TNPSC Thervupettagam

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துமா அரசு?

December 23 , 2020 1314 days 517 0
  • கரோனா காரணமாகப் பொது முடக்கத்தால் நின்றுபோயிருந்த கட்டுமானப் பணிகள், ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுவருகின்றன.
  • ஆனால், கட்டுமானப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வு, அந்தத் துறையை நிரந்தரமான முடக்கத்தில் ஆழ்த்திவிடுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
  • கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட கட்டுமானப் பணிகளுக்கான மதிப்பீடுகள், 15% வரையில் உயர்ந்துள்ளன. எம் சாண்ட் நீங்கலாகப் பெரும்பாலான கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
  • குறிப்பாக, அடிப்படைப் பொருட்களான சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2020 தொடக்கத்தில் ரூ.360 ஆக இருந்த 50 கிலோ அடங்கிய 53 கிரேடு சிமென்ட் மூட்டையின் விலை, டிசம்பரில் ரூ.430 வரையில் விற்பனையாகிறது.
  • ஜனவரியில் டன் ஒன்றுக்கு ரூ.40,000 ஆக இருந்த இரும்பின் விலை தற்போது ரூ.58,000 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே ரூ.13,000 உயர்ந்துள்ளது.
  • மின்கம்பிகளின் விலை 12% வரையிலும், பிவிசி குழாய்கள் போன்ற ப்ளம்பிங் உபகரணங்களின் விலை 14% வரையிலும் உயர்ந்துள்ளன. கட்டுமானத் துறையில் பணிபுரிந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்குக் காலத்தில் தங்களது ஊர்களுக்குத் திரும்பிவிட்டதால் தொழிலாளர்களின் ஊதியத்துக்காகவும் கூடுதலாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
  • தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தாவிட்டால், கட்டுமானத் துறையை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க முடியாமல் போய்விடும் என்று அந்தத் துறையினர் அஞ்சுகின்றனர்.
  • சிமென்ட், இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை அமைப்பொன்றை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான க்ரெடாய், கடந்த டிசம்பர் 18 அன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தாவிட்டால், கட்டுமான நிறுவனங்களால் தாங்கள் ஏற்றுக்கொண்ட பணிகளை முடிக்க முடியாமல் போய்விடும் என்றும், அதன் காரணமாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அமைப்பால் தாங்கள் தண்டிக்கப்பட நேரும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது.
  • கட்டுமானத்துடன் தொடர்புடைய மின் உபகரணங்கள், ப்ளம்பிங் சாதனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்துள்ளதால் முன்கூட்டியே பதிவுசெய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கின்றன. ஏற்கெனவே உள்ள கடன் நிலுவைகளை முழுமையாகச் செலுத்திய பிறகே அந்தப் பொருட்களை வாங்க முடியும் என்ற நிலைக்குக் கட்டுமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
  • கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்பது மனை வணிகத்துடன் மட்டுமே தொடர்புடையது அல்ல. சாலைகள், பாலங்கள் என்று உள்கட்டமைப்புப் பணிகளிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை வழங்கிவரும் துறைகளில் கட்டுமானத் துறையும் ஒன்று.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 7% இந்தத் துறையின் பங்களிப்பு. கட்டுமானத் துறையின் ஏற்ற இறக்கம் இந்தியப் பொருளாதாரத்திலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (23-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்