கடல்வழியில் பறக்கும் வாகனம் தயாரிக்கும் சென்னை ஸ்டார்ட்அப்
- தொழில்நுட்ப வளர்ச்சியால் தரை, நீர், ஆகாய போக்குவரத்தில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை ஐஐடி ஆதரவுபெற்ற வாட்டர்பிளை டெக்னாலஜிஸ் என்ற ஸ்டாட்ர்ட்-அப் நிறுவனம், கடல்வழி போக்குவரத்தில் புதியதொரு பரிமாணத்தை ஏற்படுத்தும் வகையில் மின்சார சீகிளைடர் எனப்படும் கடல்வழி பயணிக்கும் வாகனத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான முன்மாதிரியை பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா கண்காட்சியில் அந்த நிறுவனம் காட்சிப்படுத்தியது.
- விங்-இன்-கிரவுண்ட் (டபிள்யூஐஜி) என்று அழைக்கப்படும் இந்த சீகிளைடர்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பை கொண்டது. இது கடலோர பகுதியில் கடல் மீது பறக்கும். கடல் மட்டத்திலிருந்து மேல் எழும்பி சுமார் 4 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.
- இது மணிக்கு 500 கி.மீ. வேகத்தை எட்டக்கூடியது. இதன் மூலம், சென்னை-கொல்கத்தா இடையிலான 1,600 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் பயணிக்கலாம். கட்டணம் வெறும் ரூ.600 ரூபாய் மட்டுமே. கொல்கத்தாவுக்கு சென்னையிலிருந்து ஏசி மூன்றடுக்கு ரயிலில் செல்ல ரூ.1,500-க்கு மேல் செலவாகும் நிலையில் அதைவிட சீகிளைடர் டிக்கெட் கட்டணம் மிக மலிவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
- வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 100 கிலோ எடையுடைய சீகிளைடர் முன்மாதிரியை உருவாக்க வாட்டர்பிளை திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு டன் மாதிரி இந்த ஆண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட உள்ளது. 20 இருக்கைகள், நான்கு டன் பேலோடு கொண்ட முழு அளவிலான பதிப்பு அடுத்த ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று வாட்டர்பிளை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இதன் பேட்டரி சக்தி 500 கி.மீ. வரை செல்லக்கூடியதாக இருக்கும். ஹைட்ரஜன்-எலக்ட்ரிக் மாடல் 2,000 கி.மீ. வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று வாட்டர்பிளை கூறியுள்ளது.
- அவசர காலங்களில் வழக்கமான விமானங்களை விட சீகிளைடர் மிகவும் பாதுகாப்பானவை. ஏனெனில், அவை தண்ணீரில் கூட தரையிறங்க கூடியவை. சீகிளைடரை பயன்படுத்தி 2029-க்குள் கண்டம்விட்டு கண்டம் செல்லும் வகையில் துபாய்-லாஸ்ஏஞ்சல்ஸ் வரை பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, சென்னை-சிங்கப்பூர் வழித்தடத்தையும் இந்நிறுவனம் குறிவைத்துள்ளது.
- சீகிளைடர் தயாரிப்புக்கு இந்திய கப்பல் பதிவு அமைப்பிடம் இருந்து 2026-க்குள் சான்றிதழை பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், குடிமக்கள் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான சீகிளைடர்களை உருவாக்குவதை அந்நிறுவனம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜீரோ கார்பன் உமிழ்வு, குறைந்த செலவினம் காரணமாக, மருந்து, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இதன் தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
- செயல்திறன், வணிக நோக்கத்தை மையமாகக் கொண்டு சீகிளைடர்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், கடலோர காவல் படைக்கு சாத்தியமான ராணுவ பயன்பாடுகளுக்காக வாட்டர்பிளை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை ஐஐடி-யில் முதல் எலக்ட்ரிக் ரேஸ் காரை உருவாக்கியதுடன், உயர் செயல் திறன் கொண்ட மின்சார வாகனங்களை உருவாக்குவதில் தங்களுக்கு மிகச்சிறந்த அனுபவம் இருப்பதாக வாட்டர்பிளை தெரிவித்துள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 03 – 2025)