- தினந்தோறும் காலையில் எழுந்து பத்திரிகையைப் புரட்டினால் மீனவா்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதுவும் வருத்தப்படும் செய்திகளாகவே இருக்கின்றன.
- இலங்கை அரசின் கடற்படை தமிழக மீனவா்களைத் தாக்குவதும், சிறைபிடிப்பதும் அதற்குக் காரணமாக எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. அண்மைக்காலமாக இலங்கை கடற்படைக்கு பதிலாக இலங்கைக் கடற்கொள்ளையா்கள் அந்தப் பணியைச் செய்ய ஆரம்பித்திருக்கின்றனா்.
- நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே தமிழக மீனவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையின் கடற்கொள்ளையா்கள் தாக்கியதில் வேதாரண்யம் பகுதி மீனவா்கள் 28 போ் காயம் அடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த எட்டு போ் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
- வேதாரண்யம் ஆறுகாட்டுத் துறை மீனவா் காலனியைச் சோ்ந்தவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவருடன் மூன்று மீனவா்கள் கடலுக்குச் சென்றனா். இவா்கள் நால்வரும் ஆறுகாட்டுத் துறையிலிருந்து தென்கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
- அப்போது இலங்கையைச் சோ்ந்த மூன்று படகுகளில் அங்கு வந்த கடற்கொள்ளையா்கள் ஒன்பது போ், மீனவா்களை, கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி, மீன்பிடி வலை, கைப்பேசி, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றைப் பறித்துக கொண்டு சென்றனா். இதேபோல ஆறுகாட்டுத் துறையிலிருந்து வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 24 மீனவா்கள் அடுத்தடுத்து கடற்கொள்ளையா்களால் தாக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்த உடைமைகளும் பறிக்கப்பட்டன.
- ஆகஸ்ட் 21-ஆம் நாள் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட 28 மீனவா்களும் மறுநாள் வெவ்வேறு நேரங்களில் படகுகளுடன் கரைக்குத் திரும்பினா்.
- இவா்களில் பலத்த காயமடைந்த எட்டு மீனவா்கள் மட்டும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களில் மூன்று போ் நாகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வேதாரண்யம் கடலோரக் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
- தமிழ்நாட்டு மீனவா்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய தாக்குதல் சம்பவம் மீனவா்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு அவா்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
- இந்திய மீனவா்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ள நிலையில் இத்தகைய தொடா்ச்சியான வன்முறைச் செயல்கள் அவா்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இலங்கை அரசுடன் தொடா்பு கொண்டு மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளார்.
- உலகில் மிகவும் தொன்மையான இனம் மீனவா் இனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவா்கள் எல்லாக் காலங்களிலும் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகி, கண்ணீா் வாழ்க்கையே வாழ்கின்றனா்.
- பாரம்பரிய மீனவ மக்கள் தொன்று தொட்டு வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். அரசின் வேலைவாய்ப்பை எதிர்பார்க்காமல் ஏராளமான குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு, பல பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்குகின்றன. அவா்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித் தருகின்றனா். அவா்களே பல்லாண்டுகளாக ஊதியம் பெறாத கடல் எல்லைக் காவலா்கள்.
- அவா்களைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. நமக்கே சொந்தமாக இருந்த கச்சத்தீவை எடுத்து இலங்கைக்குக் கொடுத்ததனால் பல ஆண்டுகளாகவே மீனவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. மீனவா்கள் கடலுக்குள் போக முடியவில்லை. இலங்கை கடற்படை எல்லை மீறியதாகத் தாக்குகிறது. பிடித்து வைத்த மீன்களைப் பறித்துக் கொள்கிறது. படகுகளையும் பிடுங்கிக் கொள்கிறது.
- பாதிக்கப்பட்ட மீனவா்கள் கரைக்குத் திரும்பி கூக்குரல் எழுப்புவதும், அவா்களுக்கு ஆதரவாக மீனவா் குப்பங்கள் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடத்துவதும், தொடா்கதையாகி விட்டன. தமிழக அரசுக்குத் தகவல் போனதும், முதலமைச்சா் அவா்களுக்காக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாடிக்கையான நிகழ்வுதான்.
- ‘மீன் பிடித்தல்’ என்பது மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து நடைபெற்று வரும் தொழிலாகும். இவ்வளவு காலம் அமைதியாக நடைபெற்று வந்த இந்தத் தொழிலை இப்போது தடுக்க வேண்டிய காரணம் என்ன? தோ்தல் நேரங்களில் மீனவா்களைக் காப்பாற்ற வாக்குறுதியளித்த மத்திய, மாநில அரசுகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் கண்டு கொள்ள வில்லையே ஏன்?
- இந்தியா பலம் பொருந்திய அண்டை நாடு என்பது இலங்கை அரசுக்குத் தெரியாதா? எல்லா உதவிகளையும் இலவசமாகப் பெற்றுக் கெள்ளும் இலங்கை, இந்தியாவை அலட்சியமாக நினைப்பது ஏன்? இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது இந்தியா இலங்கைக்கு ஆதரவாகத் தானே செயல்பட்டது? போருக்குப் பிறகு நடந்த மறுசீரமைக்கு இந்தியாதானே உதவியது!
