TNPSC Thervupettagam

ஒரே நாடு - ஒரே ரேசன் அட்டை

September 12 , 2019 1947 days 9956 0

To read this article in English Click Here

இதுவரை

  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஜூலை 01, 2020 இல் ஒரே தேசம் - ஒரே ரேசன் அட்டை (ONORC- One Nation, One Ration Card) என்ற திட்டத்தை அறிமுகப் படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
  • இத்திட்டமானது உள்நாட்டிற்குள் இடம்பெயரும் தொழிலாளர்கள் மானிய விலையில் உணவு தானியங்கள் பெறுவதை ஊக்குவிக்கிறது. இதற்காக அவர்களது ரேசன் அட்டைகள் டிஜிட்டல்மயமாக்கப் பட்டும், ஆதார் உடன் இணைக்கப்பட்டும் உள்ளது.
  • நுகர்வோர் விவகார மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் கூற்றுப்படி ரேசன் கடைகளின் ஒருங்கிணைந்த மேலாண்மையின் கீழ் மாநிலத்திற்குள்ளான பொது விநியோக முறை (PDS - Public Distribution System) நிகழ்நேர (ஆன்லைன்) தரவுதளமாக ஏற்கனவே சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

வரலாறு

  • 1940 ஆம் ஆண்டு வறட்சியின் போது உணவு வழங்குதல் மற்றும் பொது விநியோக முறை தொடங்கியது.
  • இந்த முறையானது இந்திய மக்களுக்கான அனைவருக்குமான உணவு உரிமைத் திட்டத்தின் காரணமாக 1970 ஆம் ஆண்டுகளில் மறுமலர்ச்சி அடைந்தது.
  • 1997 ஆம் ஆண்டு அனைவருக்குமான உணவுத் திட்டத்தின் இலக்கு ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை உள்ளடக்கிய வகையில் இலக்கு நோக்கியதாக மாற்றப்பட்டது.
  • பின்னர், 2013 ஆம் ஆண்டு, சிவில் சமூகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் அழுத்தத்தின் காரணமாக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற முக்கியச் சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த சட்டமானது மூன்றில் இரண்டு பங்கு ஏழை இந்திய மக்களுக்கு உணவு உரிமையை சட்டப்பூர்வமான உரிமையாக மாற்றியது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

  • உலகளவில் உணவுப் பாதுகாப்பின் அடிப்படைக் கருத்து என்னவென்றால் அனைத்து மக்களும், அனைத்து நேரங்களிலும் அவர்களது சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை உணவைப் பெறுவது - உணவு கிடைத்தல், அணுகுதல், ­­­ பயன்பாடு மற்றும் உணவு நிலைத் தன்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப் படுவதாகும்.
  • உணவுப் பாதுகாப்பு ஆனது அரசியலமைப்பில் உள்ள சட்டப்பிரிவு 21-இன் படி வாழ்க்கைக்கான அடிப்படை உரிமை விதியிலிருந்துப் பெறப்படுகிறது.
  • அதனை கண்ணியத்துடன் வாழ்வதற்கான மனித உரிமை என்று பொருள் கொள்ளலாம். அதில் உணவு உரிமை மற்றும் பிற அடிப்படைத் தேவைகளும் அடங்கும்.
  • இதைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவது, உணவுப் பாதுகாப்பு முறையை நலன் அடிப்படை முறையில் இருந்து உரிமை அடிப்படையிலான முறைக்கு மாற்றும் முன்னுதாரண நடவடிக்கையாகும்.
  • இந்தச் சட்டமானது, இலக்கு நோக்கிய பொது விநியோக முறையின் கீழ், 75% கிராமப்புற மக்களும், 50% நகர்ப்புற மக்களும் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவதை சட்டப் பூர்வமாக்கியுள்ளது.

