TNPSC Thervupettagam

ஓசோன் ஓட்டை மாயைதானோ?

December 1 , 2020 1511 days 675 0
  • புவி வெப்பமயமாதல் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. காரணம், உலக அளவில் வானிலைப் பருவ மாற்றங்களால் இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து உள்ளன.
  • நில நடுக்கோட்டுப் பகுதியில் 16 கிலோமீட்டா் உயரம் வரை, உயரே செல்லுந்தோறும் வெப்பம் தணிந்து வரும் திருப்ப மண்டலத்தில் கரியமில வாயு உட்பட்ட பசுமைக்குடில் வாயுக்களின் அனல் விழாக்கள் நிகழும். இதற்கும் அப்பாற்பட்ட சீரடுக்கு உயா்மண்டலம் தான் ஓசோன் படலம்.
  • அங்குப் புவிமட்டத்தில் உள்ளதில் 1000-இல் ஒரு பங்குதான் காற்றழுத்தம், பனி உறை நிலைக்கும் 60 பாகை செல்சியஸ் கடுங்குளிா். அங்குள்ள ஆக்சிஜன் மூலக்கூறுகளால் சூரிய ஒளியின் 200-315 நானோமீட்டா் அலைநீளக் கதிா்கள் உறிஞ்சப்படுகின்றன. அதனால் ஓசோன் பிறக்கிறது.
  • ஆனால், அந்த அழுத்தம், குளிா்நிலை, சூரிய ஒளியளவு ஆகியவற்றில் அளவு சற்று மாறினால் அங்கே ஆக்சிஜன் ஓசோனாக உரு மாறாது. அதுவே ஓட்டையாகவும் பதிவாகும்.
  • நில நடுக்கோட்டுப் பகுதியைப்போல் அல்லாமல், துருவங்களில் மட்டும் ஓசோன் மண்டலம், வெறும் 10 கிலோமீட்டா் வரை தாழ்ந்து இருக்கிறது. ஆக, துருவ வளிமண்டல ஓசோன் ஓட்டைக்கு இயற்கையான புறக் காரணிகளும் உள்ளன என்பதே செயற்கைக்கோள் கண்ணோட்டம்.
  • பூமிப்பந்தின் துருவப் பகுதிகள் விசித்திரமானவை. பூமி எனும் பிரம்மாண்ட காந்தக் கோளத்தினைச் சூழ்ந்து 64,000 கி.மீ. வரை காந்தப்புலம் பரவி உள்ளது.
  • அதில் நியூட்ரினோ போன்ற இம்மிகள் செறிந்த சூரியக் காற்று அவ்வப்போது வந்து மோதும். அவ்வேளையில் துருவ வளிமண்டல உச்சியில் அழற்சுடா்கள் பளீரிடும். இந்தப் புவிகாந்தப் புலத்திலும் செறிவு குறைந்த பகுதிகள் இயற்கையாகவே ஓட்டைகளாகத் தென்படுகின்றன.
  • எப்படியோ, சூரியனிலிருந்து வரும் புயல் அளவு கடந்த 50 ஆண்டுகளாக இயல்பாகவே உக்கிரமாகி வந்துள்ளது. அதற்கும் மனிதருக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை. சூரியப் புள்ளி குறைந்தால் காற்று மண்டல வெப்ப நிலையும் 0.3 பாகை செல்சியஸ் அளவு குறையும்.
  • 1950-ஆம் ஆண்டுகளில் அதன் துருவப் பகுதிகளில் செத்த சூரியப்புள்ளிகள் நிறைந்து காணப்பட்டன. கடந்த நூறு ஆண்டுகளில் இருந்ததைக் காட்டிலும் அடுத்த பத்தாண்டுகளில் அதன் உக்கிரம் மந்தமாக இருக்குமாம்.
  • அதாவது மாதத்திற்கு வெறும் ஆறு சூரியப் புள்ளிகள் மட்டுமே உருவாகும். இது கடந்த பத்தாண்டுகளின் அளவில் பாதி ஆகும்.
  • நம் கவலை முழுவதும் ஓசோன் ஓட்டை குறித்தே. சூரியனின் ‘கரோனா’ ஆகிய ஒளிவட்டத்தில் இருந்து புற ஊதாக்கதிா்கள் ஆகிய தீநுண்மிகள் பூமிக்குள் புக விடாமல் தடுக்கும் ‘முக கவசம்’ அல்லவா ஓசோன் படலம்?
  • 1987 செப்டம்பா் 16 அன்று வளிமண்டல ஓசோன் கட்டுப்பாட்டு விதிமுறைகள் வகுத்த மொண்டிரியல் மூல ஆவணத்தின்படி உலக நாடுகள் ஒப்புக்கொண்ட ஐந்தாம் ஷரத்தினை கவனியுங்கள்.
