- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று (பிப்ரவரி 8) தொடங்கி நடைபெறுகின்ற ‘பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு’ தமிழ்ச் சான்றோர்களுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் சாமானியத் தமிழர்களுக்கும் பெருமிதமும் ஊக்கமும் அளிக்கிறது.
- உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாகவும், கால மாற்றத்துக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் சிறப்பியல்புகள் நிறைந்த மொழியாகவும் இருக்கும் தமிழ், இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் தன்னை மேலும் புதுப்பித்துக்கொள்ள இந்த மாநாடு வழிவகுக்கும் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.
- இந்தியாவில் ‘செம்மொழி’ என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான். கணித அறிவிலும் கணினி மென்பொருள் தொழிலிலும் தமிழர்கள் அடைந்திருக்கும் உயரம் உலகறிந்தது. அச்சுத் தொழிலுக்கு அறிமுகம், எழுத்துச் சீர்திருத்தம், அவ்வப்போது அறிமுகமாகும் அதிநவீனத் தொலைத்தொடர்புச் சாதனங்களில் இடம்பெறுதல், எழுத்துருக்கள் மேம்பாடு என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மொழி புத்துணர்வு அடைந்துவருகிறது.
- அந்த அளவுக்கு மொழிவளம், இலக்கணக் கட்டமைப்பு, இலக்கியப் படைப்புகள், பல்வேறு மொழிகளுடனான பரிமாற்றம் என அனைத்து வகையிலும் முன்னேறிச் செல்லும் வலிமை தமிழுக்கு வாய்த்திருக்கிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட தமிழ் மொழி, இணையத்தில் முன்னணியில் உள்ள மொழிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.
- அறிவுசார், மொழிசார் தகவல்கள், கலை, இலக்கியம், அறிவியல் எனப் பரந்துபட்ட தளங்களில் தமிழின் வீச்சு வியக்கவைக்கிறது. தகவல் களஞ்சியத் தளமான விக்கிப்பீடியாவின் இந்திய மொழிப் பக்கங்களில், 2022 நிலவரப்படி தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
- தகவல் பரிமாற்றக் களமான கோரா தளத்திலும் தமிழ் முதன்மை அங்கம் வகிக்கிறது. இன்றைக்குச் சாமானியர்களின் உள்ளங்கைக்குள் அடங்கும் திறன்பேசி வழியே ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தமிழ் சரளமாகப் புழங்குகிறது.
- நவீனத் தமிழின் வளர்ச்சியில் தமிழறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோருடன் தமிழ் மொழிமீது இயல்பாகவே பற்றுக்கொண்ட அரசியலர்களும் ஆட்சியாளர்களும் பங்களித்திருப்பதை மறுக்க முடியாது.
- 1990களின் இறுதியில், தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியின் முன்னெடுப்பில், உலகின் நவீன மாற்றங்களுக்குத் தமிழ் மொழி முகங்கொடுக்கும் வகையிலான முன்னெடுப்புகள் தொடங்கின. இன்றைக்கு, அவரது மகன் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் நடத்தப்படும் இம்மாநாடு, தமிழின் பாய்ச்சலுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் மகத்தான முயற்சி.
- இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், மொழியியலாளர்களுடன், தமிழார்வம் கொண்ட தொழில்நுட்ப நிபுணர்களும் பங்கேற்கிறார்கள்.நவீன மாற்றங்களுக்கு ஏற்பத் தமிழை முன்னிறுத்துவதற்கான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
- பழந்தமிழ் இலக்கியத்தை இன்றைய சமூகமும் வருங்காலத் தலைமுறையும் உணர்ந்துகொள்வதற்கான அறிவியல் கருவிகளும் இந்நிகழ்வில் முன்வைக்கப்படுவது இன்னும் சிறப்பு. உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலும், மேம்பாட்டுப் பிரிவுகளிலும் தமிழர்கள் வீற்றிருக்கும் இன்றைய காலகட்டத்தில், இப்படியான முன்னெடுப்புகள் தமிழை இன்னும் பல மடங்கு வளர்த்தெடுக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தமிழால் இன்னும் நெருக்கமாக இணைவோம்! வளர்க தமிழ்!
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 02 – 2024)