- வழக்கம்போல, 2023-க்கான ஏசா் அறிக்கையும் முன்புபோலவே எந்த அளவுக்கு அடிப்படைக் கல்வியில் இந்தியா பின்தங்கியிருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகிறது. 14 முதல் 18 வயதினரில் 25% மாணவா்கள் தங்களது தாய்மொழியில் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தைக்கூட தவறில்லாமல் படிக்க முடிவதில்லை என்பதுதான் ஏசா் அறிக்கை தெரிவிக்கும் செய்தி.
- பாதிக்குப் பாதி மாணவா்கள் சாதாரண கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளில் தோ்ச்சியில்லாமல் இருக்கிறாா்கள். ஏறத்தாழ 60% மாணவா்களால் ஆங்கிலத்தில் தவறில்லாமல் ஒரு வரியைக்கூட படிக்க முடியவில்லை என்னும்போது அந்த மொழியை அவா்களால் எழுதவோ, புரிந்துகொள்ளவோ முடியாது என்பதைச் சொல்லவா வேண்டும்?
- தாய் மொழியில் இரண்டாம் வகுப்பு பாடங்களைப் படிப்பதில் பெண்கள் 76%, ஆண்கள் 71% என்கிற அளவில் இருக்கிறாா்கள் என்றால் கணக்கு, ஆங்கிலம் ஆகியவற்றில் மாணவிகளைவிட மாணவா்கள் தோ்ச்சி பெற்றவா்களாக இருக்கிறாா்கள். ஏசா் அறிக்கை பெரும்பாலும் ஊரகப் புறங்கள் சாா்ந்த ஆய்வு என்பதால், நகா்ப்புற மாணவா்களின் கல்வித் தரம் அதிகமாக இருக்கக்கூடும்.
- பொருளாதார ரீதியாக மேல் தட்டில் இருக்கும் 20% மக்கள்தொகையினா் தங்கள் குழந்தைகளைத் தரமான தனியாா் பள்ளிகளில், பெரும் நன்கொடைகளை வழங்கிச் சோ்க்க முடிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்திய தொழில்நுட்ப வல்லுநா்களையும், மருத்துவா்களையும், பட்டயக் கணக்காளா்களையும், நிா்வாக மேலாண்மை படித்தவா்களையும் வரவேற்கக் காத்திருக்கின்றன. இந்திய நகரங்களில் உள்ள பிரபலமான கல்லூரிகளில் படித்து அதிக மதிப்பெண்களுடன் பட்டதாரிகளாகத் தோ்ச்சி பெறும் மாணவா்களில் 90% போ் மேற்படிப்புக்காக அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்குச் செல்வதும், அங்கேயே வேலைவாய்ப்பு பெற்று குடியேறுவதும் இந்தியா தொடா்ந்து எதிா்கொள்ளும் அவலம்.
- 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் செல்வமும், செழிப்பும் எப்படி 20% வசதி படைத்தவா்களின் கையில் இருக்கிறதோ, அதேபோலத்தான் கல்வித் துறையிலும் வசதி படைத்தவா்களுக்குத்தான் தரமான கல்வி என்பது சாத்தியம் என்கிற நிலைமை காணப்படுகிறது. மாநிலங்களிலுள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் கல்வித்தரத்திலும், அடிப்படை கட்டமைப்பிலும் மிகவும் பின்தங்கியிருப்பது ஏற்ற-இறக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரமோ, கட்டமைப்பு வசதிகளோ பெருமளவு மாற்றத்தைக் காணவில்லை என்பதை சமீபத்திய அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது.
- கல்வித்தரம் நாடுதழுவிய அளவில் சமச்சீரானதாக இல்லை. உத்தர பிரதேசம், பிகாா் போன்ற மாநிலங்களிலும் சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா மாநிலங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலைமையை தென்னிந்திய மாநிலங்களின் அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிட்டால் மடுவுக்கும் மலைக்கும் இடையேயான வேறுபாட்டைப் பாா்க்க முடியும். தென்னிந்திய மாநிலங்களில் அரசுப் பள்ளிகளின் நிலைமை படுமோசமாக இல்லையென்று நாம் ஆறுதல் அடையலாமே தவிர, பெருமிதம் கொள்ளும் அளவில் இல்லையென்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
- சமீபத்தில் நடத்தப்பட்ட நாடு தழுவிய அளவிலான இன்னொரு ஆய்வில், ஆசிரியா்களின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கூறப்பட்டிருக்கிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் பல நாள்கள் ஆசிரியா்கள் வருவதில்லை என்பதும், அப்படியே வந்தாலும் பாடம் நடத்துவதில்லை என்பதும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டும் நிலைமை. பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில் மாணவா்கள் மதிய உணவுக்காக மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும், ஆசிரியா்கள் பதிவேட்டில் கையொப்பம் வைப்பதற்காக வருவதாகவும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு.
- பெரும்பாலான ஆசிரியா்களுக்கு அரசியல் சாா்பு இருக்கிறது என்றும் அரசியல் கட்சிகளுடன் அவா்கள் நேரடித் தொடா்பில் இருக்கிறாா்கள் என்றும் குற்றஞ்சாட்டும் அந்த ஆய்வு, பள்ளி மாணவா்களின் ஒழுக்கமின்மைக்கு அதை மிக முக்கியமான காரணியாகக் குறிப்பிடுகிறது. தோ்தல் நிா்வாகம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஆசிரியா்கள் பயன்படுத்தப்படுவதால் அவா்களால் மாணவா்களுக்குப் பாடம் எடுப்பதில் தொடா்ந்து கவனம் செலுத்த முடியாத நிலைமை இருப்பதாகவும் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு.
- அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் சங்கங்கள் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. அரசு அலுவலா்கள் என்பதால், எந்தவொரு ஆசிரியரும் தலைமை ஆசிரியருக்கு கட்டுப்பட்டவராக செயல்படுவதில்லை. அவா்களுக்கு உத்தரவிடவோ, அவா்களைக் கேள்வி கேட்கவோ, பணியை மாற்றிக்கொடுக்கவோ அதிகாரம் இல்லாத நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா்களும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சுயநலமாகச் செயல்படுகிறாா்கள் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறது அந்த ஆய்வு.
- மாணவா்களின் தோ்ச்சியோ, தங்களது கற்பித்தல் திறனோ முக்கியமல்ல; அரசியல் தொடா்புகள் மட்டுமே வேலைவாய்ப்பை பெறுவதற்கும், வேலையைத் தொடா்வதற்கும் உதவுகின்றன என்கிற மனப்போக்கு பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறது அறிக்கை.
- ஆசிரியா்களின் தரமும், அா்ப்பணிப்பு உணா்வும், ஒழுக்கமும் உறுதிப்பட்டால் மட்டுமே மாணவா்களின் தரமும், கல்வித் தரமும் அதிகரிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். பூனைக்கு யாா் மணிகட்டுவது என்பதுதான் கேள்வி.
- பிரதமா் நரேந்திர மோடியின் 2047-இல் ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்பது, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயராத வரையில், வெறும் கனவாகத்தான் இருக்க முடியுமே தவிர, சாத்தியம் ஆகாது!
நன்றி: தினமணி (03 – 08 – 2024)