- நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை, அவருடன் படித்த சக மாணவர்களால் அரிவாளால் கடுமையாக வெட்டப்பட்ட நிகழ்வு, நம் எல்லோரையுமே உலுக்கியது. இளம் உள்ளங்களில் விதைக்கப்பட்டுவிட்ட சாதி உணர்வை எப்படி அழிப்பது என்கிற கவலை நம் எல்லோரையும் ஆட்கொண்டுள்ளது. ஆனால், அதைவிட அதிகமாக நம்மை உலுக்குகிற செய்தி என்னவென்றால், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் வலைதளங்களிலும் யூடியூப் அலைவரிசைகளிலும் பரப்பிவரும் ஒரு பொய்தான்.
- இயக்குநர் பா.இரஞ்சித்தின் திரைப்படங்களும் இயக்குநர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படமும்தான் சாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, நாங்குநேரி சம்பவத்துக்குக் காரணமாக அமைந்தன என்று தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். சாதியவாதியாகத் திகழும் படத் தயாரிப்பாளர் ஒருவர், ‘மாமன்ன’னின் வில்லன் கதாபாத்திரத்தைக் கொண்டாடி, ‘நாங்க ரத்தினவேலு வம்சம்டா’ என்று காணொளி ஒன்றைத் தயாரித்துச் சுற்றுக்கு விட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அது றெக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கிறது.
பரப்பப்படும் வதந்திகள்
- எப்போதுமே வகுப்புவாத சக்திகளின் வலுமிக்க பிரச்சார வடிவங்களில் ஒன்றாக ‘வதந்தி பரப்புதல்’ என்பது இருக்கும். வகுப்புவாதம் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ள வரலாற்றாளர்களான பிபன் சந்திரா, ராம் புனியானி போன்றோர் இதுபற்றி விவரித்திருக்கிறார்கள்.
- வாய்வழியாக வதந்தி பரப்பி வாழ்ந்துவந்த அவர்களின் கையில் இன்று வலைதளங்கள் சிக்கியிருக்கின்றன. வதந்திகளைப் பரப்பும் பீரங்கிகளாக வாட்ஸ்ஆப் குழுக்களையும் யூடியூப் அலைவரிசைகளையும் சமூக வலைதளங்களையும் அவர்கள் மாற்றிக் கையகப் படுத்திக் கொண்டு விட்டனர். இது சாதி வெறியைவிட இன்னும் ஆழமான பிரச்சினையாகப் பார்க்கப் பட வேண்டும்.
- தமிழ்த் திரையுலக வரலாற்றில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் வருகை ஒரு திருப்புமுனை. பெரும் பொருட்செலவில் பெரிய நடிகர்களை வைத்துத் தயாரிக்கப்படும் வணிக சினிமாவுக்குள், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று சாதி அரசியலைப் பேசுவது’ என்பது சாதாரணமாக நடந்துவிட்ட மாற்றம் அல்ல.
- நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவின் வரலாற்றில் இது புதிய குரல் என்றே ஜனநாயக சக்திகள் கணிக்கின்றன. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற படங்களும் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுவரும் மக்களின் வலிகளை முதன்முறையாகப் பெரிய திரையில் பேசத் தொடங்கிய படங்கள்.
- ஆனால், பேசத் தொடங்கிய உடனேயே குரல்வளையை நெரிக்கிறார்கள் ஆதிக்க சாதியினர். ‘நாங்க உங்களால் அடிமைப்படுத்தப்பட்டுக் கொடுமைகளுக்கு ஆளானோம்’ என்று சொல்வதே குற்றமாகச் சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லப்போய்த்தான் இளம் நெஞ்சங்களில் மீண்டும் சாதி உணர்வு வளர்கிறது என்று ஒரே போடாகப் போடுகிறார்கள் சாதியவாதிகள்.
உத்தரவிடும் சாதி ‘
- பரியேறும் பெருமா’ளில் பேசியதுபோல மென்மையான குரலில் பேசு. ‘கர்ணன்’, ‘மாமன்ன’னின் குரலில் பேசாதே’ என்று ஒடுக்கப்பட்டவர்கள் எந்தத் தொனியில், எந்தக் குரலில் பேச வேண்டும் என்பதைக்கூட உத்தரவிடும் சாதி உளவியலுக்குள் நம் சிவில் சமூகம் சிக்கிக் கிடக்கிறது.‘ஒரு படைப்பு தன்னளவில் முற்போக்கான உள்ளடக்கத்துடன் இருந்தாலும், அது போய் விழுகிற சமூகம் படுபிற்போக்கானதாக இருக்கையில் அது என்ன விளைவை ஏற்படுத்திவிடும்’ என்பார் மார்க்சிய அறிஞர் அந்தோனியோ கிராம்ஷி.
