TNPSC Thervupettagam

கடல் இனிமேல் எங்களுக்கு இல்லை

December 26 , 2024 15 days 50 0

கடல் இனிமேல் எங்களுக்கு இல்லை

  • சுனாமி நிகழ்ந்து 20 வருடங்கள் உருண்டோடிவிட்டன. சுனாமிக்குப் பிறகு கடற்கரைச் சமூகத்தில் முன்னெப்போதும் கண்டிராத ஒரு நடுக்கம் தெரிகிறது. இந்நடுக்கம் பேரிடர்கள் ஏற்படுத்திய ஒன்றல்ல; பொதுச்சமூகமும் அரசும் அவர்கள்மீது தொடர்ந்து ஏற்படுத்திவரும் நெருக்குதல்களின் விளைவு.
  • 2014இல் மகேந்திரன் குறிப்பிட்டார் (1974, பழவேற்காடு): “புயலோ சுனாமியோ... எங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இயற்கை அல்ல. அரசும் அதன் கொள்கைகளும்தான்...” ஒக்கிப் பேரிடருக்குப் பிறகு மீன் விற்பனையாளர் மரியபுஷ்பம் (1963, வள்ளவிளை) சொன்னார்: “நாளை என்பது நேற்றோடு போய்விட்டது; கடல் இனிமேல் எங்களுக்கு இல்லை.”

கடற்​குடிகளின் முன்னுரிமை:

  • சுனாமி மறுகட்டுமான முயற்சிகள் கடற்​குடிகளின் தற்சார்பை மீட்​டெடுப்​ப​தில் அக்கறைப்​பட​வில்லை. அன்றாடம் கடலைக் கவனித்து மீன்​பிடித் தொழிலில் ஈடுபடு​வதற்கு இசைவாக மீனவர்கள் கடலுக்கு அருகிலேயே குடியிருக்க வேண்​டி​யுள்​ளது. அதே வேளை​யில், அவர்​களின் குடி​யிருப்புகள் பாது​காப்பான அளவுக்கு அலைவாய்க் கரையி​லிருந்து விலகிய​தாக​வும், தெருக்கள் கடலை நோக்கி​யும், வீடுகள் தெருவை நோக்கி​யும் அமைவதே பாது​காப்​பானது.
  • ஆனால், மீனவர்​களின் பாது​காப்​பைக் காரணம் காட்​டிப் பல இடங்​களில் அவர்​களின் குடி​யிருப்புகள் பறித்​துக்​கொள்​ளப்​பட்டன. கடற்கரை ஒழுங்​காற்று அறிவிக்கை, சூழலியல் தாக்க மதிப்​பீடு சட்டத் திருத்​தங்கள் அதற்கே துணைநின்​றுள்ளன என்பதே யதார்த்​தம். “நல்ல திட்​டங்​களுக்காக அல்ல, வாழும் இடத்​தைத் தக்க​வைத்​துக்​கொள்​வதற்கே அடித்​தட்டு மக்கள் தங்கள் வயிற்றுப்​பாட்​டைத் தியாகம் செய்து போராடிக்​கொண்டே இருக்க வேண்​டி​யிருக்​கிறது” என்கிறார் கு.பாரதி (நொச்​சிக்​குப்​பம்).

ஆழ்கடல் மீன்​பிடித் தொழில்:

  • இந்தியா​வின் 200 கடல்​மைல் எல்லைக்​குள்ளே 20 லட்சம் சதுர கிலோமீட்டர் தனியுரிமைப் பொருளா​தாரக் கடற்​பரப்பு உள்ளது. அதன் வளங்கள் இந்தி​யர்​களின் அறுவடைக்​கானவை என்பது பல அதிகாரி​களுக்கு விளங்​க​வில்லை. குமரி​முனைக்​குத் தெற்கே 10,500 சதுர கிலோமீட்டர் பரப்​பில் அமைந்​துள்ள இந்தியப் பெருங்​கடல் சுறாப்​பார் என்னும் மீன்​வளத்திட்டின் வள மேலாண்​மை​யிலும் இந்த அலட்​சியம் வெளிப்​படு​கிறது.
  • 2018இல் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பேரிடர் முன்னெச்​சரிக்கைக் கட்டமைவுகள் தொடர்பாக நிகழ்த்திய பயிலரங்​கில் கலந்​து​கொண்​ட​போது, ஒக்கிப் பேரிடர் அனுபவத்​தின் பின்னணி​யில், தேசியப் பேரிடர் மேலாண்​மைச் சட்டத்​தி​லும் திட்ட நிரலிலும் நடுக்​கடல் பேரிடர் மேலாண்​மைக் கூறுகளைச் சேர்க்க வேண்​டும் என்ப​தைப் பரிந்​துரையாக முன்​வைத்​தேன்.
  • அப்ப​யிலரங்​கில் கலந்​து​கொண்​டிருந்த டெல்லி அதிகாரி ஒருவர் என்னிடம் கேட்​டார்: “உங்கள் ஆட்களில் 90% பேரும் சட்ட விரோதமாக மீன் பிடிக்​கிறார்​கள், இல்லை​யா?” 2017 ஒக்கிப் பேரிடர் மீட்​புப் பின்னணி​யில் தமிழகத்​தின் ஓர் உயர் அதிகாரி, “எல்லை தாண்​டிப்​போகும் மீனவர்​களைப் பற்றி நாங்கள் கவலைப்​படத் தேவை​யில்லை” என்றார்.
  • “ஒரு திறமையான அரசாங்​கம், நாங்கள் பாது​காப்​பாகக் கடலுக்​குள் போய் மீன்​பிடிக்க வசதி செய்​துதர வேண்​டும்; போகாதே, புயல் வரும் என்று சும்மா மிரட்​டிக்​கொண்​டிருக்கக் கூடாது” என்கிறார் விசைப்​படகு மீனவர் பயஸ் (1972, தூத்​தூர்). அரசுகள் செவி​கொடுக்க​வில்லை என்பது​தான் சிக்​கல்.

