- அந்தச் சிறுமிக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ரயில் தண்டவாளத்துக்கு நடுவே நினைவற்ற நிலையில் அவளைக் காண்கிறார் சுனிதா கிருஷ்ணன். பாலியல் வர்த்தகத்துக்காகக் கடத்தப்படும் பெண் குழந்தைகளையும் பெண்களையும் மீட்பதற்காக ஹைதராபாத்தில் ‘பிரஜ்வலா’ என்கிற அமைப்பை நடத்திவருகிறார் சுனிதா கிருஷ்ணன். அந்தச் சிறுமியை மீட்ட விதம் குறித்து அவர் சொன்னவை: “அவளை நாங்கள் மீட்டபோது எத்தனை பேர் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பலரால் அவள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருந்தாள். அவளுடைய குடல் உடலுக்கு வெளியே இருந்தது. அந்த அளவுக்கு மிக மோசமான வல்லுறவுக்கு அவள் ஆளாக்கப்பட்டிருந்தாள். குடலை அவளது உடலுக்குள் வைக்க 32 தையல்கள் போடப்பட்டன” என்கிறார் சுனிதா.
- இந்தியாவின் முன்னணி நகரத்தைச் சேர்ந்த ஐந்து வயதுப் பெண் குழந்தை, குடிக்கு அடிமையான தந்தையால் ஆபாசப் படங்கள் எடுக்கும் நபருக்கு விற்கப்படுகிறாள். வட இந்திய மாநிலம் ஒன்றில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னவனால் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார். இந்தப் பெண் குழந்தைகளின், பெண்களின் உடல்தான் உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் 2,000 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகத்தின் மூலப்பொருள். இந்த வர்த்தகத்தைப் பொறுத்தவரை இந்தக் குழந்தைகளும் பெண்களும் உயிருள்ள மனிதர்கள் அல்லர்; பணம் சம்பாதித்துத்தரும் பண்டங்கள்.
வருமானம் ஈட்டும் ‘பண்டங்கள்’
- வெளிநாட்டினரைத் தங்கள் நாட்டுக்கு வரவழைக்கும் அஸ்திரமாக இந்தப் ‘பண்டங்க’ளைத்தான் உலக நாடுகள் பயன்படுத்துகின்றன. மருத்துவச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா போல இன்றைக்குப் பாலியல் சுற்றுலா மிக முக்கியமான தொழிலாக வளர்ந்து நிற்கிறது. இந்தச் சுற்றுலாவும் அதன் அடிப்படையான பாலியல் வர்த்தகமும் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற ஆசிய நாடுகள், அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என உலகம் முழுவதும் கறையான் புற்றுபோலப் பரவியுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் பாலியல் சுற்றுலாவில் பெண் குழந்தைகளைத்தான் பெரும்பாலும் ஈடுபடுத்துகின்றன. இதற்கும் தனி வலைப்பின்னல் உண்டு. பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாலியல் சுற்றுலாவின் பங்களிப்பு 2 – 14 சதவீதம் என்பது அந்நாடுகளில் சீரழிக்கப்படும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
- ஒருங்கமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட குற்றங்களில் முதன்மையாக இருக்கிற பாலியல் வர்த்தகமும் அதன் அங்கமான பாலியல் சுற்றுலாவும் வளர்ந்துவரும் வேகம் அதிர்ச்சியளிக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 180 கோடி பேர் உலகின் ஏதோவொரு நாட்டுக்குப் பாலியல் சுற்றுலா செல்லக்கூடும் என்கிற புள்ளி விவரமே அதற்குச் சான்று.