திட்டம் பற்றி

  • இந்தியாவில் இடம்பெயர்வதனால் பாதிக்கப்படக் கூடிய தொழிலாளர்களின் வாழ்க்கையில் இந்த “ஒரே தேசம், ஒரே ரேசன் அட்டை” (ONORC) திட்டம் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டு வரும்.
  • இந்தத் திட்டமானது நாடெங்கிலும் உள்ள மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு நன்மைகளின் பெயர்வுத் திறனை வழங்குகிறது.
  • இந்தத் திட்டம் அனைத்துப் பயனாளர்களும் குறிப்பாக இடம்பெயர்வோர் பொது விநியோக முறையை நாட்டின் எந்த நியாய விலைக் கடையிலும் அவரது சொந்த விருப்பத்திற்கேற்ப பெறுவதை உறுதி செய்கின்றது.

 

  • உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு இடத்திலிலுந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் எந்த ஏழை மனிதனும் மானிய விலையில் உணவு தானியங்கள் பெறத் தகுதியுடையவராவார்.
  • இந்தத் திட்டமானது எந்தவொரு மனிதனும் ஒன்றுக்கு மேற்பட்ட ரேசன் அட்டைகள் மூலம் வெவ்வேறு மாநிலங்களில் பயன் பெறுவதை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அம்சங்கள்

  • இந்தத் திட்டத்தின்படி இடம்பெயரும் ஏழைத் தொழிலாளர்கள் மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை நாட்டின் எந்த ரேசன் கடையிலும் பெற முடியும். ஆனால் அவர்களது ரேசன் அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • இடம்பெயர்வோர் மத்திய அரசின் மானிய விலைப்படி அரிசி ரூ.3 மற்றும் கோதுமை ரூ.2 ஆகிய விலைகளில் பெறத் தகுதியுடையவராவர்.
  • மற்ற சில மாநிலங்களில் அந்த மாநிலங்கள் வழங்கும் மானியங்களுடன் இது இணைவதில்லை.
  • இந்த முறையானது போலி ரேசன் அட்டையாளர்களைக் கண்டறிந்து நீக்க உதவுகிறது.
  • இந்த திட்டமானது ஏற்கனவே விற்பனை முனை இயந்திரங்கள் (PoS – Point of Sale) கொண்ட 77% ரேசன் கடைகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் NFSA திட்டத்தின் கீழ் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட ரேசன் அட்டை கொண்ட 85% பயனாளர்களும் இத்திட்டத்தில் அடங்குவர்.
  • மற்ற பயனாளர்களையும் இத்திட்டத்தில் இணைக்க அனைத்து மாநில அரசுகளும் ரேசன் கடைகளில் விற்பனை முனை இயந்திரங்களை (PoS) நிறுவிட  மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கியுள்ளன.

பொது விநியோக முறை – முக்கியத்துவம்

  • ONORC திட்டத்தின் பயனைத் தெரிந்து கொள்வதற்கு மதிப்புத் தொடர்ச் சங்கிலியில் PDS அமைப்பின் நடைமுறையினைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
  • PDS முறையானது இரண்டு செயல்முறைகளை மையமாகக் கொண்டுள்ளது:
    • பயனாளர்களைக் கண்டறிதல்.
    • தானியங்களின் தரம் மற்றும் பல்வேறு வகைகளின் மூலம்  தேவைகளை பூர்த்தி  செய்வதைத் தவிர, அவற்றின் விலை மற்றும் அளவு ஆகியவற்றின் முறையான ஒதுக்கீட்டு.

 

  • PDS நியாய விலைக் கடைகளால் செய்யப்படும் பணிகள் 81 கோடி மக்களின் உயிர் நாடியாகும்.
  • இந்திய உணவு நிறுவனம், மத்திய மற்றும் மாநில உணவு சேமிப்புக் கிடங்குகள் மற்றும் தனியார் கிடங்குகளில் ஆண்டுதோறும் 612 லட்சம் டன்கள் உணவு தானியங்கள் சேமிக்கப்படுகின்றன.
  • இந்தியாவில் நியாய விலைக் கடைகளில், சுமார் 78% மின் விற்பனை முனை இயந்திரங்கள் இணைக்கப்பட்டதன் மூலம் அவை தானியங்கு மயமாக்கப்பட்டுள்ளன.

