TNPSC Thervupettagam
January 18 , 2020 1821 days 2273 0
  • கனவு மனிதனுக்கு வாய்த்த நல்ல வரம். தனது குறிக்கோள்களை நோக்கி அவனை உந்துகிற ஆற்றல் மிகுந்த விசை கனவு. "உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு' என்றார் கனவு நாயகர் அப்துல் கலாம். இது பாரதி வாக்கின் தொடர்ச்சி...சித்த மரபின் நீட்சி. "தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?'என்ற சித்தர்களின் கருத்தினைப் பாரதியார், "தூக்கமில்லாக் கண் விழிப்பே சக்தி' என்றார்.

அடிமைப்பட்ட தேசம்

  • அடிமைப்பட்ட தேசத்தில் இருந்து கொண்டு "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ'மென்று மெய்க்கனவு கண்டவர் அவர். அந்தக் கனவு பலித்தது. அந்த வரிசையிலே அப்துல் கலாமும் "கனவு காணுங்கள்' என்றார். குறிப்பாக இளைஞர்களைப் பார்த்துச் சொன்னார். காலம் காலமாக ஞானிகள் கண்ட கனவின் வாயிலாகவே இந்தப் புதிய உலகம் சமைந்திருக்கிறது. அதனை இன்னும் மேம்படுத்துவதற்கு அதிக ஆற்றல் வாய்ந்த கனவுகள் தேவை.
    இன்றைய இளைஞர்களுக்குத் தன் வளர்ச்சியைப் பற்றிய கனவு மட்டும் போதாது. தன்னுடைய மொழி, தேசம் பிரபஞ்ச மேன்மை வரையில் குறிக்கோள்களுடனான கனவுகள் வேண்டியிருக்கின்றன. அத்தகைய மேன்மையான கனவையே அப்துல்கலாம் காணச் சொன்னார். இந்தியா 2020-இல் வல்லரசாகும் என்ற அவருடைய கனவும் இந்த இளைஞர்களை நம்பித்தான் எழுந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்கும் தருணமிது. ஆண்டு பிறந்து விட்டது. அவருடைய கனவு பலிக்க வேண்டுமே.
  • பொதுவாகக் கனவு என்பது இல்லாதவற்றுக்காக ஏங்குவது என்கிற நோக்கத்திலேயே காணப்படுகிறது. வீடில்லாதவன் மாளிகை வாழ்க்கையையும், பாயில்லாதவன் பஞ்சு மெத்தையையும் கண்களை மூடிக் கொண்டு அனுபவித்து மகிழ்வதுதான் கனவு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். மெய்யான கனவு என்பது வீடில்லாதவன் தன்போல் வீடில்லாத அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்று விரும்பி அதற்காக உழைப்பதும், உணவில்லாதவன் உலகத்திலே பசியே இல்லாது இருக்க வேண்டும் என்று போராடுவதும்தான்.
  • தனக்கு என்று காண்பது பொய்க்கனவு. உலகத்துக்கும் உயிர்களுக்கும் என்று பரந்த நிலையில் காண்பதே மெய்க்கனவு. மகாத்மாவைப் பார்த்து, "ஏன் சட்டை அணியாமல் இருக்கிறீர்கள்?' என்று எல்லோரும் ஏளனமாகக் கேட்டபோது, "இந்தத் தேசத்தில் இருக்கும் அத்தனை ஏழைகளுக்கும் சட்டை கிடைத்து விட்டால் எனக்கும் சட்டை கிடைத்து விடும்' என்றார். "நம் நாட்டில் பலர் வயிறு கொழுக்க, விலாப் புடைக்க, அஜீரணம் உண்டாகும்படி ஆஹாரங்களைத் தம்முள் திணித்துக் கொண்டிருக்கையிலே, உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாதபடி இந்தியாவில் மட்டும் தீராத, மாறாத பஞ்சம் தோன்றி ஜனங்களை அழிக்கிற கொடுமையைத் தீர்க்க வழி தேட வேண்டிய யோசனை அவர்களுடைய புத்திக்குச் சற்றேனும் புலப்படாதிருப்பதை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எனக்கு மிகுந்த வருத்த முண்டாகிறது' என்று தேசத்தின் வறுமை குறித்துக் கவலை கொண்ட பாரதியார், "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்' எனக் கனவு கண்டார்.  

