TNPSC Thervupettagam

க.சந்தானம்: கூட்டாட்சிக்கான தமிழ்க் குரல்

February 27 , 2020 1784 days 791 0
  • போட்டித் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு க.சந்தானத்தின் பெயர் தவிர்க்க முடியாதது. அவர் தலைமையிலான குழுவினுடைய அறிக்கையின் அடிப்படையில்தான் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. எனவே, பெரும்பாலான போட்டித் தேர்வுகளில் அவர் ஒரு எதிர்பார்க்கப்படும் கேள்வி-பதிலாக அமைந்திருக்கிறார். ஆனால், அப்படி ஒற்றை வரித் தகவலுக்குள் அடக்க முடியாத பன்முக ஆளுமை, கஸ்தூரிரங்க சந்தானம்.
  • வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தைத் தலைமையேற்று நடத்திய ராஜாஜிக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தப் போராட்டத்தை வழிநடத்தும் தலைவராக நியமிக்கப்பட்டவர் சந்தானம். அவரும் ராஜாஜியை அடியொற்றி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி சிறைக்குச் சென்றார். ராஜாஜியை அடுத்து திரு.வி.க. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது தலைவராக ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து திரு.வி.க. விலகி நிற்கவும் அது ஒரு காரணமாயிற்று. எனினும், சந்தானத்தின் மீது ராஜாஜி வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.
  • 1895-ல் மன்னார்குடிக்கு அருகிலுள்ள குமட்டித்திடல் கிராமத்தில் பிறந்தவர் க.சந்தானம். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் காங்கிரஸ் முகங்களில் ஒருவராக இருந்தவர் அவர். 1920-களின் தொடக்க ஆண்டுகளிலேயே மாகாண அளவில் கைத்தறிப் பிரச்சாரத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். திருப்பூரில் தொடங்கப்பட்ட கதர் வாரியத்தில் தலைவராக பெரியாரும், செயலாளராக சந்தானமும் செயல்பட்டிருக்கிறார்கள். உள்ளூர் அளவில் கள்ளுக்கடை மறியலிலும் சந்தானம் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். வேதாரண்யத்தில் கள் வியாபாரி ஒருவரால் அவரின் தலையில் கள்ளுப்பானை உடைக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபின் நபா சமஸ்தானம் பிரிட்டிஷ் அரசால் இணைத்துக்கொள்ளப்பட்டபோது தடையை மீறி நுழைந்ததற்காக ஜவாஹர்லால் நேருவுடன் பிணைத்து கைவிலங்கு பூட்டப்பட்டவர் சந்தானம்.

‘இந்திய மக்களாகிய நாம்’

  • அரசமைப்புச் சட்ட அவைக்கான தேர்தல் பணிகள் நடக்கும்போதே ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வரைவுக் குழுவில் க.சந்தானமும் ஒருவர். இந்தக் குழுவால் விவாதிக்கப்பட்டு எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்கள்தான் பின்பு அரசமைப்புச் சட்ட அவையில் விவாதிக்கப்பட்டு, இன்றைய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக விளங்குகிறது. அரசமைப்புச் சட்ட அவையில் உறுப்பினராக இருந்த சந்தானம், விவாதங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டார். முக்கியமாக, அரசமைப்புச் சட்ட அவையின் வரைவுக் குழு, அரசமைப்புச் சட்டக் குழுவாகவே தன்னைக் கருதிக்கொள்கிறது என்ற அவரது விமர்சனம் இன்றளவும் தொடர்ந்து மேற்கோள் காட்டப்பட்டுவருகிறது. விவாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கியமான கூறுகளைத் திருத்தம்செய்துகொள்ளும் பொறுப்பை வரைவுக் குழு தானே எடுத்துக்கொள்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
  • அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும்கூட அதன் அடிப்படை நோக்கங்களுக்கு இடர்ப்பாடுகள் நேர்ந்தபோதெல்லாம் ஓர் அரசமைப்புச் சட்டவியராகத் தொடர்ந்து குரல்கொடுத்துவந்தவர் சந்தானம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உருவாக்கத்தைப் பற்றியும் வளர்ச்சியைப் பற்றியும் கிரான்வில் ஆஸ்டின் எழுதிய புத்தகங்களில் க.சந்தானத்தின் புத்தகங்களும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘ஸ்வராஜ்யா’ ஏடுகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் உருவாக்கத்தில் மட்டுமின்றி, அதன் அடிப்படைக் கருத்தாக்கங்களின் பரிணாம வளர்ச்சியிலும் சந்தானம் ஆற்றியிருக்கும் பங்கை அந்தக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