- அந்தக் கதைதான் இப்போது ‘மாமன்னன்’ படத்துக்கும் பா.இரஞ்சித் படங்களுக்கும் நடக்கிறது. இப்படங்களின் பிற ஈர்ப்பான அம்சங்களால் ரசிகர்கள் படத்தை ஓட வைத்தார்களே அல்லாமல், படம் கூறும் சாதி எதிர்ப்பு அரசியலை நம் சாதியச் சமூகம் ஏற்றுக்கொண்டு ஓட வைக்கவில்லை. சாதியவாதிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதன் சாட்சிதான் ‘மாமன்னன்’ படத்தின் வில்லனைக் கொண்டாடும் மனப்போக்கு.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சாதி உவப்பானதாக இருக்க முடியாது. சாதி அடையாளத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். மற்றவர்களுக்கு அது பெருமித உணர்வைத் தர உதவலாம். தங்களை ‘ஆண்ட சாதி’ என்று சொல்லிப் பீற்றிக்கொள்ள உதவலாம். தெருவுக்குள் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது; மலம் கலந்த தண்ணீரைக் குடி; கோயிலுக்குள் நுழையக் கூடாது என்ற அநீதி உத்தரவுகள், தெருவுக்குள் நுழையத் தடைவிதிக்கும் வழிமறிச்சான் சுவர்கள், தீண்டாமைச் சுவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சாதி என்பது ஒரு பௌதீக சக்தியாக (physical force) எழும்பி மறிக்கிறது.
- மற்ற சாதியினருக்கு சாதி என்பது அறிவாலும் உணர்வாலும் கடக்க வேண்டிய ஒரு மனத்தடை மட்டுமே. இருவரின் சாதி உணர்வும் ஒன்றல்ல. இந்தப் புள்ளியை நம் சிவில் சமூகம் இன்றுவரை புரிந்துகொள்ளவில்லை.
- ஆகவே, ஒடுக்கப்பட்ட மக்கள் சாதியாக அணி திரள்வது இன்னும் சில காலத்துக்குத் தேவைப்படலாம். அது ஜனநாயக எழுச்சியின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டியது. அப்படிப் பார்க்காமல் ‘சாதியைப் பற்றிப் பேசக் கூடாதெனில், யாருமே பேசக் கூடாதில்லே’ என்று ‘நியாயம்’ பேசுவது பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசும் அநியாயத்துக்குச் சமம்.
தீராக் கொடுமை
- பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பாகுபாடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்க ஓய்வுபெற்றநீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பது, ஒரு முக்கியமான முன்னெடுப்பு. குழந்தைகளின் மனதிலிருந்துசாதி உணர்வை அகற்ற முதல் முன்நிபந்தனையாக வருவதுபெற்றோரின் சாதிய உணர்வை அழிப்பது.
அது அத்தனை எளிதான காரியமா?
- சாதியைக் கணக்கில் கொண்ட தேர்தல்வியூகங்களும், எல்லாச் சாதி மக்களுக்கும் பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கும் வேலைவாய்ப்பின்மை, வறுமை, தொழில் வளர்ச்சியின்மை, அறிவியல்பூர்வமான கல்வியின்மை எனப் பல பிரச்சினைகளும் தீர்க்கப்படாமல் சாதிய உணர்வை ஒழிக்க முடியாது.
- ‘தெனாலிராமன் குதிரை வளர்த்த கதை’போல அசமத்துவமான பொருளாதார வளர்ச்சியானது பசியுள்ள குதிரை தாடியைக் கவ்வும் கதையை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட இயக்க ஆட்சிக் காலத்தைத் தமிழ்நாடு கடந்துவிட்ட பிறகும், சாதி குறித்த வரலாற்றுப் பார்வையை அறிவியல் நோக்கில் விவரிக்கும் ஒரு பாடத்திட்டத்தைக்கூட பள்ளி, கல்லூரி என எந்த நிலையிலும் நம்மால் உருவாக்கிவிட முடியவில்லை. பாடத்திட்டம் இருக்கட்டும் ஒரு பாடத்தைக்கூட எழுதிச் சேர்க்கத் துப்பில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியாவின் எந்த மாநிலத்திலும்தான். இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 09 – 2023)