TNPSC Thervupettagam

கடோத்கசனும் அரவானும் வீரர்கள் இல்லையா?

January 26 , 2025 2 days 21 0

கடோத்கசனும் அரவானும் வீரர்கள் இல்லையா?

  • எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் ‘அபிமன்யு’ என்ற சிறுகதையை எழுதியுள்ளார். புராணக் கதையை மறுவிசாரணை செய்யும் கதை இது. இளைஞனான அபிமன்யு இறந்து கிடக்கிறான். அர்ஜுனன் போர்க்களத்தை உற்றுப் பார்க்கிறான். கால்களில் இடறும் வீரர்களின் அங்கங்களைக் கண்டு பதறுகிறான். அபிமன்யுவிற்கு அர்ஜுனன் தந்தை.
  • தந்தையாகவும் கணவனாகவும் அண்ணனாகவும் தம்பியாகவும் இறந்து கிடக்கும் ஒவ்வொரு வீரனும் ஏதோவொரு வகையில் பிறருக்கும் உறவினர்கள்தானே! அபிமன்யு வீரன்தான்; அவனைப்போன்று ஒவ்வொருவரும் முக்கியம்தானே? சூதர்கள் அபிமன்யுவை மட்டும் புகழ்ந்து பாடுகிறார்களே! கடோத்கசனும் போரில் வீரமரணம் அடைந்தவன்தான்; கடோத்கசன் வீரன் இல்லையா? யுவனின் ‘அபிமன்யு’ சிறுகதை அளவில் சிறியதாக இருந்தாலும் பிரதி எழுப்பும் கேள்விகள் முக்கியமானவையாக இருக்கின்றன.
  • வாரணவதத்​தின் அரக்கு மாளி​கையி​லிருந்து குந்​தி​யுடன் தப்பித்த பாண்​ட​வர்கள் இடிம்ப வனத்​திற்​குள் நுழைகிறார்​கள். அது இடிம்பன் எனும் அரக்​க​னின் ஆளுகை​யிலுள்ள காடு. இடிம்பன் அவர்களை உண்ண முயல்​கிறான். பீமனுக்​கும் இடிம்​பனுக்​கும் சண்டை மூள்​கிறது. சண்டை​யில் இடிம்பன் கொல்​லப்​படு​கிறான். இடிம்​பனின் சகோதரியான இடிம்பி பீமனின் வீரத்​தைக் கண்டு காதல் கொள்​கிறாள். பீமன் மறுக்​கிறான். குந்​தியிடம் முறை​யிடு​கிறாள் இடிம்பி. குந்​தி​யும் தருமனும் இடிம்​பியைப் பீமனுக்​குத் திரு​மணம் செய்​து​வைக்​கின்​றனர். பீமனுக்​கும் இடிம்​பிக்​கும் பிறந்​தவனே கடோத்​கசன். இயல்​புக்கு மாறாக கடோத்​கசன் பிறந்த அன்றே வளர்ந்து நிற்​கிறான்; அதிகமான சக்தி​யைப் பெற்றிருந்​தான். பீமனின் வீரத்​தை​யும் இடிம்​பி​யின் தோற்றத்​தை​யும் ஒருங்கே பெற்​றவனாகக் காட்​சி​யளித்​தான்.
  • இடிம்​பியை​யும் கடோத்​கசனை​யும் வனத்​திலேயே விட்டு​விட்டுப் பாண்​ட​வர்கள் பிரி​கின்​றனர். ‘கடோத்​கசா, நீயே பாண்​ட​வர்​களின் மூத்த வாரிசு. நீயே பாண்​ட​வர்​களுக்கு வாழ்​நாள் முழுக்க உதவக் கடமைப்​பட்​ட​வன்’ என்கிறாள் குந்தி. இந்த அங்கீ​காரம் கடோத்​கசனுக்​குப் பெரும் மகிழ்ச்​சி​யைத் தருகிறது. குருஷேத்​திரப் போரில் பாண்​ட​வர்​களுக்​காகப் போரிட வந்தான் கடோத்​கசன். போரில் கௌரவர்​களுக்​குக் கடும் அழிவை ஏற்படுத்​தினான். போரிடத் தீர்​மானிக்​கப்​பட்​ட​போதே யார் யாரைக் கொல்ல வேண்​டும் என்ப​தைக் கிருஷ்ணன் முடிவுசெய்து வைத்​திருந்​தார். போர்த்​தந்​திரங்கள் தெரியாத கடோத்​கசன், கிருஷ்ணனை முழு​மையாக நம்பினான்.