திட்டம் (Plan)

  • முதல் மற்றும் முடிவு அடிப்படையில் ONORC திட்டமானது காலநிலை மற்றும் சுழற்சி முறையில் இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு சிறந்த PDS அணுகலைப் பெற உதவுகிறது.
  • இந்தத் திட்டத்தை வடிவமைப்பதிலும், செயல்முறைப் படுத்துவதிலும் அதிகாரிகள் கடுமையான சவால்களை எதிர்கொள்வார்கள்.
  • மத்திய அரசு ரேசன் அட்டை பெயர்வு திறனை அனுமதிப்பதன் மூலம் ஊழலை ஒழிப்பதோடு, ஏகபோக நிலைமையை நீக்குவதன் மூலம் அணுகுதல் மற்றும் சேவைத் தரத்தை மேம்படுத்த முடியும் என நம்புகிறது.
  • பழைய முறையின்படி, பயனாளர்கள் ஒரே நியாய விலைக் கடையைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள் விற்பனையாளர்களின் விருப்பத்திற்கு உட்பட்டவர்கள்.
  • புதிய முறையின்படி, பயனாளர்களுக்கு சேவை மறுக்கப்பட்டால் (அ) ஊழல் (அ) குறைந்த தரத்தை எதிர்கொண்டால், அவர்கள் சுதந்திரமாக வேறு கடைகளுக்குச் செல்லலாம்.
  • உணவு சேமிப்பு மற்றும் பொது விநியோக முறையை ஒருங்கிணைப்பதற்காகவும், மின்மயமாக்குவதற்காகவும் பூர்வாங்க  முயற்சிகளை விரைவாக செயல்படுத்த இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.
  • இந்தத் திட்டம் NFSA பயனாளிகள் மற்றும் ரேசன் அட்டை கொண்டவர்களின் தகவல்களைக் கொண்ட மையக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குவதை உள்ளடக்கியது. இந்த திட்டம் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் பராமரிக்கப்படும் தரவுகளை ஒருங்கிணைப்பதாகும்.
  • தனித்துவமான அங்க அடையாளத்தை நாட்டின் எங்கிருந்தும் பயனாளிகளின் ரேசன் பயன்பாட்டை அங்கீகரிக்கவும், கண்காணிக்கவும் பயன்படுத்த முடியும் என்பதால் ஆதார் இணைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
  • தற்போது, சுமார் 85% ரேசன் அட்டைகள் ஆதார் எண்களுடன் இணைக்கப் பட்டுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் நன்கு செயல்பட, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மின்னணு விற்பனை முனை இயந்திரங்கள் (ePoS) பொருந்தப்படுவது அவசியமாகிறது.  இது பரிவர்த்தனைகளைப் பழைய முறையான கையேட்டுப் பதிவிலிருந்து, மின்னணு நிகழ்நேரப் பதிவாக மாற்றுகிறது.
  • மற்றொரு புறத்தில், இந்திய உணவுக் கழகத்தின் நிகழ்நேர கிடங்கு நிலைமை என்பது அனைத்து தானியக் கிடங்குகளையும், மானிய விலை தானியங்களை சேகரிக்கும் கிடங்குகளையும் ஒருங்கிணைத்து அவற்றின் கொள்முதல் முறை விநியோகம் வரையிலான ஆன்லைன் தகவல்களின் தடையற்ற ஓட்டத்தை உருவாக்கும் முயற்சியாகும்.

