TNPSC Thervupettagam

கட்சி அரசியலும் புதிய அரசியலும்

May 30 , 2022 800 days 462 0
  • மக்களாட்சி என்பது வெறும் வார்த்தை அல்ல; ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட ஓர் வரையறை. அந்த வரையறையும் தன் செயல்பாட்டில் எல்லையற்று விரியும்போது நுணுக்க வரையறையாக மாறும் நிலையில்தான் அறிஞர்கள் மக்களாட்சியை முடிந்த முடிவாக வரையறை செய்வது கடினம் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு பரந்து விரிந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது மக்களாட்சி. ஆகையால்தான் அறிஞர்கள் இது வரையறைக்கு உட்படாத சொல் என்கின்றனர். 
  • பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்ற நிலையை போராடி அடைந்த பல நாடுகள், இதற்கான மேம்பட்ட விளக்கங்களை தந்து, மக்களாட்சிக்கு காப்புரிமை கேட்பதுபோல் தங்களை பாராளுமன்றத்தின் தாய் எனவும் தந்தை எனவும், பாராளுமன்றத்தை உலகத்துக்கு எடுத்துச் செல்லும் தூதுவர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டன.
  • அது மட்டுமல்ல, உலகத்தில் மக்களாட்சிக்கு குறை ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பதுதான் தங்களுடைய தலையாய பணி என்று பிரகடனப்படுத்திக்கொண்ட நாடுகளும் உண்டு. இந்த நாடுகளெல்லாம் தங்கள் அயல்நாட்டுக் கொள்கையில் "மக்களாட்சி விரிவாக்கம்' என்பதை ஒரு முக்கியப் பகுதியாகவே வைத்து நிதி ஒதுக்கி மனித உரிமை செயல்பாட்டாளர்களை ஊக்குவித்தன. 
  • அதே நேரத்தில், மக்களாட்சி உதாசீனப்படுத்தப்படுவதைத் தடுத்து பல நாடுகள் மக்களாட்சியில் சீர்திருத்தங்கள் செய்து செயல்படுவதையும் கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். 
  • உலகத்தில் மக்களாட்சிக்குக் கிடைத்தது போல், வேறு எந்த ஒரு ஆட்சிமுறைக்கும் இவ்வளவு மக்கள் ஆதரவு கிடைத்தது கிடையாது. காரணம், மக்களாட்சியை நன்கு புரிந்து கொண்டு மக்களாட்சி வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை. ஒற்றைப் புள்ளியில் மக்களாட்சியை அவர்கள் ஆதரிக்கின்றனர். அதுதான் அந்த ஒரு விரல் புரட்சி. வாக்கின் மூலம் ஓர் ஆட்சியை அகற்றிவிடலாம் என்பது மட்டும் அனைவருக்கும் புரிந்திருக்கிறது. 
  • மக்களாட்சி பற்றி கருத்துத் தெரிவித்த வின்ஸ்டன் சர்ச்சில், "இன்று நாம் கடைப்பிடித்து வருகின்ற மக்களாட்சி முறை என்பது இதுவரை இருந்த ஆட்சி முறைகளைவிட சிறந்ததுதான். ஆனாலும் இதனை குறையற்ற ஆட்சிமுறை என்று கூறமுடியாது. இந்தக் குறைகளையெல்லாம் களையக்கூடிய ஒரு அமைப்பு வரும்வரை, அதாவது இன்றைய மக்களாட்சி முறையை விட மேன்மையுடைய ஓர் அமைப்பு வருகின்ற வரை எவ்வளவு குறை இருந்தாலும் இதுதான் சிறப்புடையது' என்றார். 
  • மக்களாட்சியில் சீர்திருத்தம் பற்றி எழுதிய தலைசிறந்த ஆராய்ச்சியாளர் பெர்னாடு கிரிக், "மக்களாட்சியைக் கைக்கொள்ளும் நாடுகள், வேகமாக மாறிவரும் சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப மக்களாட்சியை சீர்திருத்திக் கொண்டே வந்தால், மக்களாட்சி மேன்மையடைவதோடு, அது சமூகத்தையும் மேன்மைப்படுத்திவிடும்.
  • அதற்கு மக்களாட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதுமைகளை புகுத்தி மக்களாட்சி அமைப்பு முறைகளை செம்மைப்படுத்த வேண்டும். இந்த செயல்பாடு ஒரு தொடர் நிகழ்வு. இதற்கு அரசியல் தளத்தில் கடப்பாடும், அறிவாற்றலும் நிறைந்த தலைமைத்துவம் தேவை' என்றார். 
