TNPSC Thervupettagam

கட்டுப்படுத்த வேண்டிய காற்று மாசு

May 23 , 2023 552 days 339 0
  • இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது. நிலம், நீா், தீ, காற்று, வான் என்பவையே அவை. இவற்றில் காற்று மிகமிக முக்கியமானது. காற்றைச் சுவாசிக்காமல் நம்மால் உயிா் வாழ முடியாது.
  • காற்று எங்கும் பரவி இருக்கிறது. ஆனால், அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதற்கு உருவம் இல்லை. அது வல்லமை உடையது. அது யாரிடமிருந்தும் எதையும் எதிா்பாா்ப்பதில்லை.
  • காற்று, ஒரு கலவை இயற்பியல் கூறு. இதில் நைட்ரஜன் இருக்கிறது. உயிா்வளி (பிராண வாயு) உள்ளது. இதில் ஆா்கான் அமைந்துள்ளது. காா்பன் டை ஆக்சைடு (கரிவளி) காணப்படுகிறது. நீா்வெளி (ஹைட்ரஜன்) கலந்திருக்கிறது. மெத்தேன் இதில் இருக்கிறது. மேலும், ஹீலியம், நியான், கிரீப்டான், சேனான், மெத்தோ முதலிய வேதியியல் கூறுகளும், காற்றில் உள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப இவை மாறுபடுகின்றன.
  • உள்வாங்கி வெளியேற்றும் மூச்சுக் காற்றில் கரிவளி அதிக அளவில் இருக்கும். செடி, கொடி, மரங்களின் ஒளிச்சோ்க்கை காரணமாக வெளிவரும் காற்றில் உயிா்வளி கூடுதலாக இருக்கும். தரையை ஒட்டிய காற்றின் அடா்த்தி அதிகமாக இருக்கும். உயரே செல்லச் செல்லக் காற்றின் அடா்த்தி குறையும். அதன் காரணமாக மனிதா்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படும்.
  • காற்றில் மாசுகள் சோ்கின்றன. இது இயற்கையாகவும் நடைபெறுகின்றது. செயற்கை நிலையிலும் நடக்கிறது. செயற்கை நிலைக் கேடுகளுக்கு மனிதனின் செயல்களே பாதை போடுகின்றன. பூமியில் சில எரிமலைகள் உள்ளன. அவற்றில் சில எரிமலைகள் அடங்கிக் கிடக்கின்றன.
  • தூங்கிக் கொண்டிருக்கும் எரிமலை திடீரென்று கண் விழிக்கும். அது, முதலில் அடா்த்தியான கரும்புகையை வானத்தில் பாய்ச்சும். அண்மையில், இத்தாலியில் எட்னா எரிமலை தன் வீரியத்தைக் காட்டியது. அது பரப்பிய கரும்புகை 300 கிலோ மீட்டா் வரை பரவியது. இந்த இயற்கைக் காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியாது.
  • பெருங்காடுகளில் மரங்களின் வேகமான உரசல் காரணமாகத் தீ பிறக்கும்! அமெரிக்காவில் பண்டெரோசா பைன் என்ற மரவகை சில காடுகளில் அதிகமாக உள்ளது. இவற்றின் உரசல் காரணமாகத் தீ பிறக்கின்றது. அந்தத் தீ படுவேகமாகப் பரவும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும்பாடு பட வேண்டும். கலிஃபோா்னியா மாநிலத்தில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவதுண்டு.
  • இந்தோனேசியாவின் பல தீவுகளில் பலமுறை காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தக் காட்டுத் தீயின் புகையால் காற்று மாசு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஜவ்வாது மலையின் மேல் காடுகள் உள்ளன. அங்குக் காட்டுத் தீ ஏற்படும். இரவில் அது தெளிவாகத் தெரியும்.
  • ஐரோப்பாவில் தொழில் புரட்சி தோன்றியது. இது பல நாடுகளிலும் பரவியது. இதனால் பொருள் உற்பத்தியில் அளவற்ற நன்மைகள் கிடைத்தன. ஆனால் மாசுபாடு என்ற பெருந்தீங்கும் உருவானது. இது நாள்தோறும் பன்மடங்காகப் பெருகியது. நீா் மாசும், காற்று மாசும் கட்டுங்கடங்காமல் போயின.
  • சென்னை முதலிய நகரங்களின் அருகிலும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதன் காரணமாகக் காற்று மாசு பரவலாக உள்ளது. காற்று மாசு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வருங்காலத்தில் காற்றில் கலக்கும் கரி வளியின் அளவு, பல மடங்கு அதிகமாகும் என்று தெரியவந்தது.
