- இஸ்ரோவின் வலுவான ஜிஎஸ்எல்வி ஏவூர்தி, எல்விஎம்-III ஆகும். அதை விண்வெளிக்கு மனிதர்களை ஏந்திச் செல்லத்தக்க வகையில் மாற்றியமைக்கும் பணியின் முக்கிய உறுப்பான ‘பணிக் குழு தப்பிக்கும் அமைப்பு’ என்கிற பகுதியை வெற்றி கரமாக இஸ்ரோ பரிசோதனை செய்துள்ளது. கடைசித் தருணத்தில் இரண்டு முறை ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்ட போதும், இறுதியில் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
தப்பித்தல் சோதனைகள்
- சரக்கு ஏற்றிச் செல்லும் லாரியின் அடிப்படை அமைப்பை வைத்து மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை வடிவமைக்கலாம். லாரியின் அதே இன்ஜின், நான்கு டயர்கள் எனப் பல வடிவமைப்புகளைப் பயன்படுத்த முடியும். என்றாலும் மனிதர்களை ஏந்திச் செல்லும் பேருந்து எனும்போது வடிவமைப்பில் சில மாற்றங்கள் தேவைப்படும். காரணம், விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களால் மனிதர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த மாற்றங்கள் அவசியம்.
- அதேபோல், இதுவரை செயற்கைக்கோள் போன்ற பொருள்களை மட்டுமே ஏந்திச் சென்ற எல்விஎம் ஏவூர்தி, ககன்யான் திட்டத்தில் மூன்று மனிதர்களைத் தாழ் விண்வெளிப் பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, எல்விஎம் ஏவூர்தியில் மனிதர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய மாற்றங்களைச் செய்து, ஒவ்வொரு உறுப்பாக இஸ்ரோ சோதனை செய்துவருகிறது. ஆபத்துக் காலத்தில் வெளியேறுவதற்காகப் பேருந்தின் பின்புறம் அவசரகாலக் கதவு வைக்கப்பட்டிருக்கும்.
- அதே போல், ஏவூர்தியை ஏவும்போது, ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் பணிக் குழுவினரைப் பாதுகாப்பாகத் தப்பிக்க வைக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைப் படிப்படியாக இஸ்ரோ சோதனை செய்துவருகிறது. அக்டோபர் 21 அன்று நடத்தப்பட்ட சோதனை இதில் இரண்டாம் சோதனை ஆகும்.
என்னென்ன வழிகள்
- ஏவுதளத்தில் ஆபத்து ஏற்பட்டால் தப்பிப்பதற்கான அமைப்பு, ஏவூர்தி வானத்தில் பறக்கும்போது குறிப்பிட்ட உயரம் செல்வதற்குள் ஆபத்து ஏற்பட்டால் தப்பிப்பதற்கான அமைப்பு, அந்த உயரத்துக்கும் மேலே சென்றால் தப்பிப்பதற்கான அமைப்பு, விண்வெளியை அடைந்த பிறகு ஆபத்து ஏற்பட்டால் தப்பிப்பதற்கான அமைப்பு என நான்கு வகை தப்பிக்கும் அமைப்புகள் உள்ளன.
- ஏவூர்தி புறப்படுவதற்கு முன்னர் பணிக் குழுவினர் உள்ளே சென்று அமர்ந்துவிடுவார்கள். அந்தச் சமயத்தில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டு ஏவூர்தி வெடித்துச் சிதறி அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டால், இந்த அமைப்பு மின்னலைப் போல் சட்டென்று இயங்கும். பணிக் குழுவினர் பயணிக்கும் விண்கலப் பகுதி முதலில் ஏவூர்தியிலிருந்து விடுபடும். பின்னர், விண்கலத்தின் தலையில் பொருத்தப்பட்டுள்ள வெகு விரைவாக இயங்கும் சிறப்பு ராக்கெட் உதவியோடு மேலே வெகு வேகமாக உயர்ந்து பறந்து செல்லும்.