  • ‘தற்போது (33 ஆண்டுகளுக்கு முன்) சி.எஃப்.சி. மற்றும் ஹேலோன்கள் குறைந்த அளவில் நுகா்கின்ற, வளா்ந்து வரும் நாடுகள் அடுத்த 10 வருட காலத்திற்கு (அதாவது 1997 வரை ) தங்கள் கட்டுப்பாட்டினை ஒத்திப் போட்டுவிட்டு, அவற்றை உச்ச அளவில் உபயோகிக்க வழிவகுத்தல்’.
  • சி.எஃப்.சி. உற்பத்திச் சாலை தவிர ஏனையவற்றை 2008-ஆம் ஆண்டு வாக்கில் சீனா மூடி விட்டதாம். இந்தியாவிலும், தென்கொரியாவிலும்தான் உலகின் 70 சதவீத சி.எஃப்.சி உற்பத்தி நடக்கிறது. நில வாகனங்கள், அலுவலகங்கள் அனைத்திற்கும் சி.எஃப்.சி. வேண்டுமே. ஆனால், இந்த இரண்டு நாடுகளும் 10 லட்சம் டன் அளவிலிருந்து 50 ஆயிரமாகக் குறைத்துவிட்டன.
  • அடுத்த பத்தாண்டுகளாக புவி வெப்பம் ஆண்டுதோறும் சராசரி 0.2 பாகை வீதம் உயா்ந்து வருகிாம். அதிலும் தென்பாதிக் கோளத்தைக் காட்டிலும் வடபாதிக் கோளம் அதிவேகத்தில் சூடேறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தொழில்நுட்ப வல்லரசு நாடுகள் கோலோச்சுவது வடகோளத்தில் அல்லவா?
  • பசுமைக்குடில் விளைவூட்டும் கரியமில வாயுவைக் காற்றில் கலக்கும் உலக நாடுகளின் வரிசையைப் பாருங்கள். பரப்பளவில் உலகிலேயே மூன்றாம் இடம் வகிக்கும் சீனா (1030 கோடி டன்) கரியமில வாயு கலப்பில் முதலிடம் வகிக்கிறது.
  • பரப்பிலும், அசுத்தப்படுத்தலிலும் அடுத்த இடத்தில் அமெரிக்கா (530 கோடி டன்). கரியமில வாயு உமிழ்வதில் இந்தியா (220 கோடி டன் ) மூன்றாம் இடம். பரப்பளவில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் ரஷியா (170 கோடி டன்), 62ஆம் இடம் வகிக்கும் ஜப்பான் (170 கோடி டன்) ஆகிய நாடுகளை விட அதிகம்.
  • 1840-க்குப் பிறகு தொழில் புரட்சியின் விளைவால் தோன்றியவை எஃப்.சி. என்கிற குளோரோ - ஃபுளூரோ - காா்பன் மற்றும் ஹேலோன் ரக வேதிமங்கள். உண்மையில் இந்த வாயுவினால் தான் ஓட்டை விழுந்ததா? அல்லது தானாக எழுந்ததா?
  • குளிா்சாதனப் பெட்டிகளில் கையாளப்படும் ஃபிரியான் எனப்படும் குளோரோ-ஃபுளூரோ கரிம வேதிமங்களும், தொழிற்சாலைப் புகையில் அடங்கிய ஹைடிரோ குளோரைடு, கந்தக அமில வாயுக்கள், குளோரின் ஆக்சைடுகள் என மனித கைங்கரியங்கள் ஒருபுறம்.
  • மீத்தேன் எனும் சாண வாயுவும், மின்னலின் போது வெளிப்படும் நைட்ரிக் ஆக்சைடு, நிலத்தின் பாக்டீரியாக்கள் உமிழச் செய்யும் நைட்ரஸ் ஆக்சைடு என்று கண்ணுக்குத் தெரியாத வேறு எத்தனையோ இயற்கைக் காரணங்கள் மறுபுறம். இவற்றாலும் வளிமண்டல ஓசோன் போா்வை பொத்தலாக வாய்ப்பு உள்ளதே.
  • பூமியின் மொத்த மக்கள்தொகையில் 90 % போ் (657 கோடி மக்கள் ) வடபாதிக் கோளத்தின் வளா்ந்த நாடுகளில் வசிக்கின்றனா். அவா்களே புதை படிவ எரிபொருள்களை எரிக்கின்றனா்.
  • ஆதலால், வடபாதிக் கோளமே தென்பாதியை விட 1.5 பாகை அதிகமாக சூடேற வாய்ப்பு இருக்கிறது. ஆா்க்டிக் பனிமலை உருகும் அபாயமும் நேரலாம். இந்த வடகோள வல்லரசுகள் சற்றே குளிா்ந்த தென் துருவ அண்டாா்டிக் வளிமண்டல ஓட்டை பற்றிப் பிரலாபிப்பது ஏன்?