- பாலியல் குற்றவாளிகளும் பாலியல் சுற்றுலாப் பயணிகளும் ஒரே குற்றத்தைத்தான் இழைக்கிறார்கள் என்கிறபோதும் இருவருக்கும் வேறுபாடு உண்டு. பாலியல் சுற்றுலா செல்லும் பெரும்பான்மையான நபர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் அல்லர். ஆனால், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் மன வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் கயவர்கள். பாலியல் – கேளிக்கை விடுதிகளில் இருக்கும் பெண்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் பணம் தருவதால் அது அந்தப் பெண்களும் குழந்தைகளும் விரும்பிச் செய்கிற பணி என்பது மோசமான, உண்மைக்குப் புறம்பான வாதம். பணத்தைக் கொடுத்துவிட்டு ஓர் உயிரைச் சிதைக்கலாம் என்பது மனிதத்தன்மையற்ற செயல். பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்களில் பெரும்பான்மையானோர் தங்களது விருப்பத்துக்கு மாறாகத்தான் அதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பலர் கடத்திவரப்பட்டு அந்தத் தொழிலுக்குள் தள்ளப்பட்டவர்கள். “பாலியல் விடுதிகளில் இருந்து மீட்கப்பட்ட அனைத்துப் பெண்களின் வாக்குமூலத்திலும் ஓர் ஒற்றுமையைக் காண முடியும். அது, ஆண் மனதின் வக்கிரம். அவர்களிடம் வருகிற ஆண்களில் ஒருவராவது அவர்களது பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடியைத் தூவியிருப்பார், சிகரெட்டால் சூடு வைத்திருப்பார், கையாலோ வேறு ஆயுதத்தாலோ பலமாக அடித்திருப்பார். வார்த்தைகளில் சொல்லவே முடியாத அளவுக்கு மிகக் கொடூரமாக நடந்திருப்பார்” என்கிறார் சுனிதா கிருஷ்ணன். பெண் குழந்தைகளின், பெண்களின் உடலை மையமாக வைத்து இயங்கும் வியாபாரத்தில் கொழிக்கும் பணத்துக்குப் பின்னால் இதுபோன்ற வேதனைகளும் வலியுமே இருக்கின்றன.
என்ன காரணம்
- பலரும் ஏன் பாலியல் சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள்? தங்கள் சொந்த ஊரிலோ அல்லது நாட்டிலோ இது போன்ற செயலில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்று அவர்களுக்குத் தெரியும். தங்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது குடும்பத்தினர் முன்னிலையில் பாலியல் விடுதிகளுக்குச் செல்வது அவர்களது கண்ணியத்தைக் குலைத்துவிடும் என்கிற அச்சமும் முக்கியமான காரணம். இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் தாங்கள் அதுவரை கட்டிக்காத்துவந்திருக்கும் ஒழுக்கமும் ‘நல்லவன்’ என்கிற பிம்பமும் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதும் பாலியல் சுற்றுலாவை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணங்கள். சுற்றுலாவில் முகமறியா மனிதர்களின் முன்னிலையில் தான் என்ன செய்தாலும் தன் ஒழுக்கத்துக்குக் களங்கம் வராது என்கிற துணிவு அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கிறது. அதாவது குறிப்பிட்ட பெண் குழந்தையையோ அல்லது பெண்ணையோ தன் மன வக்கிரங்களுக்கு வடிகாலாகப் பயன்படுத்திக்கொள்ளத் தூண்டுகிறது. இதில் அந்தப் பெண்களுக்கு என்ன ஆனாலும் அதைப் பற்றிப் பயணிகள் கவலைப்படத் தேவையில்லை. காரணம், என்ன நடந்தாலும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துதந்த நிறுவனம் சமாளித்துக்கொள்ளும். ‘சுற்றுலாப் பயணி’ என்கிற கௌரவமான அடையாளத்தை வைத்து எளிதாகத் தப்பிவிட முடியும். அந்தப் பெண் குழந்தையோ பெண்ணோ இறக்க நேர்ந்தால்கூட இவர்களுக்குக் கவலையில்லை. அந்தப் பெண்களின் அடையாளமற்ற தன்மை இவர்களுக்குச் சாதகமாகிவிடும். காரணம், கடத்திவரப்பட்ட பெண்கள்தாம் பாலியல் விடுதிகளில் பெரும்பாலும் அடைத்துவைக்கப் படுவர்.