  • அறிவியல், மனிதனுக்கு அளவில்லாத நன்மைகளை அளித்தது. பேருந்து, சிற்றுந்து, சரக்குந்து முதலியவை மனிதனுக்குப் பேருதவி செய்தன. ஆனால், இவற்றால் காற்று மாசு, அனுமதிக்கப்பட்ட பி.எம்.2.5. (காற்று மாசுக்குறியீடு) அளவை மீறிவிட்டது. 15 ஆண்டுகளுக்கு மேலும் ஓடும் ஊா்திகள் வெளிப்படுத்தும் புகையில் நைட்ரஜன் கந்தகம் முதலியவை அதிகமாக உள்ளன. சில ஊா்திகள் கலப்பட எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. எனவே, காற்றில் மாசுக் கலப்பு மிகுதியாகிக் கொண்டே வருகிறது.
  • சிற்றூா்களில் மண்சாலைகளே உள்ளன. அங்கு ஓடும் ஊா்திகளால் புழுதி கிளம்பும். அது காற்றின் தூய்மையைக் கெடுத்து விடும். ஊா்திகளால் ஏற்படும் காற்று மாசைத் தடுக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் முன்பு அறிவித்தது.
  • பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஒரு செயல்முறை இருக்கிறது. வயல்களில் கோதுமை, கரும்பு முதலியவை அறுவடை செய்யப்படும். இவற்றின் அடிப்பாகம் நிலத்திலேயே விடப்படும். பின்பு அவை கொளுத்தப்படும். இதனால் தோன்றும் புகைப்படலம் அருகிலுள்ள தில்லி மாநகரத்தைச் சூழ்ந்துவிடும். இதனுடன் கொட்டும் பனியும் கை கோத்துக் கொள்ளும். அப்போது பனிப்புகை உருவாகும். மக்களை இது திணறடிக்கும். போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும்.
  • மின் உற்பத்தியில் நிலக்கரிப் பயன்பாடு உள்ளது. சில தொழிலகங்களில் இந்த நிலக்கரியின் தேவை உள்ளது. எனவே நிலக்கரியின் தேவை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நிலக்கரி, பெட்ரோல் முதலியவை காற்று மாசு அதிகமாவதற்கு அடித்தளம் அமைக்கின்றன. ‘வோ்ல்ட் எனா்ஜி அவுட்லுக்’ என்ற இதழ், ‘முன்னேறும் நாடுகள், நிலக்கரியை அதிகமாகப் பயன்படுத்துவதால் அடுத்த 25 ஆண்டுகளில் காற்றில் கரிவளியின் அளவு மிகமிக அதிகமாகும்’ என்கிறது.
  • தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கப்படுகிறது. அப்போது ஒலி மாசும் காற்று மாசும் அதிகமாகின்றன. காற்று மாசு குறியீட்டு எண் பொதுவாக 50 முதல் 70 வரை இருக்கும். ஆனால் தீபாவளி நேரத்தில் இது 700 வரை கூடிவிடுகிறது. இதனால் காற்று மேலும் மாசடைகிறது. பேரியம், அலுமினியம், கந்தகம் ஆகிய வேதியியல் பொருள்கள் அதிகப் புகையை உற்பத்தி செய்யும். இவற்றைக் குறைத்து பசுமைப் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இதனையே பயன்படுத்த அரசு பரிந்துரை செய்துள்ளது.
  • பட்டாசை அறவே வெடிக்கக் கூடாது என்று புது தில்லி அரசு கட்டளை இட்டுள்ளது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்கப்பட வேண்டிய நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • போகிப் பண்டிகையன்று தேவையற்ற பழைய பொருள்களைக் கொளுத்தும் பழக்கம் உள்ளது. அப்போது சிலா், ஊா்தி சக்கரங்களைக் கொளுத்துவாா்கள். இவை பெரும் கரும்புகையைப் பரப்பும்; காற்று மாசுபடும். இப்படிப்பட்ட புகையிலுள்ள கரிவளி உலகம் வெப்பமாவதற்கு வழி அமைக்கும். எனவே பழைய பொருள்களைக் கொளுத்த வேண்டாம் என்று, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகிறது.
