- இந்தியாவைப் பொறுத்தவரை பாய்மரப் படகுப் போட்டி என்பதெல்லாம் ஓர் அந்நியமான விளையாட்டு. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த விளையாட்டில் கோலோச்சுவார்கள் என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. இந்த எண்ணத்தை இந்திய வீரர், வீராங்கனைகள் தகர்த்து வருகின்றனர்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 இந்திய வீரர், வீராங்கனைகள் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்று அசத்தினர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்ட நிலையில் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனையான தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன் தகுதி பெற்று சாதித்துள்ளார்.
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நேத்ரா தகுதி பெற்றிருப்பதன் மூலம் தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய படகுப் பந்தய வீராங்கனையாகவும் ஆகியிருக்கிறார்.
முதல் பெண்:
- இந்தியாவில் பெரிய அளவில் பரிச்சயம் இல்லாத விளையாட்டான பாய்மரப் படகுப் போட்டியில் முன்பு ஆண்கள் மட்டுமே தலைகாட்டி வந்தனர். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில்தான் முதல் இந்தியப் பெண்ணாக, பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்று கவனிக்க வைத்தார் நேத்ரா.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேத்ரா தகுதி பெறுவாரா என்கிற கேள்வி எல்லாருக்கும் இருந்தது. தற்போது பிரான்ஸ் நாட்டில் ஏர்ஸ் பகுதியில் நடைபெற்ற இறுதித் தகுதிச் சுற்றுப் போட்டியில் சிறப்பாக படகை செலுத்தியதன் மூலம், நேத்ராவின் பாரிஸ் ஒலிம்பிக் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
- ‘எமெர்ஜிங் நேஷன்ஸ் புரோகிராம்’ எனப்படும் பாய்மரப் படகுப் போட்டியில் வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற தொடரில், ‘லேசர் ரேடியல்’ பெண்கள் பிரிவில் 67 புள்ளிகள் பெற்று முதல் ஐந்து இடங்களில் நிறைவு செய்துள்ளார் நேத்ரா. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்தச் சூழலில் ஒலிம்பிக் போட்டிக்குத் தன்னை எப்படித் தயார்ப்படுத்திக் கொள்ளப்போகிறார் நேத்ரா?
- “மற்ற ஒலிம்பிக் போட்டிகளைப் போல பாய்மரப் படகுப் போட்டி பாரிஸில் நடைபெறாது. பிரான்ஸ் கடற்கரை நகரான மார்சேல்ஸ் மெரினா பகுதியில்தான் இப்போட்டி நடைபெற உள்ளது. எனவே, அடுத்த இரண்டு மாதங்களுக்கு முதலில் மார்சேல்ஸ் பகுதியிலும், பிறகு ஜெர்மனியிலும், மீண்டும் மார்சேல்ஸ் பகுதியிலும் என்னுடைய பயிற்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுத் திரும்பியது எனக்கு மிகப் பெரிய அனுபவத்தைக் கொடுத்தது. அந்த ஒலிம்பிக் தொடருக்குப் போதுமான அளவு நான் தயாராகவில்லை. இந்த ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை போட்டி நடைபெற இருக்கும் இடம் எனக்கு நன்கு பரிச்சயமானது. ஒலிம்பிக்கின் பிரம்மாண்டம், போட்டி நடைமுறை, ஆட்ட நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெரிந்து வைத்துள்ளதால் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் களமிறங்க உள்ளேன்” என்கிறார் நேத்ரா.
என்ன தேவை?
- மற்ற போட்டிகளிலிருந்து பாய்மரப் படகுப் போட்டி வித்தியாசமானது. காற்றின் திசையைக் கணித்து அதற்குத் தகுந்தாற்போல இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டிய சவால் இந்த விளையாட்டில் உள்ளது. இதையெல்லாம் தாண்டி பாய்மரப் படகுப் போட்டியில் சாதிக்க வேறு என்னென்ன தேவை?
- “பாய்மரப் படகுப் போட்டியைப் பொறுத்தவரை மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவது வேகம். ஒரு பிரிவின் கீழ் பல சுற்றுப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொன்றும் 1 மணி நேரம் வரை நீடிக்கலாம். இந்தப் போட்டிகளில் வேகமாக இருக்க வேண்டியது அவசியம்.
- குறுகிய நேரத்தில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெற்றியை நெருங்க முடியும். அடுத்து, வானிலைக்கு ஏற்றவாறு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். காற்றின் சுழற்சிக்கு ஏற்ப கவனமாக ஆட வேண்டும். மூன்றாவதாக, இந்தப் புறச் சூழலுக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
- போட்டியின்போது சிறிய தவறு செய்தால்கூடப் பின்னடைவு ஏற்பட்டுவிடும். இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது சரியான முடிவுகளை மட்டுமே எடுக்க முயல வேண்டும். மற்ற போட்டியாளர்களைவிட ஒரு படி முன்னே இருக்க வேண்டும்” என்கிறார் நேத்ரா.
கடலோடி ஆகலாம்:
- இந்தியாவைப் பொறுத்தவரை பாய்மரப் படகுப் போட்டி பற்றி பெரிய பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது. அப்படியே பயிற்சிக்குச் செல்ல வேண்டுமென்றால், நிறைய பணம் செலவு செய்ய வேண்டி வரும். இதுபோன்ற காரணிகளால் பாய்மரப் படகுப் போட்டிகளில் இந்தியர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளும் நேத்ரா, “பாய்மரப் படகு விளையாட்டை விரும்பிக் கற்க முன்வர வேண்டும்” என்கிறார்.
- “பாய்மரப் படகுப் போட்டிக்கு அதிக செலவாகும் என்பது உண்மைதான். ஆனால், இந்தியாவில் மும்பை, போபால், சென்னை போன்ற நகரங்களில் பாய்மரப் படகு விளையாட்டைக் கற்றுக் கொள்வதற்கான அமைப்புகளும் கிளப்புகளும் இருக்கின்றன. விளையாட்டைக் கற்றுக்கொண்டு ஆர்வம் இருப்பவர்கள் தொடர்ந்து இதில் இயங்க விரும்பினால், இந்த அமைப்புகளின் உதவியை நாடலாம்.
- மேற்கத்திய நாடுகளில் பாய்மரப் படகு விளையாட்டை ஏராளமானோர் விரும்பி கற்கின்றனர். ஆனால், நீண்ட கடற்கரையையும், கடலோர நகரங்களையும் கொண்ட இந்தியாவில் இந்த விளையாட்டைப் பற்றிய விழிப்புணர்வும், அதற்கான முன்னேற்பாடுகளும் சற்று குறைவுதான். வருங்காலத்தில், இந்த நிலை மாறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் நேத்ரா.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 05 – 2024)