நடைமுறைப்படுத்தல்

  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.
  • பொது விநியோக முறையின் ஒருங்கிணைந்த மேலாண்மையின் கீழ் உட்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளர்கள் எந்த மாவட்டத்திலிருந்தும் தங்களுக்கான உணவுத் தானியங்களின் பங்கைப் பெற இயலும்.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து ரேசன் கடைகளிலும் விற்பனை முனை இயந்திரங்கள் (PoS) நிறுவப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • மாநிலங்களுக்கு இடையிலான இடப்பெயர்வு, குறிப்பாக குறுகிய கால இடப்பெயர்வு குறித்த உறுதியானத் தகவல்கள் இல்லாதது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
  • அதிகமாக இடம்பெயரும் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஏற்படும் குறைபாடுகளைக் களைய விரைவான கூடுதல் விநியோகத்தை அளிப்பதற்காக மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தானியப் பங்கீட்டு அளவானது தேவைக்கேற்ப இருக்க வேண்டும்.
  • தற்போது இந்திய உணவுக் கழகத்தின் தானிய கிடங்குகளில் மூன்று மாதங்களுக்குத் தேவையான தானியங்களை முன்பாகவே கையிருப்பு வைத்துள்ளனர்.

நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள்

  • ஒரே தேசம், ஒரே ரேசன் அட்டை திட்டம் இரண்டு முக்கிய வழிகாட்டும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவை: ஆதார் மற்றும் ரேசன் அட்டைகளின் டிஜிட்டல்மயமாக்கம்.
  • ஏழை மக்கள் வேலைக்காக மாநிலத்திற்குள் (அ) மாநிலங்களுக்கிடையில் இடம்பெயருவது மற்றும் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் துறைகள் ஆகியவை பற்றி அனைத்துத் தகவல்களையும் பெற வேண்டும்.
  • “ஒரே தேசம், ஒரே ரேசன் அட்டை”  என்ற திட்டத்தில் பெயர்வு திறனை ஏற்படுத்துவதற்கு முன்பு அரசாங்கத் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பை அணுகுவதற்கான குடியேற்ற அடிப்படையிலான சட்டங்கள்  தீவிர மறுபரிசீலனை செய்யப் படுவது அவசியமாகின்றது.
  • 5.3 லட்சத்திற்கும் அதிகமான நியாய விலைக் கடைகளில் வெறும் 4.32 லட்சம் விற்பனை முனை இயற்திரங்கள் (PoS) மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.
  • வடகிழக்கு மாநிலங்களின் பெரும்பகுதி தவிர, அந்த பெரும்பகுதி இடைவெளி பீகார், மேற்கு வங்கம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்தே பெறப்படுகின்றன.
  • இந்த மாநிலங்களில் இந்தத் திட்டம் சீராக செயல்படுவதற்கு POS இயந்திரங்கள் துரிதமாக நிறுவப்பட வேண்டும்.
  • சில கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் PoS இணைப்பும் ஒழுங்கற்றதாகவே உள்ளது. இது இத்திட்டத்தின் சீரான செயல்பாட்டை பாதிக்கும்.
  • மற்ற மாநிலங்களில், மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் ரேசன் சலுகைகளில் ஏற்படும் வேறுபாடுகளால் சவால்கள் வருகின்றன.
  • உதாரணமாக NFSA சலுகைகளுக்கும் அதிகமாக சுமார் 2 கோடி ரேசன் அட்டையாளர்களுக்கு மாதம் 20 கிலோ கிராம் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் சர்க்கரை, பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை தமிழ்நாடு வழங்குகிறது.
  • இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்தச் சலுகைகளை வழங்கப் போவதில்லை என்றும், மத்திய அரசு வழங்கும் NFSA சலுகைகளை மட்டுமே அவர்களுக்கு வழங்க முடியும் என்றும் தமிழ்நாடு மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
  • மேலும் வீட்டின் உறுப்பினர்கள் இரு வெவ்வேறு இடங்களுக்கு சேர நேரிட்டால் அங்கு ஒரு பிரச்சனை எழலாம்.
  • குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உணவின்றி வேறு இடத்தில் தவிக்க விடப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல்களானது  ஒரு நேரத்தில் வீட்டின் ஒரு உறுப்பினர் மட்டும் அந்த மாதத்திற்கான முழு ரேசனையும் பயன்படுத்துவதைத் தடுக்கும் விதமாக மானிய விலையில் பாதி தானியங்களை மட்டும் பெற வழி வகுக்கிறது.   

