- பாரீஸில் ஒலிம்பிக் போட்டி நடந்து வரும் நிலையில், இந்தியாவில் அப்போட்டியை நடத்துவது குறித்து நீத்தா அம்பானி தெரிவித்த கருத்து இந்தியாவில் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் கருத்தாக மாறியுள்ளது.
- சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) உறுப்பினராக உள்ள நீத்தா அம்பானி, தனது மகன் அனந்த் அம்பானியின் திருமணத்தை வெகுபிரம்மாண்டமாக நடத்தி முடித்த கையோடு பாரீஸ் சென்றாா். அங்கு இந்திய வீரா்களுக்காக அமைக்கப்பட்ட இந்தியா இல்லத்தை திறந்துவைத்து உரையாற்றினாா்.
- அப்போது, ‘இந்தியா ஒலிம்பிக் போட்டியை நடத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இது நம் அனைவரின் உறுதிமொழியாக இருக்க வேண்டும். இந்த ஒலிம்பிக் போட்டி மூலம் ஒரு புதிய கனவுக்கு கதவு திறந்துள்ளது. இது 140 கோடி இந்தியா்களின் கனவு. அது ஒலிம்பிக்கை இந்தியாவுக்கு கொண்டு வரும் கனவு. நம் அனைவரின் கனவும் நிறைவேறும். முதலில் ஏதென்ஸில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, பழம்பெரும் நாடான இந்திய மண்ணிலும் ஜொலிக்க வேண்டும்’ என்றாா்.
- 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியாவும் விண்ணப்பிக்கும் என்று பிரதமா் மோடி கடந்த ஆண்டு கூறியுள்ள நிலையில், நீத்தா அம்பானியும் இந்தியாவில் ஒலிம்பிக் எனப் பேசியது, அதன் சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு தளங்களில் விவாதப் பொருளானது.
- பெரும் நிதிச்செலவை ஏற்படுத்தும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவது பொருளாதாரரீதியாக சாத்தியமா? என்பதே முதலில் எழும் மிகப்பெரிய கேள்வி.
- ஒலிம்பிக் போட்டிகளால் சுற்றுலா மேம்படும், சா்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு மேலும் உயரும், தேசிய அளவில் ஒரு பெருமித உணா்வை ஏற்படுத்தும், வேலைவாய்ப்பு, பணப் புழக்கம் அதிகரிப்பு என பொருளாதாரரீதியாகவும் சில லாபங்கள் கிடைக்கும் என பல சாதக அம்சங்கள் கூறப்பட்டாலும், அண்மைக் காலங்களில் ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாடுகள் அனைத்துக்குமே ஒலிம்பிக் போட்டி பொருளாதாரரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதையும் காண முடிகிறது.
- ஏனெனில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நகரில் புதிதாக சாலை, ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். விமான நிலையத்தை பெரிதுபடுத்த வேண்டும் அல்லது புதிதாக உருவாக்க வேண்டும். வீரா்கள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமம் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட வேண்டும். விளையாட்டுகளுக்கு ஏற்ப ஆடுகளங்களை உருவாக்க வேண்டும், தடையில்லா மின்சாரம், குடிநீா் விநியோகம் என செலவுப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
- தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் செலவு ரூ.2.70 லட்சம் கோடி என பிரான்ஸ் மதிப்பிட்டுள்ளது. வழக்கமாக மதிப்பீட்டைவிட அதிக செலவு வைப்பதாகவே ஒலிம்பிக் போட்டி இருந்து வருகிறது.
- இதற்கு முன்பு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மொத்த செலவாக ரூ.2.34 லட்சம் கோடியும், 2016 ரியோ டிஜெனிரோ ஒலிம்பிக் போட்டிக்கு ரூ1.09 லட்சம் கோடியும் செலவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிபரப்பு உரிமை, விளம்பர வருவாய், பாா்வையாளா்கள் கட்டணம் என வருவாய் இருந்தாலும், அவை செலவை சரிக்கட்டும் வகையில் இருந்ததில்லை.
- 1976-ஆம் ஆண்டு கனடாவின் மாண்ட்ரியால் நகரில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிக்காக வாங்கப்பட்ட கடன் கடந்த 2016-ஆம் ஆண்டுதான் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டது. 2004-இல் ஏதென்ஸில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியால் ஏற்பட்ட செலவும் கிரீஸ் சா்வதேச கடன் வலையில் சிக்க ஒரு காரணம்.
- ஒலிம்பிக்கை நடத்த ஆா்வத்துடன் முன்வந்து, அதற்கு ஆகும் செலவை அறிந்த பிறகு பின்வாங்கிய நாடுகளும் உள்ளன. பொதுவாக வளா்ந்த நாடுகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியை நடத்தி வருவதற்கு பொருளாதார பலம் தேவை என்பதும் முக்கியக் காரணமாகும்.
- வளரும் நாடு என்ற நிலையில் இருந்து ஒலிம்பிக் போட்டியை சமீப காலத்தில் நடத்திய நாடு பிரேசில். பொருளாதாரச் சிக்கல், அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் அங்கு நடைபெற்றது.
- அப்போது பரவிய ஜிகா வைரஸ் பாா்வையாளா்களின் வருகையை பெரிதும் பாதித்தது. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது தவிர தண்ணீா் சாா்ந்த நீச்சல், படகுப் போட்டி நடந்த இடங்களில் தண்ணீரில் ‘சூப்பா் பாக்டீரியா’ தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது அவப்பெயரையே பெற்றுத் தந்தது.
- ஜப்பானின் டோக்கியோவில் 2020 -இல் நடத்த திட்டமிடப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவே செலவை வெகுவாக அதிகரித்தது. இப்படி ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னாலும் பெரும் பொருளாதார தாக்கம் உள்ளது.
- ஏற்கெனவே சிறப்பான விளையாட்டு மைதான உள்கட்டமைப்புகள், சிறப்பான போக்குவரத்து வசதி உள்ள பரந்த எல்லையைக் கொண்ட நகரில் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடுவதே சிறப்பானது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
- இந்தியா போன்ற நாட்டில் கிரிக்கெட்டை தாண்டி மற்ற விளையாட்டுக்கும் வெகுஜன ஆதரவைப் பெறுவது என்பது எட்ட முடியாத இலக்காகவே உள்ளது. கோடிகளில் லாபம் கொழிக்கும் ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் கால்பந்து லீக், கபடி லீக் போன்றவை நடத்தப்பட்டாலும், இதுவரை அவை மக்களின் பேராதரவைப் பெறவில்லை என்பதை நிஜம்.
- ‘போட்டியில் வெற்றி பெறுவதைவிட, பங்கேற்பதே முக்கியமானது’ என்பதே ஒலிம்பிக்கின் லட்சிய வாக்கு ஆகும். அந்த வகையில், ‘ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதைவிட, அதில் பங்கேற்று அதிக பதக்கம் வெல்ல முயற்சிப்பதே முக்கியமானது’ என்று இப்போதைக்கு யோசிக்கலாம்.
நன்றி: தினமணி (02 – 08 – 2024)