- சமீப காலங்களில் பரவலாக பல சமூக இழி செயல்கள் நிறைய நடப்பதை அறிகிறோம். மனிதனுக்குச் சொல்லப்பட்டுள்ள பல்வேறு வாழ்வியல் நெறிகள் நமக்கு நிறையக் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை உண்மையாகப் பின்பற்ற நினைப்பவர்கள் எத்தனை பேர் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. பல சமுதாயச் சிக்கல்கள் தோன்றுவதும் குறைவதும் இந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறது.
நல்ல விஷயங்களைக் கற்றல் என்பது பிறர் சொல்லக் கேட்டோ அல்லது பிறரிடம் பார்த்தோகூட வரலாம். கல்விக் கூடங்களுக்குச் செல்லாமலே, பல நல்ல வாழ்க்கை நெறிகளைக் கற்றுத் தந்தவர்களும் மகான்கள் பலரும் நம் நாட்டில் வாழ்ந்துள்ளனர். அவர் பெரிய ஆள், அவர் நிறைய படித்தவர் என்றெல்லாம் பேசக் கேள்விப்படுகிறோம்; ஆனால், அவர் ஒழுக்கம் மிக்கவர், அவர் பண்பாளர், கண்ணியம் மிக்கவர் என்று குறிப்பிட்டுப் பேசுவதோ அல்லது அறிமுகப்படுத்துவதோ இந்தக் காலத்தில் மிகக் குறைந்துவிட்டது.
பண்புகள்
- இக்காலத்தில் நல்ல ஒழுக்கம், நேர்மை போன்ற நல்ல பண்புகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லையோ எனத் தோன்றுகிறது. ஆனால், இன்றும் முறையான வாழ்வியல் நெறிகளில் சற்றும் வழுவாது வாழ்ந்து வருபவர்கள் பெரும்பாலும் வெளியுலகுக்குத் தெரியாமல்கூட இருக்கின்றனர்; அத்தகையோரின் எண்ணிக்கை அந்தக் காலத்தில் இருந்ததைவிட இப்போது குறைந்துவிட்டது.
ஒருவர் கல்விக் கூடங்களில் வாழ்க்கைப் பாடங்களை படிப்பது என்பது வேறு; படித்தவற்றைக் கற்பது என்பது வேறு. படித்த நல்ல விஷயங்களை வாழ்க்கையில் பின்பற்றி அவரவர் பங்களிப்பாக சமுதாய முன்னேற்றத்துக்கு என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அவற்றைச் சரியாகச் செய்தாலே கற்றவர் ஆவர்.
- படித்தவற்றை தேர்வுகளில் கொட்டிவிட்டு, பிறகு படித்த நல்ல ஒழுக்கங்களை வாழ்வில் பின்பற்றாமல் காற்றில் பறக்கவிட்டு மனம் போல வாழ்வதற்குத்தானா கல்வி? இதைவிட இந்தச் சமுதாயத்துக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.
கல்விக்காக பெற்றோரும் அரசும் செலவிடும் பணத்தைப் பயன்படுத்திவிட்டு, முறையற்ற வாழ்க்கை வாழ்தல் மிகப் பெரிய பாவமாகும்.
- அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதை உணர்ந்து தீயவை நீக்கி வாழ்வது கற்றலின் பயனாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும், நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், சுயநலமாய் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக இருக்கிறது. கல்வியின் நோக்கம் வெறும் படித்தவர்களை உருவாக்குவது மட்டுமல்ல.
