TNPSC Thervupettagam

கடற்கரையும் பனை மரப் பிணைப்பும்

November 9 , 2024 15 days 43 0

கடற்கரையும் பனை மரப் பிணைப்பும்

  • நெய்தல் (Nymphae stellata) கொடி, திணையின் ஈரநிலத்தோடு தொடர்புடையது. நெய்தல் கொடிக்குப் பல பெயர்கள் உண்டு- பானல், கருநெய்தல், கருங்குவளை. பொதுவாக நெய்தல் மலர்கள் கருநீல நிறமுடையவை (நீலம், நீலோற்பலம்). எனினும் வெண்மை, சிவப்பு நிறங்களிலும் நெய்தல் மலர்கள் காணக் கிடைக்கின்றன. நெய்தல் கொடி கழிகளின் இருமருங்கிலும் செழித்து வளர்வது. நெய்தலின் பெயருக்குக் காரணமான நெய்தல் கொடி இப்போது காணக் கிடைப்பதில்லை. நெய்தல் நிலம் அதன் இயல்பை இழந்துவருகிறது.
  • மணற்குன்றுகளின் மீதும் வெண்மணற் பரப்புகளின் மீதும் பசுமை தவழும் அடும்புக் கொடிகள் அடர்ந்து, பரந்து படர்ந்து கிடக்கும். அடும்பின் இலை மான் குளம்புக்கு ஒப்பிடப்படுகிறது; அடும்பு மலர் குதிரையின் கழுத்திலிடும் சங்கிலி மணிக்கு ஒப்பிடப்படுகிறது. அதன் மலர்கள் கத்தரி நிறத்திலிருக்கும். சங்க காலத்தில் கணவனை இழந்தோர் அடும்புக் கொடிபரப்பி, அதன்மீது கைம்மை நோன்பு நோற்பது வழக்கம்.
  • அடும்பின் அயலது நெடும்பூந்தாழை என்கிறது சங்கப்பாடல். தாழை தழைத்து, வெண்மலர் விரித்து, நறுமணம் பரப்பும். அதன் மூட்டு / தாங்கு வேர்கள் மணல் அரிமானத்தைத் தடுக்கும். தாழையினடியில் மலரும் மற்றொரு தாவரம் வெண்கூதாளம். அதோடு முண்டகம் என்னும் கழிமுள்ளிகளும் (கள்ளிச்செடி) காணப்படும்.
  • புன்னையும், புலிநகக் கொன்றையும் (ஞாழல்) பூத்துக் குலுங்கும்; நாவலும் வேம்பும் நன்னிழல் ஊட்டும்; குரவம், புன்கு, ஈங்கை, அதிரல் போன்ற மரங்களும் நெய்தல் சோலைகளில் காணப்படும். அலையாத்தி வனங்களில் தில்லை மரங்கள் (ஓதங்களால்) கழிநீர் அலைப்பச் செழித்து வளரும். பனைமரத்தைக் குறித்து, ‘விண்ணுற ஓங்கிய பெண்ணையாம் பனை’ என்பதாக ஒரு குறிப்பும் உண்டு.

பனை குறித்த நினைவுகள்:

  • நெய்தல் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒரு தாவரத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால், அது பனைதான். கடலுக்குக் கொண்டு செல்லும் ஒமல் என்னும் மீன் கடகம் செய்வதற்காகப் பனையேறும் நாடாரிடமிருந்து அப்பா வாங்கிவரும் குருத்தோலையை, வீட்டு முற்றத்தில் உலர விடுவதற்காக விரிக்கும்போது எழும் வாசனை; பனங்காயை அடுப்பிலிட்டு சுடும் வாசனை, அறுதொலிப் பனங்காயாக அறுத்து, கருப்பட்டிக் கூழ் ஊற்றி, பானையில் அவிக்கும் வாசனை; அதை மறுநாள் காலையில் எடுத்துச் சுவைக்கும்போது வெளிப்படும் வாசனை; சுட்ட பனங்கிழங்கின் வாசனை- இப்படி வகை வகையான வாசனையால் பனை குறித்த சிறு வயது நினைவுகளை மீட்டெடுக்க முயல்கிறேன்.