  • ராட்​சசன் ஜடாசுரனின் மகன் அலம்​புசனைக் கொல்​கிறான். பீமனைக் கடுமை​யாகத் தாக்கிய மனித ஊனுண்​ணியான அலாயுதனின் மாயைகளை அழித்துத் தலையை அறுக்​கிறான். இதற்​கிடை​யில் கௌரவர்​களுக்​குப் பெரும் கலக்​கத்தை ஏற்படுத்திய கடோத்​கசனின் மகனான அஞ்சனபர்வன் அஸ்வத்தாமனால் கொல்​லப்​படு​கிறான். புத்திர சோகத்​தைப் பொருட்​படுத்​தாமல் கடோத்​கசன் கௌரவப் படையுடன் மூர்க்​க​மாகப் போரிடு​கிறான். இறுதி​யில் கிருஷ்ணனின் சூழ்ச்​சி​யால் கொல்​லப்​படு​கிறான். அர்ஜுனனுக்​கும் நாககன்னியான உலூபிக்​கும் பிறந்த அரவானுக்கு என்ன நடந்​ததோ, அதுதான் கடோத்கசனுக்கும் நடக்​கிறது.
  • கர்ணனின் ஆற்றலைப் பொறுக்க முடி​யாமல் பாண்​ட​வர்​களின் படை பின்​வாங்​கு​கிறது. கர்ணனுக்கு எதிராக யுத்தம் செய்யச் சொல்லி கடோத்​கசனைத் தூண்​டு​கிறார் கிருஷ்ணன். ‘உன் வீரத்​திற்​குக் கர்ணனைக் கொல்​வது​தான் சரி’ என்று வெறியேற்றுகிறான். கிருஷ்ணனின் சூழ்ச்​சியை அறியாத கடோத்​கசனும் மாதவரின் வாக்கை ஏற்று கர்ணனை​யும் அவனைச் சேர்ந்​தவர்​களை​யும் கலங்​கடிக்​கிறான். ‘கர்ணா இந்தக் கடோத்​கசனை இனியும் விட்டு வைத்​தால், இந்த இரவுக்​குள் நம் எல்லோரை​யும் கொன்று விடு​வான்.
  • எனவே, இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தை அவன்​மேல் எறி’ என்கின்​றனர் கௌரவர்​கள். அர்ஜுனனைக் கொல்​வதற்​காகப் பிரத்​தி​யேகமாக வைத்​திருந்த ஆயுதத்தை வேறு வழியில்​லாமல் கடோத்​கசன்​மேல் எறிகிறான். கடோத்​கசனின் மாயைகளை​யும் ஒன்றுமில்​லாமல் செய்து, அவனைக் கொன்​று​விடு​கிறது சக்தி ஆயுதம். இறக்​கும் தறுவா​யிலும் பேருருவம் எடுத்துக் கௌரவர்​களின் கால்​பங்கு படைகளை அழித்து​விட்டே இறக்​கிறான் அந்த மாவீரன்.