அபலையர் மறுவாழ்வு:

  • பேரிட​ரால் நேரும் மரணமும் பொருளிழப்பும் எஞ்சி​யிருக்​கும் மனிதர்​களுக்​குப் பெருந்​துக்​கத்தை ஏற்படுத்து​கின்றன. அத்துயரம் நிவாரணங்​களால் ஈடுசெய்ய முடிகிற இழப்புகள் அல்ல. ஒக்கிப் பேரிடரில் 200க்​கும் மேற்​பட்​டோர் நடுக்​கடலில் மாண்​ட​போது அவர்களை நம்பி​யிருந்த பெண்கள் ஆதரவற்று நின்​றனர். துக்கம் பல அபலை​யரைத் தற்கொலை எண்ணத்​துக்​குத் தள்ளி​யிருந்​தது. இப்போது ‘டாட்​காம்’, ‘மனி​தி’, ‘ஒடா’ ஆகிய முகமை​களின் முனைப்​பில் சென்னை ஆற்றுநர் குழு​மத்​திலிருந்து 12 உளநல ஆற்றுநர்களை வரவழைத்​துப் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உளநல ஆதரவு வழங்​கினோம்.
  • நெய்தல் அபலை​யரின் மறுவாழ்வு குறித்​துப் பொது​வெளி​யில் கவனப்​படுத்​தினோம். பிற சமூகங்​களைப் போலன்றி, நெய்தல் பெண்​களுக்​குக் கருணை அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பு வழங்​கு​வதற்​குக் கல்வித் தகுதி தடையாய் நிற்​கிறது. வேணாட்டுக் கடற்​கரைப் பகுதி​யில் அடிப்​படைத் தகுதி​யுள்ள ஆறு அபலை​யருக்கு மாநில அரசு வேலை​வாய்ப்பு அளித்​தது.

தவறவிட்ட புள்​ளிகள்:

  • சுனாமிப் பேரிடர்க் காலத்​தைவிட ஒக்கிப் பேரிடர்க் காலத்​தில் கூர்​மை​யாக​வும் வீரிய​மாக​வும் நெய்தல் மக்கள் ஊடகங்​களில் தங்களை வெளிப்​படுத்​தினர். ஆனால், ஊடகர் அருள் எழிலன் குறிப்​பிடு​வது​போல, ‘கடற்​கரை​யில் சுதந்​திர​மாய் வாழ்வது எங்கள் உரிமை’ என்கிற அவர்​களின் கருத்தை ஊடகங்கள் தவறவிட்டு​விட்டன. போலவே, நெய்தல் சமூகத்​தைச் சார்ந்த சிலர், ‘படித்த இளைஞர்கள் வேலை கிடைக்​காத​தால் கடலுக்​குப் போனார்​கள்’ என்கிற அபத்​தமான கருத்​தைச் சொல்​லிக்​கொண்​டிருந்​தனர். மீன்​பிடித் தொழில் இழிவானது என்கிற மேட்​டிமைப் பார்​வையி​லிருந்து உருவாகும் கருத்து இது.
  • இதில் துரை​முத்து​வின் பார்வை தெளிவாக உள்ளது: “மீனவர்​களுக்கு மாற்றுத் தொழில் என்பது பொருளற்ற பேச்சு; தந்தை​யின் தொழிலைச் சூழலுக்​கும் தேவைக்​கும் ஏற்றபடி நவீன​மாக்கக் கற்றுக்​கொடுத்​தால் மகன் வேறு தொழிலுக்​குப் போவானேன்?” அறுவடை​யின் விலையை நிர்​ண​யிக்​கும் ஆற்றல் மீனவர்​களிடம் இல்லை.
  • கடற்கரை இளைஞர்கள் மீன்​பிடிக் கருவி உற்பத்தி, மீன்​பிடித்​தல், சந்தைப்​படுத்தல் சார்ந்த தொழில்​நுட்பக் கல்வி கற்றுத் தொழிலில் தடம் ப​திப்​பதும், கூட்​டாண்மை வணிக​முறை​யில் இறங்​கு​வதும் அப்பெருங்​கனவை நனவாக்​கும். அதற்கு இசைவாக, கொள்​கைத் தளங்​களில் கடற்​குடிகள் நுழைதல் வேண்​டும். 2020 பெருந்​தொற்றுக் காலத்​தைத் தொடர்ந்து வேணாட்டுப் பட்ட​தாரி இளைஞர்​களும் இளம்​பெண்​களும் மீன் விற்​பனை​யில் இறங்​கியது வரவேற்கத் தகுந்த மாற்​றமே.

