TNPSC Thervupettagam

கனடா விவகாரம்: தேவை தெளிவான ராஜதந்திரம்

October 22 , 2024 4 days 77 0

கனடா விவகாரம்: தேவை தெளிவான ராஜதந்திரம்

  • கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் நிலவிவந்த பிணக்கு தற்போது உச்சம் அடைந்திருக்கிறது. தங்கள் மண்ணில் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதாக இந்தியா மீது கனடாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டியிருக்கின்றன. இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வெளியுறவுத் துறை விவகாரங்களில் இந்தியா இன்னும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது!
  • காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார். அதேபோல், அமெரிக்காவில் வசித்துவரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னூனைப் படுகொலை செய்வதற்கு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் சதிசெய்ததாக அமெரிக்காவும் குற்றம்சாட்டியது. இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துவந்தது.
  • இந்நிலையில், 2024 அக்டோபர் 13இல் இந்திய வெளியுறவுத் துறையைத் தொடர்புகொண்ட கனடா அதிகாரிகள், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் தொடர்புடையவர்களின் பட்டியலில் கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். இந்தியாவில் பல்வேறு குற்றச்செயல்களின் மூளையாக இருந்து செயல்பட்டு வந்த லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதும் கனடா குற்றம்சாட்டியது. எனினும், உறுதியான சான்று எதையும் வழங்காமல் கனடா குற்றம்சாட்டுவதாக இந்தியா கண்டனம் தெரிவித்தது.
  • விவகாரம் பெரிய அளவில் வெடித்த நிலையில், கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய இந்தியா, கனடாவுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றது. இந்தச் சூழலில், குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை முயற்சியில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் ‘ரா’ அதிகாரி விகாஷ் யாதவைத் தங்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
  • காலிஸ்தான் இயக்கத்தை எதிர்த்துவந்த பல்வீந்தர் சிங் சந்து 2020இல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கனடாவின் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியாகப் பணிபுரிந்துவரும் சந்தீப் சிங் சித்துவுக்குத் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியிருக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு விடுத்த கோரிக்கைகளைக் கனடா நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்திருக்கிறது. இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் காலிஸ்தான் அமைப்பினருக்கு ஆதரவாகக் கனடா செயல்பட்டால், அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிகக் கடுமையாக இந்தியா எச்சரித்திருக்கிறது.
  • எனினும், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களை ஒழித்துக்கட்ட இந்தியா திட்டமிடுவதாக ட்ரூடோ தொடர்ந்து பேசிவருகிறார். கனடா மக்கள்தொகையில் 2% பேர் சீக்கியர்கள். அவர்களில் பலர் காலிஸ்தான் ஆதரவாளர்கள். ட்ரூடோவின் தாராளவாதக் கட்சிக்கான ஆதரவுத் தளம் சுருங்கிவந்த நிலையில், தனது சிறுபான்மை அரசுக்கு, ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி (என்டிபி) அளித்துவந்த ஆதரவை ட்ரூடோ நம்பியிருந்தார்.
  • 2025இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தனது ஆதரவை ஜக்மீத் சிங் திரும்பப் பெற்றுவிட்டார்; எனினும், இந்தியாவுடனான பிரச்சினையில் ட்ரூடோ அரசுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதேவேளை, பல்வேறு எதிர்க்கட்சிகள் இவ்விஷயத்தில் ட்ரூடோ அரசின் நகர்வுகளைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
  • நிலைமை மோசமடைந்தால், கனடாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று கருதப்படுகிறது. 2023 நிலவரப்படி, இரு தரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 9.36 பில்லியன் டாலர் என்பது கவனிக்கத்தக்கது. கனடா பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ 3.2 லட்சம் இந்திய மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். இப்படி இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தைச் சரியான காய்நகர்த்தல்களுடன் இந்தியா கையாள வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் காரணிகளையும் கிள்ளியெறிய வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்