- உலகளவில் மக்களை அதிகளவில் பாதிப்புக்குள்ளாக்கி வரும் தொற்றா நோய்களில் மிக முக்கியமானது நீரிழிவு நோய். வளர்ச்சிதை மாற்ற நோய்களில் மிக முக்கிய இடத்தை வகிப்பதும் இதுதான்.
- உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்புப்படி 2019-ல் மட்டும் உலகளவில் 15 லட்சம் பேர், நீரிழிவு நோயால் இறந்துள்ளனர்.
- 2018 கணக்கெடுப்புப்படி உலகளவில் 46.3 கோடி மக்களும், இந்தியாவில் 8 கோடி பேரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2019 கணக்கின்படி வருடத்திற்கு 15 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 12.3 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப் படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- நீரிழிவு நோய் டைப் 1 மற்றும் டைப் 2 என இருவகைப்படும். பொதுவாக சிறு வயதிலேயே ஏற்படக்கூடிய டைப் 1 நீரிழிவு நோய் என்பது கணையத்தில் இன்சுலின் சரிவர சுரக்க முடியாமல் பற்றாக்குறையாக போவதால், ஏற்படுகிறது.
- இந்த டைப் 1 வகை நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இன்சுலின் மருந்து அவசியம்.
- டைப் 2 வகை நீரிழிவு நோய் என்பது கணையத்தில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும் அவற்றை நம் உடலிலுள்ள செல்களால் பயன்படுத்த முடியாமல் இன்சுலின் தடையால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
- உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன் போன்றவை டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு அடிப்படையாகும்.
- நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகரிப்பதால், சிறுநீரக கோளாறு, நரம்பு மண்டல பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் உள்பட பலவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
வாழ்நாளை கூட்டலாம்
- பொதுவாக அதிக பசி, அதிக தாகம், நா வறட்சி, அதிகமாக சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவில் அதிகம் சிறுநீர் கழித்தல், காரணமின்றி உடலில் நமைச்சல் ஏற்படுதல், உடல் அசதி, உடல் எடை குறைதல் போன்றவை நீரிழிவு நோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும்.
- சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள நிலவேம்பு, வேம்பு, சிறுகுறுஞ்சான், வெந்தயம், ஆவாரை, கொன்றை பட்டை, நாவல் கொட்டை, கடல் அழிஞ்சில், மருதம்பட்டை, சீந்தில், துளசி, கீழாநெல்லி, துளசி, வில்வம், வேம்பாடம் பட்டை, பாகற்காய், கோவைக்காய், மஞ்சள், வெந்தயம், அமுக்கரா, கரிசாலை, திரிபலா போன்ற பல்வேறு மூலிகைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை உடையதாக உள்ளன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
- ஆவாரம் செடியிலுள்ள தண்டு, இலை, பூ, காய், வேர் என அனைத்தும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையன.
- நெல்லிக்காய் சாறு, மஞ்சள் பொடி சேர்த்து தினமும் பகல் நேரத்தில் உட்கொண்டு வருவதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.
- இதனை இன்சுலின் மருந்து பயன்படுத்தும் டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இருவகை நீரிழிவு நோயாளிகளும் அருந்தி வரலாம்.
- சீந்தில் மூலிகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சிறுநீரக செயலிழப்புக்கும் நன்மைதரக்கூடியது. சீந்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடியது, மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கை,கால் எரிச்சல் நீங்கவும் பயன்படும்.
- நீரிழிவு நோயால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க திரிபலா சூரணம், சீந்தில், நெருஞ்சில், மூக்கிரட்டை ஆகிய மூலிகைகள் நல்ல பலன் தருவதாக உள்ளன. நீரிழிவால் சிறு ரத்தக்குழாய் பாதிப்பைத் தடுக்க வல்லாரை கீரை உதவும்.
- கட்டுப்படாத நீரிழிவு நோயால் கண் பார்வை நரம்பு பாதிப்பு ஏற்படக் கூடும். கருவேப்பிலை பொடி தினமும் உட்கொள்வதால் இதை தவிர்க்கலாம்.
- பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி எனும் வேதிப்பொருள் இன்சுலின் போன்று செயல்படும் தன்மை உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
- சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள தாது உபரச மருந்துகளான நாக பற்பம், சிலாசத்து பற்பம், கந்தக பற்பம், அப்ரக பற்பம், வங்க பற்பம் போன்ற பல மருந்துகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவும். அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் பின் விளைவுகள் வராமல் தடுக்கவும் உதவும்.
- தவிர, உணவில் அரிசி உணவை குறைத்து கேழ்வரகு, கம்பு, கொள்ளு போன்ற தானியங்களையும், வரகு, தினை, சாமை போன்ற சிறு தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். கோவைக்காய், பாகற்காய் இவற்றை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.
- நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. லேசாக வறுத்து பொடியாக்கிய வெந்தயம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். வெந்தய பொடியை ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
- நாவல், பப்பாளி, கொய்யா, இலந்தை, வில்வம், நெல்லி, மாதுளை ஆகிய இனிப்பு சத்து குறைந்த பழங்களை உட்கொள்ளலாம்.
- சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் திருமூலர் சித்தர் அருளிய யோகாசன முறைகளான சூரிய நமஸ்காரம், பஸ்சி மோத்தாசனம், மண்டூகாசனம், சக்ராசனம், அர்த்த மச்சேந்திரஆசனம், தனுராசனம், சர்வாங்காசனம், ஹலாசனம் போன்றவற்றையும் செய்து வரலாம்.
- சித்த மருத்துவம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகளையும், பழக்கவழக்கங்களையும், மருத்துவ முறைகளையும், பாரம்பரிய உணவு முறைகளையும் பின்பற்றி வாழ்ந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- அதுமட்டுமல்ல, அதை சார்ந்து ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து நம்மை காத்துக்கொண்டு நெடுநாள் ஆரோக்கியமாக வாழலாம். கட்டுப்படாத சர்க்கரை நோய் என்று அறியப்படும் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவந்து வாழ்நாளை கூட்டலாம்.
நன்றி: தினமணி (14 – 02 – 2022)