திணைநிலத்​தின் தற்சார்பு:

  • திணைநிலச் சமூகத்​தின் எதிர்கால நம்பிக்கை அதன் குடிமனை​யும் அடிப்படை வாழ்​வா​தா​ர​மும் ஆகும். அவை பேணப்​பட்டு​வரும் காலம் வரை, சமூகக் கட்டமைப்பு​களின் கட்டுறுதி பராமரிக்​கப்​படும் வரை ஒரு சமூகம் பேரிடர்களை எளிதில் எதிர்​கொள்​ளும்; பேரிடர் பாதிப்பு​களி​லிருந்து எளிதில் மீண்​டெழும், தன்னை மீளக் கட்டமைத்​துக்​கொள்​ளும். தமிழகக் கடற்​கரைகளைப் பொறுத்​தவரை, குடிமனை​களும் முதன்மை வாழ்​வா​தா​ரமான கரைக்​கடல் மீன்​வள​மும் ஏற்கெனவே பலவீனப்​பட்​டிருந்தன.
  • சுனாமிக்கு முன்னரே கரைக்​கடல் (<50மீட்டர் ஆழம்) மீன்​வளம் பெரும் சிதைவைச் சந்தித்​திருந்தது என்பதை இந்திய அளவைத்தளத் தரவுகள் நிறு​வி​யிருந்தன. பல முதன்​மையான மீனினங்கள் காணாமல் போய்​
  • விட்​டதாகத் தமிழகத்​தின் மூத்த மீனவர்கள் ஆதங்​கப்​பட்​டனர். கரைக்​கடலில் வழமையாக மீன்​வளத்​தைச் செழிக்​கவைக்​கும் பருவமழை வெள்ளம் கடலுக்கு வந்துசேர​வில்லை. காலநிலைப் பிறழ்வு பருவ​காலங்​களின் வரிசை முறையை​யும் பலவகை மீன்​களின் சீரான வருகை​யை​யும் இல்லாமல் ஆக்கி​யிருக்​கிறது. கொள்​கைத் தளங்​களில் இவை குறித்த ஆழமான பார்வை இல்லை என்பது முக்​கியமான சிக்​கல்.

மீன்​வளத்தை ஒழுங்​குபடுத்த வேண்​டும்:

  • உயர் தொழில்​நுட்​பம், பெருஞ்​சந்​தை​யின் வரவுக்கு முந்தைய காலத்​தில் மீன்​பிடிக் கருவி உற்பத்தி, மீன் அறுவடை, சந்தைப்​படுத்​தல்​/ம​திப்​புக்​கூட்டுதல் என்பதான மூன்று வகைத் தொழில்​களும் அந்தச் சமூகத்​தின் கையிலேயே இருந்தன. அக்காலத்​தில் வறுமை​யும் பஞ்ச​மும் இருந்தன என்றாலும் அந்தச் சமூகம் தற்சார்பு பேண முடிந்​தது; பெண்​களின் நேரடிப் பங்களிப்புக்கான இடமும் இருந்​தது.
  • உள்ளூர்ச் சந்தை உறவுகள் செழித்​திருந்தன. நவீனத் தொழில்​முறை​களால் மீன்​வளம் வளர்ந்​தது, கடற்​கரை​யில் பணப்பு​ழக்கம் பெரு​கியது என்ப​தெல்​லாம் உண்மையே. ஆனால், ஒழுங்​குபடுத்​தப்​படாத மீன்வள வளர்ச்​சி​யின் நிகர விளைவு என்ன? ஆய்வாளர் வ.கீதா சொல்​வது ​போல, ‘மீன்​பிடித் தொழில் கடலுக்​குத் தொடர்​பில்​லாதவர்கள் பொருளீட்டும் களமாக மாறி​விட்டது’.
  • ‘வளர்ச்​சி’யைச் சொல்லி, கடலை​யும் கடற்​கரையை​யும் பெரு​வணிகத் திட்​டங்​களுக்​குத் தாரை​வார்த்து​வரும் ஆட்சி​யாளர்கள் ஊன்றிப் படித்​துத் தீர்வு காண வேண்டிய பல சிக்​கல்கள் நெய்தல் நிலத்​தில் உள்ளன. நி​தி​யுதவியை​விட, அரசுகளிடம் கடற்​குடிகள் எ​திர்​பார்ப்பது சமூகநீ​தி​யைத் தக்​கவைக்​கும் ​கொள்கை நடை​முறை​களே. அதோடு, வ.கீதா குறிப்​பிடு​வது​போல, ‘பேரிடர்​களின்​போது மட்டுமே அவர்​களைப் பற்றிச் சிந்​திப்பது என்கிற மனப்​போக்கைச் சமவெளிச்​ ச​மு​தாயம்​ கைவிட்​டுவிட வேண்​டும்​’.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்