TNPSC Thervupettagam

ஒரே நாடுதான்… ஆனால், இந்தியாவுக்கு இரண்டு நேர மண்டலங்கள் வேண்டும்!

November 8 , 2019 1847 days 1199 0
  • வாழ்க்கையில் எவராலும் விலை கொடுத்து வாங்கவே முடியாத மதிப்புமிக்க பொருள் நேரம். ஆனால், இந்தியா ஏன் அதுகுறித்து யோசிக்கவே மறுக்கிறது என்று தெரியவில்லை.
  • பகல் பொழுது, இரவுப் பொழுது எல்லா நேரமும் தனிமனித வாழ்க்கையில் ஒரே நேரம்தான் என்றால், ஒரு சமூகமாக நாம் ஒன்றுசேர்ந்து உழைக்கக் கூடுதல் சாத்தியங்களைக் கொண்டது என்ற வகையில் பகல் பொழுது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
  • உலக நாடுகள் எப்போதுமே பகல் பொழுதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. பொதுவாக, கோடைக் காலத்தில் பகல் பொழுது அதிகம், இரவுப் பொழுது குறைவு. குளிர்காலத்தில் இரவுப் பொழுது அதிகம், பகல் பொழுது குறைவு என்பது எல்லோரும் தெரிந்ததுதான். கோடைக்காலம், குளிர்காலம் இரண்டிலும் பகலில் வெளிச்சம் அதிகம் இருக்கும் நேரம் முக்கியமானது.
  • ஒரு நாட்டில் கோடைக் காலத்தில் மாலையில் 6 மணிக்குப் பொழுது இருட்டுவது வாடிக்கை; அதுவே குளிர்காலத்தில் 5 மணிக்கே பொழுது இருட்டிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்; இப்போது குளிர்காலத்தில் அந்த நாடு சொல்லிவைத்து எல்லோர் கடிகாரங்களிலும் ஒரு மணி நேரத்தை முன்கூட்டி மாற்றிக்கொண்டுவிடுகிறது என்றால் என்னவாகும்? பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் எல்லாமே ஒரு மணி நேரம் முன்னதாகவே திறந்து, ஒரு மணி நேரம் முன்கூட்டியே சென்றுவிடலாம். இரவு 10 மணிக்குப் படுக்கைக்குச் செல்லக்கூடிய ஒருவர் 9 மணிக்கே சென்றுவிடுவார்; ஒரு மணி நேர மின்சாரம் சேமிக்கப்படும், இல்லையா? இது ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டுக்கு எவ்வளவு சிக்கனம்? இந்த உத்திக்குப் பெயர் ‘டிஎஸ்டி’ (Daylight Saving Time).

சென்னை – லண்டன் நேர மாற்றம்

  • பருவநிலை மாற்றங்கள் உலகெங்கும் புவி வெப்பமாதல் தொடர்பாக எல்லா நாடுகளிலுமே பெரும் விழிப்புணர்வை உண்டாக்கிவரும் நேரத்தில், எரிசக்தியை மிச்சப்படுத்துதல் என்பது இன்றைக்குப் பொருளாதாரம் சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
  • ஆகவே, மேற்கத்திய நாடுகள் சமீபத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைத் தங்களுடைய நேர நிர்ணயத்தில் செய்தன. கடந்த அக்டோபர் 27 அன்று ஐரோப்பிய நாடுகளில் அனைவரும் தங்களுடைய சொந்த மற்றும் பொதுக் கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்தள்ளி வைத்தார்கள். அமெரிக்காவில் இது நவம்பர் 3 அன்று நடந்தது. ஆஸ்திரேலியாவும் நியுஸிலாந்தும்கூட இதைச் செய்திருக்கின்றன.
  • இதன் விளைவு என்னவென்றால், லண்டனுக்கும் சென்னைக்குமான நேர வித்தியாசம் இதற்கு முன் நாலரை மணி என்றால், இப்போது ஐந்தரை மணியாக மாறிவிட்டது. இப்படி வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் உலகின் 70 நாடுகள் தங்களுடைய கடிகாரங்களில் நேரத்தை மாற்றிக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கின்றன.

