- உலக அளவில் 2,80,984 கோடி ரூபாய் (34 பில்லியன் அமெரிக்க டாலர்) சந்தை மதிப்புடைய தொழிலாக உருவெடுத்துள்ள திரள் நிதி (க்ரவுட் ஃபண்டிங்) பெறும் முறை இந்தியாவிலும் வலுவாக வளர்ச்சி அடைந்துள்ளது. மும்பையை மையமாகக் கொண்ட திரள் நிதி தளமான கெட்டோ நிறுவனம், 2015 ஆம் ஆண்டில் தொடக்கநிலை முதலீட்டாளர்களிடமிருந்து (ஏஞ்சல் இன்வெஸ்டர்) 578.50 லட்சம் ரூபாய் (7,00,000 அமெரிக்க டாலர்) திரட்டி அதன் வணிக இலக்கினை 826.43 கோடி ரூபாய் (100 மில்லியன் அமெரிக்க டாலர்) என உயர்த்தியதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
- கொவைட் 19 நோய்த்தொற்றின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கும் அவசர காலங்களில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சமூக ஊடகங்கள் பயன்பட்டன என்றும், இந்த சமூக ஊடகங்களின் மூலம் மருத்துவ வறுமை போக்கும் நிதி திரட்டும் உத்திகள் அதிகரித்தன என்றும் தரவுகள் கூறுகின்றன.
- அரசியலமைப்பின் 21-ஆம் பிரிவின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆரோக்கியம் என்பது அடிப்படை உரிமை எனும் போதிலும் தரமான மருத்துவம் பலருக்கும் சவாலாக இருப்பதால் திரள் நிதி பெறும் உத்தி பிரபலமடைந்து வருகிறது.
- அதிக மருத்துவக் கட்டணம் செலுத்த நேரிடும் இந்தியர்களின் பார்வை சமீப நாட்களில் கெட்டோ, மிலாப் போன்ற திரள் நிதி தளங்களை நோக்கித் திரும்பியுள்ளது. மிலாப் திரள் நிதி தளத்தின் செயல்பாடுகளில் 90% மருத்துவம் சார்ந்தது. 2019-ஆம் ஆண்டில் சுமார் 45,000 பேருக்கு 200 கோடி ரூபாய் நிதி திரட்டிய மிலாப் திரள் நிதி தளம், 2021-ஆம் ஆண்டு 1,40,000 பேருக்கு 700 கோடி ரூபாய் நிதி திரட்டியது.
- ஒரே ஆண்டில் சுகாதாரம் தொடர்பான செலவுகள் காரணமாக இந்தியாவில் 5.5 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டனர் என்றும் இவர்களில் 3.8 கோடி பேர் மருந்திற்கான செலவுகளால் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டனர் என்றும் 2018-ஆம் ஆண்டு வெளியான இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் பொதுத்துறை-தனியார்துறை முன்முயற்சி என்ற ஆய்வறிக்கை கூறுகிறது.
- மத்திய அரசின் சிந்தனைக் குழுவான "நீதி ஆயோக்' தனது 2021-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் நாட்டின் மக்கள்தொகையில் மருத்துவக் காப்பீடு இல்லாது வாழும் 30 % பேர் அதிக செலவுடைய மருத்துவ நெருக்கடிக்குள்ளானால் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.
- "முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம்', "பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா' போன்ற பொதுத் துறை காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் தகுதி பெறும் அளவுக்கு ஏழைகளாகவும் தனியார் மருத்துவக் காப்பீடு எடுக்கும் அளவுக்கு பணக்காரர்களாகவும் இல்லாதவர்களை "காணாமல் போன நடுத்தர வருமானம் கொண்டவர்கள்' (மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள்) என்று நீதி ஆயோக் அறிக்கை குறிப்பிடுகிறது.
- மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள் மருத்துவ செலவிற்காக நெருக்கடி காலங்களில் வெளிப்படைத் தன்மையற்ற திரள் நிதி தளங்களையே நம்பியுள்ளனர். தற்போதைய சூழலில் திரள் நிதி திரட்டும் தளங்கள், அவற்றின் மூலம் நிதி வழங்கும் நன்கொடையாளர்கள், நிதி பெறும் நிறுவனங்கள் போன்றோருக்கான பொறுப்புகள் குறித்து எவ்வித சட்டரீதியான கட்டுப்பாடுகளும் இல்லை.
- கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் திரள் நிதி திரட்டும் தளங்களில் சந்தேகத்திற்கிடமான மருத்துவத் தேவைக்கான பணக் கோரிக்கைகள் இருந்து வருவதாக கூறுகின்றன. பெரிய அளவு நன்கொடைகளை ஈர்க்க உயர்த்தப்பட்ட மருத்துவ சிகிச்சை மதிப்பீடுகள், உண்மைக்குப் புறம்பாக திருத்தப்பட்ட அதிகமான பணத்திற்கான மருத்துவமனை கட்டண ரசீதுகள், திருத்தப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட போலியான மருத்துவ ஆவணங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதாக மருத்துவத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
- கெட்டோ, மிலாப் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளனர். அந்த மருத்துவ தேவைக்கான பணக் கோரிக்கைகளை விலக்கி கொண்டுள்ளனர். எனினும் கெட்டோ, மிலாப் நிறுவனங்கள் முறையே 0.15%, 0.5%- க்கும் குறைவாகவே உண்மைக்கு புறம்பான கோரிக்கைகள் இருந்ததாக கூறுகின்றன.
- ஒரு நோயாளியின் ஆவணங்களைக் கொண்டு ஆவணங்களில் உள்ள பெயர் மற்றும் வயதினை போலியாக மாற்றி ஒரு குடும்பத்தில் உள்ள பலரின் பெயரில் திரள் நிதி திரட்டும் அவலமும், எந்த நோயாளிக்கு திரள் நிதி திரட்டப்படுகிறதோ அந்த நோயாளி இறந்த பின்னும் மருத்துவத் தேவைக்கான பணக் கோரிக்கைகளை நிறுத்தாத திரள் நிதி தளங்களின் செயல்பாடுகளும் இந்தியாவில் நிகழ்ந்து வருகின்றன.
- இத்தகைய செயல்பாடுகள் திரள் நிதி தளங்களின் செயல்பாட்டு நடைமுறைகள், அவற்றின் லாப - நஷ்டக் கணக்குகள், திரள் நிதி சேவைக் கட்டணம் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது.
- அரசின் திரள் நிதி தளக் கொள்கைகள் திரள் நிதி தளங்கள் வசூலிக்கும் சேவைக் கட்டணங்கள் பற்றிய விவரங்கள் வழங்குவதையும், பகுதியளவு நிறைவு பெற்ற சிகிச்சைக்கு பின் எஞ்சியிருக்கும் நிதி பற்றிய தகவல்களை வெளியிடுவதையும் சிகிச்சை ரத்து செய்யப்பட்டாலோ, சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தாலோ பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான செயல்முறையை உருவாக்குவதையும் உறுதி செய்ய வேண்டும்.
- திரள் நிதி வழங்குவோர் - பெறுவோர் - திரள் நிதி தளம் இவற்றுக்கு இடையே உள்ள பிணக்குகளை களைய ஒரு குறை தீர்க்கும் அமைப்பினையும் நடுவர் ஆணையத்தையும் அமைக்க வேண்டும். திரள் நிதி தளங்கள் இணையம் வழியாக செயல்படுவதால் நன்கொடையாளர்கள், நிதி பெறுவோர் குறித்த தரவுகள் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும்.
- நன்கொடையாளர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் மோசடி திரள் நிதி தளங்களுக்கு நிதியை வழங்கி ஏமாறாமல் இருப்பதை உறுதி செய்ய, திரள் நிதி தளங்கள் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட வேண்டும். தணிக்கை அறிக்கைகளும், திரள் நிதி தளங்களின் நிதி மதிப்பீடுகளும் பொதுவில் வெளியிடப்பட வேண்டும்.
நன்றி: தினமணி (02 – 03 – 2023)