TNPSC Thervupettagam

ககன்யான் திட்டம்

March 6 , 2024 139 days 416 0
  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளும் சமீப ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரோவின் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ இந்திய விண்வெளித் துறையின் சாதனைகளுக்கு மற்றுமொரு மைல்கல்லாக அமையவிருக்கிறது.

ககன்யான் திட்டம்:

  • இந்தியாவின் சார்பாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டமே ‘ககன்யான்’. ககன்யான் என்கிற சம்ஸ்கிருதச் சொல்லில் ‘ககன்’ என்றால் வானம் அல்லது விண்ணுலகம்; ‘யான்’ என்பது வாகனத்தைக் குறிக்கிறது.
  • விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் பாதுகாப்பே ககன்யான் திட்டத்தின் முதன்மை நோக்கம். அதன் பொருட்டே விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தொழில்நுட்பங்களைச் சரிபார்க்கும், செயல்விளக்கச் சோதனையாக இத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
  • சுமார் ரூ.9,000 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த விண்கலம், முழுக்க முழுக்க இந்திய விண்வெளித் துறையின் முயற்சியால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்துக்கான சோதனைகள் 2014 முதல் நடந்துவருகின்றன.
  • ககன்யான் விண்கலம் மூலம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ.க்கு மேல் உள்ள சுற்று வட்டப் பாதைக்கு விண்வெளி வீரர்கள் அனுப் பப்படுவார்கள். அங்கு 1 முதல் 3 நாள்கள் தங்கி ஆய்வுசெய்த பிறகு, பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்புவர். 2025இல், ககன்யான் விண்கலம் மூலம் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது.

வீரர்கள் விவரம்:

  • இஸ்ரோவின் ககன்யான் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, அதில் பயணம்செய்யும் விண்வெளி வீரர்களுக்கான நெடும்பட்டியலை இந்திய விமானப் படை தயார்செய்தது. பின்னர், அப்பட்டியலிலிருந்து பிரசாந்த் பாலகிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், எஸ்.சுக்லா ஆகிய நால்வர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இவர்கள் அனைவரும் ரஷ்யாவில் பிப்ரவரி 2020 முதல் மார்ச் 2021 வரை விண்வெளிப் பயணம் தொடர்பான சிறப்புப் பயிற்சியைப் பெற்றனர். தற்போது இந்நான்கு வீரர்களும், பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் உடல் - உளவியல் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

தொடர் சோதனை:

  • ககன்யான் விண்கலத்தில் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ஏராளமான பரிசோதனைகளை இஸ்ரோ தொடர்ச்சியாக நடத்திவருகிறது. அதன்படி, ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி - டி1, 2023 அக்டோபரில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
  • ககன்யான் விண்கலத்தின் மூலம் அனுப்பப் படும் விண்வெளி வீரர்களுடன் ‘வாயு மித்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ள ரோபாட்டும் பயணம் செய்ய இருக்கிறது. விண்கலத்தின் எடை, கதிரியக்கம், வெப்பநிலை, இயங்குநிலை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், ஆபத்துக் காலத்தில் வீரர்களுக்கு உதவிசெய்யும் வகை யிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ககன்யானின் சிறப்பம்சம்:

  • ககன்யான் விண்கலத்தின் சிறப்பம்சமாகத் தனிக்கலம் (capsule)ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கலத்தில் விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும்போது, விண்கலத்தில் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், ஒட்டுமொத்த விண்கலத்திலிருந்து விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும் தனிக்கலம் பிரிந்து வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தனிக்கலம் காற்றுப்பை போன்று செயல்படுவதால் விபத்து நேரும்பட்சத்தில் விண்கலத்திலிருந்து தனியாகப் பிரிந்து வெளியேறும். பின்னர் பாராசூட், பிற மீட்புக் கருவிகள் மூலம் வீரர்கள் பத்திரமாகத் தரையிறங்கலாம்.

ககன்யான் ஏன் முக்கியம்?

  • கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் விண்வெளிக்குப் பயணித்திருந்தாலும், அவர்கள் இந்தியாவின் பிரதிநிதியாக இல்லாமல், பிற நாடுகளின் சார்பாகவே அப்பயணத்தை மேற்கொண்டனர்.
  • விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்னும் பெருமைக்குரிய ராகேஷ் சர்மா கூட சோவியத் ஒன்றியத்தின் ‘சோயுஸ் டி-11’ என்ற விண்வெளித் திட்டத்தில்தான் அந்தச் சாதனையைப் படைத்தார். இஸ்ரோ தற்போது உருவாக்கியுள்ள ககன்யான் விண்கலம், விண்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துகிறது.
  • இத்திட்டம் வெற்றிபெற்றால், விண்வெளிக்கு வீரர்-வீராங்கனைகளை அனுப்ப - பெரும் தொகை செலவிட்டு - வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்படாது.
  • மேலும், ககன்யானின் வெற்றியானது, நிலவில் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடம் பதிக்க முடியுமா என்கிற நீண்ட காலக் கேள்விக்குப் பதிலாக அமையக்கூடும்.
  • அடுத்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் விண்வெளித் துறை அறிவியல், வர்த்தகம், ஆய்வுப் பணிகள் என விரிவடையும்போது, முன்னணி நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து பயணிக்க இத்திட்டம் உதவும். இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை அடுத்து மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக வரலாற்றில் இந்தியா இடம் பெறும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்