சின்னமேடு:

  • எனினும் பனை என் கவனத்தைப் பெரிதாக ஈர்த்தது சுனாமி பின்னணியில்தான். கடலூர், நாகை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல கடற்கரைகளில் பேரழிவை ஏற்படுத்திய 2004 ஆழிப்பேரிடர் சின்னமேடு (நாகை மாவட்டம்) கிராமத்தை மட்டும் எப்படி விட்டு வைத்தது என்பதுதான் அந்த கவனத்துக்குக் காரணம். கடலுக்கு அருகில் ஓர் உயர்ந்த மணற்குன்று; அதன் மறுபுறம் செழித்த வயல். மணற்குன்றை அரண்செய்து நிற்கும் ஓங்கி உயர்ந்த பனைமரங்கள்.
  • நிலத்தடி நீரைப் பாதுகாத்துக் கொண்டிருப்பது மணற்குன்றும் பனைகளும்தான். என் கிராமத்தின் (பள்ளம்துறை, கன்னியாகுமரி மாவட்டம்) கிழக்கிலும் மேற்கிலும் அமைந்துள்ள கடற்கரைகளான ஆராட்டு ரோட்டிலும் சங்குதுறையிலும் அமைந்திருந்த உயர்ந்த மணல் குன்றுகள் ஓட்டுமொத்தமாகச் சிதைக்கப்பட்டுவிட்டன. ஆராட்டு ரோட்டில் 20 பேரின் உயிரை சுனாமி காவு வாங்கியது.

பெண்ணை:

  • கடற்கரை மணல் வெளியை இலக்கியம் மென் புலமெனச் சுட்டுகிறது. இம்மணல் வெளியும் மணற்குன்றுகளும் நகரும் தன்மை கொண்டவை. கரைக்கடல் நீரோட்டமும், அலையும், காற்றும் அதற்குக் காரணமாகின்றன. உலகளாவிய கரைக்கடல் நீரோட்டமானது, மணலைக் குவித்தும் கரைத்தும் நகர்த்திக்கொண்டிருக்கிறது. அவ்வாறு கரைக்கு வரும் மணலை, காற்று நகர்த்திக் குன்றுகளை உருவாக்குகிறது. இக்குன்றுகளை பனை, தாழை, அடும்பு, இராவணன்மீசை போன்ற தாவரங்கள் பாதுகாக்கின்றன.
  • சங்க இலக்கியம் பனையை பெண்ணை என்கிற சொல்லால் குறிக்கிறது. பனை வளரும் இடம், பனையின் தோற்றம், அதன் பல்வேறு பயன்கள் என்பதாக ஏராளமான பாடல்கள் பனையை விவரிக்கின்றன. நெய்தல் சிறுகுடிகளில் பனையினடியில் மன்றம் கூடுவது குறித்துச் சொல்லப்படுகிறது. குலதெய்வத்தையும், ஊர்ப்பொதுத் தெய்வத்தையும் பனையிலேற்றி, அதனடியில் மன்றம் கூடியது - தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை / மன்றப் பெண்ணை-நற்.303:3-4.
  • சங்க இலக்கியத்தில் வருகிற, பனையில் கூடு கட்டும் பறவைகளின் பட்டியலில் அன்றில், குருகு, நாரை ஆகியவை முக்கியமானவை. (...நாரை இரற்றும் மடல்அம் பெண்ணை – ஐங். 114:3-4). அன்றில் பறவைகளுக்குப் பனைகளே சிறந்த குடியிருப்பு (இனமீன் அருந்து நாரையொடு பனைமிசை/ அன்றில் சேக்கு முன்றில்- அகம்.370:16-17). பனைமரத்திலிருந்து கள் இறக்கி அருந்தும் பழக்கம் விவரிக்கப்படுகிறது (ஓங்கித் தோன்றும் தீம்கள் பெண்ணை - நற்.323:1; இரும்பனந்தீம்பிழி யுண்போர் மகிழும் -நற்.38:3).
  • 500 மீட்டருக்கு அப்பால் பார்க்க முடியாத அளவுக்குச் சுவர் போல நெருக்கமான பனங்காடுகளை சாயல்குடி, சிக்கல் போன்ற கடற்கரைகளில் பார்த்திருக்கிறேன். அவ்வாறான பல இடங்களில் பனையேறுபவர்கள் ஒவ்வொரு பனையாக ஏறியிறங்குவதைத் தவிர்த்து, பனைகளுக்கு இடையில் நடந்து கடக்கும் விதமாக காற்றாடிக் கழைகளைக் கயிற்றால் பிணைத்திருப்பார்கள். தமிழகக் கடற்கரைகளில் பனையைப் பெயராகக் கொண்ட ஊர்கள் பல உண்டு- பனையூர்க்குப்பம் (செங்கல்பட்டு), கூட்டப்பனை (திருநெல்வேலி), குறும்பனை (கன்னியாகுமரி). தென்திரு விதாங்கூரில் ஏழ்குறும்பனை நாடு என்றொரு சிற்றரசு இருந்திருக்கிறது.