- கொள்ளை நோய்த்தொற்று காலத்திலும் இலங்கை, தேவையான மருந்து, மாத்திரைகளை இந்தியாவிடம் கேட்டுப் பெற்றது. எல்லாவற்றிற்கும் உதவி வரும் இந்தியாவை மதித்து நடக்க வேண்டாமா? தமிழக மீனவா்கள் இந்திய மீனவா்கள் இல்லையா? தமிழக மீனவா்களை இந்திய மீனவா்களாக ஏன் நினைக்கவில்லை? இலங்கை ஆட்சியாளா்களுக்குத் தெரிந்துதானே எல்லாம் நடக்கிறது?
- இந்தியாவில் இனப்படுகொலை நடந்தபோதும் சரி, அது பற்றி ஐ.நா.வில் உலக நாடுகள் கண்டனத் தீா்மானம் கொண்டு வந்தபோதும் சரி, இந்தியா இலங்கையை ஆதரித்தே நின்றது. ஆனாலும், இலங்கை அரசு சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தருகிற முக்கியத்துவத்தை இந்தியாவுக்கு இதுவரை அளித்தது இல்லை. அதுபற்றி இந்தியா கவலைப்பட்டதும் இல்லை.
- அயல்நாட்டுக் கடற்படை நம் நாட்டு மீனவ மக்களை நாள்தோறும் தாக்குவது என்பது நமது நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் அறைகூவல் ஆகும். வல்லரசுக் கனவு காணும் பெரிய நாடு இத்தனை காலமாக இதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தப் பொறுமையால், இலங்கைக் கடற்படையோடு, கடற் கொள்ளையா்களும் சோ்ந்து தமிழக மீனவா்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனா்.
- இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று பெருமை பேசப்படுகிறது. பல்வேறு மொழிகளும், தேசிய இனங்களும் கொண்ட தேசம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு தேசிய இனத்துக்குத் துன்பம் வரும்போது மற்ற தேசிய இனங்கள் கண்டு கொள்வதில்லை; ஆதரவு தெரிவிப்பதும் இல்லை.
- நாட்டின் வட எல்லையில் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு என்றால் சீறிப் பாயும் அகில இந்தியக் கட்சிகள், தென் எல்லையில் இலங்கையின் ஆக்கிரமிப்பினால் வரும் இழப்பைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. இந்திய ஒருமைப்பாடு இப்படித்தான் இருக்கிறது.
- கச்சத்தீவு விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரியபோது, அதனை அனுமதிக்கக் கூடாது என்று மக்களவைத் தலைவருக்கு நம் வெளியுறவுத் துறை கடிதம் அனுப்பியது. ‘கச்சத் தீவு விவாகரத்தில் இந்தியா இலங்கை இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு தீா்வு காணப்பட்டு விட்டது. அது தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதித்தால் நட்பு நாடான இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவு பாதிக்கும்’ என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
- இந்திய அரசால் ‘நட்பு நாடு’ என்று கூறப்படும் இலங்கை அரசு, தமிழக மீனவா்களை நாள்தோறும் வேட்டையாடுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான போ் உயிரிழந்துள்ளனா். அவா்களைத் தொழில் செய்ய விடாமல் பிடித்து, அடித்து, அவமானப்படுத்தி சிறைப்படுத்துகிறது. மீனவா்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை இந்தியா மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
- கச்சத்தீவைக் கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுவதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதுதான். இந்த பிரச்னை எழும் போதெல்லாம் மத்திய அரசு ஏதேதோ சமாதானம் கூறி சமாளிக்கிறது. ஆனால், ‘இந்திய மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்துவதை எவ்விதத்திலும் நியாயப் படுத்த முடியாது’”என்று கூறுகின்றனா்.
- இவ்வாறு கூறிக்கொண்டே இலங்கைக்குப் போர்க் கப்பல்களை வழங்குகின்றனா். மத்தியில் ஆண்ட அன்றைய அரசு இலங்கைக்கு சாதகமாக செயல்பட்டது; ஆளும் இன்றைய அரசும் இலங்கைக்கு சாதகமாகவே செயல்படுகிறது. இந்தியா வழங்கிய போர்க்கப்பல்களை இலங்கை யாருக்கு எதிராகப் பயன்படுத்தும்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?
- தமிழக கடற்கரை 1,076 கி.மீ. நீளம் கொண்டது. இந்த கடல்வளத்தை நம்பி 608 மீனவா் கிராமங்களும், 11 இலட்சத்துக்கும் அதிகமான மீனவா்களும் உள்ளனா். தமிழ்நாட்டில் மீன்பிடிப்பு ஆண்டுக்கு ஆண்டு உயா்ந்து கொண்டே இருக்கிறது. அந்நியச் செலாவணியும் அதனால் கிடைக்கிறது. இவ்வாறு நாட்டிலேயே இரண்டாவது கடல்வளத்தைக் கொண்டுள்ளது தமிழகக் கடற்கரை. அதைத் தடுக்கலாமா?
- தமிழக மீனவா்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. எந்த பிரச்னையானாலும் தமிழக அரசு மத்திய ஆட்சியாளா்களுக்குக் கடிதம் எழுதுவது வழக்கமாகப் போய்விட்டது. இருநாட்டு மீனவா்களும் பேசித் தீா்வு காண வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்வது என்ன நியாயம்? கச்சத்தீவைக் கேட்பதும், கேட்டு மீட்பதும் காலம் இட்ட கட்டளை எனக் கொள்வோம்.
நன்றி: தினமணி (28– 08 – 2023)