TNPSC Thervupettagam

கடலின் உயிர்த்துடிப்பு நீடிக்குமா?

January 25 , 2025 3 days 33 0

கடலின் உயிர்த்துடிப்பு நீடிக்குமா?

  • உலகின் உயிரினங்கள் அதிகமான எண்ணிக்கையில் ஒன்றுதிரளும் இடம் பெரிங் நீரிணை. அலாஸ்காவின் செவார்ட் தீபகற்பத்துக்கும், ரஷ்யாவின் சுக்சி தீபகற்பத்துக்கும் தெற்கில் அமைந்திருக்கிறது பெரிங் கடல். வழக்கமாகப் பகல் வெளிச்சம் அங்கு 7 மணிநேரம் மட்டுமே இருக்கும். ஜூன் - ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் வடதுருவப் பகுதி சூரியனை நோக்கிச் சாயும். அந்நாள்களில் மட்டும் 17 மணிநேரப் பகல் வெளிச்சம் கிடைக்கும். க்ரில், மிதவை உயிரிகள் இந்தப் பருவத்தில் பல்கிப் பெருகுகின்றன.
  • இந்த மூன்று மாத காலமும் பெரிங் கடல் உயிர்த்துடிப்பு மிகுந்ததாக மாறிவிடுகிறது. ஆயிரக்கணக்கான கூன்முதுகுத் திமிங்கிலங்கள் (Hump back whales) தெற்கிலிருந்து புறப்பட்டு, 6,000 மைல் தொலைவிலிருக்கும் புவிக்கோளத்தின் எதிர்முனைக்கு ஒரு மாதக்காலம் பயணித்து, சரியாக ஜூன் மாதத் தொடக்கத்தில் பெரிங் கடலுக்கு வந்துசேர்கின்றன. கூன்முதுகுத் திமிங்கிலங்களுக்கு இன்னொரு பெயர் உண்டு- தாடைத் தட்டு (Baleen whales) திமிங்கிலங்கள்.
  • இவற்றுக்குப் பற்கள் கிடையாது. மேல் தாடையிலுள்ள தாடை எலும்புகள் சலிப்பான் தட்டுகளாக உருமாறியிருக்கின்றன. மிதவை விலங்கு உயிரிகள், க்ரில் எனப்படும் கணுக்காலி உயிரினங்கள் போன்றவற்றைச் சலித்துத் தண்ணீரை வெளியேற்றி, இரையை விழுங்குவதற்கான தனித் தகவமைப்பே, இந்தத் தாடைத் தட்டு.
  • திமிங்கிலங்களோடு கூடவே லட்சோபலட்சம் சூட்டி ஷியர்வாட்டெர் (Puffinus griseus) கடல் பறவைகளும் இங்கு வந்துசேர்கின்றன. அன்றாடம் 500 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கக்கூடியவை இவை. கூன்முதுகுத் திமிங்கிலங்களும் ஷியர்வாட்டர் பறவைகளும் இங்கு வலசை வருவதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான் - இரை தேடல். ஓராண்டுக் காலத்துக்கான உணவை இந்த மூன்று மாதங்களில் சாப்பிட்டாக வேண்டும். ஒரு திமிங்கிலம் அன்றாடம் 3,000 கிலோ அளவுக்கு இரை உண்கிறது.
  • இந்தக் கொண்டாட்டமெல்லாம் 90 நாள்களுக்குத்தான். பிறகு, திமிங்கிலங்கள் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விடுகின்றன. இனப்பெருக்கத்துக்காக வெப்பமண்டலக் கடல்களுக்கு அவை சென்றாக வேண்டும். திமிங்கிலங்களின் நாள்காட்டி சாதாரணமாக மாறுவதில்லை. அவை பயணிக்கும் பாதைகளும் மாறுவதில்லை. கடலின் வெப்பநிலை உயர்வதும், அமிலமயமாவதும், கடல் நீரோட்டங்களில் ஏற்படும் திடீர் மாற்றமும் பெரிங் கடலின் இயல்பை மாற்றிக்கொண்டிருக்கின்றன. கூன்முதுகுத் திமிங்கிலங்களின் வலசையும் பிறழ்வு கண்டுவிட்டது.
  • பெரிங் கடலின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த கடலுயிரினங்களில் ஒன்றான பனி நண்டு, கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. அவற்றின் தொகை 2018-2021 காலக்கட்டத்தில் 800 கோடியிலிருந்து ஒரு கோடியாகச் சுருங்கிவிட்டது. மிகை மீன்பிடித்தலும் காலநிலை மாற்றமும் அதற்கு முதன்மைக் காரணங்கள் எனப்படுகின்றன.

