கடற்கரையும் காலநிலைப் புரிதலின்மையும்
- காலநிலைப் பிறழ்வின் முதன்மையான விளைவுகளில் ஒன்று, கடல் மட்ட உயர்வு. கடல்மட்டம் உயர்ந்தால் கரை நிலங்களுக்கு என்ன ஆகும்? கடற்கோள்கள் போல அல்லாமல், கடல் மெதுவாகக் கரைநிலங்களை விழுங்கத் தொடங்கும். மனித நடவடிக்கைகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் கரைப் பகுதிகள் இதற்கு முதல் பலியாகும். தாழ்ந்த கரைநிலப் பகுதிகளில் கடல் எளிதில் உள்ளேறும். இது மெதுவாக நிகழும் பேரிடர்.
- திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களின் 76% கடற்கரை புயல், கடல்மட்டம் உயர்தல், கடல் அரிமான அபாயத்தில் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக காலநிலைப் பேரிடர் மேலாண்மை மையத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. கன்னியாகுமரி, கடலூர், சென்னைக் கடற்கரைகளில் 60% பகுதிகள் காலநிலைப் பேரிடர் அபாயத்தில் உள்ளன.
கடல் - கரை மணல் இயக்கம்:
- கிழக்குக் கடற்கரையில் ஆண்டில் எட்டு மாதங் களுக்குக் கரைக்கடல் நீரோட்டம் தெற்கிலிருந்து வடக்காக நகரும்; மீதி நான்கு மாதங்களுக்கு மறு திசையில் நகரும். இந்த நெடுங்கரை நீரோட்டம்தான் கடற்கரையில் மணல் நகர்வைக் கட்டுப்படுத்துகிறது. வடதிசையில் நகரும் நீரோட்டம் மணலைப் பெயர்த்துச் சென்ற இடங்களில், வடகிழக்குப் பருவ காலத்தில் தென்திசையில் நகரும் நீரோட்டம் மணலை நிரப்பிவிடுகிறது.
- இந்த நகர்வுக்குத் தடங்கலாக நிறுவப்படும் கட்டுமானங்கள் கடல் அரிமானத்தைத் தூண்டுகின்றன. தடுப்புச்சுவரின் ஒருபுறம் மணலைக் குவிக்கும் நீரோட்டம், மறுபுறம் அரிமானத்தை ஏற்படுத்துகிறது. இப்படி, மேற்குறிப்பிட்ட ஆய்வின்படி, தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் நிறுவப்பட்ட படகு அணையும் தளம், மீன்பிடித் துறைமுகம், கடல்பாலம், அலைத் தடுப்புச்சுவர், கடல் அரிப்புத் தடுப்புச்சுவர்களால் மாநிலத்தின் 43% கடற்கரை (433 கி.மீ.) அரிமானத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
தடுப்புச்சுவர் தந்ததும் பறித்ததும்:
- மீனவர்களைப் பொறுத்தவரை, ஒரு கடல் அரிப்புத் தடுப்புச்சுவர் இரண்டு தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஒன்று, குடியிருப்பைக் கடல் அரிமானத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். இரண்டு, எல்லாப் பருவங்களிலும் பாதுகாப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட வாய்க்க வேண்டும். இரண்டையும் நிறைவுசெய்யும் வகையில், கடந்த 60 ஆண்டுகளில் பல கட்டுமான வடிவங்கள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டன
- இந்திய தீபகற்பத்தின் மேற்கு, கிழக்குக் கடற்கரைகளில் மதிற்சுவர் போன்ற கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. பிறகு, பாறாங்கற்களை அடுக்கித் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன. 1990களில் சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தமிழ்நாட்டுக் கடற்கரைகளுக்கு 18 அடி அகல தடுப்புச்சுவர் வகை மாதிரியைப் பரிந்துரைத்தது. புதுவை, பூம்புகார், குமரிக் கடற்கரைகளில் அவ்வகைத் தடுப்புச்சுவர்களைக் காணலாம். பின்னாள்களில் செங்குத்துக் கோணத் தடுப்புச்சுவர்கள் (vertical groynes) நிறுவப்பட்டன.
