களின் எண்ணிக்கை​யும், ஆராய்ச்​சிகளின் தரமும் மேம்படக்கூடும்.

பின்னடைவுகள்:

  • ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜனநாயக வழியில் மாணவர்​களைச் சென்றடையும் வாய்ப்பை ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம் உருவாக்கு​கிறது. இருப்​பினும் உலகளாவிய ஆராய்ச்சி அமைப்புகள் திறந்த அணுகலை (open access) நோக்கிப் பயணித்​துக்​கொண்​டிருக்கும் வேளையில், அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான இந்தப் புதிய திட்டத்​துக்காக இந்தியா அதிகத் தொகையைச் செலவிடு​கிறது என நிபுணர்கள் கருதுகின்​றனர்.
  • அடுத்து, ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெரும்​பாலும் இணையதளங்​களில் வெளியிடப்​படு​கின்றன. அவ்வாறான சூழலில் வெளியிடப்​படும் ஆய்வுக் கட்டுரைகளின் பாதுகாப்பு சார்ந்த கேள்விகள் எழுந்​துள்ளன. அச்சு வழியில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்​படும்​போது, அதைப் பத்திரப்​படுத்த முடியும்.
  • ஆனால், இணைய தளங்களில் அத்தகைய உறுதியை நம்மால் தர முடிவ​தில்லை. உதாரணத்​துக்கு, ‘The discontinuation of Heterocycles’ என்கிற ஜப்பானின் ஆய்வுக் கட்டுரை, 2023இல் இணையதளத்​திலிருந்து காணாமல்​போனது. மேலும், சுமார் 17,000 ஆய்வுக் கட்டுரைகளையும் பயனாளர்கள் அணுக முடியாத சிக்கல் ஏற்பட்டது.
  • இவ்வாறாக, முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள் இணையதளத்​திலிருந்து காணாமல்​போ​னாலோ, அணுக முடியாமல் போனாலோ அதை எப்படிப் பாதுகாப்​பாகத் தக்கவைப்பது என்பது போன்ற விழிப்பு​ணர்வு அவசியம். இந்திய ஆராய்ச்சித் துறையை அடுத்த கட்டத்​துக்கு எடுத்துச் செல்ல ‘ஒரே நாடு ஒரே சந்தா’ உதவும் என சர்வதேச வெளியீட்​டாளர்கள் வரவேற்றுள்​ளனர். இந்திய ஆராய்ச்சி மாணவர்​களின் அறிவுசார் கண்ணோட்​டத்தை மேம்படுத்தி, சர்வதேச அளவில் ஆய்வுக் கட்டுரைகள் சார்ந்து ஆரோக்​கியமான ​போட்டிச் சூழலை ஏற்​படுத்​தும் என நம்​பலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்