கூட்டாட்சியும் ஜனநாயகமும்

  • நீதித் துறை பொறுப்பேற்கும் வழக்கறிஞர்கள் எந்தவொரு புறக்காரணிகளாலும் பாதிக்கப்படாதவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், நீதித் துறையின் சுதந்திரத்தில் நிர்வாகத்தினர் குறுக்கிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் சந்தானம் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார். ஆட்சித் தலைமையும் கட்சித் தலைமையும் ஒன்றோடொன்று கலந்துவிடக் கூடாது என்றும், மாநிலங்களின் அமைச்சரவையைக் கட்டுப்படுத்த வேண்டியவர் மாநிலத்தின் முதல்வரே தவிர கட்சியின் தலைமை அல்ல என்றும் அவர் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமே அதிகாரம் வாய்ந்தது என்று பேசப்பட்டபோது அது வெளிப்பார்வைக்கு சரியாகவும் உண்மையில் அவ்வாறு இல்லாததுமான ஒரு முழக்கம் என்று விமர்சித்தவர் சந்தானம். இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டமும் அதிகாரம் வாய்ந்த சார்புநிலையற்ற உச்ச நீதிமன்றமும் மிகவும் அவசியமானவை என்று அவர் எழுதினார்.
  • இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சிகள் நடந்தபோது அதை எதிர்த்த அசோக் மேத்தா, என்.ஏ.பல்கிவாலா, சுப்பா ராவ் முதலான சட்டத் துறை அறிஞர்களில் க.சந்தானமும் ஒருவர். 1975-ன் இறுதியில் கூடிய காங்கிரஸ் கமிட்டியில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அறிக்கையொன்று விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையை அறிமுகப்படுத்துவது என்ற யோசனையெல்லாமும்கூட சொல்லப்பட்டன. உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிப் பேராணைகளைக் கோருவதற்கான உரிமைகளை நீக்குவது என்றெல்லாம்கூட அந்த யோசனைகள் நீண்டன. அப்போது, ‘இம்முயற்சிகள் கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதைப் பலவீனப்படுத்தவே செய்யும். அரசமைப்புச் சட்டத்தில் எந்தவொரு திருத்தத்தைச் செய்வதற்கு முன்னாலும் அது கட்சி சாராத உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்பட வேண்டும்’ என்று ஆலோசனையை சந்தானம் முன்வைத்தார்.

மாநில உரிமைகளுக்கான குரல்

  • அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான ஸ்வரண் சிங் கமிட்டியின் அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்திய தேசியக் குழுவிலும் சந்தானம் இடம்பெற்றிருந்தார். ஜெயப்ரகாஷ் நாராயண் முன்னிலையில் கூடிய அந்தக் குழுவுக்கு இரா.செழியன், கிருஷ்ணகாந்த் இருவரும் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தனர். ஜூலை 18, 1976-ல் சென்னையில் ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற்ற சிவில் உரிமைகளுக்கான மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாநாட்டில் பேசிய க.சந்தானம் நெருக்கடிநிலை என்பதை நாடு முழுமைக்குமாக ஒருபோதும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், எந்தெந்த மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறதோ அங்கு மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பேசினார்.
  • மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் மத்திய அரசு தன்னுடைய படைகளை அனுப்புவதற்கு வகைசெய்யும் கூறு 31 (ஈ) அறிமுகப்படுத்தப்பட்டபோது அது நடைமுறையில் அடிப்படை உரிமைகளைச் செல்லாததாக்கக்கூடியது என்று கடுமையாக விமர்சித்தவர் க.சந்தானம். தடையற்ற நாடாளுமன்ற அதிகாரமானது அரசமைப்புச் சட்டத்தை வலுவில்லாததாக ஆக்குவதோடு வகுப்புவாதக் கூறுகளுடன் பயன்படுத்தப்படலாம் என்று எச்சரித்தார். ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு, அந்தக் கூறு நீக்கப்பட்டுவிட்டது. மாநிலங்களின் அரசியல் பொருளாதார உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தவர் சந்தானம். ஆளுநர் நியமனத்துக்கு முன்னால் அது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்துக்கொள்ள வேண்டும் என்று மரபை உருவாக்குவதற்கு அவரது பரிந்துரைகளும் முக்கியக் காரணம். திட்டக் குழு இந்தியாவின் பன்மைத்துவத்தை அலட்சியப்படுத்துகிறது என்ற விமர்சனமும் அவருக்கு இருந்தது. நாடு முழுமைக்கும் பொதுவானதாகத் திட்டங்களை வகுக்கும்போது அது நடைமுறைக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எல்லோரும் அறிந்த பெயர்!

  • அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதங்களில் தொடர்ந்து க.சந்தானம் மேற்கோள் காட்டப்படுகிறார். அரசமைப்புச் சட்டம், பொருளாதாரத் திட்டமிடல், இந்திய தேசியம், காந்தியம் என்று பல்வேறு துறைகளைப் பற்றி அவர் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். தொகுக்கப்படாத கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். தமிழில் அவர் எழுதிய அறிமுக நூல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. சக்தி காரியாலயம் வெளியிட்ட ‘செல்வம்’, பொருளியல் துறையைப் பற்றிய மிகச் சிறந்த எளிமையான அறிமுகம். திருச்சி சிறையில் இருந்தபோது சந்தானம் எழுதிய நூல் இது. சிறையில் இருந்தபோது தன்னுடைய சகாக்களுக்கு சம்ஸ்கிருத வகுப்புகளையும் அவர் நடத்தியிருக்கிறார். தமிழில் வெளியான ‘சாகுந்தலம்’ மொழிபெயர்ப்புகளில் சந்தானத்தின் மொழியாக்கம் சிறப்பானதாக மதிப்பிடப்படுகிறது. ‘மக்கள் ஆட்சி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய மற்றொரு நூல் இந்திய ஜனநாயக முறையை பிரிட்டன், அமெரிக்க முறைகளோடு ஒப்பிட்டு விளக்குகிறது. ‘சத்திய சமாஜம்’ என்ற தலைப்பிலான அவரது மற்றொரு நூல் காந்தியைப் பற்றிய அறிமுகம். காந்தியின் கீதை விளக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார்.
  • ‘தினமணி’யில் ‘செல்வமும் சொத்தும்’ என்ற தலைப்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நெடுந்தொடர் ஒன்றையும் எழுதியிருக்கிறார் சந்தானம். 1934-ல் எஸ்.ஸதானந்தின் ‘ப்ரீ ப்ரஸ்’ சென்னை லிமிடெட்டின் நிர்வாகியாக இருந்தபோது எஸ்.வி.ஸ்வாமியுடன் இணைந்து ‘தினமணி’ நாளிதழைத் தொடங்கியவரும் அவர்தான். சமீபத்தில் அல்லயன்ஸ் கம்பெனி 1942-ல் வெளிவந்த ‘கதைக்கோவை’யின் முதல் தொகுதியை மறுபதிப்பு செய்திருக்கிறது. உ.வே.சா, ராஜாஜி ஆகியோரை அடுத்து க.சந்தானத்தின் ‘சோதனை’ என்ற சிறுகதையும் அத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. கு.அழகிரிசாமியின் நெருக்கத்தில் வந்து நிற்கும் சிறுகதை அது.
  • எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், காந்தியர், வழக்கறிஞர், அரசமைப்புச் சட்டவியர், பொருளியல் அறிஞர், நாடாளுமன்றவாதி, முன்னாள் மத்திய அமைச்சர், மாநில ஆளுநர் என்று தான் தொட்ட துறைகளையெல்லாம் சிறக்கச் செய்தவர் க.சந்தானம். ஆனால், ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் எழுதிய புத்தகங்களில் பெரும்பாலானவை இன்று சந்தையில் இல்லை என்பதை என்னவென்பது?

நன்றி: இந்து தமிழ் திசை (27-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்