- ‘ஒலிம்பிக்ஸும் பார்க்கலாம், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகக் கொண்டாடப் படும் பாரிஸ் நகரையும் பார்க்கலாம்’ என்கிற இரட்டைக் குறிக்கோளுடன் உலகின் பல பகுதிகளிலிருந்தும் பாரிஸ் வந்திருப்போர் எண்ணிக்கை அதிகம்.
- பாரிஸில் இப்போது இருப்பது சுமார் ஒன்றரைக் கோடி பயணிகள் என்கிறார்கள். ஆனால், மகாமகத்தையும், அத்திவரதரையும், கும்பமேளாவையும் பார்த்த நமக்கு, பாரிஸ் அப்படி ஒன்றும் ததும்பி வழிவதாகத் தெரியவில்லை. இதற்கான சில காரணங்கள் பின்னர் தெரியவந்தன.
- ஈஃபிள் டவர் பகுதியில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது உண்மைதான். அதற்குக் காரணம், ஒலிம்பிக் நடைபெறும் நாள்களில் தினமும் மாலை வேளையில் அந்தப் பகுதியில் உள்ள சாம்பியன்ஸ் பூங்காவில் பார்வையாளர்கள் சில ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- கூடவே கலை நிகழ்ச்சிகளும். இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது. போதாக்குறைக்கு ஒவ்வோர் இரவும் 11 மணிவரை, அன்று நடைபெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளைப் பெரிய திரையில் திரையிடுகின்றனர். உற்சாகக் கூக்குரலிட்டபடி பலவிதமான ஆடைகள், விசித்திர நகைகள், விநோத பச்சைக் குத்தல்கள் என்று பலரும் தென்பட்டனர் (‘உலகின் ஃபேஷன் தலைநகரம்’). ‘ஊருக்குப் போனதும் உடுத்திய அத்தனை துணிகளையும் வெந்நீரில் ஊறப் போடுங்கள்’ என்று எச்சரித்தார் அறிமுகமான ஓர் ஐரோப்பிய மருத்துவர். பாரிஸில் மூட்டைப் பூச்சிகள் சாம்ராஜ்யம் நடத்த வாய்ப்பு உண்டாம்.
- ‘சமீபத்தில்தான் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியைச் சமாளித்து, பெருமூச்சுவிட்டது பாரிஸ் நகரம். உடனே ஒலிம்பிக்கை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது’ என்று கூறிக்கொண்டிருந்தார் ஒருவர்.
- அவர் குறிப்பிட்டது உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி, பாடலாசிரியரான டெய்லர் ஸ்விஃப்ட் என்பவரின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி. இவர் பல கிராமி விருதுகள் பெற்றவர். ஒலிம்பிக்கைத் தொடர்ந்து பாராலிம்பிக்கும் பாரிஸில் நடக்க இருக்கிறது.
- பொதுவாகப் போக்குவரத்து வசதிகள் அவ்வளவு சரியில்லை என்று பெயரெடுத்த நகரம் பாரிஸ். ஒலிம்பிக்கிற்காகப் பல சாலைகளை அடைத்துவிட்டார்கள். பேருந்துகள் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன. 'உச்சகட்ட அநியாயம் என்பது மெட்ரோ ரயில் பயணத்துக்கான கட்டணத்தை அதிகப்படுத்தியதுதான்’ என்று ஒருவர் சொன்னார். கூடவே வழக்கமாக மிக சுமாராகக் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த ஒலிம்பிக் காலக்கட்டத்தில் சுத்தமாகக் காட்சியளிப்பதையும் ஒப்புக்கொண்டார்.
- தவிர ஒலிம்பிக்கில் இலவசமாகப் பணிபுரிய பல தன்னார்வலர்கள் முன்வந்திருக்கிறார்கள். பல நாடுகளும் தங்களது ‘செக்யூரிட்டி’ ஆள்களை கட்டணமின்றிச் செயல்பட அனுப்பியுள்ளன. பாரிஸ் நகரவாசிகளில் கணிசமானவர்கள் தங்கள் வீட்டை விட்டுப் புறநகர்ப் பகுதிகளுக்குக் குடும்பத்துடன் சென்றுவிட்டார்கள்.
- ஒலிம்பிக் காலத்தில் கடும் நெரிசலில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஒரு காரணம். தவிர, அந்தக் காலக்கட்டத்தில் தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டால் எக்கச்சக்கமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்பது இன்னொரு காரணம்.