இரு நூற்றாண்டு அனுபவம்

  • இப்படி கடிகார நேரத்தை மாற்றும் வழக்கம் 200 ஆண்டுகளுக்கு முன்பே பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. 1916-ல் முதலாவது உலகப் போரின்போது, ஐரோப்பாவில் நிலக்கரிக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் பகல்நேர வெளிச்சத்தை சேமிக்கும் வழியாக இந்த நேரமாற்ற திட்டத்தை அமலாக்கியது. தொடர்ந்து, போரில் ஈடுபட்ட இரு அணிகளையும் சேர்ந்த பிற நாடுகளும் இந்த உத்தியைப் பின்பற்றின. அடுத்து, அமெரிக்காவும் இந்த நேர மாற்றத்தைப் பின்பற்றியது. இவை யாவும் உலகம் பேசும் செய்திகள் ஆயின.
  • உலகப் போர் 1918-ல் முடிந்த பிறகு, பல ஐரோப்பிய நாடுகள் இந்த நடைமுறையைக் கைவிட்டன. 1970-களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பகல்நேர வெளிச்சத்தை முழுமையாகப் பயன்படுத்த இப்படியான நடைமுறையைப் பின்பற்றினர்.
  • பொதுவாக, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இப்படியான நடைமுறைகள் பரிசோதிக்கப்படுவதில்லை. இவற்றில் பெரும்பாலானவை பூமத்திய ரேகை நாடுகள் என்பதுதான் காரணம். ஆனால், ஒரே நாடு என்றாலும் நிரந்தரமாகவே ஒன்றுக்கும் மேற்பட்ட நேர நிர்ணயங்களைக் கடைப்பிடித்த மரபு இந்தியாவுக்கே உண்டு.

சுதந்திர இந்தியாவின் துயரம்

  • நேர மண்டலம் ஒரு நாட்டின் வர்த்தகம், வேலை நேரம் போன்ற பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தின் கிரீன்விச் நகரம் வழியே செல்லும் பூஜ்ஜியம் டிகிரி தீர்க்கரேகையிலிருந்து ஒரு நேர மண்டலத்தைக் குறிக்கும் தீர்க்கரேகை எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ, அதைப் பொறுத்து அந்த நேர மண்டலத்தின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.
  • அந்த நேரமே, ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நேரம் (யூடிசி). பரப்பளவில் பெரிய நாடுகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட நேர மண்டலங்கள் இருக்கும். உதாரணமாக, ரஷ்யாவுக்கு 11 நேர மண்டலங்கள், அமெரிக்காவுக்கு 6 நேர மண்டலங்கள் உண்டு. ஆனால், சுதந்திர இந்தியா ஒரே நேர மண்டலத்தைக் கடைப்பிடிக்க முடிவெடுத்தது. எல்லாம், ஒரே தேசம் - ஒரே நேரம் எனும் வியாதியின் விளைவுதான்.
  • இப்போது நாம் பயன்படுத்தும் நேரமானது கன்னியாகுமரிக்கு மிகப் பொருத்தமானது. ஆனால், மேற்கிலும், கிழக்கிலும் உள்ள மாநிலங்கள் கடும் பாதிப்பை நிரந்தரமாக எதிர்கொள்கின்றன. முக்கியமாக, வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களுக்கு இது பெரும் பிரச்சினை. தமிழ்நாட்டைக் காட்டிலும் சூரியன் வடகிழக்கில் ஒரு மணி நேரம் முன்னே உதிக்கிறது என்றால், குஜராத்தில் ஒரு மணி நேரம் பின்னே உதிக்கும்.
  • வடகிழக்கு மாநிலங்களில் சூரிய வெளிச்சம் இருக்கும் நேரத்தை, முழுமையாக வர்த்தகத்துக்கும் அலுவல்களுக்கும் பயன்படுத்த முடிவதில்லை. அங்கு மாலை ஐந்து மணிக்கே சூரியன் மறைந்துவிடுவதால், பணிகள் பாதிக்கப்படுவதோடு எரிசக்தியும் வீணடிக்கப்படுகிறது.
  • ஆகையால், வடகிழக்கு மாகாணங்களுக்கும், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் தனி நேர மண்டலத்தை உருவாக்க பல்லாண்டு காலமாக இதனால் பாதிக்கப்படும் மக்கள் கோரிவருகிறார்கள்.
  • தேசிய இயற்பியல் ஆய்வகமும்கூட இதைப் பரிந்துரைக்கிறது. ஆனால், ‘ஒரே நாடு’ என்ற பெயரிலான கோஷம் அதற்குத் தடையாக நிற்கிறது.
  • ஐரோப்பாவில் இன்று நடக்கும் மாற்றங்களை இந்தியா சூழல் அக்கறையோடு பார்க்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அரசியலாகப் பார்க்காமல், சூழல் பிரச்சினையாகவே அணுகும்போதுதான் அதற்கான தீர்வை நாம் கண்டடைய முடியும்!

நன்றி: இந்து தமிழ் திசை (08-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்