TNPSC Thervupettagam

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: மக்களை துன்புறுத்தும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை

December 12 , 2024 16 days 35 0

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: மக்களை துன்புறுத்தும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை

  • கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுதவிர, தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வு, குப்பை வரி மற்றும் தொழில் வரி உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் குரல் எழுப்பியுள்ளனர். கடைகள், வணிக நிறுவனங்களின் வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கும்போது, அந்த தொகையை வாடகை வசூலிப்பவர்கள் நிச்சயம் செலுத்தப் போவதில்லை. தற்போது வசூலிக்கும் வாடகை தவிர கூடுதல் ஜிஎஸ்டி தொகையை கடை அல்லது வணிக நிறுவனங்களை நடத்தும் வணிகர்களிடம் இருந்தே வசூலிப்பார்கள். அவர்கள் அந்த தொகையை தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் மீதே விதிப்பார்கள். இதன்மூலம், பொருட்களின் விலை அதிகரிப்பதுடன் கடைசியில் நுகர்வோர் மீதே சுமை ஏறும்.
  • தற்போது நடுத்தர வர்க்கத்தில் உள்ள சம்பளதாரர்கள் எண்ணிக்கை 8.50 கோடிக்கும் அதிகம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஏற்கெனவே தாங்கள் பெறும் சம்பளத் தொகைக்கு 10 முதல் 30 சதவீதம் வருமான வரி செலுத்துகின்றனர். இப்படி வருமான வரி செலுத்திவிட்டு பெறும் மீதமுள்ள தொகையை எங்கு செலவு செய்யச் சென்றாலும் அங்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன்மூலம் சம்பளதாரர்கள் இரட்டை வரிவிதிப்புக்கு ஆளாகின்றனர். ஒன்று வருமானத்துக்கு வரி விதிக்கப்பட வேண்டும் அல்லது செலவழிக்கும் இடத்தில் வரி விதிக்கப்பட வேண்டும். இரண்டு பக்கமும் வரி விதிக்கப்படுவது சாதாரண நடுத்தர மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குகிறது. இதன்மூலம் சம்பளம் வாங்குபவர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை வரியாக செலுத்தும் நிலை ஏற்படுகிறது.
  • அரசு இயந்திரம் இயங்குவதற்கும், நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்கும் மக்களிடம் வரி வசூலிப்பது அவசியம்தான். அதேநேரம், அந்த வரியை மக்களிடம் எப்படி வசூலிக்க வேண்டும், எந்த அளவுக்கு வசூலிக்க வேண்டும் என்பதற்கு வரைமுறைகள் உள்ளன. பண்டைய ‘ரகுவம்சம்’ நூலில் காளிதாசர், “மன்னர் திலீப் தனது மக்களின் வருவாயில் இருந்து 6-ல் ஒரு பங்கை மட்டுமே வரியாக வசூலித்தார். அதுவும், நிலத்தில் உள்ள ஈரத் துளிகளை சூரியன் உறிஞ்சுவதுபோல வசூலித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தில், “மலருக்கு வலிக்காமல் தேனை தேனீ எடுப்பதுபோல மக்களை துன்புறுத்தாமல் ஆட்சியாளர்கள் வரி வசூலிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மறைந்த நீதியரசர் நானி பல்கிவாலா, “மக்களிடம் வரி வசூலிக்கும் உரிமை அரசுக்கு உண்டு. ஆனால், வரி வசூல் என்ற பெயரில் மக்களை துன்பத்தில் தள்ளும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சான்றோர்களின் வரிகளை மனதில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் வரி வசூலில் ஈடுபடுவதே நல்ல அரசுக்கு அடையாளம்!

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்