TNPSC Thervupettagam

கடன்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடு ஏழைகளை முடக்கிவிடக் கூடாது

December 21 , 2024 3 days 21 0

கடன்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடு ஏழைகளை முடக்கிவிடக் கூடாது

  • கடன் வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. கடன் வழங்கும் ‘ஆன்லைன் ஆப்’ களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
  • கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. தற்போது கடன் வழங்கும் தனிநபர்கள் இந்த வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத கடன் வழங்கும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு 2 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரைஅபராதம் விதிக்கவும் இடமளிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கி விட்டு அதை வசூலிப்பதற்காக குடும்பத்தினரை மிரட்டுதல், சட்டவிரோதமாக துன்புறுத்துதலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கவும் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • Banning Unregulated Lending Activities(BULA) என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரைவு சட்ட மசோதா மீது வரும் பிப்ரவரி 13-ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கடன் வழங்கும் ‘ஆப்’கள் மூலம் கடன்களை பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சி பெரும் வரவேற்புக்குரியது. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் ‘ப்ளே ஸ்டோரில்’ இருந்து 2,200 கடன் வழங்கும் ‘ஆப்’களை நீக்கியுள்ளது.
  • இருப்பினும் இதுபோன்ற அங்கீகாரமற்ற கடன் வழங்கும் நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாறுவது தொடர்ந்தவண்ணம் உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முயற்சி காலத்துக்கேற்ற நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. ஆனால், இதில் தனிநபர்களையும் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரும்போது சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். கிராமப்புறங்களில் கந்து வட்டி கொடுமைகளால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவது உண்மை. கந்து வட்டிக்காரர்கள் தனிநபர்களாக கருதப்பட்டு, ரிசர்வ் வங்கியின் வளையத்துக்குள் வரும்போது, அவர்கள் நியாயமான நிபந்தனைகளுடன் வட்டித் தொழிலை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாவார்கள். இது வரவேற்கத்தக்க அம்சமாகவே இருக்கும்.
  • அதேநேரம், கிராமப்புற மக்கள் தங்கள் அவசரத் தேவைக் காக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், நண்பர்களிடம் கைமாற்றாக கடன் பெற்றுவிட்டு சிறிது காலத்தில் திருப்பிச் செலுத்தும் நடைமுறைக்கும் சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கடன் தருவோர், அங்கீகாரமற்ற கடன் வழங்கும் தனிநபர் என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்டால், தண்டனைக்குள்ளாகும் வாய்ப்பு ஏற்படும். உதவி செய்யும் நோக்கத்தில்கூட அவர்களால் கடன் வழங்க முடியாது. இது ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறவினர்களிடம் கடன் பெறுவதற்கு மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், புதிய கட்டுப்பாடுகள் ஏழைகளின் சிறு கொடுக்கல், வாங்கலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்