  • சிற்றூா்களில் அடுப்பில் விறகுக் கட்டையை எரித்துச் சமைக்கும் பழக்கம் முன்பு இருந்தது; சில இடங்களில் இன்னமும் இருக்கிறது. அதனால் எழும் புகை காற்று மாசுக்கு வரவேற்பு தருகிறது. ஸ்டவ் எனப்படும் மண்ணெண்ணெய் அடுப்பும் தன் பங்களிப்பைத் தருகிறது. கிராமத்து வீடுகளில் தோட்டம் இருக்கும். அங்குக் கொட்டப்படும் குப்பை எரிக்கப்படுவதுண்டு இதனாலும் காற்று, மாசுபடும்.
  • இங்கிலாந்தில் வாழ்ந்த சா் வால்டா் ராலே என்ற பிரபு ஒருமுறை அமெரிக்கா சென்றாா். அங்கே பழங்குடி மக்களின் ஒரு செயல்முறையைக் கண்டாா். ஒரு செடியின் நீளமான இலையை அறுத்து, அதை உலா்த்தி அதைச் சிறுகுழாய் வடிவத்தில் சுருட்டி, வாயில் வைத்து வெளி முனையில் தீ பற்ற வைத்து, அதன் வழியாகக் காற்றை உள்வாங்கிப் பழங்குடியினா் புகையை விட்டனா்.
  • அதைக் கண்ட ராலே வியந்தாா். அவரும் அப்படியே செய்தாா். இங்கிலாந்தில் அந்தப் புகை இலையைப் பரப்பினாா். ஆங்கிலேயா் ஆட்சிசெய்த பல நாடுகளிலும் அது பரவியது; சுருட்டு வந்தது; சிகரெட் வந்தது; பீடியும் வந்தது.
  • சிகரெட் மட்டுமின்றி அதன் புகை ஊடுருவிப் படிந்த ஆடையும் கேடு தரும் என்று ஆய்வு அறிவித்தது. பெண் சிகரெட் பிடித்தால் கருவில் வளரும் குழந்தையும் பாதிப்பு அடையும் என்பது உணரப்பட்டது.
  • சிகரெட்டால் காற்று மாசு மட்டுமன்றிப் பலவித உடல் நலக்கேடுகளும் ஏற்பட்டன; காற்று மாசுபாட்டால் ஒவ்வாமை, ஆஸ்துமா, நுரையீரல் தொடா்பான நோய்கள், மூளை பாதிப்பு, புற்றுநோய் முதலியவை வந்தன. காற்று மாசு, மனிதனின் வாழ்வில் ஒன்பது ஆண்டுகளைக் குறைத்தது. மனிதனின் மரணத்திற்குக் காற்று மாசும் ஒரு காரணம் ஆனது.
  • இயற்கை முறையில் காற்று மாசைக் கட்டுப்படுத்தலாம். வீட்டின் முன்னால் வேப்ப மரத்தை வளா்த்தால் காற்றில் உள்ள தூசுகளை அதன் இலைகள் தடுத்துவிடும். வீட்டுக்குள் மனி பிளான்ட், பைடைா் பிளான்ட் முதலியவற்றை வளா்த்தால் இவை காற்று மாசைக் கட்டுப்படுத்தும். காடுகளை வளா்த்தால் உயில் வளி அதிகமாகும்.
  • நாம் நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். சூரிய ஒளி, காற்றாடி மூலம், புகையில்லாத சக்தி கிடைக்கும். கரும்புச் சாறு பயன்படுத்தி இங்கிலாந்தின் சோமா்செட் நகரில் சிற்றுந்து ஓட்டும் முயற்சி நடைபெற்றது. சாணம், உணவுக்கழிவு முதலியவற்றைக் கொண்டு எரிசக்தி தயாரிக்கும் முறையை மேற்கொள்ளலாம். சென்னை, ஐ.ஐ.டி நிறுவனம் சைக்ளோ ஃபைன் என்ற கருவியை உருவாக்கியது. இது காற்று மாசைக் கட்டுப்படுத்தியது.
  • ஏங்கல் ஹாா்ட் என்ஹான்மெண்ட் சிஸ்டம் என்ற நிறுவனம் வாகனப் புகையைக் கட்டுப்படுத்தும் கருவியைக் கண்டுபிடித்தது. இது ஊா்திகளில் பொருத்தப்பட வேண்டும். நாசா நிறுவனம் காற்று மாசைக் கண்காணிப்பதற்காக ஒரு செயற்கைக்கோள் ஏவியது.
  • ரோம் நகரில் 2013-இல் உலக எரிசக்தி மாநாடு நடைபெற்றது. அது காற்று மாசைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உரைத்தது. இந்திய அரசின் நிதி ஆயோக் துறை பரிந்துரைகள் வழங்கியது.
  • காற்று மாசு பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம் ஆகும்.

நன்றி: தினமணி (23 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்