- பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் செளத்ரி கைது செய்யப்பட்டிருப்பது ஒருபுறம் வரவேற்பையும், இன்னொருபுறம் சில விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது.
- குறிப்பாக, வங்கி அதிகாரிகள் மத்தியில் இந்த கைது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கருத்து பரவலாகக் காணப்படுகிறது.
- வங்கிக் கடன் தொகையைத் திரும்பப் பெறுவதில் காணப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதீப் செளத்ரியின் கைது நடைபெற்றிருப்பதால், வங்கியாளர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுவெளியிலும் இந்த விவகாரம் குறித்த விவாதம் காணப்படுவதில் வியப்பில்லை.
- வழக்கின் பின்னணி இதுதான். 2007-இல் கர் ரஜ்வாடா என்கிற ஹோட்டல் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.24 கோடி கடனாக வழங்கியது. அந்தக் கணக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் செயல்படாமல் இருந்ததனால் வட்டித் தொகை அதிகரித்தது.
- அசலும், வட்டியும் திருப்பித் தரப்படவில்லை. 2010 ஜூன் மாதம் அந்தக் கணக்கு வாராக்கடன் பட்டியலில் இணைக்கப்பட்டது.
- கர் ரஜ்வாடா ஹோட்டல் நிறுவனத்துக்கு வழங்கிய கடன் வசூலாகாமல் போனதன் பின்னணியில், அல்கெமிஸ்ட் என்கிற கடன் மீட்பு நிறுவனத்துக்கு கர் ரஜ்வாடா ஹோட்டல் சொத்து 2016 மார்ச் மாதம் ரூ.25 கோடிக்கு வழங்கப்பட்டது.
- அந்த நிறுவனம் திவால் சட்டத்தின் அடிப்படையில் 2017 டிசம்பர் மாதம் வங்கிசாரா நிதி நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டது.
- இதன் மூலம் ரூ.200 கோடி அளவிலான இழப்பு பாரத ஸ்டேட் வங்கிக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.
- இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 420, 409, 120பி ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப் பட்டு முன்னாள் பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் பிரதீப் செளத்ரி கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
- ரூ.200 கோடி மதிப்புள்ள கர் ரஜ்வாடா ஹோட்டலின் கட்டடம், நிலம் உள்ளிட்ட சொத்துகளை வெறும் ரூ.25 கோடிக்கு விற்பதற்கு வழிகோலியதன் மூலம் அந்த சொத்தை வாங்கிய நிறுவனம் ரூ.175 கோடி லாபம் ஈட்டியிருக்
- கிறது என்பது முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டு. அதன் உண்மைத்தன்மையை நீதிமன்றம்தான் விசாரணைக்குப் பிறகு முடிவு செய்ய வேண்டும். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து விவரமாக எதுவும் சொல்ல முடியாது.
- சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை சந்தர்ப்ப சாட்சியங்கள் உறுதிப்படுத்துகின்றன.
- 2013 செப்டம்பர் 30 அன்று பணி ஓய்வு பெற்ற பாரத ஸ்டேட் வங்கி தலைவர் பிரதீப் செளத்ரி, 2014 அக்டோபர் மாதம் அல்கெமிஸ்ட் கடன் மீட்பு நிறுவனத்தின் இயக்குநராகிறார்.
- அல்கெமிஸ்ட் கடன் மீட்பு நிறுவனம், பிரதீப் செளத்ரி ஆகிய இருவரின் கைப்பாவையாக செயல்படும் வங்கிசாரா நிதி நிறுவனத்துக்கு அந்த சொத்து கைமாறியிருக்கிறது என்பதும், கர் ரஜ்வாடா ஹோட்டல் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் பலருடைய நண்பர்களும் உறவினர்களும் அந்த நிதி நிறுவனத்தின் சொந்தக்காரர்கள் என்பதும் ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
வங்கிகளில் வாராக்கடன் விளைவுகள்
- இந்த வழக்கும் பிரதீப் செளத்ரியின் கைதும் ஒருபுறம் நடைபெறும் அதேவேளையில், மத்திய அரசு ரூ.50 கோடிக்கும் குறைவான வாராக்கடன்கள் பிரச்னைகளில் வங்கி அதிகாரிகளைப் பாதுகாக்க விதிமுறைகளை வகுத்திருக்கிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படுகிறது என்பதுதான் வங்கி அதிகாரிகளின் குமுறல்.
- ஒருபுறம் பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்திருக்கின்றன என்றாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் தொழில் துறையினருக்கான வங்கிக் கடன் அளவு 2.5% மட்டுமே அதிகரித்திருக்கிறது.
- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைத் தொடர்ந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்க வேண்டும் என்று நிதியமைச்சகம் கருதுகிறது.
- அதனால் ஏற்படும் இடர்களையும் (ரிஸ்க்), பின்னடைவுகளையும் அரசே ஏற்கும் என்றும்கூட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்.
- வங்கி அதிகாரிகள் மீது வாராக்கடன்களுக்கான வழக்குகள் தொடரப்படுமானால் அவர்கள் புதிய கடன்களை வழங்குவதில் தயக்கம் காட்டுவது இயல்பு.
- வங்கித் தொழில் என்பது கடன்களை வழங்கி லாபம் ஈட்டுவதன் மூலம் நடப்பது என்பதால் போதிய கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுவது, வங்கிகளின் லாபத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், தொழில் துறை வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்.
- திவால் சட்டம் கொண்டுவரப்பட்டதும், கடன் மீட்பு நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டதும் பல முறைகேடுகளுக்கு வழிகோலப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், நலிவடைந்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இழப்பிலிருந்து மீண்டு செயல்படுவதற்கு பதிலாக விலை பேசப்படும் அவலமும் ஏற்பட்டிருக்கிறது.
- கடன் தொகையில் 90% வரையிலான தள்ளுபடி (அதை ஹேர் கட் என்கிறார்கள்) செய்யப்படுவது அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாடுதழுவிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவதும், கடன் மீட்பு நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதும் பரவலாகியிருக்கிறது.
- முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் பணி ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகளுக்கு தனியார் துறையில் சேரக் கூடாது என்கிற விதிமுறை பொதுத்துறை வங்கிகளுக்கும் இல்லாதது ஏன்? தனியார் வங்கிகள் இந்த பிரச்னைக்கு தீர்வல்ல என்பதை ஐசிஐசிஐ வங்கியும், ஆக்ஸிஸ் வங்கியும் உணர்த்தியிருக்கின்றன.
நன்றி: தினமணி (12 - 11 - 2021)