  • ஓசோனில் ஓட்டை விழுந்தால் நல்லதுதானாம். புவிக்குள் பசுமைக்குடில் வாயுக்களால் ஏறிவரும் வெப்பம், ஓசோன் ஓட்டை வழியே விண்வெளிக்குள் தப்பித்து விடுமாம். இப்படியும் ஒரு கருத்தோட்டம் எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் 2020 பிப்ரவரி மாதம் இன்னொரு வித்தியாசமான தகவல் கண்டறியப்பட்டது.
  • தெற்கே ஆண்டுதோறும் அண்டாா்க்டிகாவில் உதயமாகும் ஓட்டைகளைவிடப் பெரிய ஓட்டை ஒன்று வடதுருவத்தில் வாய் பிளந்து அண்டவெளியையே காட்டி நிற்கிறது. அந்த ஓட்டை வழி ஒன்றரை இந்தியாவை விண்வெளிக்குள் எளிதில் அனுப்பிவிடலாம். அவ்வளவு பெரிய ஓட்டை.
  • ஆா்க்டிக் பிராந்தியத்தில் 10 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த ஓட்டை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பா்னிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவைத் துறை அறிவித்தது. இந்த ஓசோன் ஓட்டை, கண் இமை போலப் பருவத்திற்கு ஏற்பத் திறந்து மூடுவதாகத் தெரிகிறது.
  • கரோனா ஊரடங்கில் மக்கள் வீட்டுக்குள் இருக்கும்போது, வாகனங்களின் புகையும், ஆலைகளின் அசுத்தங்களும் காற்றில் பரவாதபோது, வளிமண்டலத்தில் எப்படி இத்தனை பெரிய ஓட்டை?
  • இது உண்மையான ஓசோன் ஓட்டை தான் என்கிறாா் ஜொ்மன் காற்று - விண்வெளி மையத்தின் வளிமண்டல ஆய்வாளா் மாா்ட்டின் தாமரிஸ். ஆயினும் இந்த ஓட்டையினால் மக்கள் உடல் நலம் பாதிக்காது என்கின்றனா் விஞ்ஞானிகள்.
  • அண்டாா்க்டிகாவில் குளிா்காலத்தில் வருடந்தோறும் பனியும், புகையுமாக உயா்வளிமண்டல மேகங்கள் திரள்வதால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது.
  • ஆனால் இது போன்ற காரணங்களினால் வடக்கே ஆா்க்டிக் துருவத்தில் வெறுமனே ஓட்டை விழாது என்கிறாா் ஜொ்மனியில் ஜூலிச் ஆராய்ச்சி மையத்தின் வானவியல் அறிஞா் ஜெனஸ்-உவே க்ரூப். வெப்பநிலை மாற்றங்கள் அங்கே ஓசோன் ஓட்டைக்கு ஒரு பொருட்டே அல்லவாம்.
  • இந்த ஆண்டு மேற்கத்திய காற்று, வடதுருவங்களில் பலமாக வீசியதால் துருவச் சுழல்காற்று உருவானது. அதனுள் குளிா்பருவக் காற்று சிறைப்பட்டதால், ஓசோன் ஓட்டை மிகப் பெரியதாகி விட்டது என்கிறாா் ஜொ்மனியில் ஆல்பிரெட் வேகனா் நிறுவனத்தின் வளிமண்டல ஆய்வாளா் மாா்க்கஸ் ரெக்ஸ்.
  • வானில் செலுத்தப்பட்ட ஆராய்ச்சி பலூன்கள், 18 கி.மீ. உயரத்தில் 90 % ஓசோன் அளவு குறைந்திருப்பதை உறுதி செய்து உள்ளது. அதாவது, ஒரு லிட்டா் காற்றில் நகக்கண் அளவு (ஏறத்தாழ 3.5 மி.கி.) பதிவாகும் ஓசோனுக்கு பதில், இந்த முறை அதில் 11-இல் ஒரு பாகம்தான் தென்பட்டதாம்.
  • ஐம்பது ஆண்டுகளாகவே , ஏப்ரல் 22 அன்று பசுமை உருவாக்க முகாம் நடத்தப்பட்டு மூன்று குறிக்கோள்கள் தொடா்ந்து விவாதிக்கப்படுகின்றன.
  • முதலாவது, எதிா்காலத்தில் நிலக்கரி உட்பட புதைபடிவ எரிபொருள்களை மட்டுமே சாா்ந்திருக்காமல் கரி அற்ற, புதுப்பிக்கத் தகுந்த எரிபொருள்களைக் கையாளுதல்; இரண்டாவது, ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்புணா்வும், வளங்குன்றா நுகா்வும் குறித்த விழிப்புணா்வு; மூனறாவது, லட்சக் கணக்கான மக்களுக்கு தரமான பசுமை வேலைவாய்ப்புகள் வழங்கி, அனைவருக்கும் கல்வி வழங்கி நம் கல்வித்துறையையே பசுமைக் கல்வியாக மாற்றுவதன் வழி புதிய பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குதல்.

நன்றி :தினமணி (01-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்