- சில இடங்களில் தூண்டில் வளைவுகள் (hook shaped jetties) நிறுவப்பட்டன. இந்தக் கட்டமைப்புகளால் கடற்கரைக்குப் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதோடு, இவை கடல் அரிமானத்தைத் தீவிரப்படுத்தி உள்ளதாகத் தமிழ்நாட்டுக் கடற்கரைகளின் பாதுகாப்பு குறித்த தேசியக் கடலோர ஆய்வு மையத்தின் ஓர் ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
தமிழகக் கடற்கரை:
- 2014இல் பழவேற்காட்டில் சந்தித்த நாராயணன் (அரங்கங்குப்பம்) என்னிடம் சொன்னார்: “இன்னும் பத்து வருசம் எங்க கடற்கரைக இருந்தா ஆச்சரியம்”. தமிழகக் கடற்கரை சார்ந்த தீர்க்கதரிசனமான கூற்று அது. சதுரங்கப்பட்டினத்தில், புஷ்பவனத்தில், தேவனாம்பட்டினத்தில், இரையுமன்துறையில் இதே குரலைக் கேட்டிருக்கிறேன்.
- திருவள்ளூர், வடசென்னைக் கடற்கரைகள் நாள்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன. செம் மஞ்சேரிக் குப்பத்தில் போடப்பட்ட தடுப்புச்சுவர், மீனவர்களின் தொழிலையே முடக்கிவிட்டது. முட்டுக்காட்டில் நிறுவப்பட்ட தனியார் சுற்றுலா மையக் கட்டுமானம், அதன் அருகே உள்ள கரிக்காட்டுக் குப்பத்தைக் கடல் அரிமானத்துக்கு இரையாக்கியிருக்கிறது.
- கடந்த ஐந்தாண்டுகளில் குடியிருப்புக்கு மிக நெருக்கமாகக் கடல் வந்து விட்டது. செங்கல்பட்டு கடற்கரையில் ஆறு கிராமங்களில் போடப்பட்ட தடுப்புச்சுவர்கள் ஒருவகையான சங்கிலி விளைவை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.
- 2013இல் நெம்மேலி (செங்கல்பட்டு) அருகே கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை நிறுவும் வேலைகள் தொடங்கின. நெம்மேலிக்கு வடக்கே சூளேரிக்காட்டுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரைக் கிராமங்கள் அத்தனையும் கடுமையான அரிமானத்துக்கு உள்ளாயின. நெம்மேலிக்குத் தெற்கே உவர்நீர் இறால் பண்ணைகள் கடல் அரிமானத்தைத் தீவிரப்படுத்தின.
- புது கல்பாக்கத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைக்கான அலைத் தடுப்புச்சுவர், வடக்கேயுள்ள ஊர்களில் அரிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பழவேற்காடு- காட்டுப்பள்ளிக்கு இடைப்பட்ட கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதிகள் துறைமுகங்கள், தொழில் கட்டுமானங்களால் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
- காட்டுப்பள்ளியில் அதானியின் துறைமுகத் திட்டம், அங்குள்ள மக்களுக்கு ஒரு கொடுங்கனவுதான். திருவள்ளூர் மக்கள் அக்கடற்கரைகளைத் தீவிர கடல் அரிமானப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரிமானத்தின் வேர் எது?
- 1908இல் சென்னைத் துறைமுகத்தின் முதல் அலைத் தடுப்புச்சுவர் நிறுவப்பட்டது. அதன் தென்பகுதியில் மணல் குவிக்கத் தொடங்கி மெரினா என்கிற பெரிய மணல்வெளி உருவானது; துறைமுகத்துக்கு வடக்காகக் கடல் அரிமானம் தீவிரமாகி, எண்ணூர் பகுதி வரை ஏராளமான கடற்கரை நிலங்களைக் கடல் விழுங்கிவிட்டது.
- 1978இல் விழிஞ்ஞத்தில் (கேரளம்) நிறுவப்பட்ட மீன்பிடித் துறைமுகம் அதற்குத் தென்கிழக்காகப் புல்லுவிளை முதல் பூவாறு வரையிலான ஐந்து கிலோமீட்டர் கடற்கரையில் புதிய மணல்வெளியை உருவாக்கியது. ஆனால், அதற்குத் தென்கிழக்காகக் கன்னியாகுமரி மாவட்டத்தின் 30 கி.மீ. கடற்கரையில் கடல் அரிமானம் தீவிரமடைந்தது. 1989இல் புதுவையில் நிறுவப்பட்ட துறைமுகத்தினால் புதுவையின் கடற்கரைகள் காணாமலாயின. 2017இல் மணல் நிரப்பும் புதிய தொழில்நுட்பம் மூலமாக, அந்தப் பகுதிகளில் மணல் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அம்முயற்சி பெரிதாகப் பலனளிக்கவில்லை.
