TNPSC Thervupettagam

கணக்கெடுப்பிலும் கூடாது புறக்கணிப்பு

July 4 , 2023 562 days 277 0
  • இந்தியாவில், 1992 இலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய குடும்பச் சுகாதார ஆய்வு (National Family Health Survey) மேற்கொள்ளப்படுகிறது. 2019-2021இல் நடந்த ஐந்தாவது ஆய்வுக்கான கேள்வித்தாளில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கேள்விகள் முதன்முறையாக இடம்பெற்றிருந்தன. இது தொடரும் என நம்பிக்கை எழுந்திருந்த நிலையில், 2023-2024 ஆய்வுக்கான கேள்வித்தாள் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
  • 28 மாநிலங்களையும் 8 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கி 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து நடத்தப்படவிருக்கும் இந்த ஆய்வில், மாற்றுத்திறனாளிகள் குறித்த கேள்விகள் விடுபட்டிருக்கின்றன.

தரவுத் தொகுப்பில் தாமதம்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைத் திட்டம் (UDID) 2016இல் தொடங்கப்பட்டது; ஆனால், 20% பேருக்குக்கூட இன்னும் அது வழங்கப் படவில்லை. நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் அட்டையும், ஒரே நாடு...
  • ஒரே குடும்ப அட்டை என அனைத்துக் குடும்பத்தினருக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டையும், 5-6 முறைகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க முடிகிற அரசு இயந்திரம்தான் மாற்றுத்திறனாளிகளிடம் இந்தப் புறக்கணிப்பைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இச்சூழலில், சுகாதார ஆய்வுக்கான தரவுத் தொகுப்பிலும் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.
  • பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்தப் புறக்கணிப்புக்கு எதிர்வினையாக வந்த நியாயமான குரல்களைப் பொருட்படுத்தாமல், மத்திய சுகாதாரத் துறை ஜூன் 22 அன்று அளித்த பதில், மாற்றுத்திறனாளிச் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
  • என்ன சொல்கிறது அரசு? - இது பெண்கள், குழந்தைகள் குறித்தான ஆய்வு என்பது அரசின் வாதம். ஆய்விலிருந்து கிடைத்த தரவுகள் மூன்று ஆண்டுகளுக்குள் பெரிதாக மாறிவிடாது என்கிறது அரசு. தற்போதைய வடிவத்தில் ஊனம் குறித்த துல்லியமான தரவை, இந்தக் கணக்கெடுப்பால் சேகரிக்க முடியாது என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது.
  • கர்ப்ப காலம், பேறு காலம், குழந்தை வளர்ப்புக் காலம் ஆகியவற்றில் ஏற்படுகிற சுகாதாரப் பிரச்சினைகளே மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை உருவாக்குகிறது என்பதைச் சுகாதாரத் துறை அறியும். பெண்கள், குழந்தைகள் குறித்த ஆய்வுகளில் மாற்றுத்திறனாளி குறித்த கேள்விகளைச் சேர்ப்பது மிகவும் அவசியம்.
  • அடுத்ததாக, மூன்று ஆண்டுகளுக்குள் தரவுகள் மாறாது என்ற பதிலே அறிவியல் ஆய்வுமுறைக்கு மாறானது. ஒவ்வொரு கால இடைவெளியில் தொடர்ந்து எடுக்கப்படும் ஆய்வுகளின் வளர்ச்சிப் போக்கிலிருந்துதான் துல்லியமான முடிவுகளுக்கு வரமுடியும். இதனை ஆய்வுத் துறையினர் அறிவர்.

திறனற்ற அரசு

  • இதற்கெல்லாம் மேலாக, இயலாமையோர் குறித்த தரவுகளைச் சேகரிக்க அரசு இயலா நிலையிலுள்ளது என்று கூறுவது ஏற்க முடியாதது. சுகாதாரம், ஊட்டச்சத்து, மருத்துவம், நோய்க்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உள்வாங்கி சேகரிக்க முடிகிற ஆய்வுப் பணியாளர்கள், கேள்வித்தாளில் மாற்றுத்திறனாளி குறித்த கேள்வியை மட்டும் பதிவுசெய்ய இயலாது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? இவ்விடத்தில் பேச்சுத்திறன், செவித்திறன், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி ஆளுமையான ஹெலன் கெல்லரின் கூற்று நினைவுக்கு வருகிறது: ‘ஊனமுற்றோர் சம உரிமை பெறாததற்குக் காரணம், அரசு அமைப்பில் உள்ள சமூகக் கேளாமையும் சமூகப் பாராமையும்தான்’ (Social Deafness and Social Blindness)
  • உரிமைப் பிரகடனம்: இந்தியா உள்பட 159 நாடுகள் கையெழுத்திட்டுச் செயலுறுதிகளை ஏற்றுக்கொண்ட உலக ஊனமுற்றோர் உரிமை சாசனம் 2007 பிரிவு 4சி-இன்படி எந்தத் திட்டமும் முன்னெடுப்பும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பிரிவு 25இன்படி சுகாதாரம் குறித்த செயல்பாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி மேம்படுத்திட வேண்டும்.
  • பிரிவு 31இன்படி மாற்றுத்திறனாளிகள் குறித்த முழுமையான தரவுகளைத் தொகுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா கையெழுத்திட்ட இதில், அதன் அமலாக்கம் குறித்து 10 ஆண்டுகள் கழித்து 2019 ஆய்வுக் கூட்டத்திலும் உறுதியளித்தது. ஆனால், இன்றைக்கு அதை நோக்கிப் பயணிப்பதை எது தடுக்கிறது எனப் புரியவில்லை.
  • ஆய்வு தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாளில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கேள்விகளை அரசு இணைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அவர்களைப் புறக்கணிப்பது உலகச் சமூகத்தின் மத்தியில் இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும். ஜி20 மாநாட்டுக் கொண்டாட்ட காலத்தில், இதை நேர்மையாக அணுகி ஏற்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

நன்றி: தி இந்து (04 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்