பெருங்கனவு

  • இதே நிலைப்பாட்டில்தான் காலங்காலமாக இந்த உலகம் குறித்து ஞானிகள் பெருங்கனவு கண்டார்கள். அந்தக் கனவுகளும் இன்றைய இளைஞர்களை நம்பித்தான் எழுந்தன. பாரதியார் அந்தக் கனவினையே குறிப்பிட்டு, "கனவு மெய்ப்பட வேண்டும்' என்கிறார்.
    காதலிப்பவர்கள்தான் கனவு காண்பார்கள் என்றால் அதுவும் உண்மைதான். பிரபஞ்சத்தையே காதலித்தவர்கள் கண்ட கனவினால்தான் பல அற்புதங்கள் நனவாகியிருக்கின்றன. தையல் ஊசியிலிருந்து தேசத்தின் மேன்மை வரைக்கும் கனவின் மூலமாகவே கண்டறியப்பட்ட அதிசயங்கள் பலப்பல.
  • புறத்தில் அடைய முடியாத சிக்கல்களுக்கு அகத்தில் ஏற்படும் ஆழ்மனத்தீர்வே கனவாக வெளிப்படுகிறது. இதற்குத் தீர்க்கதரிசனம் என்றும் பெயருண்டு. "ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே வாழ்க்கையின் மயமாக்கு. அதையே கனவு காண். அந்த ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள் உன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.

வெற்றிக்கு வழி

  • அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துகளையும் மறந்து விடு. அதுதான் வெற்றிக்கு வழி' என்று வருங்கால இளைஞர்களுக்குக் கனவிலிருந்து வெற்றிக்கான வழியைக் காட்டுகிறார் சுவாமி விவேகானந்தர்.
  • இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்து அன்றாடம் தினசரிகளைச் சுமந்து வீடு வீடாகச் சென்று வழங்கி அந்த வருமானத்தில் படித்த ஒரு சிறுவனின் கனவுதான் இந்தியாவை ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் உயர்ந்த இடத்தைப் பெறச் செய்தது.
  • இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்னும் உயர்ந்த நிலையையும் அந்தக் கனவுதான் பெற்றுத் தந்தது.
  • தான் சிறுவனாக இருந்தபோது கண்ட கனவை தன் காலத்திலேயே நிறைவேற்றிவிட்ட அப்துல் கலாம், தன் தேசம் குறித்துக் கண்ட கனவுகளை இன்றைய இளைஞர்களின் பொறுப்பில் சுமத்தியிருக்கிறார். அதற்குத் தன் வாழ்க்கையையே வழியாகவும் காட்டியிருக்கிறார். இந்தியா வல்லரசு நிலையை அடைய வேண்டும் என்பதே அது. இதுவும்கூட பாரதியின் எதிரொலிதான்.

பாரதியின் பெருங்கனவு

  • "எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற் களிக்கும்' என்னும் பாரதியின் பெருங்கனவுதான் இந்திய வல்லரசுக் கனவு. அணு ஆயுதங்கள் நிறைந்த பாதுகாப்பு மட்டுமன்று வல்லரசு. திருவள்ளுவர் குறிப்பிட்ட இயற்றலும், ஈட்டலும் காத்தலும், காத்த வகுத்தலும் ஆகிய பெருமை பெற்ற அரசுதான் பாரதியாரால் அமரநிலை என்றும் அப்துல் கலாமால் வல்லரசு என்றும் உணர்த்தப் பெற்றிருக்கிறது. அத்தகைய நிலையைப் பெற்றுத் தருவதற்கு இளைஞர்கள்தான் தகுதியானவர்கள் என்பதை அவர்கள் நன்குணர்ந்திருந்தார்கள்.
  • அப்துல் கலாம் கனவு நனவாகும் வித்தையைத் தனது கவிதையில் இப்படிப் பதிவு செய்கிறார். "கனவுகள் நனவாகும் நம்முள்ளங்கள் ஒன்றுபட்டு உழைத்து உயர்வு காணில்...' அந்தக் கனவு நனவாக இளைஞர்களே கனவு காணுங்கள்!

நன்றி: தினமணி (18-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்