TNPSC Thervupettagam

ஒலிம்பிக்: ஒரு சிலிர்ப்புணர்வு!

July 26 , 2024 7 hrs 0 min 4 0
  • ஒலிம்​பிக் - விளையாட்டின் மீது தீராத ஆர்வம்​ கொண்ட​வர்​களின் பெருங்​கனவு. பண்டைய கிரேக்கம்​ தந்த இந்த விளையாட்டுத் திருவிழாவை, நவீனக் காலத்​தின் அடையாளமாக உருமாற்ற நினைத்​தார் ஃபிரெஞ்​சுக் கல்வியாளர் பியர் தெ கூபர்​டின். உலகில் அதிக​மானோரால் பார்க்​கப்​படு​பவை​யாகக் கால்பந்து, டென்னிஸ், கிரிக்​கெட் போட்டிகள் இருக்​கலாம்.
  • ஆனால், இ்ந்தப்​ போட்டிகளைவிட அதிகமாக எதிர்​பார்க்​கப்​படுவது ஒலிம்​பிக். காரணம், அதன் தனித்​தன்​மை. ஒருபுறம் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்​கெட் போட்டிகள், புரோ கபடி போன்ற தனியார் விளையாட்டுப் போட்டிகள் திட்ட​மிட்டுப் பரபரப்பை அதிகரிக்​கின்றன, மக்களின் பொழுதுபோக்கு உணர்வைத் தங்களுக்கான மூலதனமாக மாற்றிக்​கொள்​கின்றன.
  • இதனால் விளையாட்டின் அடிப்படை அம்சங்கள்​ பல அடிபட்டுப்​போகின்றன. மற்றொருபுறம் விளையாட்டுகளைத் துல்லிய​மாக்​கவும், விதிமுறைகளைத் திட்ட​வட்ட​மாகக் கடைப்​பிடிக்​கவும் தொழில்​நுட்​பம், செயற்கை நுண்ணறிவு போன்ற தலையீடுகள் அதிகரித்​துக்​கொண்டே வருகின்றன.
  • இவையெல்​லாம் இருந்​தா​லும்கூட, விளையாட்டுப் போட்டிகளில் மனிதர்​களின் நேரடிப் பங்கேற்பு, யோசனை, புதிய உத்தி அந்த விளையாட்டுக்​குப் புதிய பரிமாணத்தை வழங்கலாம், சுவாரசி​யத்​தைக் கூட்டலாம், பரபரப்பை அதிகரிக்​கலாம். மனித உடல், ஆரோக்​கியமான பொழுதுபோக்​குத் திறன்​களின் உச்ச வெளிப்​பாடுதான் ஒலிம்​பிக் போட்டிகள். அப்படி இருக்க வேண்டு​மென்​றுதான் கூபர்​டின் உள்ளிட்ட முன்னோடிகள் அதை நிறுவியபோது எதிர்பார்த்தார்கள்.

கற்பிதம் தகர்ப்பு:

  • 19ஆம் நூற்றாண்​டின் இறுதி​யிலேயே ஒலிம்​பிக் போட்டி தொடங்கிவிட்டது. 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்​பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்றிருந்​தா​லும்கூட, 1936 பெர்லின் ஒலிம்​பிக் போட்டியைப் பிரம்​மாண்​டமாக நடத்தி, உலகுக்​குத் தங்களைப் பற்றி வெளிச்சம்​ போட்டுக் காட்ட நினைத்தது, ஜெர்மனியை அப்போது ஆண்ட ஹிட்லரின் நாஸி கட்சி. அந்தப்​ போட்டிகள்​தான் முதன்​முதலில் தொலைக்​காட்​சி​யிலும் பரவலாக வானொலியிலும் ஒலிபரப்​பப்​பட்டன.
  • நாஸி கட்சிக் கொள்கைப்படி ஆரியர்​கள்​தான் அனைத்​திலும் உச்சத்​தில் இருக்க வேண்டும் என ஜெர்மன்​ சர்வாதிகாரி ஹிட்லர்​ எதிர்​பார்த்​த​போது, தன் விளையாட்டுத் திறமையால் அந்தக்​ கற்பிதத்தை உடைத்​தார் ஆப்ரிக்க அமெரிக்​கரான ஜெஸி ஓவன்ஸ். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகிய நான்கிலும் தங்கப்​ பதக்கம்​ வென்று ஜெஸி ஓவன்ஸ் சாதித்தார்.
  • இவ்வளவுக்​கும் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பதற்றமாக இருந்த ஜெஸி ஓவன்ஸை நிதானப்​படுத்​தி​யவர்​ ஜெர்மானியரான லஸ் லாங். எப்படி​யாவது பதக்கத்​தைத் தனதாக்​கிக்​கொள்ள வேண்டும் என்று எண்ணுவதைவிட, விளையாட்டு வெற்றி பெற வேண்டும் என நினைக்​கும் லஸ் லாங் போன்ற ஆளுமைகள்​ பதக்கம்​ பெறாமலே மனங்களை வென்று​விடு​கிறார்கள்.

நவீனக் காலத்​தில்...