கடல் வாழ்வில் பனைபொருள்:

  • அறுவடையாகும் மீனைப் பத்திரப்படுத்த பாரம்பரிய மீனவர்கள் பனங் குருத்தோலையால் முடைந்த நெகிழ்வான கடகங்களைப் பயன்படுத்தினர். நீள்வட்ட வடிவில், மூன்றாய் மடித்துப் பாய்போல் வைத்துக் கொள்ளலாம். தரியமால் என்பது ஒமலில் திரிபு. மடிவலைகள் பயன்படுத்தும் ஒமல் ஒருவர் குளிருக்குச் சூடிக்கொள்ளும் அளவு பெரிதாக இருக்கும். கன்னியாகுமரியில் இதற்கு ஒமல் என்று பெயர்; வட தமிழகத்தில் பரி என்பர். பரியின் வடிவம் ஜாடியைப் போன்றும், பரிமாணம் சிறிதாகவும் இருக்கும்.
  • இந்தியாவின் மூத்த பொதுவுடைமைவாதி, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் ஒருமுறை வழக்கு ஆவணங்களைப் பரியில் எடுத்துவந்தார் என்றொரு குறிப்பு உண்டு. கடற்குடிகள் மடப்பெட்டி என்கிற மடித்த ஓலைப் பெட்டியைக் கடலுக்கு எடுத்துச் செல்வார்கள். வெற்றிலை, தூண்டில் போன்றவற்றை அதில் வைத்திருப்பர்கள். கடல் தங்கல் மீன்பிடி பயணத்துக்கான உணவுக் கலன்களைப் பனையோலைக் கடகத்தில் கொண்டு போவார்கள்.
  • கோழியாமுரல் வலைகளின் உருவாக்கத்தில் மஞ்சள் தோய்த்த குருத்தோலைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. கோழியாமுரல் எப்போதும் தெளிந்த நீரில் மேல்மட்டத்தில் இரைதேடும் உயிரினம். பளிச்சென்று தெரியும் மஞ்சள் பூசிய பனங்குருத்தோலையின் நிறம் மீன்களை வெருட்டி வலைக்குள் சிக்க வைக்கிறது.

காவோலை:

  • கடற்கரைப் பகுதிகளில் வீடுகளுக்குப் பனை மட்டையால் வேலி அமைப்பார்கள் (காவோலை முன்மிடை வேலி). இப்போதும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி கடற்கரைகளில் தென்னந் தோப்புகளிலும் வீட்டு மனைகளிலும் பனை மட்டை வேலிகளைப் பார்க்கலாம். பனை உணவுப் பதார்த்தங்கள் என்று எடுத்துக் கொண்டால்- பதனீர், கள், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, தவண் எல்லாமே சத்தான, ஆரோக்கியமான உணவுகள். கடற்கரை ஊர்களில் பதனீரில் பாற்சோறு சமைப்பார்கள். அரிசி, பெரும்பயிறு, தேங்காய்த் துருவல் சேர்த்த சத்தான உணவு.

பனைக் கணியம்:

  • இப்படி, அன்றாட நெய்தல் வாழ்வில் பனையின் பயன்பாடுகள் ஏராளம் இருக்க, கடல் புகும் மீனவர்களுக்குப் பனைமரங்கள் வேறொரு வகையில் உதவியிருக்கின்றன. நவீன இடங்கணிப்பான் இல்லாத காலத்தில் கடலில் குறிப்பிட்ட இடங்களில் சென்று தூண்டில் வீசுவதற்கும், முன்தினம் விரித்து வைத்த வலையை மறுநாள் போய் எடுத்து வருவதற்கும் கரை அடையாளங்களின் அடிப்படையில் கணியம் குறிப்பார்கள்.
  • கன்னியாகுமரி மீனவர்களுக்கு மருந்துவாழ் மலை, மகேந்திரகிரி மலை, சுங்கான்கடை மலை போன்றவை முக்கியமான கரைநில அடையாளங்கள். போலவே, கோயில்களின் உயர்ந்த கோபுரங்கள், பனைமரக் கூட்டங்களையும் கணியக் குறிப்பாகப் பயன்படுத்துவார்கள். பள்ளம்துறை (கன்னியாகுமரி) மீனவர்கள் மீன்பிடித்து வந்த மடைகளில் ஒன்று, நாகர்கோவில் பகுதியிலுள்ள ஏழு பனைகளைக் கணியமாய்க் கொண்டிருந்தது. பனைகள் வெட்டி வீழ்த்தப்பட்டபோது மீனவர்கள் அம்மடையின் கணியக் குறிப்பை இழந்து போயினர்.