- ஹோட்டல்களின் வாடகையோடு ஒப்பிட்டால் இது கொஞ்சம் பரவாயில்லை என்பதாலும் நாமே சமைத்துச் சாப்பிடும் வசதியும் உண்டு என்பதாலும் வீடுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளப் பலரும் முன்வருகிறார்கள். நாங்களும் அப்படித்தான் செய்தோம். பல சாலைகளில் கார்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் சைக்கிள்களை அதிகம் காண முடிகிறது.
- வாடகை சைக்கிள்கள் பெற முடியும். எல்லாவற்றையும்விடச் சிறந்த போக்குவரத்து, கால்கள்தான் என்று தீர்மானித்து, மாரத்தான் நடை நடந்து, விளையாட்டு அரங்கங்களை அடைபவர்களும் ஏராளம். சீன் நதியில் மின்சாரப் படகுகளில் இலவசப் பயண வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் நாள்களில் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து வந்து சேரும் பயணிகளுக்கு 10% கட்டணக் கழிவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- ‘டிராவல் இன்சூரன்ஸ் செய்துகொண்டீர்களா?’ என்று ஆறேழு பேர் நம்மைக் கேட்டுவிட்டார்கள். ‘கவனமாக இருங்கள். பிக்பாக்கெட்கள் எண்ணிக்கை அதிகம். சாலைகளில் சாகசக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கும்போது உஷாராக இருங்கள்’ என்று ஒருவர் எச்சரித்தார்.
- முன்பின் அறிமுகமாகாத ஒருவர் திடீரென்று உங்கள் கையில் ஒரு கயிறைக் கட்டுவார். பிறகு தனது 'நிறுவன’த்துக்கு நன்கொடை கேட்டு வற்புறுத்துவார். அவர் கட்டிய கயிற்றையும் பெற்றுக் கொள்ள மாட்டர். பலரும் வேறு வழியில்லாமல் ஏதாவது தொகையை அளிக்க வேண்டி இருக்கும். இந்தப் பகல் கொள்ளையை ‘ஃப்ரெண்ட்ஷிப் ப்ரேஸ்லெட் ஸ்காம்’ என்கிறார்கள்!
- ‘பேசாமல் நம் நாட்டில் உள்ள வேறு ஏதாவது நகரை ஒலிம்பிக்கிற்காகத் தேர்ந்தெடுத்திருக்கலாம். வேற பல நாடுகள் அப்படிச் செய்ததுண்டு’ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார் ஓர் உள்ளூர்வாசி. ஆனால், விளையாட்டு அரங்கங்கள் உள்பட பல உள்கட்டமைப்பு வசதிகள் (ஏற்கெனவே இரண்டு முறை ஒலிம்பிக் நடைபெற்ற) பாரிஸ் நகரில் தயாராக உள்ளன.
- வேறு நகரில் வைத்துக்கொண்டால் கோடிக்கணக்கில் செலவாகும். ‘ஏற்கெனவே உள்ள சுமை போதாதென்று ஒலிம்பிக்கிற்காக ஒரு வரியை விதித்திருக்கிறார்கள். நமக்கு இது அவசியமா?’ என்று உறுமிக்கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர்.
- ‘நகரில் எங்கு பார்த்தாலும் சீருடை அணிந்தவர்கள் (காவல், தீயணைப்புத் துறையினர் போன்றவர்கள்). சுதந்திரமாகத் திரிய முடியாமல் எக்கச்சக்க கட்டுப்பாடு’ என்று அலுத்துக்கொண்ட டீனேஜ் பேத்தியிடம் ஒரு பெரியவர் புன்னகையுடன் ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டதைக் கேட்க முடிந்தது.
- 'ரொம்ப அலுத்துக்காதே. 1900இல் இதே நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு நீடித்தது. பிறகுதான் 16 நாள்களுக்கு மேல் இது நீளக் கூடாது என்கிற பொதுவான விதியைக் கொண்டுவந்தார்கள்’ என்றார். விமர்சனங்கள் நீண்டாலும், விளையாட்டு அரங்கங்களில் எழும் ஆரவாரக் கூக்குரலில் அவை வலு இழக்கின்றன என்பதே ஒலிம்பிக்கின் பலம்!
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2024)