வழிகாட்டி
- மனிதகுலத்துக்கு நல்லவை எவை, தீயவை எவை எனச் சான்றோர் பலரும் தேர்ந்தெடுத்து வழிகாட்டிச் சென்றுள்ளனர். நன்றும் தீதும் நமக்குத் தெளிவுபடுத்திய பின்பும் தீயவற்றில் வாழ்வைத் தொலைத்து பிற்காலத்தில் வருந்துவதில் பயன் இல்லை. நாம் கற்று அதன்வழி செயல்பட பாடல்கள், நீதிக் கதைகள், பாடங்கள், புராணங்கள், நாடகங்கள், வாய்மொழிச் சொற்பொழிவுகள் எனப் பல்வேறு விதத்திலும் அனைத்து நல்ல விஷயங்களும் கூறப்பட்டுள்ளன. அவை கசப்பதுபோலத் தோன்றினாலும் பிற்காலத்தில் நிரந்தர இன்பம் தரும். தீயவை வாழ்வை அழித்துவிடும்.
- படிப்பவற்றைத் தெளிவாகக் கற்று பின் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்தலே கல்வியைக் கற்றவருக்கு அழகு. படித்தவர்களே இப்படிச் செய்யலாமா? என்று சொல்லக் கேள்விப்படுகிறோம்.
- இதிலிருந்து படித்தவர்களிடம் அடிப்படைப் பண்புகளை இந்தச் சமுதாயம் எதிர்பார்க்கிறது என்பது தெளிவாகிறது. இதனால்தான், கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக என்றார் திருவள்ளுவர்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன் கொடுமை, சுயநலம், பொறாமை, பணம் குவிக்கும் பேராசை, லஞ்சம் பெறுதல், பிறரை ஏமாற்றிப் பணம் சம்பாதித்தல், கடமை தவறுதல் போன்ற இழி செயல்கள் ஏன் பெருகிவிட்டன? மனிதனுக்கே மனிதன் எதிரியாய் செயல்படும் மனோபாவம் ஏன் வந்தது? மனிதனே மனிதனைக் கண்டு அஞ்சி வாழும் நிலை சரியானதா?
- பொதுவாக பணத்துக்கும் பதவிக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஒருவர், நல்ல பண்புகளுக்குக் கொடுப்பதில்லை. நாம் எத்தனை முன்னேற்றம் அடைந்தாலும், சுய ஒழுக்கம் மிக்க மனிதர்களை வளர்க்கத் தவறினால் நம் வளர்ச்சியில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.
தன் உயிரினும் மேலாக நல்ல பண்புகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்து பலர் வாழ்ந்துள்ளனர். இதைத்தான் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்றுரைத்தார் திருவள்ளுவர்.
குற்றங்கள்
- தன் நண்பன் தவறு செய்கிறான் எனத் தெரிந்தால் அவரை நல்வழிப்படுத்த எத்தனை பேர் முயல்கின்றனர்? அப்படிச் செய்தால் இன்று நடக்கும் ஏராளமான குற்றங்கள் தடுக்கப்படும். நமக்கென்ன என்று சிலர் ஒதுங்குவதையும், ஒரு சிலர் தானும் சேர்ந்து அந்தத் தவறுகளைச் செய்வதையும் அதிகம் பார்க்கிறோம்.
- நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்தக் காலத்தில் பல வன்கொடுமைகள் நிகழ்வதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும். பிஞ்சில் வளைத்தல் எளிது. வளர்ந்த மரத்தை வளைப்பது கடினம். முதலில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களும் பெற்றோரும் நன்மக்களை உருவாக்குவதில் மிக முக்கியதுவம் பெறுகின்றனர். ஆரம்பக் கல்வியில் நம் குழந்தைகள் ரைம்ஸ் சொல்வதைவும், ஆங்கிலத்தில் அழகாகப் பேசுவதையும் பெருமையாகக் கருதுகிறோம்.
- ஆனால், அந்தப் பிஞ்சு உள்ளங்களில் நல்ல ஒழுக்கங்களை விதைக்க பெரும்பாலானோர் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை.
- எனவே, நல்ல பண்புகள், ஒழுக்கத்துக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயற்கை என்றும் தன் விதிகளின்படித்தான் செல்கிறது; ஆறறிவு படைத்த மனிதன்தான், அவ்வப்போது தன் பாதை மறந்து விலகிச் செல்கிறான்.
நன்றி: தினமணி (02-08-2019)