பனை நங்கூரம்:

  • தாப்பி (சூரத், குஜராத்) ஆற்றுக் கழிமுகப் பகுதியில் கடல் புகும் மீனவர்கள் பனந்தடிகளை நங்கூரமாகய்ப் பயன்படுத்துகிறார்கள் என்பது இன்னொரு சுவையான செய்தி. தாப்பி ஆற்றுக் கழிமுகத்திலிருந்து ஏறத்தாழ 20 மீட்டர் ஆழக்கடலில் கன்னியாகுமரி விசைப்படகுகள் வழக்கமாக நெடுந்தூண்டில் நீட்டுகின்றன. குஜராத்திகளின் விசைப் படகுகள் கில்நெட் விரித்திருப்பார்கள்.
  • தாப்பி ஆற்றுக் கழிமுகம் மிகப் பெரியது. ஆறு, நிறையச் சேறு, மணலைக் கடலுக்குள் தள்ளிக் கடலின் ஆழத்தை நிரம்பவே குறைத்திருக்கும். கரையிலிருந்து பத்து மணிநேரம் கடலுக்குள்ளே ஓடினால்தான் 20 மீட்டர் ஆழம் கிடைக்கும்; இந்த ஆழம் கூட, கடல் ஏற்றமாக இருக்கும் காலத்தில்தான். வற்றம் வரும்போது, ‘இதோ பார்!’ என்று கடல் பின்னோக்கிப் போய்விடுகிறது. குஜராத்தி மீனவர்கள் ‘கரண்ட் ஜாத்தா ஹை’ என்று துல்லியமாக அந்த நேரத்தைக் கணித்துச் சொல்லிவிடுவார்கள்.
  • கன்னியாகுமரி விசைப்படகுகள் வழக்கம்போல தூண்டில் நீட்டியிருக்கின்றன. திடீரென்று வருகிறது கடல் வற்றம். ஒரு பிரளயம் வந்ததுபோல, கன்னியாகுமரி படகுகளைக் கடலுக்குள்ளே சரசரவென்று இழுத்துக்கொண்டு போகிறது! ஆயிரம் கிலோ நங்கூரத்தை இறக்கினாலும் அந்த நீரோட்டத்துக்குப் படகு தாக்குப் பிடிக்கமாட்டேன் என்கிறது. ஆனால் பக்கத்திலேயே கிடக்கும் குஜராத்திப் படகுகள், ஆணி அடித்ததுபோல அசையாமல் கிடக்கின்றன.
  • அங்குள்ள ஒவ்வொரு படகுக்காரரும் பெரிய பெரிய பனைமரத் தண்டுகளைக் கழிமுகத்தின் சேற்றுப்பரப்பில் ஆங்காங்கே போட்டு, அதில் வடத்தைப் பிணைத்து, அதனுடன் ஒரு மிதவையைக் கட்டி வைத்திருக்கிறார்கள். பனை மரங்கள் நாளடைவில் சேறு சகதியில் ஆழமாகப் புதைந்து போய்விடும். நேரம், பருவகாலம்தோறும் கடல் வற்றம் மாறிக்கொண்டிருக்கும் என்றாலும், அங்குள்ளவர்களுக்கு அது அத்துப்படி. ஏற்றம் வருகிற நேரத்தில் படகுகள் தொழில் பார்க்கும்; வற்றம் வருகிற நேரம் அவரவர் பாட்டையிலுள்ள வடத்தில் படகைக் கட்டிவிடுவார்கள். அவர்களுக்கு இது தொழில் மூதலீட்டின் ஒரு பகுதி.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்