புதிய இடர்கள்:
- குறிப்பிட்ட கடல் பகுதிகளின் தன்மையையும் நெடுங்கரை நீரோட்டத்தின் போக்குகளையும் கணக்கில்கொள்ளாமல் நிறுவப்பட்ட கட்டுமானங்கள் மீனவர்களுக்குப் புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. சில இடங்களில் தடுப்புச்சுவரைத் தாண்டி அலைகள் நிலத்தில் வந்து மோதுகின்றன. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுமானக் கோளாறினால் அலைவாயில் மணல் குவிந்துவிடுகிறது. பருவமழைக் காலத்தில் அலைகள் மோதி, பல உயிர்கள் பலியாவதோடு படகுகளும் சேதமடைகின்றன.
- அங்கு அலைத் தடுப்புச்சுவர்களை மீளக் கட்டமைப்பதோடு, ஆண்டு முழுவதும் குவியும் மணலை அப்புறப்படுத்துவதும் தேவையாகிறது. அதன் தொழில்நுட்ப– பொருளாதாரச் சிக்கல்கள் துறைமுகத்தின் எதிர்காலத்துக்கே கேள்விக்குறி ஆகியிருக்கின்றன.
- முட்டம் தனியார் துறைமுகத்தைப் பொறுத்தவரை, அதன் மேற்கு அலைத் தடுப்புச்சுவரின் கோணமும் நீளமும் அருகிலுள்ள அழிக்கால் கிராமத்துக்குப் பாதகமாகியிருக்கிறது. 2022 ஜூலை 4 அன்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு, அந்தக் கிராமத்தை மணலால் மூடியது. இது எங்களுக்கு இரண்டாவது சுனாமி என்றார் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு மூதாட்டி.
தீர்வுகள் உண்டு:
- காலநிலைப் பிறழ்வின் சூழலில் தமிழகக் கடற்கரைகளைப் பாதுகாப்பதற்கு ஒற்றைத் தீர்வு என்பது இல்லை. தடுப்புச்சுவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதோடு, பல இடங்களில் கடல் அரிமானத்தைத் தீவிரப்படுத்துவதையும் காண முடிகிறது. தடுப்புச்சுவரின் பெயரால் மீதமுள்ள மலைகளையும் குன்றுகளையும் அழிப்பதை ஏற்க முடியாது. இயற்கையை இயற்கையைக் கொண்டே பாதுகாப்பதுதான் சிறந்த வழி.
- கடல் அரிமானத்தைத் தூண்டும் கட்டுமானங் களைத் தவிர்ப்பது அரசின் கொள்கை நிலைப் பாடாக மாற வேண்டும். பொருத்தமான இடங்களில் இயற்கை அரண்களையும் உயிர்வேலிகளையும் உருவாக்குவது அவசியம். இயன்றவரை மணல் மேடுகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அங்கு பனை உள்ளிட்ட உயிர்வேலிகளை உருவாக்கிப் பராமரிக்க வேண்டும். பசுமைப் போர்வை மணல் மேடுகளைப் பாதுகாக்கும். உவர்நீர் உள்ளேற்றத்துக்கும் மணல் அரண்கள் சிறந்த தீர்வாகும்.
- கடலோடு தொடர்புடைய நீர்நிலைகளில் இயன்றவரை அலையாத்திக் காடுகளை உருவாக்கலாம். கடற்கரைப் பேரிடர் அபாயக் குறைப்புத் திட்டத்தின்படி (2012) மின்கம்பங்களைத் தவிர்த்து, புதைவட மின்விநியோகத்தை நிறுவும் திட்டத்தைத் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடற்கரைக்கும் விரிவுபடுத்தலாம். கடற்கரைகள் சமவெளி நிலத்தின் அரண் ஆகும்; அதன் பாதுகாப்பு - நிலத்தின் பாதுகாப்புக்கு அடிப்படையானது.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 09 – 2024)