  • ஜெஸி ஓவன்ஸின் சாதனையைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழித்து, 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்​பிக்​கில் அமெரிக்​கா​வின் கார்ல் லூயிஸ் சமன்செய்​தார். 2008 பெய்ஜிங் ஒலிம்​பிக்​கில் ஜமைக்​கா​வின் உசைன் போல்ட் 9.69 விநாடிகளில் 100 மீ. தொலைவை ஒரு சிவிங்​கிப்​புலியைப் போலச் சடாரெனக் கடந்த​போது, ஓடுதளங்கள்​ தீப்பிடிக்காத குறைதான். அதே ஒலிம்​பிக்​கில் 200 மீ. ஓட்டம், 400 மீ. தொடர் ஓட்டத்​திலும் அவர் சாதனை படைத்​தார் என்றால் சும்மாவா? கால்பந்து, டென்னிஸ் வீரர்​/வீராங்​க​னைகளுக்கு இணையான புகழை ஒரே நாளில் அவர் அறுவடை செய்தார்.
  • பெண்களும் ஒலிம்​பிக் தருணங்​களுக்கு ஒளியேற்றி​யிருக்​கிறார்​கள். 1976 மாண்ட்ரியல் ஒலிம்​பிக்​கில் ருமேனியாவின் நாடியா காமென்சி ஜிம்​னாஸ்டிக்​ஸில் 10-க்கு 10 எடுத்​த​போது, அன்றைக்கு இருந்த மின்னணுக் காட்சிப்​பல​கைகளால் அதைக் காட்ட முடிய​வில்லை.
  • காரணம் 9 வரைதான் அந்தப்​ பலகைகளில் இடம்பெறச் சாத்தியம்​ இருந்தது. 1988 சியோல் ஒலிம்​பிக்​கில் அமெரிக்​கா​வின் ஃபிளாரன்ஸ் ஃகிரிபித் ஜாய்னர்​ 200 மீ. ஓட்டப் போட்டி​யிலும் அதற்கு முன்னதாக ஒலிம்​பிக் தேர்வுக்கான 100 மீ. ஓட்டத்​திலும் உலக சாதனை படைத்​தார். இன்றுவரை அந்தச்​ சாதனைகள் முறியடிக்​கப்​பட​வில்லை.
  • இந்தி​யர்​களும் பல மாயாஜாலத் தருணங்​களைத் தந்து சிலிர்ப்படைய வைத்திருக்​கிறார்​கள். ஒரேயொரு வித்தி​யாசம், அவர்களால் பதக்கம்​ வெல்ல முடிய​வில்லை என்பதே. ‘பறக்​கும் சீக்கியர்’ மில்கா சிங் 1960 ரோம் ஒலிம்​பிக்​கில் 400 மீ. ஓட்டத்​தில் 0.1 விநாடி​யில் வெண்கலப் பதக்கத்​தைத் தவறவிட்டார்.
  • இந்திய ஓட்டப்​பந்தய வீரர்​களைப் பொறுத்தவரை அவருக்​குப் பிறகு வேறுயாரும் இந்த நிலையைக்​கூடத் தொட்டதில்லை. அதேபோலத்​தான் பி.டி.உஷா விஷயத்​திலும் நடந்தது. 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்​பிக்​கில் 400 மீ. தடையோட்டப் போட்டி​யில் 0.01 விநாடி​யில் வெண்கலப் பதக்கத்தை அவர் தவறவிட்டார்.

ஒத்தி​கையற்ற நாடகம்:

  • 2020 டோக்கியோ ஒலிம்​பிக் போட்டிகளின் உயரம் தாண்டுதலில் கத்தா​ரின் மாதஸ் இஸ்ஸா பர்ஷிம், இத்தாலியின் ஜமர்கோ தம்பேரி இருவரும் ஒரே உயரத்​தைத் தாண்டி​யிருந்​தனர். கூடுதல் உயரத்​தைத் தாண்டி ஒருவர்​ மட்டும் தங்கப்​ பதக்கத்தை வென்றிருக்க முடியும். ஆனால், அதற்கு மாறாகத் தங்கப்​ பதக்கத்தை இருவரும் பகிர்ந்து​கொண்டு ஜஸ் லாங்-ஜெஸி ஓவன்ஸ் வெளிப்​படுத்திய உயர்ந்த மனிதப் பண்பை அடுத்த கட்டத்​துக்கு நகர்த்​தினார்​கள்.
  • இப்படி நம் காலத்​துக்​கென்று சிரிப்பு, அழுகை, உணர்வுவயப்​படுதல், சோகம், கொண்டாட்டம் போன்ற பல்வேறு உணர்வுக் கலவை​களும் அசைபோட்டு மகிழ்​வதற்கான தருணங்​களும் தேவைப்​படு​கின்றன. சுருக்​கமாக ஒத்தி​கை​யில்​லாமல் ஒரு நாடகம் நடக்க வேண்டும். இதுபோன்ற சிலிர்ப்​புணர்வை ஏற்படுத்​தும் மாயாஜாலத் தருணங்கள்​ இந்த ஒலிம்​பிக்​கில் வாய்க்​குமா?
  • நவீனத்​துக்​கும் புதுமைக்​கும் வரலாற்றில் பெயர்பெற்ற பாரிஸில் நடைபெறும் இந்தப்​ போட்டி, அதற்கு உத்தர​வாதம் அளிக்​கும் என்றே தோன்றுகிறது. வழக்கத்​துக்கு மாறாக இந்த ஒலிம்​பிக்​குக்கான தயாரிப்பு, ஏற்​பாடுகளில் நிறைய மாற்றம்​ நிகழ்ந்துள்ளது ஒரு காரணம். மட்டுமல்​லாமல், கோவிட் தொற்​றுக்​குப் பிறகு அச்சம்​ இல்​லாமல் நடை​பெறும் போட்டி என்​ப​தா​லும் மயிர்க்​கூச்​செறியும் ஒலிம்​பிக் தருணங்​களுக்காக நம்​பிக்​கையுடன் காத்​திருப்​போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்