  • இவர்கள் மேற்கூறிய கருத்துக்களை முன் மொழிந்த காலம், இரண்டாவது உலகப்போர் முடிந்து பல காலனியாதிக்க நாடுகள் விடுதலை பெற்று மக்களாட்சியைக் கைக்கொண்டு செயல்படத் தொடங்கிய காலம். அந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் என்பது பெரும் சக்தியாக விளங்கியது. 
  • அன்று மக்களும், வணிகர்களும் அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் இருந்தனர்.
  • அன்றைய அரசாங்கத்திற்கு அரசியல்சாசனம் மட்டும் பின்புலத்தில் இருக்கவில்லை. அரசாங்கத்தை நடத்தியவர்களின் ஆளுமையும் அரசாங்கத்தை பலப்படுத்திக் கொண்டேயிருந்தது. அன்று அரசாங்கம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் உயர் சக்தியாக விளங்கியது. மக்களும் அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இன்று அந்த நிலை உலகம் முழுதும் மாறிவிட்டது. அரசு, சந்தை, சமூகம் (மக்கள்) என்ற மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தும், சில நேரம் முரண்பட்டும் செயல்பட்டு வருகின்றன. 
  • அடிப்படையில் அரசும் சந்தையும் மக்களுக்கானது என்பது, கடந்த 30 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டுவிட்டது. அரசு, தன் சக்தியை இழந்து சந்தையின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டு விட்டது. சந்தை என்பது அரசாங்கத்தை வழிநடத்தும் சக்தியாக தன்னை மாற்றிக்கொண்டு விட்டது. அதே போல் சமூகம் சிந்திக்க விடாமல், தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களால் மக்களை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தி இயங்க வைத்து விட்டது இந்த சந்தை. இது எல்லாத் தரப்பு மக்களையும் கவர்ந்து வைத்துக் கொண்டுள்ளது. 
  • பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றபோது அந்த நாட்டில் உள்ள அரசு, அந்த பொருளாதார வளர்ச்சியை முறையாகப் பாதுகாத்து சமூக மேம்பாட்டுக்காக செயல்பட வேண்டும். "அரசு மக்கள் மேல் எப்படி வரிவிதிப்பது என்பதை அறிந்து விதித்து, விதித்த வரியை முறையுடன் வசூல் செய்து, வசூலித்த வரியை முறையாகப் பாதுகாத்து, பாதுகாத்த நிதியை முறையாக தேவையின் அடிப்படையில் பங்கிட்டு செலவழித்து மக்களுக்கு மேம்பாடு கொண்டு வருவதுதான் முறையான அரசு' என்றார் திருவள்ளுவர் (குறள்: 385). 
  • பொருளாதாரம் உலகம் வியக்கும் வண்ணம் வளர்ந்தபோது இந்தியாவில் அந்த வளர்ச்சி முழுமையாக மக்களைச் சென்றடையாமல் ஒரு குறிப்பிட்ட வர்க்கம் பயன்களை அடைந்ததால்தான் மக்கள் உலகமய பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு எதிராக இருக்கின்றனர். 
  • இதனை, உலக வங்கியில் பணிபுரிந்த ஜோசப் ஸ்டிக்லிஸ் என்ற பொருளாதார வல்லுனர் சுட்டிக்காட்டி, "அரசாங்கம் முயன்றால் உலகமய பொருளாதாரச் செயல்பாடுகளை ஏழைகளுக்கு நன்மை பயக்கும் வண்ணம் செய்ய முடியும்' என்று கூறியதோடு, தன் கருத்துகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். அப்புத்தகம் லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது.
  • ஆனால் பல நாடுகளில் இதற்கு எதிர் திசையில் அரசாங்கங்கள் பயணிக்க ஆரம்பித்தன. நம் நாட்டில் அந்த நேரத்தில்தான் ஆளும் கட்சியாக இருந்த கட்சிகள் பெருமளவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கின. அது மட்டுமல்ல, அந்த நேரத்தில்தான் கட்சிகள் அனைத்தும் தங்களை வளப்படுத்திக் கொண்டன. அந்த வளமான பொருளாதாரச் சூழல்தான் அரசியல் கட்சிகளை நிறுவனங்கள் போல் செயல்பட வைத்து வாக்குகளைச் சந்தைப்படுத்த வைத்தது. வாக்குகளை சந்தைப்படுத்தியதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் சந்தைப்படுத்தப்பட்டனர். 
