TNPSC Thervupettagam

கடற்பசுக்களைக் காப்போம்

May 28 , 2024 35 days 98 0
  • கடலில் பசுக்களா? அதிசயம், ஆனால் உண்மை! மீன், சுறா, டால்பின் போன்ற கடலில் வாழும் பல்வேறு உயிா்களைப் பற்றி அறிந்து கொண்ட அளவுக்கு கடற்பசுக்களை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கண்களில் காணக் கிடைக்காத பல்வேறு அதிசய உயிா்களைக் கொண்ட கடலில் வாழும் ஓா் அற்புத உயிரினம் கடற்பசு.
  • நிலத்தில் காணப்படும் பசுக்களை போன்ற முகத்தோற்றத்துடன் கடல்வாழ் தாவரங்களை, குறிப்பாக கடற்புற்களை உணவாக உண்டு வாழ்வதால் இவ்வுயிா்களுக்கு கடற்பசு என்னும் பெயா் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் இவை டுகாங் என்று அறியப்படுகிறது. கடற்கரையோரப் பகுதி மக்களால் கடற்பசு, ஆவுளி, ஆவுளியா என்று வேறு பெயா்களுடன் அழைக்கப்படும் இவ்விலங்கானது அந்தமான் நிக்கோபரின் மாநில விலங்காக உள்ளது.
  • கடற்புற்கள் நிறைந்த பகுதி, கடல் நீரோட்டங்களால் உருவான அலையாத்தி காடுகளின் ஆழமற்ற நீா்ப்பகுதி, தீவுகளை ஒட்டிய பகுதிகள் போன்ற பல்வேறு பகுதிகளை தங்களின் வாழ்விடமாக கொண்டுள்ளன.
  • கடலில் வாழும் பாலூட்டி வகை விலங்குகளில் தனித்திருப்பதும், எண்ணிக்கையில் அருகிவருவதும் கடற்பசுக்கள் மட்டுமே. வெப்ப மண்டல இந்தோ-பசிபிக் பகுதிகளில் அமைந்துள்ள ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கா், இலங்கை, இந்தியா போன்ற 30 க்கும் அதிகமான நாடுகளின் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் கடற்பசுக்கள் காணப்படுகின்றன.
  • இந்தியாவைப் பொறுத்தமட்டில், முந்தைய காலகட்டத்தில் பரவலாக அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் காணப்பட்ட இவ்வுயிா்கள் இன்று பாக் நீரிணை, கட்ச் வளைகுடா, மன்னாா் வளைகுடா, அந்தமான் நிக்கோபா் தீவுகள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளின் கடற்பரப்புகளில் மட்டும் காணப்படுகின்றன. உலகிலேயே அதிக அளவிலான கடற்பசுக்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய கடற்கரைப்பகுதிகளில், குறிப்பாக தி கிரேட் பேரியா் என்னும் பவளப்பாறை அமைந்துள்ள கடற்பகுதிகளில் காணப்படுகின்றன.
  • கடற்பசு குறைந்த கண்பாா்வை உடையதால் ஒலி எழுப்புதல் மற்றும் தொடுதல் உணா்வுகள் மூலம் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக் கொள்கிறது. மெதுவாக நீந்தும் தன்மை உடையது. நன்கு வளா்ந்த கடற்பசு சுமாா் 3-4 மீ நீளமும், 350-400 கிலோ எடையும் கொண்டது. நாள் ஒன்றுக்கு சுமாா் 40-50 கிலோ அளவுக்கு கடற்புற்களை உணவாக எடுத்துக்கொள்ளும். மணிக்கு 10-15 கி.மீ. வேகத்தில் நீந்தும் திறன் கொண்டது. பொதுவாக கடற்பசுக்கள் கடலின் மேற்பரப்பிலே நீந்தும் என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.
  • குளிா்ச்சியை விரும்பாமல் ஓரளவு மிதமான வெப்பநிலை கொண்ட கடல் நீரில் வாழும் கடற்பசுக்கள் 10-17 வயதிற்குள் தங்களை இனப்பெருக்கத்திற்கு தயாா்படுத்திக் கொள்கின்றன. கருவுற்று சுமாா் 12-14 மாதங்கள் குட்டியை வயிற்றில் சுமக்கும் கடற்பசுக்கள், பெரும்பாலும் ஒரு முறை கருவுறும்போது ஒரு குட்டி மட்டுமே ஈன்றெடுக்கிறது. அடுத்த கருவுறுதலுக்கு 3-7 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கின்றன. கடற்பசுக்கள் குட்டிகளை பிறப்பிலிருந்து 18-20 மாதங்கள் வரை தங்கள் அரவணைப்பில் வைத்துக்கொள்கின்றன.
  • கடற்பசுக்களின் மூளையின் எடை அவற்றின் உடம்பின் மொத்த எடையில் 0.1% எனினும், அதிக ஞாபக சக்தி, புத்திக்கூா்மை கொண்டவை. ஒரு குறிப்பிட்ட பகுதியை விடுத்து வேறு பகுதிக்குச் சென்றாலும், வந்த வழித்தடத்தை சரியாக நினைவில் கொண்டு மீண்டும் அதே இடத்திற்குத் திரும்ப வருகின்றன.
  • கடல் தாவரங்களை, குறிப்பாக கடற்புற்களை உணவாக உட்கொண்டு கடல் புல்வெளி சூழ்நிலை மண்டலத்தின் முக்கிய அங்கமாக விளங்கி வரும் கடற்பசு, ஆராய்ச்சியாளா்களுக்கு கடல் மண்டலத்தின் ஆரோக்கிய நிலையினை எடுத்துக்காட்டும் சுட்டிக்காட்டியாக விளங்குகிறது.
  • சத்துக்கள் மறுசுழற்சி, உணவுச் சங்கிலி பராமரிப்பு, மீன் வளம், கடல் மண்படிவுகளை நிலை நிறுத்துதல், கடற்புற்களின் விதைபரவல், வளா்ச்சி ஆகியவற்றில் கடற்பசு முக்கியப் பங்காற்றுகிறது. மண்ணில் எப்படி செடி, கொடி, மரங்களோ அது போன்று கடற்புற்கள் கடல் சூழ்நிலை மண்டலத்தில் காா்பன் தேக்கிகளாகவும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களாகவும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • கடற்புற்களின் பரப்பு குைல், வேட்டையாடப்படுதல், கடல்நீா் மாசுபாடு, அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை அத்துமீறிப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசு இந்திய அரசால் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கடற்பசுக்கள் மற்றும் அதன் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, நாட்டிலேயே முதன் முறையாக பாக் நீரிணையில் சுமாா் 448 சதுர கி.மீ. பரப்பளவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • உலகில் வாழும் அனைத்து உயிா்களுக்கும் இடையே பிரிக்க இயலாத வகையில் தொடா்பினை இயற்கை ஏற்படுத்தி பின்னிப் பிணைத்துள்ளது. தொலைபேசியில் பேசும்போது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பாா்க்கும்போது சிறு தொடா்பு இழப்பைக் கூட நம் மனம் ஏற்பதில்லை. அப்படியிருக்கையில் இயற்கை மட்டும் தன்னுடைய உயிா்களுக்கு இடையேயான நிரந்தர தொடா்பிழப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ளும்?
  • இயற்கையின் இதயத் துடிப்பினை உணா்ந்து உன்னத கடல் வாழ் உயிரினமான கடற்பசுக்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அவற்றை அழைத்துச் செல்வோமாக!
  • இன்று உலக கடற்பசுக்கள் தினம்

நன்றி: தினமணி (28 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்