நடப்பு நிலை

  • நகரங்களில் நிரந்தரமாக அல்லாமல் குறுகியக் காலத்திற்கு வேலை செய்வதற்காக இடம்பெயர்வோர் எண்ணிக்கை 4 கோடி முதல் 10 கோடி வரை இருக்கலாம் என கள ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.
  • திருமணத்திற்குப் பிறகு இட மாற்றம் காரணமாக பெண்களுக்கு புதிய குடும்ப அட்டை மூலம் ரேசன் பொருட்கள் பெறுவது சிரமமாக உள்ளது.
  • இந்த புதிய நடைமுறையானது எந்த ஒரு  ஏழையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறினால் PDS உரிமையை அவர் இழப்பதில்லை என்பதை உறுதி செய்யும்.
  • மேலும் தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற 11 மாநிலங்களில் அனைத்து ரேசன் கடைகளும் விற்பனை முனை இயந்திரங்களைப் பயன்படுத்தப்படுவதால் இத்திட்டத்தின் PDS பெயர்வுதிறனை அம்மாநிலங்கள் எளிதாக நடைமுறைப்படுத்த முடிகின்றது.
  • இரண்டு இணை மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம்-தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிரா-குஜராத் ஆகியவை ஆகஸ்ட் மாதம் 2019 இல் தங்கள் மாநிலங்களுக்கிடையே பெயர்வுதிறனை நடைமுறைப்படுத்தியுள்ளன.
  • அக்டோபர் 01, 2019 முதல் மேலும் இரண்டு இணை மாநிலங்களான கேரளா-கர்நாடகா மற்றும் ராஜஸ்தான்-ஹரியானா ஆகியவையும் இச்சோதனை முயற்சியில் பங்கேற்கின்றன.
  • ஜனவரி 2020இல், இந்த எட்டு மாநிலங்களும் குறைந்தபட்சம் ஏற்கனவே உள்மாநில பெயர்வு திறனை செயல்படுத்துகின்ற மூன்று மாநிலங்களும்  ஒன்றிணைந்து “ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை” திட்டத்திற்கான முதல் தேசிய கட்டத்தைச் செயல்படுத்தும்.

பரிந்துரைகள்

  • இந்த முறை செயல்பட, பயன்பாட்டு அடிப்படையிலான வண்டிகளைப் போல ஒருங்கமைந்த ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது.
  • அரசாங்கம் உபெர்/ஓலா ஆகிய வாகனச் சேவைப் பயன்பாடுகளின் அனுபவங்கள் மற்றும் மதிப்பீட்டு முறையின் அடிப்படையில், தொடர் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் மூலம் PDS முறையை மேம்படுத்தலாம்.
  • அரசு வழங்கும் சலுகைகளில் குறைபாடுகளைச் சரிசெய்திட PDS கடைகளில் PoS இயந்திரங்கள் கிடைப்பது மற்றும் அதன் செயல்பாடு ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும்.
  • சிறப்பாகச் செயல்படும் PDS விற்பனையாளர்களுக்கு வெகுமதி அளிக்கலாம்.
  • ONORCக்கான டிஜிட்டல்மயமாக்கம் இந்த முறையைப் பயனுள்ளதாகவும், தன்னைத் தானே திருத்தம் செய்து கொள்வதாகவும் உருவாக்கியுள்ளது.
  • மற்ற விநியோக முறைகளைப் போல இந்த ONORC திட்டமும்  குறிப்பாக கீழ்நிலையில் உள்ள மக்களுக்கான திட்டத்தின் நிலைமைகளை  மேம்படுத்தும் திறன் பெற்று இருந்தாலும் இதன் ஒட்டுமொத்த சங்கிலித்  தொடரும் உன்னிப்பாக கண்காணிக்கப்படவும் உள்கட்டமைப்பால் ஆதரிக்கப்படவும் வேண்டி இருக்கின்றது.
     

óóóóóóóóóó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்