- பக்கவாட்டாகப் பறந்து சென்று ஆபத்துப் பகுதியிலிருந்து விலகிவிடும். பின்னர், பாராசூட் உதவியோடு பாதுகாப்பான பகுதியில் தரையைத் தொடும். இந்தப் பரிசோதனை ஏற்கெனவே முடிந்துவிட்டது. கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்பாக 2018 ஜூலை 5 அன்று, ‘பேட் அபார்ட் டெஸ்ட்’ எனும் ஏவுதளத் தப்பிக்கும் அமைப்பு சோதனை செய்யப்பட்டது.
- இதற்கு அடுத்தபடியாக, ஏவூர்தி தரையிலிருந்து உயரே எழுந்து விண்ணில் சீறிப்பாயும்போது பாதையில் ஏதேனும் பிசகு ஏற்படலாம்; அல்லது வேறுவிதமான ஆபத்து ஏற்படலாம். அது பயணம் செய்பவர்களின் உயிருக்கே ஆபத்தாக அமையும். தாழ் வானத்தில், ஒலியின் இரண்டு மடங்கு வேகத்துக்கும் குறைவாகச் சென்றுகொண்டிருந்தால் ஏவுதளத்தில் பயன்பட்ட அதே தப்புவிக்கும் அமைப்புதான் இங்கும் இயங்கும். பணிக் குழுக் கலம் மட்டும் தனியாகப் பிரிந்து வேறு திசையில் சென்று, பாராசூட் உதவியோடு தரையில் இறங்கும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் விழுந்துவிடும்.
- உடையாமல் கீழே வர படிப்படியாகப் பாராசூட்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தாளம் தவறாமல் விரிய வேண்டும். இந்த அமைப்பு எல்விஎம்-இன் திட எரிபொருள் ஏவூர்தி இன்ஜின் இயங்கும் உயரம் வரை மட்டுமே பயன் தரும். இந்த அமைப்பைத்தான் இஸ்ரோ சோதனை செய்து தற்போது வெற்றி கண்டுள்ளது.
- ஒலியின் இரண்டு மடங்கு வேகத்தைவிடக் கூடுதல் வேகத்தில், ஏவூர்தி கூடுதல் உயரத்தில் சென்றுகொண்டிருந்தால், இரண்டாம் அமைப்பு வேலை செய்யும். இங்கும் சிறப்பு ராக்கெட் இருக்கும். அதன் உதவியோடு பணிக் குழுக் கலத்தை ஏவூர்தியிலிருந்து பிரித்து வேறு திசையில் செலுத்திவிடும்.
- விண்வெளியை எட்டிய பிறகு ஆபத்து ஏற்பட்டால், நான்காவது தப்புவிப்பு அமைப்பு செயல்படத் தொடங்கும். விண்வெளியில் சென்ற பிறகு பணிக் குழு பயணக் கலம், அத்துடன் எரிபொருள் போன்றவற்றை ஏந்திய செலுத்துக்கலம் இரண்டும் சேர்ந்திருக்கும். அந்தக் கட்டத்தில் செலுத்துக்கலத்திலிருந்து பணிக் குழுக் கலம் மட்டும் தனியே பிரிந்து பாராசூட் உதவியோடு வங்கக் கடலில் பத்திரமாக விழுந்துவிடும். கடைசி இரண்டு அமைப்புகளை, அடுத்துவரும் காலத்தில் இஸ்ரோ பரிசோதனை செய்யும்.
- ஆபத்துத் தப்புவிப்பு அமைப்பைப் போல மொத்தம் சுமார் 150 மாற்றங்களைச் சோதனை செய்ய வேண்டும். இவற்றில் பல சிறு உறுப்புகள் சார்ந்த சோதனைகளே. எடுத்துக்காட்டாக, ஆபத்து விடுவிப்பு அமைப்பை ஏவூர்தியோடு பிணைக்க ஸ்பிரிங், நட்-போல்ட் போன்ற அமைப்பு வேண்டும் அல்லவா? அதுவும் பரிசோதிக்கப்படும். இதில் சுமார் 125-130 சோதனைகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள 20-30 பரிசோதனைகள் வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2023)