இது குற்றமில்லையா
- பாலியல் சுற்றுலாவுக்குச் செல்லும் நாடுகளின் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளையும் அந்நாட்டு மக்களின் வறுமையையும் பயன்படுத்திக்கொண்டு, பாலியல் வர்த்தக மாபியாக்களின் துணையோடு பெண்களைப்பண்டங்களாக மட்டுமே நடத்தும் ‘பயணிகள்’ சிலவற்றைக் கவனத்தில்கொள்ள மறந்துவிடு கின்றனர். பல நாடுகளில் பாலியல் தொழில் என்பது அனுமதிக்கப்பட்ட தொழிலாகவே இருந்தாலும் ஆள் கடத்தல் என்பது உலகளாவிய குற்றமே. கடத்திக்கொண்டுவரப்படும் பெண்குழந்தைகளும் பெண்களுமே பெரும்பான்மையாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெண்களின் விருப்பத்துக்கு மாறாகவும் இயல்புக்கு மாறாகவும் உறவில் ஈடுபடுவதும் குற்றமே. பாலியல் தொழிலுக்காகவே பல நாடுகள், பாலுறவுக்குப் பெண்கள் சம்மதிக்கும் வயதை 14 – 16 என்கிற அளவில் வைத்திருக் கின்றன. இந்தியாவில் 16ஆக இருந்த வயது வரம்பு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமையைத் தடுக்கும் பொருட்டு 18ஆக மாற்றப்பட்டது. இந்தியாவில் 18 வயதுக்குக் கீழேயுள்ள பெண் குழந்தைகளிடம் உறவுகொள்வது சட்டப்படி குற்றம். குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பதும் சட்டப்படி குற்றமே. ஆனால், உலக அளவில் மிக முக்கியமான தொழில்களில் ஒன்றாகவும் பலரால் விரும்பிப் பார்க்கப்படுவதாகவும் இது இருப்பது வேதனையானது. தாய்லாந்தில் பாலியல் வர்த்தகத்தில்ஈடுபடுத்தப்படுவோரில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண் குழந்தைகளே.
- பெண்களையும் குழந்தை களையும் பாதுகாக்கும் உலக நாடுகளின் சட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் வர்த்தகத்தின் முன் எம்மாத்திரம்? பெண்களின் வாழ்வுரிமைக்கு எதிரான பாலியல் வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம், ஆள் கடத்தல், பாலியல் சுற்றுலா போன்றவற்றுக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் உலகம் முழுவதும் செயல்பட்டுவருகின்றன. இவை குறித்து ஆராய்ந்து புள்ளிவிவரங்களையும் தீர்வுகளையும் முன்வைக்கின்றன. ஆனாலும் உலக நாடுகள் சட்டமியற்றுவதோடு ஏன் ஒதுங்கிக்கொள்கின்றன? இவை பெண்களின் உடல் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறை என்பதால் பெண்களைப் பற்றிப் பெரும்பாலான நாடுகளுக்குக் கவலையில்லை. இரண்டாவது, இவை பணம் கொழிக்கும் வர்த்தகம் என்பதால் பணத்துக்கு முன் பெண்களின் வாழ்வுரிமை மதிப்பிழக்கிறது. உலக நாடுகள் மனசாட்சியின்படி நடந்துகொண்டால் மட்டுமே பெண்கள் பண்டங்களாக்கப்படுவது குறையும். அனைத்தையுமே மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பொதுமக்கள், இந்தக் குற்றத்தில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
- பெண்களின் வாழ்வுரிமையைப் பற்றிப் பேசும்போது அவர்களின் ஆடை குறித்த விவாதத்தைத் தவிர்க்க முடியாது. தாங்கள் விரும்பியபடி ஆடை அணிவது பெண்களின் உரிமை என்கிற குரல் உரத்து ஒலிக்கும் இந்நாளில் பெண்கள் ஆடை அணிய மறுக்கப்பட்டது குறித்தும் பேச வேண்டும். அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 03 – 2024)