TNPSC Thervupettagam

கண்டுகொள்ளப்படாத லோக்பால்

January 18 , 2020 1822 days 860 0
  • பிரதமர், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையிலான லோக்பால் அமைப்பு கடந்த 2013-இல் நாடாளுமன்றத்தில் சட்ட வடிவம் பெற்றது.
  • தேசிய அளவில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் வகையில் லோக்பால் அமைப்பும், மாநில அளவில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களுக்குத் தீர்வு காணும் வகையில் லோக் ஆயுக்த அமைப்பும் ஏற்படுத்தப்பட்டன.
  • உச்சநீதிமன்றம், தலைமைத் தேர்தல் ஆணையத்தைப்போல் தன்னாட்சி அதிகாரமிக்க லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6 ஆண்டுகளான போதிலும், கடந்த ஆண்டுதான் அதன் தலைவர் நியமிக்கப்பட்டார். லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாஜி சந்திர கோஷ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-இல் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

லோக்பால் அமைப்பு - உறுப்பினர்கள் 

  • இதேபோல், லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் திலீப் பி. போஸ்லே, பிரதீப் குமார் மெஹந்தி, அபிலாஷா குமாரி, அஜய்குமார் திரிபாதி உள்ளிட்ட 8 பேர் அதே ஆண்டு மார்ச் 27-இல் பதவியேற்றுக் கொண்டனர். நீதித் துறையைச் சாராத 4 உறுப்பினர்கள் என்ற விதிமுறையின் அடிப்படையில், சஷாஸ்திர சீமாபல் முன்னாள் தலைவர் அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிர மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் தினேஷ்குமார் ஜெயின், ஐஆர்எஸ் அதிகாரி மகேந்திரசிங், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இந்திரஜித் கௌதம் ஆகியோர் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில், திலீப் பி. போஸ்லே தன்னுடைய உறுப்பினர் பதவியை  தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனவரி முதல் வாரத்தில் ராஜிநாமா செய்தார். 
  • லோக்பால் சட்டம் நிறைவேறி 6 ஆண்டுகளான போதிலும், அந்த அமைப்பு திறம்பட செயல்படுவதற்கான புகார் அளிக்கும் முறையோ, விசாரணைப் பிரிவோ, முதல்நிலை விசாரணை மேற்கொள்வதற்கான ஒழுங்குமுறை விதிகளோ இன்னமும்கூட ஏற்படுத்தப்படவில்லை. 
  • அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பொறுப்புணர்வை விதைக்கக் கூடிய லோக்பால் என்ற பதம் இன்று, நேற்று வந்ததல்ல. அது அரை நூற்றாண்டுக்கால வரலாறு. லோக்பால் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, ஊழலுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரிலும், மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தியிலும் அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட 82 வயது காந்தியவாதி அண்ணா ஹசாரேதான்.
  • ஆனால், லோக்பால் என்கிற பதத்தை 1963-ஆம் ஆண்டிலேயே டாக்டர் எல்.எம்.சிங்வி என்பவர் முதன்முறையாக கையில் எடுத்தார். இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் லோக்பாலின் முக்கியத்துவத்தை 1960-களிலேயே அப்போதைய சட்ட அமைச்சர் அசோக் குமார் சென் முன்மொழிந்தார். 1968-இல் வழக்குரைஞர் சாந்தி பூஷணால் முன்மொழியப்பட்ட ஜன்லோக்பால் மசோதா 4-ஆவது மக்களவையில் முதன்முதலாக நிறைவேறியது.

மசோதா

  • ஆனாலும், மேலவையில் இந்த மசோதா நிறைவேறுவதில் முட்டுக்கட்டை நிலவியது. இதனிடையே, 4-ஆவது மக்களவை கலைந்ததால், லோக்பால் மசோதாவும் காலாவதியானது. 
  • இதைத்தொடர்ந்து 1971, 1977, 1985 ஆகிய காலகட்டங்களில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த அசோக் குமார் சென், மீண்டும் மீண்டும் லோக்பால் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த போதிலும், அது சட்ட வடிவம் பெறுவதில் சிக்கல் நீடித்தது. தொடர்ந்து, 1989, 1996, 1998, 2001, 2005, 2008-இல் கூட மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, சட்ட வடிவம் பெறாமலேயே காலாவதியாக நேர்ந்தது. 
  • மக்களவையில் முதன்முறையாகத் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 45 ஆண்டுகளைக் கடந்து, ஏறத்தாழ 10 முறை தோல்வியைச் சந்தித்தபோதிலும், இறுதியாக கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்ட வடிவம் பெற்றது. ஆயினும், லோக்பாலில் புகார்களைப் பதிவு செய்வதற்கான படிவம் இன்னமும் வரையறுக்கப்படாததால், பல்வேறு குளறுபடிகளுக்கும், குழப்பத்துக்கும் வித்திடுகிறது.

நடைமுறைச் சிக்கல்

  • இதுபோன்ற நடைமுறைச் சிக்கல் நீடித்த போதிலும், லோக்பாலுக்கான அடித்தளம் அமைக்கப்பட்ட கடந்த ஓராண்டில் மட்டும் மொத்தம் 1,190 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றில், லோக்பால் அதிகார வரம்பு எல்லைக்குள் உட்படாத சுமார் 1,120 புகார்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், இதுதொடர்பான அறிவிக்கை மனுதாரர்களுக்கு  அனுப்பப்பட்டு விட்டதாகவும் லோக்பால் இணையதள பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
  • அதேவேளையில், விசாரணைக்குத் தகுதி படைத்ததாக 35 புகார்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனினும், இதனைப் பரிசீலிக்க இயலாத சூழலில், புகார்களைப் பதிவு செய்வதற்கான படிவத்தை மத்திய அரசு வெளியிட்டதும், அதைப் பயன்படுத்தி மீண்டும் புகார்களைத் தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு லோக்பால் அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பரிந்துரைகள்

  • லோக்பால் கவனத்துக்கு வரும் பெரும்பாலான புகார்கள், சொத்து விவரங்களை மையப்படுத்தியே இருக்கும். 2017-இல் வகுக்கப்பட்ட வரைவு விதிகளைப் பரிசீலித்த நாடாளுமன்ற நிலைக்குழு, அதன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் 2018 ஜூலை மாதம் சமர்ப்பித்தது. இதன் மீது மாநிலங்களவையில் இதுவரை எந்தவோர் அறிக்கையையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
  • லோக்பால் அமைப்பிடம் புகார் அளிக்கும் முறையோ அல்லது விசாரணைப் பிரிவோ நடைமுறையில் இல்லாததால், அதன் அதிகார வரம்பு எல்லைக்குட்பட்ட புகார்களைக் கூட பரிசீலித்து, தீர்வு காண இயலாத சூழல் நீடிக்கிறது. அதேவேளையில், முதல் நிலை விசாரணை அல்லது சோதனை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை வகுக்கும் அதிகாரத்தை லோக்பால் அமைப்புக்கு அதன் சட்டப் பிரிவு 60 அளிப்பதை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை.
  • நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட லோக்பால், முறையான புகார் அளிக்கும் முறையோ, உரிய படிவமோ வரையறுக்கப்படாமல், புகார்களைப் பரிசீலிப்பதில் தடுமாடுகிறது. இதைச் சரிசெய்ய வேண்டியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. 

நன்றி: தினமணி (18-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்