வளக் கணிப்பில் புதுமை:

  • இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் வானியல் கருதுகோள்கள் சுமேரிய, சீனப் பதிவுகள் உள்ளிட்ட பல்லாயிரம் வருடப் பழமை வாய்ந்த அறிவியல் பதிவுகளின் ஈவு ஆகும். சூரியப்புள்ளி, வால்விண்மீன்கள், சூப்பர்நோவா என்கிற மீயொளிர் விண்முகில்கள் பற்றிய அவதானிப்புகளின் அடிப்படையில் அமைந்த இவ்வறிவுக் கட்டுமானத்தைப் போன்றே, காற்று, கடல் நீரோட்டங்கள் போன்ற தரவுகளின் அடிப்படையில் கடலியல் அறிவு கட்டமைக்கப்பட்டது. பிற்காலத்தில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை கடலியல் ஆய்வு வகைமாதிரியாக உருவாக்கப்பட்டது என்கிறார் காலநிலை அறிஞர் மௌரி.
  • ஆயின், 1870 தொடங்கி, ஆண்டுவாரியாகச் சேகரிக்கப்பட்டு வந்த ‘கடற்பரப்பு வெப்பநிலை’ தரவுதான் பூமியின் வெப்பநிலை கூடிக்கொண்டே போகிறது என்கிற பேருண்மையை உலகுக்குச் சொல்லும் அடிப்படை ஆதாரமானது! கடலின் மேற்பரப்பிலுள்ள ஒரு சென்டிமீட்டர் நீரின் வெப்பநிலையை (Sea Surface Temperature - SST) மீன்வளத்தை முன்கணிக்கும் (Potential Fishing Zone) தரவாகக் கண்டறிந்திருக்கிறார்கள். ஏழெட்டு நாள்களுக்கு முன்னதாக மீன்வளத்தை இப்படி முன்கணிப்பது சாத்தியம்.
  • கடலின் மேற்பரப்பு உமிழும் அகச்சிவப்புக் கதிர்களைச் செயற்கைக்கோள்கள் பதிவுசெய்து தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்புகின்றன. இதுதான் மீன்வளக் கணிப்பிற்கான அடிப்படைத் தரவு. உணவுச்சங்கிலியின் அடிப்படைத் தொகுதியான பைட்டோபிளாங்க்டன் (மிதவைத் தாவர உயிரிகள்) என்னும் உணவு உற்பத்தியாளர்களின் வருகைக்குக் கட்டியம் கூறுகிறது இந்த வெப்பநிலை உயர்வு; அதைத் தொடர்ந்து மிதவை விலங்கு உயிரிகள் என்பதாக உணவுச் சங்கிலியின் மேல்மட்ட இரையாடிகளான பெரிய மீன்கள் வரை காலவரிசையின்படி இரைதேட வந்துசேர்ந்துவிடுகின்றன.

மீன்வள வகைமாதிரிகள்:

  • உலக அளவில் காலம்தோறும் ‘அனுமதிக்கத்தக்க அறுவடை எல்லை’ வரையறுத்து வழங்கப்படுகிறது; மீனவர்களும் மீன்பிடிக் கலன்களும் அவற்றைச் சரியாகப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கான வகைமாதிரிகளும் உருவாக்கப்படுகின்றன.
  • வகைமாதிரிகளின் போதாமை என்னவென்றால், கடலியல், மீனினங்களின் நடத்தை போன்ற கூறுகளை மட்டுமே இவை கணக்கில் கொள்கின்றன. நிகழ் தலைமுறையின் நினைவு அடுக்கிலுள்ள விவரங்களின் அடிப்படையில் உருவாக்கும் வகைமாதிரிகள் முழுமையற்றவை. பரிணாம வரலாறு, சூழலியல் கூறுகளைக் கணக்கில் கொள்ளாத இது போன்ற வகைமாதிரிகளின் நம்பகத் தன்மை கேள்விக்குரியது.
  • இது போன்ற பல பதிவுகளில் முக்கியமான சில உண்மைகள் விடுபட்டுப் போகின்றன. உதாரணமாக, தெற்கு பசிபிக் பவளப்புற்றுப் பகுதிகளில் பெண்கள் அறுவடை செய்துவரும் மீன்கள் ஆண்களின் அறுவடைகளுக்கு நிகரானது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உலகெங்கும் உள்ள பவளப்புற்றுகளின் மீன்வள வாய்ப்புகளை மீள்மதிப்பீடு செய்ய வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் ஆய்வு இது.

காலநிலையால் சரியும் மீன்வளம்:

  • 200 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் அட்லாண்டிக் கடற்பகுதியில் இருந்த ‘அறுவடைக்குத் தகுந்த மீன்வள’த்தில் பத்து விழுக்காடுதான் இப்போது உள்ளது என்கிறது மற்றோர் ஆய்வு. ஆலைக் கப்பல்களின் வருகைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே மீன்வளம் சரியத் தொடங்கியிருக்கிறது என்கிறார் மீன்வள அறிஞர் டேனியல் பாலி.
  • கடலின் உணவுச்சங்கிலியின் உச்சாணித் தொகுப்பாக அமைந்திருக்கும் பெரிய மீன்கள் பொதுவாகக் குறைந்த எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்பவை.
  • அவை தீவிரமாக வேட்டையாடப்பட்டுவரும் நிகழ்காலத்தைவிட, அன்றைக்கு அவற்றின் தாக்குப்பிடிக்கும் திறன் குறைவாக இருந்திருக்கலாம் என்பதே இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் புரிதல். காலநிலைப் பிறழ்வால் உலகக் கடல்களின் மீன்வளம் 2100இல் மேலும் 30% குறையும் என்கிறது மற்றோர் ஆய்வு. மீன்வள வரலாற்றைக் கணக்கில் கொள்ளுகிற, இவை போன்ற முன்முடிவுகளற்ற ஆய்வுகள்தான் தற்போதைய சூழல் உள்ள நிலைமையைத் துல்லியமாக மதிப்பிடவும், தொலைநோக்குடன் திட்டமிடவும் உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்