  • இதற்கான மூலதனங்கள் கட்சிகளுக்கு வந்தது சந்தையிலிருந்துதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதன் விளைவு, கட்சிகள், நிறுவனங்கள்போல் உருமாறி செயல்பட ஆரம்பித்தன. அரசியல் கட்சிகள் பொதுமக்களை நம்பி செயல்பட்ட காலத்தில், எளிமையாக, மக்களுடன் இணைந்து செயல்பட்டன. கட்சிக்காரர்கள் கட்சிக்காக உழைத்தனர். இந்த நிலை மாற்றப்பட்டு அனைத்து கட்சிப் பணிகளுக்கும் ஊதியம் என பிரகடனப்படுத்தப்பட்டது.
  • அரசியல் கட்சியின் செயல்பாடுகள்,  தொழிற்சாலை செயல்பாடுகள்போல் ஆகிவிட்டன. கட்சிக்காரர்கள் கட்சியிலிருந்து அந்நியப்பட்டுப் போனார்கள். இதன் விளைவுதான், இன்று அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அந்தக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு வருவதற்கே பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வாக்குகளுக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. 
  • அரசியல் கட்சிகளை நிறுவனத்தை நடத்துவதுபோல் கட்சித் தலைவர்கள் நடத்த ஆரம்பித்தனர். அது மட்டுமல்ல, கட்சிகள் இயங்க நிறுவன அணுகுமுறையைப் பின்பற்றினர்.
  • இன்று, கட்சி அரசியல் என்பது தங்கள் நிறுவனங்களை, அதன் சொத்துகளைக் காப்பதற்காக நடத்தப்படும் ஒன்றாக மாறி வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் நம் நமது மக்களாட்சியை, தேர்தலை விட்டு வேறு எந்த செயல்பாட்டிற்கும் விரிவாக்கம் செய்யாது, குறுக்கியே வைத்து செயல்பட்டதுதான். இதனால் கட்சி அரசியல் என்பது தேக்கமடைந்து விட்டது. கட்சிகள் தொழில் நிறுவனங்களாக செழித்து வளர்ந்தன. 
  • தொண்டர்களுடன் கட்சிகள் உணர்வுபூர்வ தொடர்பில் இல்லை. மாறாக, கட்சியால் லாபம் அடைவோருடன் தொடர்பில் இருக்கின்றன. என்றைக்கு கட்சிகள் வாக்குக்கு பணம் தர ஆரம்பித்ததோ அன்றே அவை மக்களுடனான அரசியல் தொடர்பை முறித்துக்கொண்டுவிட்டன. கட்சிகள் இன்று மக்களிடம் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுகின்றன. இதன் விளைவுதான் கட்சிகள் அரசியல் விளம்பரதாரக் கம்பெனிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தது. இன்று ஒரு தனி மனிதர் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி லாபம் ஈட்டி வணிகம் செய்கிறார். 
  • அவர் இன்று கட்சிகளை ஆட்சிக்குக் கொண்டுவரும் வித்தைக்காரராக மாறி அரசியல் கட்சிகளை கீழ் நிலைக்குக் கொண்டு சென்று விட்டார். கட்சிகளில் தலைவர்கள் இருந்தால் வித்தைக்காரர்களைத் தேடமாட்டார்கள். தன் மீதும் தன் கட்சிக்காரர்கள் மீதும் கட்சித் தலைவர்கள் நம்பிக்கையற்று இருப்பதால்தான், இந்த நிறுவனங்களுக்கு பெருவாழ்வு வந்துவிட்டது. இதன் விளைவாக, கட்சி அரசியல் என்பது கொள்கை சார்ந்தோ, தத்துவம் சார்ந்தோ இல்லாமல் சந்தை சார்ந்து இயங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
  • எனவேதான் கட்சி அரசியலைத் தாண்டி புதிய அரசியலை கட்டமைக்க முடியாத சூழலில் மக்களாட்சி சிதிலமடைந்து வருகின்றது. 
  • இந்தச் சூழலை மாற்ற நாம் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நாம் கட்சி அரசியலிருந்து வேறு ஒரு அரசியலை கட்டமைக்க முயல வேண்டும். அது ஒரு அறிவுசால் முயற்சி. புதிய அரசியலை நோக்கிச் செல்ல நாம் தயாராக வேண்டும்.

நன்றி: தினமணி (30 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்