- சர்வதேச முதலீடுகள் - வர்த்தகங்கள் அமைப்பிடம், முதலீடு செய்ய ஏறத்தாழ 6 டிரில்லியன் டாலர் இருக்கின்றன.
- கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் காணொலி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி முதலீட்டாளர்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களுக்கு நேரெதிரான நிலைப்பாடு இந்தியாவில் காணப்படுகிறது என்கிற கசப்பான உண்மையை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை.
- ஜனநாயகம், சந்தை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியா, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வளர்ச்சியை வழங்க முனைப்புடன் செயல்படுகிறது என்று எடுத்துரைத்தார் பிரதமர். வலிமையான இந்திய பொருளாதாரம் உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு காரணமாக இருக்கும் என்கிற அவரது கூற்றை யாரும் மறுத்துவிட முடியாது.
- அரசின் சில நடவடிக்கைகளும், கொள்கை முடிவுகளும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களில் ஏற்படுத்திய திருத்தங்களை எடுத்துரைத்தார்.
- ஆசியாவிலேயே மிகக் குறைந்த கார்ப்பரேட் வரி விதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதையும் சுட்டிக் காட்டினார்.
- முதலீட்டாளர்களை ஈர்க்க பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகள் அவசியமானவை; அவசரமானவை. இந்தியாவுக்கு பெரிய அளவில் அந்நிய நேரடி முதலீடுகள் வந்தாலொழிய நமது பொருளாதாரத்தை சரிவிலிருந்து காப்பாற்றி, வளர்ச்சியை நோக்கி நாம் நகர முடியாது.
- பிரதமரின் உரையும், அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளும் ஒன்றுக்கொன்று மாறாகவும், முரணாகவும் இருக்கின்றன என்பதை பிரதமரும், நிதியமைச்சரும் உணர்ந்திருக்கிறார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளால் இயக்கப்
- படும் நிர்வாக அமைப்பு, தங்களது கட்டுப்பாட்டுக்குள் தொழில் துறை இயங்க வேண்டும் என்கிற மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை. அதனால், மத்திய - மாநில அரசுகள் எடுக்கும் பல முடிவுகள் முதலீடுகளை விரட்டுகின்றனவே தவிர, முதலீட்டாளர்
- களுக்கு சாதகமான சூழலை உறுதிப்படுத்துவதில்லை. முடங்கிக் கிடக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலே இந்தியா வளர்ச்சியை நோக்கி விரைந்து நடைபோடத் தொடங்கிவிடும்.
- 2015 நவம்பர் மாதம் "ஷின்கான்சென்' என்கிற ஜப்பானின் புல்லட் ரயில் திட்டத்துக்காக அந்த நாடு ஒதுக்கியிருக்கும் நிதி பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. அந்தத் திட்டம் எப்போது தொடங்கும், நடைமுறைப்படுத்தப்படும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
- 2005-இல் திட்டமிடப்பட்டு 2006-இல் அன்றைய பிரதமர்கள் மன்மோகன் சிங்கும், ஜப்பானின் ஷின்ஷோ அபேயும் "டெடிகேட்டட் பிரைட் காரிடார்' ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 2014-இல் முடிந்திருக்க வேண்டிய திட்டம் தடைப்பட்டு நிற்கிறது.
- "தில்லி-மும்பை தொழில் தடம்' என்கிற அருமையான திட்டம் அறிவிக்கப்பட்டது. தில்லிக்கும் மும்பைக்கும் இடையே 24 நவீன தொழில் நகரங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 234-வது பிரிவின் கீழான பாதுகாப்புடன் அமைப்பது என்பதுதான் அதன் நோக்கம்.
- அந்தத் தொழில் நகரங்களில் ஏனைய சட்டங்களோ அரசியல் தலையீடுகளோ நுழைய முடியாது.
- பலருக்கும் வேலைவாய்ப்பளிக்கும் அந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சியும் ஏற்றுமதியும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் நிதியுதவி வழங்க முன்வந்தது. 2018-இல் முடிந்திருக்க வேண்டிய அந்தத் திட்டத்தின் முதல் கட்டம்கூட இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
- முதலீடு செய்யும் எந்தவொரு நாடும் சர்வதேச நடுவர் மன்றத் தீர்ப்பையும், முதலீட்டுக்கான உத்தரவாதத்தையும் எதிர்பார்ப்பது வழக்கம். வோடஃபோன் நிறுவன வழக்கில் சட்டத்தைத் திருத்தி வரி விதித்ததும், சர்வதேச நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பிறகும்கூடவிவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வராததும் இந்தியாவின் மீதான நம்பிக்கையை குலைத்திருக்கின்றன என்பது பிரதமருக்குத் தெரியாதா என்ன?
- கடந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடு அதிகரித்திருக்கிறது என்பது மாயத் தோற்றம். அதில் ரிலையன்ஸ் ஜியோவின் முதலீட்டை அகற்றிவிட்டால் மிகக் குறைந்த அளவு முதலீடுதான் வந்திருக்கிறது.
- ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, 2019-20-இல் இந்தியாவுக்கு வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு வெறும் 43 பில்லியன் டாலர் மட்டுமே. 2030-க்குள் கட்டமைப்பில் மட்டுமே இந்தியாவுக்கு 5.15 டிரில்லியன் டாலர் தேவை என்னும் நிலையில், இது யானைப் பசிக்கு சோளப்பொரிதான்.
- இதெல்லாம் போதாதென்று ஹரியாணா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொடுத்தாக வேண்டுமென்று சட்டம் இயற்றினால் முதலீடு செய்ய யார் வருவார்கள்? ஊழலும், அதிகாரிகளின் தலையீடுகளும் குறையாத சூழல் நிலவும் வரை அந்நிய முதலீடுகள் பெருமளவில் கிடைக்கும் என்று இந்தியா எதிர்பார்த்தால் அது கனவாகத்தான் இருக்கும்.
- வங்கதேசத்திலும், தாய்லாந்திலும் நமது இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்து உற்பத்தியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன.
- அங்கே ஒரேநாளில் எல்லா அனுமதிகளும் வழங்கப்பட்டு, ஒன்றிரண்டு மாதங்களில் தொழிற்சாலைகள் உற்பத்தியைத் தொடங்கி விடுகின்றன.
- தில்லி - மும்பை தொழில் தடம் போல அரசியல் தலையீடும், அதிகார வர்க்கத்தின் தலையீடும் இல்லாத தொழில் பேட்டைகள் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரும். இதுதான் கசப்பான உண்மை!
நன்றி : தினமணி (11-11-2020)