  • கடோத்​கசனின் அழிவுக்காக எல்லோரும் வருந்​துகின்​றனர். தன் தந்தை​யின் உயிரைக்​காக்க அலாயுதனை அழித்​தான். சிற்​றப்​பனின் உயிரைக்​காக்கக் கர்ணனிடம் அழிந்​தான் கடோத்​கசன். தருமன், கடோத்​கசன் அழிவுக்காக வருந்​துகிறான். கர்ணனைக் கொல்லப் புறப்​படு​கிறான். ‘உங்கள் நன்மைக்​காகவே சக்தி ஆயுதத்தின் மூலம் கடோத்​கசன் மாண்​டான்’ என்று வியாசர் தோன்றி ஆறுதல் சொல்​கிறார். அந்தக் கொஞ்​சநேர வருத்தத்​துடன் அடுத்த வேலை​யைப் பார்க்கத் தொடங்கி விடு​கின்​றனர் பாண்​ட​வர்​கள். சூதர்கள் இவனைப் பாடவில்லை.
  • இந்தப் புள்​ளியைத்​தான் யுவன் சந்திரசேகர் தன் சிறுகதை​யில் விமர்​சனமாக முன்​வைக்​கிறார். யுவன், தமிழ்ச் சிறுகதை​யின் ஒரு மாற்றுக்​குரல். தொடர்ச்​சியான கதைசொல்​லும் முறைக்கு எதிரானவை இவரது புனை​வு​கள். நம் கண்ணுக்​குத் தெரி​யும் உண்மை என்பது ஒரு மாயை; அந்த உண்மைக்​குள் வேறொரு மெய்ம்மை மறைந்​திருக்​கிறது என்பது போன்ற மாய யதார்த்தக் கதைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர். உதிர்ந்து விழுந்து கிடக்​கும் சிதைவு​களில் இருந்து முழு​மை​யைக் காண்​பது​தான் யுவனின் புனைவுப் பாணி. இந்த கதையை​யும் அதற்கு உதாரண​மாகக் கருதலாம்.
  • கடோத்​கசன், அரவான், ஏகலைவன் ஆகியோர் ஆதிக்க வர்க்​கத்​தால் திட்​ட​மிட்டுப் பழிதீர்க்​கப்​பட்​ட​வர்​கள். கடோத்​கசன் போர்​வெறி ஊட்டப்​பட்டுக் கொல்​லப்​பட்​டான். அரவானுக்கு அர்ஜுனன் விரித்தது பாசவலை. ஏகலை​வனைக் குரு பக்தி​கொண்டு முடக்​கினர். மூவருமே தங்கள் அங்கீ​காரத்​திற்காக ஏங்கிய​வர்​கள்​தாம். குந்தி​யின் மூத்த பேரன் என்ற அங்கீ​காரத்​திற்காக உயிரை​விட்​டான் கடோத்​கசன். ‘என்னைத் தங்கள் மகன் என்று அங்கீகரிக்க வேண்டும்’ என்று போரில் கலந்து கொண்​டான் அரவான்.
  • ‘என்னை உங்கள் சீடனாக ஏற்கவேண்​டும்’ என்ற கோரிக்கை​யுடன் கட்டை​விரலை இழந்​தான் ஏகலை​வன். இதில் மூவருமே ஒருவகை​யில் ஒடுக்​கப்​பட்​ட​வர்​கள்​தாம். தந்தையர் சத்திரியர்​களாக இருந்​தும் கடோத்​கசனை அரக்​க​னாக​வும் அரவானை நாகர் குலத்தா​னாக​வுமே பார்த்​தனர். கிருஷ்ணனின் செல்லத் தங்கையான சுபத்​திரை​யின் மகன் அபிமன்​யு​விற்கு இந்​தப் பிரச்​சினை இல்லை. கிருஷ்ணனின் வீட்​டிலேயே வளர்ந்​தவன். அதனால் அவனுக்கு எல்லா மரியாதையும் கிடைத்தது. சுபத்திரையின் துயரத்திற்கு வியாசரே ஆறுதல் கூறினார். இடிம்பிக்கும் உலூபிக்கும் அது கிடைக்குமா? மகனை இழந்த உலூபி பைத்தியமானாள்; இடிம்பி என்னவானாள் என்றே தெரியவில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்